வானவில் உணவுகள்-செயற்கை நிறங்கள் தவிர்ப்போம்!! (மருத்துவம்)
செயற்கை உணவு நிறங்கள் சேர்க்கப்பட்ட பொருட்களின் தீமை, அவற்றால் ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகள், அதன்பிறகு ஏற்படும் நீடித்த உடலியங்கியல் தீமைகள் போன்றவற்றைப்பற்றி பொதுமக்களுக்கு முழுமையாக எடுத்துரைக்க வேண்டும். பெரியவர்கள் என்றாலும், அவர்களுக்கும் அப்பொருட்கள் எவ்வாறு அவர்களின் நடுத்தர வயது மற்றும் முதுமையில் ஏற்படும் உடல்நலிவை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் தொடர்ச்சியாகக் கூற வேண்டும்.
நீரிழிவு நோய், உடற்பருமன், உயர்ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் உள்ளிட்ட பிற எவ்வகையான நோய்கள் இருப்பவர்களாக இருந்தாலும், அவசரத்திற்குக்கூட பாக்கெட் உணவுகளை வாங்கி உண்ணாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வுணவுகள் அவர்களின் நோய் குணமாவதைத் தடுப்பதுடன், நல்லுணவுகளை உண்ணும் விருப்பத்தையும் குறைத்துவிடும். எனவே இவர்கள், வீட்டிலிருந்தே சுண்டல், பழங்கள், காய்கள் சாலட், பழச்சாறு, சூப் போன்றவற்றை கையில் வைத்திருப்பதால், வெளியில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளை வாங்கும் நிலையைத் தவிர்க்கலாம்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, வீடு மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயற்கை உணவு நிறங்களின் தீமைகள், அவை எந்தெந்த உணவுப்பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்த நாடகங்கள், கட்டுரை, ஓவியப் போட்டிகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதால், குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். கூடுமானவரையில், பாட்டில்கள், டின்கள், பேப்பர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரணம், அவற்றில்தான் இந்த செயற்கை உணவு நிறங்கள் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும்.
உணவுத் தொழிற்சாலைகளுக்குள் சென்று பதப்படுத்தப்பட்டு வரும் உணவுகளைவிட, விளையும் இடத்திலிருந்து வாங்கப்படும் முழுமையான புதிய உணவுப்பொருட்கள், எப்போதும் உடலுக்கு நன்மையே அளிக்கும் என்பதால், அவ்வகையான முழுமையான உணவுகளையே தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்பு வகைகள், ஜெல்லி மிட்டாய்கள், குளிர்பானங்கள் போன்றவை செயற்கை உணவு நிறங்கள் மட்டுமல்லாமல், பிற வேதிப்பொருட்களும் சேர்க்கப்பட்டவை என்பதாலும், அவை உடலுக்குத் தீங்கையே விளைவிக்கும் என்பதாலும், அவற்றை அறவே ஒதுக்க வேண்டும்.
உணவுப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் உறைகளின் மேல் இருக்கும் food label என்னும் உள்ளிருக்கும் பொருட்களுடன் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலில் என்னென்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்று கட்டாயம் கவனிக்க வேண்டும். செயற்கை நிறங்கள், அமிலத்தன்மை நிலைப்பான்கள், கொழகொழப்புத் தன்மை கொடுக்கும் வேதிப்பொருட்கள், பாதுகாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பின், அவ்வகை உணவுகளை தவிர்ப்பதுதான் நல்லது.
தாவர வகைப் பொருட்கள், விலங்கு வகை, கடற்பாசிகள், தாதுக்கள் என்று எவ்வகையிலேனும் இயற்கைப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட உணவு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றால், அவ்வகை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதால், தேவையற்ற உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம்.
எந்த ஒரு உணவுப்பொருள் செயற்கை நிறம் சேர்த்துத் தயாரிக்கப்பட்டது என்றாலும், அந்த உணவுப் பொருளை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக, FDA color additives status list என்ற நிலைத் தகவலைப் பார்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட அல்லது உணவில் சேர்ப்பதற்கு அங்கீகரிக்கப்படாத உணவு நிறமாக இருப்பின், அதை நிச்சயம் உபயோகப்படுத்தக் கூடாது.
அனைத்திற்கும் மேலாக, வீட்டிலேயே சமைத்த உணவுகளை உண்பதால் எவ்வித உடல்நலக் கேடுகளும் இல்லாமல் தவிர்க்கலாம். மூலிகைகள், காய்கள், பழங்கள் போன்றவற்றின் நிறங்களே உணவுக்குக் கிடைப்பதுடன், அவற்றின் வழியாகக் கிடைக்கும் நுண்சத்துக்களால் ஒவ்வொரு உடல் உறுப்பும் பயனடைந்து, உடலின் முழு ஆரோக்கியமும் மேம்படும்.
உணவு நிறம் எவ்வாறு பரிசோதனை செய்யப்படுகிறது?
உணவுப்பொருளைப் பார்த்தவுடன், அதில் சேர்க்கப்பட்டுள்ள நிறத்தைக் கண்களால் மட்டுமே உறுதி செய்ய இயலாது. அந்த நிறம் பல்வேறு வகையான வெளிப்புற மற்றும் உள்புற காரணிகளைப் பொருத்து அமைகிறது. உணவிலிருந்து வெளிப்படும் ஒளியின் கோணங்கள், உணவின் தன்மை, நிறத்தின் வகை, உணவிலுள்ள பிற கூட்டுப்பொருட்கள் போன்றவற்றையும் அடிப்படையாகக் கொண்டது.
எனவே, உணவு நிறத்தை ஆராய்வதற்காக தற்போது, பலவகையான வசதிகள் புதிய தொழில்நுட்பத்துடன் இருக்கின்றன. நிறமாலை ஒளி அளவியல் என்னும் spectrophotometer மற்றும் வண்ணப்பிரிவுப் படிகை என்னும் chromatography, மின்புலத் தூள் நகர்ச்சி என்னும் electrophoresis போன்ற புதிய தொழில்நுட்பங்களுடன் உண்மையான உணவு நிறங்களும் செயற்கையான உணவு நிறங்களும் கண்டறியப்படுகின்றன. இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றி, தரமற்ற நிறமுள்ள அல்லது நிறம் கலப்படம் செய்யப்பட்ட உணவுகள் பிரித்தறியப்பட்டு ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
உணவுப்பொருள் விதிமீறல்களுக்கு எவ்வாறு புகார் செய்வது?
உலகளவில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் (குயுழு) உலக சுகாதார நிறுவனமும் ((FAO)) உணவுப் பாதுகாப்பையும், தரத்தையும், அவற்றால் ஏற்படும் உடல் நலக்கேடுகள், அனுமதிக்கப்பட்ட அளவுகள் போன்றவற்றை உறுதிப்படுத்துகின்றன. என்றாலும், இந்தியாவிற்கான உணவுத் தரக் கட்டுப்பாடு என்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்திற்கு ((FSSAI)) உட்பட்டது ஆகும்.
இந்த அமைப்புதான் உணவுக் கலப்படம், அனைத்து வகையான உணவுப்பொருட்களுக்கான விதிமுறைகள், தயாரிப்புக்கான ஒழுங்குமுறைச் சட்டங்கள் போன்றவற்றைக் கண்காணிக்கிறது. உணவுப்பொருள் அட்டவணையில் பொய்யான தகவல் இருந்தாலும், உணவுப்பொருள் தரமற்றதாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் நிறங்களோ, சுவையூட்டிகளோ பிற சேர்மானங்களோ இருந்தாலும் உடனடியாகப் புகார் அளிப்பதற்கும் FSSAI நிறுவனம் வழிமுறைகளைக் கொடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் பிரதான வலைத்தள முகவரிக்குள் சென்று புகார் அளிக்கும் இணைப்பைக் கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, தகுந்த ஆதாரங்களுடன் தெரியப்படுத்தலாம்.
இனி செய்ய வேண்டியது என்ன?
ஒவ்வொரு உணவும் ஒரு தனித்தன்மையுடன் அல்லது சிறப்பு சத்துடன் இருந்தாலும், அதன் முக்கியத்துவத்தை அதிகரிப்பது என்னவோ அதன் நிறம், மணம், சுவை என்னும் வெளிப்புறக் காரணிகள்தான். நுகர்வோர் பயன்பாட்டிற்கு ஒரு உணவுப்பொருள் தேவைப்படுகிறது என்றால், அதற்கு அப்பொருளின் நிறமும் ஒரு முக்கியக் காரணி. அந்தப் பயன்பாட்டை அதிகரித்து, அப்பொருளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலை அதிகரிக்க வேண்டும் என்றால், உணவு நிறங்களைப் பற்றிய புரிதலும், உண்மையும் தெளிவாக அறியப்படுமாறு செயல்திட்டங்களைக் கொண்டு வரவேண்டும்.
எவ்வகையான உணவு நிறங்களால் உடலுக்கு ஆபத்து இல்லை, எவ்வகை உணவு நிறங்கள் உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன? அவை எந்தெந்தப் பொருட்களில் இருக்கின்றன என்பதையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிகக் குறிப்பாக, அனைத்துவிதமான ரெடிமேட் உணவு வகைகளும், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் எப்போதும் செயற்கை உணவு நிறங்களைக் கொண்டிருக்கும் என்றும் அவை உடலுக்குத் தேவையல்ல என்ற ஆழமான எண்ணமும் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும்.
செயற்கை உணவு நிறங்களை எடுத்துக்கொள்வதால் உடல் மட்டும் பாதிக்கப்படும் என்பதில்லை. அதனுடன் சேர்ந்து இயற்கை உணவு நிறங்கள் தயாரிப்பும் அவற்றின் பயன்பாடும், அவை சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விற்பனையும் குறைந்துவிடும். அவற்றைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதுடன், சிறு மற்றும் குறு உணவுத் தொழிற்சாலைகள் வளர்ச்சியும் குறைந்துவிடும் வாய்ப்புண்டு.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை, ஒழுங்குமுறை நிறுவனங்கள் ஒன்றிணைந்து, அதிகப்படியான செயற்கை உணவு நிறங்கள் பயன்படுத்துதல், விதிமுறைகளை மீறுதல், கலப்படம் செய்தல், மூலப்பொருட்களின் அட்டவணை அல்லது பட்டியலில் பொருட்களை சரியாகக் குறிப்பிடாமல் இருத்தல் போன்றவற்றிற்கு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அத்தொழிற்சாலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதமும் தண்டனையும் வழங்க வேண்டும்.
அரசும், அரசு சாரா நிறுவனங்களும் எடுக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இயற்கையே என்றும் உடலுக்குப் பாதுகாப்பளிக்கும், இயற்கை உணவுகளே உடலுக்கு எப்போதும் நன்மை தருபவை என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு, இயற்கையில், பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் வானவில் வண்ண உணவுகளை உண்டு, நலமுடன் வாழ்வதற்கு முன்வரவேண்டும். இயற்கை உணவுகள் நமது அடுத்தத் தலைமுறைக்கும் கிடைத்து அவர்களும் நல்வாழ்வு வாழ்வதற்கு அவற்றின் உற்பத்தியை அதிகரித்து, உணவை சேமித்துப் பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.முற்றும்.