ஒரு பிரவுனி மூலம் தொழில்முனைவோராக மாறிய 14 வயது சிறுமி!!! (மகளிர் பக்கம்)
தெரு ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் மக்களையே கண்டு கொள்ளாமல் செல்லும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்தில் தெருக்களில் இருக்கும் விலங்குகளை குறிப்பாக, நாய்களை சுத்தம் செய்து, பராமரித்து அவற்றை தத்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது Heaven Of Animals என்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பு நாய்களை தத்துக் கொடுப்பது மட்டுமில்லாமல் அவைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் தடுப்பு ஊசிகளும் செலுத்துகிறார்கள். அப்படிப்பட்ட அமைப்பிற்கு 14 வயது சிறுமி அம்பாசிடர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? விலங்குகள் மேல் கொண்ட பிரியத்தாலும், ஆர்வத்தினாலும் பள்ளியில் படிக்கும் வயதிலே அம்பாசிடராக மாறிய கேஷிகா, வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரும் கூட.
‘‘பொதுவாகவே எனக்கு பேசுவதற்கு ரொம்ப பிடிக்கும்’’ என ஆரம்பித்த கேஷிகா, தனது 14வது வயதில் Heaven Of Animals அமைப்பின் அம்பாசிடராக மாறியதற்கு அவரின் பேச்சு மட்டும்தான் முக்கிய காரணம் என்பதனை விளக்குகிறார். ‘‘ஒவ்வொரு வாரமும் ஹேப்பி ஸ்ட்ரீட் என்று சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடக்கும். வாரம் தவறாமல் அந்த நிகழ்வு நடக்கும் இடத்திற்கு நானும் எனது குடும்பத்தாரும் செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை செல்லும் போதுதான் முதல் முறை நாய்க்குட்டிகளை அடாப்ஷனுக்காக Heaven Of Animals அமைப்பினர் கொண்டு வந்தாங்க. ஹேப்பி ஸ்ட்ரீட் சாலையில் நடக்கும் நிகழ்வு. இவை அனைத்தும் சின்னச் சின்ன குட்டி நாய்கள்.
மேலும் முதல் முறையாக இவ்வாறு கூட்டம் நிறைந்த இடத்தினை அவைகள் பார்ப்பதால், நாய்க்குட்டிகள் அனைத்தும் ரொம்பவே பயந்து இருந்தது. அவைகளின் பார்வையில் ஒருவித நடுக்கம் தென்பட்டது. எனக்கு சின்ன வயதிலிருந்தே நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் நான் போய் அடாப்ஷன் நிர்வாகி யிடம் பேசினேன். அவரிடம் நான் கேட்டது ஒன்றுதான். நாய்க்குட்டிகளை கொஞ்சலாமா? அவர் சரின்னு சொல்ல, அவர்களுடன் நான் விளையாட ஆரம்பித்தேன். அதனால் அவர்களுக்கு முதலில் பயம் நீங்கியது. அதன் பிறகு அவர்களை எல்லாம் சுத்தம் செய்ேதன். என்னுடைய அன்றைய ஹேப்பி ஸ்ட்ரீட் தினம் நாய்களுடன் சந்தோஷமாக கழிந்தது.
நான் நாய்க்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, பலர் வந்து இவர்களைப் பற்றி விவரம் கேட்டாங்க. ஆனால் யாரும் அவர்களை தத்து எடுக்க முன்வரவில்லை. எனக்கு ரொம்பவே கஷ்டமா போச்சு. இந்த குட்டிகளைப் பார்க்க பாவமாக இருந்தது. உடனே நான் தெருக்களில் இந்த மாதிரி ஆதரவற்ற நாய்களை அடாப்ட் செய்வதால் என்னென்ன பயன் என்று அங்கு பேசினேன். மொத்தம் பத்து நாய்க்குட்டிகள் அடாப்ஷனுக்காக கொண்டு வந்திருந்தாங்க.
என் பேச்சைக் கேட்ட மக்கள், என்ன யோசித்தாங்கன்னு தெரியல… பத்து குட்டிகளில் எட்டு குட்டிகள் தத்து எடுக்கப்பட்டன. அதை பார்த்த அமைப்பின் நிர்வாகி, என்னை அமைப்பின் அம்பாசிடராக இருக்கும்படி கோரிக்கை விடுத்தார். எனக்கும் அது பிடித்துப் போக, அன்று முதல் Heaven Of Animalsன் அம்பாசிடராக நான் மாறினேன். அதன் பிறகு எங்கு நிகழ்ச்சி நடைபெற்றாலும் எங்களின் அமைப்பு சார்பாக அனைத்து நிகழ்ச்சியிலும் நான் பங்கு பெற ஆரம்பித்தேன்.
நிகழ்ச்சிக்கு பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து வருவாங்க. நாங்க ஒரு குழுவாக இணைந்து செயல்படுவோம். அதில் நிகழ்ச்சிக்கு நாய்க்குட்டிகளை சுத்தம் செய்து தடுப்பூசி போட்டு ஆண், பெண் என வித்தியாசப்படுத்த அவர்களிடம் கழுத்தில் டேக் மாட்டிக் கொண்டு போவோம். நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் ‘வெளியில் காசு குடுத்து நாய்க்குட்டிகளை வாங்குவதற்கு பதில் இந்த குட்டிகளை தத்து எடுக்கலாம்’ என்று அவர்களிடம் வலியுறுத்துவோம்.
நாய்க்குட்டிகளை பார்த்து சிலர் எடுத்து செல்வார்கள். ஒரு சிலர் நாய்க்குட்டிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தத்து எடுப்பாங்க. அவ்வாறு தத்து எடுப்பவர்களிடம் அவர்களின் முழு விவரங்களை வாங்கிக் கொள்வோம். காரணம், ஒரு சிலர் குட்டிகளை ஒரு ஆர்வத்தில் வாங்கிடுவாங்க. அதன் பிறகு அதனை சரியா பார்த்துக் கொள்ள மாட்டாங்க. அவர்கள் அதனை ஒழுங்காக கவனித்துக் கொள்கிறார்களா நல்ல விதத்தில் பராமரிக்கிறார்களா என்று நேரில் சென்று ஆய்வு செய்வோம். சில சமயம் வீடியோ காலிலும் தெரிந்து கொள்வோம். அவர்கள் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தால் நாய்க்குட்டிகளுக்கு அடுத்தடுத்து போடக்கூடிய தடுப்பூசிகளை நாங்க இலவசமாகவே கொடுப்போம்.
இதுவரை 600க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை ஹேப்பி ஸ்ட்ரீட் மூலமாக அடாப்ட் பண்ணியிருக்காங்க. மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குட்டிகளுக்கு தினமும்
உணவுகளையும் வழங்கி வராங்க. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசிகளை போட்டு இருக்கோம். என் அப்பா ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை பராமரித்து வருகிறார். நான் நாய்க்குட்டிகளை பார்த்துக் கொள்கிறேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மனப்பான்மை இருப்பதால், என்னுடைய இந்த வேலைக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. எனக்கான முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க’’ என்றவர் கே.எஸ்.கிச்சன் பற்றி விவரித்தார்.
‘‘12 வயதிலிருந்து பேக்கிங் செய்கிறேன். எனக்கு கேக் செய்வதில் ஆர்வம் அதிகமுண்டு. அதைப் பார்த்து தான் கொரோனா ஊரடங்கின் போது என் பிறந்த நாளுக்காக என் பெற்றோர் எனக்கு ஓவன் ஒன்றை பரிசாக கொடுத்தாங்க. முதல் முறை அதில் நான் பிரவுனி செய்தேன். வீட்டில் எல்லாருக்கும் பிடித்திருந்தது. அப்போது அக்காதான் இந்த ஐடியா கொடுத்தா. அவளின் ஐடியாவில் உருவானதுதான் எங்களின் பேக்கிங் ஸ்டார்டப் நிறுவனம். முதலில் தெரிந்தவர்களுக்கு செய்து கொடுத்தோம். அவர்கள் மூலமாக ஆர்டர்கள் வர ஆரம்பித்தது.
நானும் அக்காவும் சேர்ந்துதான் பிரவுனி மற்றும் இதர கேக்குகளும் செய்து தருகிறோம்’’ என்றவர் ‘வாயாடி சமையல்’ என்ற பெயரில் சமூக வலைத்தள பக்கத்தில் தனது கேக் குறித்து பதிவுகள் செய்து வருகிறார். ‘‘என்னுடைய கேக்கிற்கு மக்கள் மத்தியில் தனிப்பட்ட வரவேற்பு இருக்கு. சென்னையில் என் வீட்டின் அருகே எடுக்கும் சில ஆர்டர்களுக்கு நானே நேரில் சென்று டெலிவரி செய்கிறேன். சில சமயம் கஸ்டமர்கள் நேரடியாக வாங்கி செல்வார்கள்.
சமீபத்தில் தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவியின் பிறந்த நாளிற்கு என் பேக்கரியில் இருந்து கேக்கினை ராஜ்பவனுக்கு டெலிவரி செய்தேன். அது மறக்க முடியாத நிகழ்வு. சாதாரணமாக வீட்டில் செய்த பிரவுனி மூலம் நான் இந்த பிசினசை துவங்குவேன்னு எதிர்பார்க்கல. தற்போது ஓபன் ஸ்கூலிங் முறையில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எதிர்கால திட்டம் எல்லாம் இல்லை. ஆனால் கண்டிப்பாக என்னுடைய பேக்கரியை பெரிய அளவில் கொண்டு வரணும்னு எண்ணம் மட்டும் இருக்கு. அதைத்தாண்டி கல்லூரியில் சேரும் போது அது குறித்து யோசிக்கலாம்’’ என்ற கேஷிகா 2023ம் ஆண்டுக்கான ரைசிங் ஸ்டார் மற்றும் இளம் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார்.