வானத்தில் பறப்பது போல் உணர்ந்தேன்!! (மகளிர் பக்கம்)
எத்தனை பேர் நமக்கு பிடித்த விஷயங்களை, வேலையை செய்கிறோம் என்று கேட்டால், அப்படிப்பட்டவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். சிலர் எனக்கு பிடித்துதான் இந்த வேலையை பார்க்கிறேன் என்பார்கள். பெண்களுக்கு வேலை என்பது அவர்களின் பாதுகாப்பு கவசம் என்றாலும், வேலையை தாண்டி நமக்கு பிடித்த சின்னச்சின்ன ஆசைகள் என்று யோசித்தால் அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். நம்முடைய பட்டியலில் இடம் பெற்று இருக்கும் ஒரு ஐந்து விஷயமாவது நாம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறோமா? ஆண்களே தயங்கும் சில விஷயங்களை பெண்கள் தங்களுக்கு பிடித்து செய்யும் போது அதற்கென்று தனி இடத்தை உருவாக்கி தங்களை உயர்த்தி கொள்கின்றனர்.
உதாரணத்திற்கு, விமானம், கப்பல் பொன்ற பெரிய பயணியர் வாகனங்களை இயக்குவது அல்லது அறிவியல் துறையில் சாதனை புரிவது என அனைத்திலும் தங்களுக்கென்ற இடத்தினை பெண்கள் அமைத்துக்கொண்டு வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சாலை வழி பயணம், குறிப்பாக இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதில், ‘‘புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்’’ என்ற பாடலுக்கு ஏற்ப தனக்கு பிடித்த இடங்களுக்கு தனி மனுஷியாக சுற்றி வருகிறார், இஸ்லாமிய பெண்ணான சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நூர். அவரின் பைக் ரைடிங் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்தார்.
‘‘பொதுவா, பெண்களுக்கு பைக் ஓட்டுவது என்றால் ரொம்ப பிடிக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன?’’ என்று பேசத்துவங்கினார் நூர். ‘‘பிடித்த விஷயத்தை செய்யும் போது ஒருவருக்கு நிறைய தடைகள் ஏற்படும், அதுவும் பெண் என வரும் போது அதனை வெளிப்படையாக சொல்ல கூட முடியாது. பைக் ஓட்ட ஆசைப்பட்டு தான் நான் அதை கற்றுக்ெகாண்டேன். என் நண்பர்கள்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க பைக் வாங்கி தான் ஓட்டுவேன். அதன் பிறகு நான் ஏன் அவங்க பைக்காக காத்திருக்கணும். எனக்காக ஒரு பைக் வாங்கினால் என்ன என்று தோன்றியது. உடனே பைக் வாங்கி என் பயணத்தை தொடர்ந்தேன்’’ என்றவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.
‘‘நான் பைக் வாங்கி பெங்களூரில் தொடங்கி தொடர்ந்து ஏழு மாதங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, புனே, டாமன் டையு, குஜராத், பீஹார், டெல்லி, உத்தரப்பிரதேசம், நேபால் இறுதியாக என் பயணத்தை சென்னையில் முடித்தேன். கிட்டத்தட்ட 9000 கிலோமீட்டர் டிராவல் செய்திருக்கேன். இந்த பயணத்தின் போது பலதரப்பட்ட மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், உணவுப் பழக்கங்கள் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் நான் பைக் வாங்கியதை வீட்டில் சொல்லவே இல்லை. நான் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். என் பெற்றோர் சென்னையில் இருக்காங்க.
அதனால் நான் பைக் வாங்கி அப்படியே என்னுடைய பயணத்தை தொடர ஆரம்பிச்சேன். பயணத்தின் இடையில் தான் ஒரு நாள் அவங்களுக்கு போன் செய்தேன். அப்ப ஆல் இந்தியா டூர் பைக்கில் சென்று இருப்பதாக சொன்னேன். எங்க வீட்டில் இருக்கிறவங்க ரொம்பவே பயந்துட்டாங்க. அவங்களுக்கு கவலையாயிடுச்சு. அழ ஆரம்பிச்சுட்டாங்க. அதன் பிறகு அவங்களுக்கு என் விருப்பத்தை புரிய வைத்தேன். அவங்களும் புரிந்து கொண்டு என்னை என் வழியில் போக விட்டாங்க. பின் நான் எங்க இருக்கேன் எப்படி இருக்கேன்னு விசாரிப்பாங்க.
என்னை பார்த்து நிறைய பெண்கள் தாங்களும் பைக் ஓட்ட கத்துகிட்டோம்ன்னு சொல்லுவாங்க. அதிலும் ஒரு பெண் அவங்க வீட்டிலிருந்த முப்பது வருடம் பழமையான ஒரு இரு சக்கர வாகனத்தைக் கொண்டு இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்காங்க. அவங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்ய நான் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருந்தது.
வீட்டில் இருப்பவர்கள் நம்ம ஆசைக்கு ஒத்துக் கொண்டாலும், நம்மை சுத்தி இருப்பவர்கள் அதற்கு விட மாட்டாங்க. ஆண்களே செய்ய தயங்குவாங்க. உன்னால் எப்படி முடியும்னு என்னிடம் சிலர் கேட்பாங்க. இன்னும் சில பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தயங்குறாங்க. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள். அதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நமக்கு பிடித்ததை செய்ய முயற்சி செய்யலாம்’’ என்றவர் பைக் பயணத்தினால் ஏற்படும் அசவுகரியத்தை பற்றி விவரித்தார்.
‘‘நாம் செல்லும் இடங்களுக்கு ஏற்ப நம்முடைய உடல்நிலை ஒத்துழைக்காது. உணவுகளில் மாற்றம் ஏற்படும் போது அது பல கஷ்டங்களை ஏற்படுத்தும். அதே சமயம் நமக்கு பிடித்த ஒன்றை செய்யும் போது அது நாம் வானத்தில் பறப்பது போன்ற உணர்வினை கொடுக்கும். நான் பைக்கில் ட்ராவல் செய்த போது, புதுசா பிறந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அந்த அனுபவங்களை வார்த்தையாக வர்ணிக்க முடியாது. இந்த பயணம் பல சந்தோஷம், சங்கடம், நினைவுகளை கொடுத்திருக்கு’’ என்றவர் தன்னுடைய அடுத்த கட்டப் பயணம் குறித்து பகிர்ந்தார்.
‘‘அடுத்து சென்னையிலிருந்து சவுதிக்கு சர்வதேச பைக் சவாரி செய்ய போகிறேன். மெக்காவில் ‘‘உம்ரா’’ செய்வதற்காகத்தான் அந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். இந்த சர்வதேச பைக் பயணத்தை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறேன். நீண்ட தூர பயணத்திற்கு கார்தான் பெஸ்ட் என்றாலும் எனக்கு பைக் தான் எப்போதும்’’ என்றார் புன்னகைத்தபடி நூர்.