முன்னேறும் மகளிருக்கான முகவரி!! (மகளிர் பக்கம்)
தோழி விடுதிகள்…
பெண்களுக்கான கல்வி சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் பெருகி வரும் நிலையில்… கிராமத்தில் இருந்து கிளம்பும் ஒரு பெண்ணுக்கு நகரத்தின் சூழல் முகத்தில் அறையும் ஒன்று. இதில் பெண்ணிற்கு இருக்கும் முதல் தடையே இடமாற்றம். எங்கு சென்று தங்குவது என்பதாகவே அது இருக்கும். பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட நமது தமிழக முதல்வர் “முன்னேறும் மகளிருக்கான முகவரி” என குறிப்பிட்டு “தோழி விடுதிகள்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இரவு நேர பஸ் பயணங்களை மேற்கொண்டாலே பெண்கள் தண்ணீர் குடிப்பதைத்தான் முதலில் நிறுத்துவார்கள். அதிலும் குறிப்பாக திடீரென பயணத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பாக எங்கே தங்குவது என்பதே சிந்தனையாக இருக்கும். பெரும்பாலும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறை கழிப்பறைகளை பயன்படுத்தி தயாராகி வேலையை முடித்துவிட்டு திரும்பும் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள், ஒரு வாரம், 10 நாள் என வெளி ஊர்களில் தங்க நேரும் போது பெண்களுக்கான முதல் சிக்கல் தங்குமிடமாகவே இருக்கிறது.
இதை உணர்ந்து, வேலைக்கு போகும் பெண்கள் என்றில்லாது… நேர்முகத்தேர்வு சார்ந்து, தொழில் சார்ந்து, தொழில் பயிற்சி சார்ந்து, சொந்த அலுவல்கள் சார்ந்து, பொருட்களை வாங்குவதற்கென தினம் தினம் வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்படும் பெண்களை மனதில் வைத்து, எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும் அரசு நடத்தும் தோழி விடுதிகளில் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் தேவைப்படுகிற நாட்களுக்கு மட்டும் நீங்கள் தங்கலாம் என்கிறார் நமது முதல்வர்.
வேலை, எதிர்கால வாழ்க்கை என கனவுகளை சுமந்து பெருநகர வாழ்க்கையை நோக்கி வரும் பெண்களுக்கு தங்குமிடம் வீடு போன்ற மனநிலையை தரவேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம். எனவே தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், வெளியூர்களுக்குச் சென்று தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் சார்பில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 மகளிர் தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் ‘தோழி’ விடுதிகள் எனப் பெயரிடப்பட்டு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை செயின்ட்தாமஸ் மௌன்ட் போன்ற இடங்களில் இந்த மாத இறுதிக்குள் தோழி விடுதிகளை கொண்டு வருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.
எல்லா மாவட்டங்களிலும் விடுதி என்கிற முன்னெடுப்பில், கூடுதலாக விடுதி தேவைப்படும் ஊர்களிலும், பரபரப்பாக இயங்கக்கூடிய இரண்டாம் கட்ட நகரங்களையும் கணக்கில்கொண்டு அங்கும் தோழி விடுதிகளை கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில ஊர்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மகளிர் விடுதிகளை சீரமைத்து செயல்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
காற்றோட்டமான கட்டிடம், 24 மணிநேர பாதுகாப்பு, சிசிடிவி கேமரா, பயோமெட்ரிக் வருகைப் பதிவு, சுத்தமான அறைகள், ரைட்டிங் டேபிள், அலமாரிகள், வைஃபை வசதி, கேன்டீன், டி.வி ஹால், வாஷிங்மெஷின், உடைகளை அயர்ன் செய்கிற வசதி, சுத்திகரிக்கப்பட்ட ஆர்வோ குடிநீர், ஏசி தங்கும் அறைகள் என ஹைடெக்காக, நவீன வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
தனி அறைகள், இருவர் தங்கும் அறைகள், நால்வர் மற்றும் ஆறு பேர் என அறையை பகிரந்துகொள்ளும் வசதிகளும், ஏசி பொருத்தப்பட்ட அறைகளும் இருக்கிறது. முக்கியமாக தனித்து வாழும் பெண்கள், அதுவும் குழந்தைகளோடு வரும் பெண்களுக்கு குழந்தை பாதுகாப்பு மையங்களும், தாய்ப்பால் கொடுக்கும் வசதியும் தோழி விடுதியின் கூடுதல் சிறப்பு. கூடவே மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கு தாழ்வான படுக்கை, வீல்சேரில் நுழைவதற்கான சாய்தள பாதை போன்ற வசதிகளும் உள்ளன.
தோழி விடுதியை நிறுவும் போதே இரண்டு கிலோ மீட்டருக்குள் மருத்துவமனை, காவல் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றை கணக்கில் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.பெண்களை விடுவிக்கும் பாதையில் பாதுகாப்பான தங்கும் இடம் மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக எல்லா மாவட்டங்களிலும் தோழி விடுதி என்பது பெண்கள் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கவே செய்யும்.தோழி விடுதிக்கான ஆன்லைன் முன் பதிவுக்கு http://tnwwhcl.in/ என்கிற இணைய முகவரி அல்லது 9499988009 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
அன்பு சிலையாகிறது!
கர்நாடகத்தில் குடும்பங்களில் லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன தெரியுமா?
தங்கள் மீது அன்பை பொழிந்த நெருங்கிய உறவினர்களுக்கு சிலை வைப்பது தான்! எங்கே? தன் வீட்டிற்குள்ளேயே தான்! மூன்று கணவர்கள், தங்கள் மீது அன்பைப் பொழிந்து மறைந்த அவர்களின் மனைவியருக்கு வீட்டிற்குள்ளேயே சிலை வைத்து தினமும் பார்த்து மகிழ்வதுடன், தங்களுடன் எப்பவும் அவர்கள் கூடவே இருப்பது போலவும் மகிழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் முன்னாள் கவுன்சிலராவார். மனைவியின் அன்பு ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் தாயின் மேல் இருக்கும் பாசம். அவரின் பாசம் நிகரானது என்பதால் தன்னுடைய தாயின் நினைவாக தனது வீட்டில் ஒரு அழகான சிலை ஒன்றை அமைத்துள்ளார் கர்நாடகாவினை சேர்ந்த வெங்கடேஷ்.
இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ‘‘என்னுடைய பெரிய ரோல் மாடல் என் அம்மாதான். அவர் தங்களால் முடிந்த உதவியினை பலருக்கு செய்துள்ளார். என்னை ஒரு நல்ல மனிதராக வளர்த்துள்ளார். ஒருவரால் எவ்வாறு எல்லாரிடமும் பாசம் காட்ட முடியும் என்று நான் வியந்திருக்கிறேன். அதனால் அவரின் நினைவுகள் என்றும் நீங்காமல் இருக்கவே அவரின் திரு உருவத்தை வடித்தேன்.
அவரின் சிலைக்கு தினமும் தியானம் செய்த பிறகுதான் என் அன்றாட வேலையினை துவங்குவேன். எனக்கு திருமணமாகவில்லை. செய்து கொள்ளும் எண்ணமும் எனக்கில்லை. என் அன்னையின் நினைவாக நான் என் வாழ்நாட்களை கழிக்க விரும்புகிறேன்’’ என்றவர், தன் அன்னை இறந்த பிறகு ஒவ்வொரு மாதமும் காசி வாரணாசிக்கு சென்று 1500 புரோகிதர்களை வைத்து வைகுண்ட சமாராதனை பூஜையினை நடத்தியுள்ளார்.