வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 9 Second

உலகளாவிய கணக்கெடுப்பின்படி தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நில அமைப்புகள், தட்பவெப்பநிலை, மண்ணின் வளம், விவசாயிகளின் அனுபவம் மற்றும் ஈடுபாடு, பொருளாதார வசதி உள்ளிட்ட இதர கட்டமைப்பு வசதிகள் விவசாயம் செய்யும் காலத்திற்குரிய பயிர்களை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் தோட்டக்கலைப் பயிர் பல இடங்களில், குறிப்பாக மலைச்சரிவுகளில் பெருமளவு வளர்ச்சி கண்டு இந்திய விவசாயத்தில் பசுமையான அங்கமாக உள்ளது. வணிகப் பயிர்களாக பொருளாதார வளர்ச்சியில் மிகச்சிறந்த பங்களிப்பைத் தருகின்றன தோட்டப்பயிர்கள். தோட்டக்கலைத் துறை பரந்த அளவிலான பயிர்களை உள்ளடக்கியது.

பழங்கள், காய்கறிகள், அலங்கார பூக்கள், மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களான ஏலக்காய், கிராம்பு, மிளகு, தேயிலை, காபிச் செடிகள் என இவைகளெல்லாம் தோட்டக்கலைப் பயிர்களாகும். மாற்று சாகுபடி திட்டத்தைச் செயலாக்குவதிலும், விவசாய தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதிலும் தோட்டக்கலைப் பயிர்கள் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகும். பெண்களுக்கு தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு, ரப்பர், கிராம்பமற்றும் இதர தோட்டப் பயிர்களின் உற்பத்தியில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தோட்டப் பயிர்களான தேயிலை, காபி, ஏலம், மிளகு, கிராம்பு, அவகேடா, ரப்பர் ஆகியவற்றைப் பயிரிட மிக அதிக நிதியாதாரம் தேவை. தேயிலை பயிரிட அதிக தொழிலாளர்களும், மிதமான நிழலும், அதிக மழையளவும் தேவை.

தோட்டக்கலைப் பயிர்களுக்கு வங்கிக்கடன்

அதிக வருமானம் தரும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குகின்றன. பயிர்களின் பருவ காலத்திற்கு ஏற்ப கடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன. வங்கியில் கடன் பெறுவதற்கு என்னென்ன தேவை என்ற தெரிந்து கொள்ளலாம்.

(1) தோட்டக்கலைப் பயிர் செய்வதற்கு விண்ணப்பிப்பவர் நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.

(2) நிலையான மற்றும் தேவையான அளவுக்கு வற்றாத நீர்ப்பாசன வசதி இருப்பது அவசியம்.

(3) பயிரிடுவதில் முன் அனுபவம் உள்ள விவசாயிகள் முன்னுரிமை பெறுகின்றனர். புதியதாக இந்தப்பணியில் ஈடுபட முனைபவர்கள் போதிய பயிற்சி உள்ளவராக இருத்தல் அவசியம்.

(4)பயிர் செய்வதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாரித்து வங்கியில் விண்ணப்பத்துடன் வழங்கவேண்டும். குறிப்பாக பயிர் விளைந்த பின் அதற்கான சந்தை வாய்ப்புகள், லாபமீட்டும் திறன், விற்று முதல் பெறும் கால அளவு ஆகியவை விரிவாகத் திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

(5)விண்ணப்பதாரர் தனது மூலதனமாக இடும் தொகை எவ்வளவு என்பதையும், அதன் விவரம் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

(6)பிற வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மற்றும் தனியாரிடம் ஏற்கனவே கடன் பெற்றுள்ளாரா என்பதையும் அவ்வாறு பெற்றிருந்தால் கடனில் உள்ள நிலுவைத் தொகை, வட்டி மற்றும் செலுத்த வேண்டிய கால அளவு, அதற்காக வழங்கியுள்ள அடமானம் ஆகியவற்றின் விவரங்களை பதிவிட வேண்டும்.

(7)அருகிலுள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் எவ்விதக் கடனும் நிலுவையில் இல்லை என்றால் அதற்குரிய சான்றிதழை அந்தந்த வங்கிகள், நிறுவனங்களில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

(8) அந்தந்த பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்ட பயிராகவோ அல்லது விளைவித்தவர் சந்தை லாபத்தை அதிகப்படுத்துவதற்காக விளைந்த பயிரை பதுக்கி வைப்பவராகவோ இருத்தல் கூடாது.

(9)வங்கியின் தோட்டக்கலைப் பயிர்க்கடன் திட்டத்தின்படி உரிய ஆவணங்களை இணைத்து வங்கியில் வழங்கி அனுமதியுடன் கடன் பெற வேண்டும்.

கடன் தொகை நிர்ணயம்

தோட்டப் பயிர் சாகுபடிக்கு வங்கி வழங்கும் கடன் என்பது பயிரிடப்படும் பயிர் வகை மற்றும் சாகுபடிப் பரப்பின் அடிப்படையில் அமைகிறது. வங்கிகள் தோட்டக்கலை நவீனமயமாக்கல் மற்றும் விவசாயத்தின் வளரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை செயல்படுத்தி வேளாண் உற்பத்தி மற்றும் லாபத்தைப் பெருக்குவதற்கு நிதி ஆதாரம் வழங்குகின்றன.

பயிர் சாகுபடிக்குக் குறுகிய காலக் கடன் வழங்குவதோடு அறுவடைக்குப் பிந்தைய செலவுகளுக்கும் வங்கிக்கடன் பெறலாம். நிலம் பண்படுத்துதல், நீர் ஆதாரம் உருவாக்குதல், விதைப்பதிலிருந்து / நடுவதிலிருந்து தரமுடன் தயாரிக்கப்பட்ட விளை பொருளாகும் வரை வங்கிகள் எவ்வளவு நிதி தேவை என்ற திட்ட அறிக்கையை கேட்டுப் பெற்று அதன் வரைவுப் படி மாவட்ட / பகுதி
அரசின் தோட்டக்கலைத்துறை, முன்னணி வங்கி ஆகியவற்றின் கடன் நிதியளவு ஆண்டறிக்கையின்படி நிதி அளவீடு செய்து கடன் வழங்குகின்றன. குறைந்தபட்ச கடன் அளவு ரூ.1 லட்சம் என்றும் அதிகபட்ச கடன் வரம்பு ரூ.1 கோடி என்றும் தோட்டப் பயிர்கள் பயிரிட வங்கிகள் கடன் வழங்குகின்றன.

நிலச்சீரமைப்பு, சொட்டு நீர் / தெளிப்பான் வசதி உள்ளிட்ட நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துதல். உள்கட்டமைப்பினை மேம்படுத்துதல், மின்மோட்டார் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைத்தல், மூலப்பொருட்கள் வாங்கி எடுத்து வரவும், விளைபொருட்களை சந்தைப்படுத்தவும் தேவையான வாகன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிரந்தர செலவுகளுக்கு வங்கி தவணைக்கடன் வழங்குகிறது. நீண்டகாலக் கடனாக வழங்கப்படும் கடன் தொகையை ஒவ்வொரு பயிரின் சந்தைப்படுத்தப்பட்ட கால முதிர்வில் நிர்ணயிக்கப்பட்ட தவணைகளாக வங்கியில் துவக்கப்பட்ட கடன் கணக்கில் செலுத்த வேண்டும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 8 முதல் 12 ஆண்டுகள் ஆகும். கடன் தொகை ரூ. 1 லட்சம் வரை குறுகிய காலக்கடனாக வழங்கப்படுகிறது. கடன் தொகை ரூ. 3 லட்சம் வரை பரிசீலனைக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றை வங்கிக்குச் செலுத்த வேண்டியதில்லை. வங்கிக்கடன் திட்டத்தோடு குறிப்பிட்ட பயிர்களுக்கு தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூலம் (National Horticulture Board) இணையவழியில் விண்ணப்பித்து மானியம் பெறலாம். நிரந்தர குத்தகைதாரர்களுக்குச் சில வங்கிகள் தங்களது கடன் திட்ட வரைவின்படி பயிர்க்கடன் வழங்குகின்றன.

வணிகப்பயிரான ஏலக்காய் பயிரிடுவதற்கு மலைப்பகுதிகளில் ஒரு ஏக்கருக்கு ரூ. 51100/-என்று கணக்கிட்டு வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. சிறிய ஏலக்காய் உற்பத்தியில் இந்தியா உலக அரங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் ஏலக்காயின் சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் உற்பத்தியானது நிலவும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தது. ஏனெனில் ஏலக்காய் செடிக்கு இடைவிடாத மழை மற்றும் வளர்ச்சி நிலையில் நல்ல சூரிய ஒளி தேவைப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் விவசாயியின் நிதி தேவை அதிகரித்து வருகிறது என்றபோது அதற்கேற்ற வகையில் வங்கிகள் நடப்பு மூலதன நிதி வரம்பை உயர்த்தி வழங்குகின்றன.

தோட்டக்கலைப் பயிற்சி

தோட்டக்கலைப் பயிர்கள் மிகவும் லாபகரமாக இருப்பதால் வங்கிகள் சிறப்பு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குகின்றன. குறிப்பாக தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் பயிர் நடவு, வளர்ப்பு, பாதுகாப்பு, பூச்சிகளின் அரிப்பை உரிய நேரத்தில் தடுப்பது, தேயிலை சன்னமாக விளைவதற்கான வேளாண் நுட்பங்களை அறிவது, தேயிலை பயிரிடும் மற்றும் பறிப்பு காலம் ஆகியவற்றின் நுட்பத்தினை அறிவது, பறித்த தேயிலையை பதப்படுத்தும் செய்முறை தெரிந்து பயிர் வீணாகாமல் சந்தைப்படுத்துவது ஆகிய மேலும் பல நிலைகளில் செயல்முறை விளக்கமாக இந்தப் பயிற்சிகள் அமைகின்றன. இந்தியாவில் தேயிலை உற்பத்தி ஏறக்குறைய 180 ஆண்டுகளாக சிறந்த முறையில் செய்யப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா உலக சந்தையில் விளங்குகிறது. மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தேயிலை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும். சத்துக்கள் நிறைந்த வடிகால் நிலமே தேயிலை சாகுபடிக்கு ஏற்றதாகும். மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 – 5.4 ஆக இருக்க வேண்டும். நோயற்ற, வீரிய வளர்ச்சியுடைய, நல்ல விளைச்சல் வழங்கக்கூடிய நாற்றுகளைத் தேர்வு செய்து நடவேண்டும். அவ்வாறு தேர்ச்சி செய்வதற்கும், மண் வளம் அறிந்து அதனை மேம்படுத்தவும் விவசாய நுட்பம் அறிந்த வங்கி அலுவலர்கள் பயிற்சி தருகின்றனர்.

தேயிலை பயிரிடும் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். வாங்கிய நாற்றுக்கள் பாலீதின் பைகளில் இருந்தால் அந்தப் பைகளை சரியான இடத்தில் கிழித்து வேர் பாகம் உடையாமல் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒற்றை வரிசை மற்றும் அடுக்கு முறையில் 1.20 x 0.75 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு ஹெக்டருக்கு 10800 செடிகளை நடலாம். கோடையில் இளம் செடிகள் நீரின்றி காய்ந்து விடாமல் கவனித்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தேயிலை தோட்டத்தில் நிழல் தரும் மரங்கள் இருப்பது நல்லது. நடவு செய்த மூன்றாம் ஆண்டில் அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டருக்கு 10 டன் வரை எடையுள்ள தேயிலையினை அறுவடை செய்யலாம். வங்கிகள் இத்தகைய விளைச்சல் தரும் நிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிர்க்கடன் வழங்குகின்றன.

அதேபோல் காபி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீ முதல் 1500 மீ உயரம் கொண்ட நிழலான மலைச் சரிவுகளில், நன்றாக வளர்கிறது. வளர்ந்த பயிரை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தை உழும் முறை முன்னாளில் இருந்தது. அந்தப் பயிர் முழுவதும் அதே நிலத்தில் உரமாகும் போது மண் வளம் பெருகும். இந்த செயல்முறையை ‘நமக்கு உணவூட்டிய நிலத்திற்கு நாம் உணவூட்டுவது’ என்று கூறுவர்.

தோட்டப் பயிர்களான தேயிலை, காபி, ஏலம், மிளகு, கிராம்பு, அவகேடா, ரப்பர் ஆகியவற்றைப் பயிரிட வங்கிகள் வழங்கும் கடன் தொகை அந்தந்த வங்கிக் கிளையின் இருப்பிட மாவட்டம் சார்ந்துள்ளது. மாவட்டத்தின் முன்னோடி வங்கி, சம்பந்தப்பட்ட அரசுத்துறை மற்றும் உறுப்பினர் வங்கிகள் ஒருங்கிணைந்து ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட எவ்வளவு செலவாகும் என்பதையும் அதற்கான வங்கிக்கடன் நிதி அளவையும் நிர்ணயிக்கின்றன. மேலும் தோட்டப் பயிர்களிலிருந்து அத்தியாவசிய எண்ணெய்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரித்தல், தோட்டக்கலை தொடர்பான பண்ணை கருவிகள் மற்றும் இயந்திரங்கள், உபகரணங்கள் உற்பத்தி ஆகிய அனைத்துத் தொழில்களுக்கும்
வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன.

பசுமைக்குடில் விவசாயமும் வங்கிக் கடனும்

பூக்கள், பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே பயிரிட்டால் விளைபொருள் நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் பயிரிடுவோரின் லாபமும் போதுமான அளவு இருக்கும். அவ்வாறு பயிரிட உதவும் மிகச்சிறந்த செயலாக்கமே பசுமைக்குடில் விவசாயமாகும். தாவரங்களுக்கு சாதகமான சுற்றுச் சூழலை உருவாக்கி அவை நன்றாக வளர்வதற்கும், நிறம், திடம் மற்றும் சுவை தரமுடன் உற்பத்திப்பொருள் விளைவதற்கும் ஏற்ற பயிரிடும் முறைதான் பசுமைக்குடில் விவசாயமாகும்.

பசுமைக்குடில் அமைப்பதற்கு மொத்த செலவில் 80% வரை தவணைக் கடனாக வங்கி வழங்குகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமைக்குடில் அமைக்க ரூ.40 லட்சம் – ரூ.50 லட்சம் வரை செலவாகும். கடனை 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுக்குள் செலுத்த வேண்டும். கடன் பெறுவோர் செலுத்தவேண்டிய வட்டி 12 % – 14% வரை என்று வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. பயிரிடும் விளைபொருட்கள் முதன்மைப் பிணையமாக இருந்தாலும் விவசாயி பயிரிடும் நிலத்தை வங்கியில் அடமானமாக வைக்க வேண்டும்.

வங்கி விவசாயின் பெயரில் ரூ.2 லட்சம் என்னும் உச்சவரம்புக்கு தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்குகிறது. குறுகிய காலக்கடனாக திசு வளர்ப்பு மூலம் நாற்றங்கால் தயாரிக்கவும், நடவு செய்யவும், உள்ளீட்டுப் பாசன வசதி உருவாக்கவும், காய்கறிகள் மற்றும் பழவகைகள் அவற்றுக்குரிய பருவகாலம் இல்லையென்றாலும் பசுமைக்குடிலில் அதற்குரிய தட்பவெப்பநிலை அமைத்து பயிரிடலாம் என்பதால் வங்கி ஆண்டுதோறும் சுழற்சி முறையில் கடன் வழங்குகிறது. மேலும் தேவையான அளவுக்கு மட்டுமே நீரின் பயன்பாடு நெறிப்படுத்தப் படுவதால் விவசாயத்திற்கான நடப்பு மூலதனச் செலவு குறைகிறது.

பசுமைக்குடில் வங்கிக்கடன் பெற தேவையான ஆவணங்கள்

(1) நில அளவீடு, பசுமைக்குடில் மாதிரி வரைபடம், நீர் ஆதார வசதி பெற தேவையான முதலீடு, மண் மற்றும் நீர் பகுப்பாய்வுச் செலவினங்கள் மற்றும் இதர செலவுகள் அடங்கிய திட்ட அறிக்கை

(2) விவசாயின் சொந்த முதலீட்டு நிதி குறித்த அறிக்கை

(3) நாற்றுகள், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை விவரப் பட்டியல்

(4) குடில் மற்றும் உபகரணங்களுக்கான காப்பீட்டு செய்வதற்குத் தேவையான நிதி விவரம்.

(5) விளை பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு மற்றும் எதிர்நோக்கும் லாப அளவீடுகள்.

தோட்டப் பயிர் செய்ய வங்கிக் கடனுதவியும், சாகுபடியை ஊக்கப்படுத்தும் அரசு வழங்கும் மானியமும் விவசாய வளர்ச்சிக்குப் பெருமளவு உதவுகின்றன. விவசாயம் சார்ந்த பிற கடன் திட்டங்களை குறித்து மேலும் தெரிந்து கொள்வோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கீரையும் மருத்துவ குணமும்!! (மருத்துவம்)
Next post அன்று டைரி எழுதினேன்… இன்று கதை புத்தகம் வெளியிடுகிறேன்!! (மகளிர் பக்கம்)