அகம் காக்கும் அகத்தி!! (மருத்துவம்)
உணவே மருந்து என்ற சொல் மிகமிக அர்த்தமுள்ளது. நாம் அனைவராலும் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. ஏனெனில் மாறிவரும் உணவுப் பழக்க வழக்கத்தின் காரணமாக, இன்று நாம் அனைவரும் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். குறிப்பாக, நம் உணவுப்பழக்கத்தில் கீரையை உட்கொள்வது என்பது இன்று மிகவும் குறைவாகவே இன்றைய தலைமுறைகளிடம் உள்ளது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் பச்சைக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கலாம் எனப் பரிந்துரைக்கின்றனர்.
கீரைகளில் பல வகைகள் இருந்தாலும், அகத்திக் கீரையில் அளவுகடந்த மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. எனவே, மிகவும் சிறப்பு வாய்ந்த கீரையாக அதன் மருத்துவப் பண்புகளின் அடிப்படையில் கருதப்படுகிறது. இந்த கீரை, அகத்தை சுத்தப்படுத்துவதனால், இது அகத்தி என அழைக்கப்படுகிறது. மேலும், அகத்தி என்ற சொல்லுக்கு முதன்மை என்று பொருள். இது அகத்தில் அதாவது, நம் உள்ளுறுப்புகளில் மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடியது. குறிப்பாக வாய், உணவுக்குழாய், வயிறு, குடல் இவற்றிலுள்ள தீயை (வெப்பத்தை) நீக்குவதால் அகத்தி என்று அழைக்கப்படுகிறது.
இது மரம் போல் உயரமாக வளரக்கூடியது என்றாலும் செடி வகையைச் சார்ந்ததுதான். அகத்தியில் வெள்ளைநிறப் பூவையுடையது அகத்தி என்றும், செந்நிறப்பூவையுடையது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறு கசப்புச்சுவையுடன் குளிர்ச்சித்தன்மை கொண்டது. இதன் பூ, இலை, காய், பட்டை மற்றும் வேர் என அனைத்து தாவரப் பகுதிகளுமே மருத்து வகுணம் கொண்டவை.
அகத்தியின் தாவரவியல் பெயர்: செஸ்பேனீயா கிராண்டிபுகளாரா
காணப்படும் நாடுகள்: இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகும்.
அகத்தியில் காணப்படும் சத்துகள்:
நூறு கிராம் அகத்திக் கீரையில் வைட்டமின் ஏ – 200 மி.கி., வைட்டமின் சி -300 மி.கி., தயமின்- 60 மி.கி. ரிபோப்ளேவின் – 56 மி.கி. இரும்புச்சத்து – 235 மி.கி. கால்சியம் – 1800 மி.கி. துத்தநாகம் – 135 மி.கி. உள்ளது. இக்கீரையில் நீர்ச்சத்து – 7.3 சதவீதம், புரதம் – 8.4. சதவிகிதம், கொழுப்பு – 1.4 சதவிகிதம், தாதுஉப்புகள் – 2.1. சதவிதம், தாது உப்புகள் – 2.1. சதவிகிதம் , மாவுச்சத்து – 11.8 சதவீதம், நார்ச்சத்து – 13 சதவீதமும் மற்றும் 800 கலோரி ஆற்றலும் நிறைந்ததாக உள்ளது.
அகத்தியின் மருத்துவக் குணங்கள்:
அகத்தியின் சிறப்பினை நம் முன்னோர்கள் வழிவழியாக அறிந்திருந்தாலும், இதன் மருத்துவப் பண்புகளை அகத்தியர் தன்னுடைய குணப்பாட நூலில் இவ்வாறு கூறுகிறார்.
மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம்திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச்சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்அகத்தியிலை தின்னு மவர்க்கு.
இப்பாடலில் அகத்தி இலையைச் சாப்பிடுவதால், இடுமருந்து போகும். பைத்திய தோடம் நீங்கும். கடுவனும், வாய்வும் உண்டாகும். உணவு சீரணமாகும். ஆனால், மருந்துகள் யாவற்றையும் முறித்துவிடும். இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவப் பண்புகள் அனைத்துமே நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைக் கொண்டும் ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, குடல்புழுக்களை அழிக்க, தோல்நோயினைக் குணமாக்க, வயிற்றுப்புண் குணமடைய, மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்த எனப் பல்வேறு மருத்துவப் பண்புகளை அகத்தி கொண்டுள்ளது. அகத்திப் பூவை பொரியலாகச் சமைத்து உண்ண, வெயிலால் ஏற்படும் உடற்சூடு தணியும். மேலும், புகையிலை, பீடி, சிகரெட் இவற்றால் டலில் தோன்று ம் வெப்பம், உட்சூடு, பின் விளைவுகளை நீக்கி, புகைப்பிடிப்பதில் உண்டாகும் ஆர்வத்தையும் குறைக்கும். இதை அகத்தியர் தன்னுடைய குணவாகட நூலில் கூறியுள்ளார். அதுபோல, மூக்கின் வழியாக ஒருசிலருக்கு அடிக்கடி வழியும் ரத்தப் பெருக்கை விரைவாக நிறுத்துவதற்கு செவ்வகத்தி பூவின் சாற்றை ஒன்று முதல் இரண்டு துளிவீதம் மூக்கில் விட்டுவர ரத்தம் வடிவது நிற்கும்.
அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி தினமும் ஒருகிராம் வீதம் ஏதேனும் ஒருவேளை பாலில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டுவர வயிற்று அமிலச்சுரப்பால் ஏற்படும் மார்பு வலி, நெஞ்செரிச்சல் ஆகியவை குணமாகும்.
மேலும் அகத்தி கொண்டுள்ள மருத்துவபண்புகளுக்கு காரணம் அதில் நிறைந்துள்ள அல்கலாய்டுகள், பிளேவோனாய்டுகள், கிளைக்கோசைடுகள், மைரிசிடின், கேம்ஃபெரால், குளுக்கோர்னிக் அமிலம் போன்ற மூலப்பொருட்களேயாகும். ஆகையால் அகத்தி கீரையை அன்றாட உணவில் எடுத்துக் கொண்டு பல்வேறு மருத்துவ பிரச்னைகளை தவிர்க்கலாம். மேலும், மேலை நாட்டு உணவு கலாச்சாரத்தை தவிர்த்து நமது பாரம்பரிய உணவு முறையை பின்பற்றுவது அனைவருக்குமே சிறந்த ஒன்றாகும்.