வீட்டை வண்ண மயமாக்கும் N-சக்தி பெண்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 16 Second

இது ஆண்களுக்கான வேலை. பெண்களால் செய்ய முடியாது என்று இனி வரும் காலத்தில் எந்த வேலையிலும் பாகுபாடு பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பெண்களும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஆட்டோவில் ஆரம்பித்து… பஸ், லாரி, ரயில், விமானம் போன்றவற்றை ஓட்டுகிறார்கள். சில பெண்கள் மெக்கானிக் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள். உணவு டெலிவரி வேலையும் செய்கிறார்கள். முன்பு இது போன்ற கரடு முரடான வேலைகளை ஆண்கள் மட்டுமே செய்து வந்தார்கள்.

அவை அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு நாங்களும் களம் இறங்குறோம் என்று இறங்கிவிட்டனர் இன்றைய பெண்கள். அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்றானது சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் வேலை. இன்று அந்த வேலையையும் தன் கைவசமாக்கிக் கொண்டுள்ளனர். கோயில் ஒன்றை பெயின்ட் அடிக்க முன் வந்த பெண்கள் இப்போது கோயில் மட்டுமில்லாமல் வீடுகளுக்கும் பெயின்ட் அடிக்க கையில் பிரஷுடன் கிளம்பிவிட்டனர். ‘‘இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்ததில் எங்களுக்கு ரொம்பவே பெருமையா இருக்கு’’ என்கிறார் ராஜேஸ்வரி. இவர் நிப்பான் நிறுவனத்தில் மனிதவள துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இவர்களின் என்-சக்தி என்ற திட்டம் மூலம் பல பெண்களை பெயின்டர்களாக உருவாக்குவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு என வாழ்வாதாரம் ஏற்படுத்தி வருகின்றனர்.
‘‘என்-சக்தி… 2018ல் உருவானது. எங்க நிறுவனம் பெயின்ட் நிறுவனம் என்பதால் எல்லோருடைய வாழ்க்கையையும் வண்ணமயமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் இந்த திட்டத்தை ஆரம்பித்தோம். அதற்கு காரணம் திண்டிவனம் அருகே உள்ள சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள். அவர்கள் கேட்ட அந்த கேள்வி முதலில் இவை நடைமுறையில் சாத்தியப்படுமா? என்றுதான் எங்களை யோசிக்க வைத்தது. ஆனால் அவர்களின் தன்னம்பிக்கைதான் எங்களுக்கு செய்ய முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அப்படித்தான் இந்த திட்டத்தை நாங்க ஆரம்பிச்சோம்’’ என்றவர் அது குறித்து விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘திண்டிவனம் அருகே சிறுதாவூர் கிராமம். அந்த கிராமத்தில் உள்ள கோயில் ஒன்றினை பெயின்ட் அடித்து முழுமையாக அழகுபடுத்த வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதனால் நாங்க முதலில் அங்குள்ள கிராமத்து மக்களையே பயன்படுத்த நினைச்சோம். காரணம், அவர்களுக்கு அது ஒரு வருமானமாக இருக்கும் என்பது தான் எங்களின் எண்ணம். அவ்வாறு கேட்ட போது, அங்கிருந்த பெண்கள் நாங்க செய்றோம் அந்த வேலையை என்று முன் வந்தார்கள்.

பொதுவாக பெண்கள் ஒரு வேலையை செய்யும் போது அதை பொறுமையாக கையாள்வாங்க. நேர்த்தியா இருக்கும். ஆனால் ெபயின்டிங் வேலை என்று வரும் போது அவர்கள் சுவரில் ஏணி போட்டு ஏறவேண்டும், சாரத்தில் தொங்கணும். இது அவர்களால் முடியுமா என்று நாங்க சிந்திப்பதற்குள்… எங்களால் முடியும் என்று முன்வந்தார்கள் அந்த கிராமத்து பெண்கள். அவர்கள் ஆர்வமாக இருப்பதால், அவர்களுக்கு முறையான பயிற்சியினை அளிக்க திட்டமிட்டோம்.

பிரஷ் பிடிக்கும் முறை முதல் சுவர்களில் உள்ள சுண்ணாம்புகளை சுரண்டுவது, சாரத்தில் ஏறுவது, பெயின்ட் அடிப்பது என அனைத்து பயிற்சிகளும் அவர்களுக்கு அளித்தோம். அவர்களும் மிகவும் ஆர்வமா கற்றுக் கொண்டார்கள். பயிற்சி முடிந்ததும் எங்களுக்கு வந்த முதல் பிராஜக்டான அந்த கோயிலை பெயின்ட் அடித்தார்கள். இந்த நிகழ்வு சக்சஸானதால், இதையே தொடர்ந்து செய்ய முடிவு செய்தோம். அப்படித்தான் என்-சக்தி திட்டம் உருவாச்சு.

வண்ணங்கள் நம் சுற்றுப்புறத்தை அழகாக மாற்றுவது மட்டுமில்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையையும் வண்ணமயமாக்கும் என்பதை புரிந்துகொண்டோம். ஒரு பெண்ணுக்கு சம்பாத்தியம் அவசியம். அது அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த திட்டம் மூலமாக பெண்களுக்கு ஒரு வேலை மட்டுமில்லாமல், வருமானமும் பார்க்க முடியும் என்பதால், கிராமத்தில் உள்ள பெண்களை அணுகினோம். விருப்பமுள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.

இதுவரை 60 பேட்ஜில் 800 பெண் பெயின்டர்களுக்கு சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மதுரை என தமிழ்நாடு முழுதும் பயிற்சி அளித்து இருக்கிறோம். ஆரம்பிச்ச போது பெண்கள் பயிற்சிக்கு முன் வருவார்களானு பயம் இருந்தது. ஆனால் எங்களின் திட்டத்தினை புரிந்து கொண்டு கிராமத்தில் உள்ள பெண்களே எங்களிடம் இதற்கான பயிற்சி வேண்டும் என்று கேட்கிறார்கள்’’ என்றவர் பயிற்சி குறித்து விவரித்தார்.

‘‘இது 12 நாள் பயிற்சி. அதில் ஒரு பெயின்டருக்கான அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுத்திடுவோம். சுண்ணாம்பு சுரண்டுவது முதல், சாரத்தில் ஏறும் போது பின்பற்றக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள், பெயின்ட் கலப்பது, பிரஷ் பிடிக்கும் முறை என அனைத்தும் இதில் அடங்கும். பயிற்சிக்கு பிறகு அவங்க வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். முதலில் எங்க நிறுவனம் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம். அடுத்து எங்க பெயின்டினை விற்பனை செய்யும் டீலர்கள் மூலமாகவும் வழிகாட்டுவோம். பெயின்டிங் கான்ட்ராக்டர்கள் கொண்டும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். ஒரு கட்டத்தில் இவர்களே கான்ட்ராக்டர்களாக மாறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் பெண்கள் எப்படி செய்வாங்கன்னு சிலர் யோசிச்சாலும், அவர்களுக்கான வாய்ப்பினை கொடுக்க தயங்குவதில்லை. அவர்களின் வேலை திறமையை பார்த்து ஒருவர் மூலமாக பலர் ஆர்டர் கொடுக்க முன்வராங்க. இந்த வேலை அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இதில் வரும் சம்பாத்தியம் அவர்களின் குடும்ப சுமையினை ஓரளவிற்கு குறைக்க உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளின் படிப்பு அல்லது மருத்துவ செலவிற்கு கை கொடுக்கிறது. வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் பெயின்டராக வேலை பார்த்த சில பெண்கள் இப்போது பெயின்டிங் கான்ட்ராக்டரா மாறி அவர்களுக்கு கீழ் ஒரு பத்து பேரை நியமித்து முன்னேறி வருகிறார்கள்.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதில் நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலை விரிவுபடுத்த முடியும். இதுவும் அப்படித்தான். அதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்பம். ஆரம்பத்தில் பிரஷ் கொண்டு மட்டுமே பெயின்ட் செய்து வந்தார்கள். அதில் பெயின்ட் செய்வது அவ்வளவு சுலபமில்லை. ஒரு நாள் முழுக்க வேலை இருக்கும். இப்போது எளிதாக பெயின்ட் செய்வதற்கு ஸ்ப்ரே மெஷின் உள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஒரு நாள் செய்யக்கூடிய வேலையினை மூன்று மணி நேரத்தில் முடித்திடலாம். வேலை செய்வதும் சுலபம் என்பதால், ஒரே நாளில் இரண்டு மூன்று கான்ட்ராக்டுகளை எடுத்து செய்யலாம். சம்பாத்தியமும் அதிகரிக்கும்.

பெயின்டிங் குறித்து எந்தவித பிரச்னைகள், சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்ய நாங்க இருக்கிறோம். தற்போது கிராமங்களில் மட்டுமில்லாமல் நகரத்தில் இருக்கும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். எங்களுடன் இணைந்து இருக்கும் பெண்களுக்கு மேலும் நிறைய வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வழிமுறைகளை சிந்தித்து வருகிறோம்’’ என்றார் ராஜேஸ்வரி.

பெண்கள் மட்டுமே குழுவா இணைந்து…

மிதுலா: ‘‘என்னோட ஊர் வேலூர் அருகே இருக்கும் ஓச்சேரி என்னும் கிராமம். நான் பத்தாம் வகுப்புவரைதான் படிச்சிருக்கேன். என் கணவர் டெய்லர். எங்களுக்கு இரண்டு பசங்க. அவரின் வருமானத்தில்தான் எங்க குடும்பம் வாழ்ந்து வந்தது. அப்போதுதான் பெயின்டிங் பயிற்சி அளிப்பதாக ஒருத்தர் எங்களை அழைத்து பேசினார். நானும் அதன் மூலம் ஏதாவது வேலை கிடைத்தால், என் குடும்பத்திற்கு உதவியா இருக்கும்னு நினைச்சு தான் பயிற்சிக்கு போனேன்.

12 நாள் பெயின்டிங் எப்படி அடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. பயிற்சி முடிஞ்சதும் வேலைக்கான ஏற்பாடும் செய்து தந்தாங்க. ஆரம்பத்தில் எங்க வீட்டில் பெயின்டிங் வேலையான்னு தயங்கினாங்க. நான்தான் அதன் மூலம் வரும் வருமானம் நம் குடும்பச் செலவுக்கு உதவும்னு சொன்னேன். முதலில் நானும் ஒரு பெயின்டராதான் இருந்தேன். இப்ப நான் பெயின்டிங் கான்ட்ராக்டரா எனக்கு கீழ் 5 பெண்கள் வேலை பார்க்கிறாங்க. நாங்க வேலைக்கு போன போது பெண்கள் எப்படி வேலை செய்வாங்கன்னு முதலில் தயங்கினாங்க. எங்களின் வேலை எங்க கிராமத்தில் எல்லோருக்கும் பிடிச்சிடுச்சு. எங்க ஊரில் எங்கு பெயின்டிங் வேலை என்றாலும் எங்களை தான் கூப்பிடுறாங்க. இப்ப கிட்டத்தட்ட பத்து வீடுகளுக்கு பெயின்டிங் கான்ட்ராக்ட் பிடித்திருக்கோம்.

வேலையை பொறுத்தவரை கொஞ்சம் கஷ்டம்தான். சுண்ணாம்பு சுரண்டும் போது கண்ணில் விழும். சில சமயம் மூக்குக்குள் போயிடும். மாஸ்க் போட்டுக் கொண்டுதான் வேலை செய்கிறோம். கண்ணில் விழுந்தா, உடனே தண்ணீர் கொண்டு கழுவி விட்டு வேலையை பார்க்க ஆரம்பச்சிடுவோம். ஆரம்பத்தில் ஏணி மேல் ஏறி பெயின்ட் அடிக்க கொஞ்சம் பயமா இருந்தது. இப்ப சாரத்தில் தொங்கிக் கொண்டு பெயின்ட் அடிக்கும் அளவிற்கு பழகிட்டோம். நாங்க பெண்கள் மட்டுமே ஒரு குழுவா இணைந்து இந்த வேலையை செய்கிறோம். ஓரளவிற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. மேலும் மேலும் கான்ட்ராக்ட் எடுத்து நிறைய வேலை பார்க்கணும் என்பதுதான் எங்க குழுவின் நோக்கம்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இல்லத்தை வளமாக்கும் வலம்புரி சங்கு!! (மகளிர் பக்கம்)