வட மாநிலங்களுக்கு வண்டி ஓட்டும் லாரிப் பெண்கள்!! (மகளிர் பக்கம்)
‘எதை சுமக்கிறோம் என்பதல்ல… அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே முக்கியம். போன வாரம்தான் வெங்காய லோடை ஏத்திக்கிட்டு ஔரங்காபாத் வரை சென்று வந்தேன். நாளை நாசிக் கிளம்புறேன்’’ என்கிற செல்வமணி அக்கா கடந்த 20 வருடமாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு லாரியில் லோடு ஏற்றிச்சென்று திரும்புகிறார். ‘‘இப்ப எனக்கு 57 வயசு. 2004ல் நான் சென்றபோது சின்ன ரோடுகள்தான் இருக்கும். எதிர்ல வண்டி வந்தா ஒரு டயர இடது பக்கம் இறக்கி நின்னு வழிவிடணும். இப்ப எல்லா வழிகளிலும் பைபாஸ் சாலைகள் போடப்பட்டிருக்கு. வண்டிய ஓட்டுறது சுலபம்தான், இருந்தாலும் வண்டிகள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு’’ என்றவரிடம், லாரி ஓட்டுநரானது குறித்து கேட்டபோது…
‘‘சேலம் மாவட்டம் சங்ககிரியில் பெரிய பனங்காடு கிராமம் எனக்கு. டேங்கர் லாரிய ஓட்டும்போது ஏற்பட்ட சாலை விபத்தில், என் கணவருக்கு காலில் பயங்கர அடி. அவரால் வண்டியே ஓட்ட முடியாதுன்ற நிலையில் என் குடும்பம் கஷ்ட நிலைக்கு போயிடுச்சு. அதுவரைக்கும் பெண்கள் உடைகளை தைக்கும் தையல் வேலை மட்டுமே வீட்டுக்குள் செய்து வந்தேன். அவருக்கு ட்ரீட்மென்ட் அது இதுவென அலைந்ததில் 5 லட்சம் கடனாகிப் போச்சு. இரண்டு மகன்களையும் படிக்க வைத்து, குடும்பத்தையும் சமாளிக்கணும். என்ன செய்யுறதுன்னு ஒன்னுமே புரியலை. அப்ப எனக்கு வயது 37தான்.
ரொம்பவே யோசித்து, நாமக்கல் மாவட்டம் அசோக் லேலண்டில் ஒரு மாதம் ஓட்டுநர் பயிற்சி எடுத்து, ஓட்டுநர் உரிமம் பெற்று பேட்ஜ் போட்டதுமே, ஸ்டியரிங்கில் கை வைத்தேன்’’ என அசால்டாக சொல்லும் செல்வமணி தேக பலமின்றி மெலிந்தே காணப்படுகிறார். ஆண்கள் மட்டுமே அதிகம் புழங்குகிற இந்தத் துறையை எப்படி தைரியமாகக் கையிலெடுத்தீர்கள் என்றதற்கு..? “சூழ்நிலைதான். நம்ம பின்னாடி ஒரு புலி தொரத்துதுன்னு தெரிஞ்சா வேகம் தன்னப்போல வரும்.
அப்படித்தான் இதுவும் நடந்துச்சு. அது ஒரு வெறி. அந்த வெறி நமக்கு வந்துட்டா எல்லாமே தானா நடக்கும்…” புன்னகைக்கிறார். ‘‘டிரைவிங் லைசென்ஸ் வாங்குனதுமே லாரிய ஓட்டுற அளவுக்கு என் கணவர் என்னை தயார் படுத்திட்டாரு. அப்ப எனக்கு தலைமுடி இடுப்புக்குக் கீழ இருந்துச்சு. ஹெவி வண்டி ஓட்ட இது சரியா வராதுன்னு மொட்டை அடிச்சுட்டேன்…’’ மீண்டும் ஒரு புன்னகை அசால்டாக அவரிடமிருந்து வருகிறது. ‘‘போர்பந்தல், ராஜ்கோட், குஜராத், மகாராஷ்டிரா, புனே, பம்பாய், நாக்பூர், அமராவதி, அக்கோலா, ஜபல்பூர் என எல்லா மாநிலத்திற்கும் பயணிக்கிறேன். மாநிலத்தை தாண்டுனா காட்டுப் பகுதிதான்.
ஒளரங்காபாத்தில் இருந்து கீழே இறங்குனா மலைப் பகுதிதான்’’ என்றவரிடம், இரவில் காட்டுப் பகுதிகளில் பயணிப்பது, லாரியில் லோடோடு மலை இறங்குவது கஷ்டமாக இல்லையா என்றதற்கு? ‘‘பவர் ஸ்டியரிங்தானே. ஓட்டத் தெரிஞ்சுட்டா எல்லாமே சுலபம். அதற்குத் தகுந்த கியரை போட்டுக்கணும்’’ என்றவர், ‘‘நிறைய விபத்துக்களை பார்த்தாலும், இந்த 20 வருடத்தில் ஒரு விபத்தைக்கூட நான் செய்ததில்லை’’ என்றவர், ‘‘வண்டி ஓட்டும்போது என் கவனம் முழுக்க இதில்தான் இருக்கும்’’ என்கிறார் அழுத்தமாக.
‘‘வெளி மாநிலங்களுக்கு கிளம்பினால் 10 முதல் 12 நாட்கள், சிலமுறை 15 நாட்களும் எடுக்கும். என் சப்போர்டுக்கு கணவரும் கூடவே வருவார். சமைக்கிறது, சாப்புடுறது, தூங்குறது எல்லாமே வண்டியில்தான். சேலத்தில் இருந்து கயிறு, கோயம்புத்தூரில் இருந்து பஞ்சு மிஷின் தயாரிப்பு இயந்திரம், தேங்காய் மூட்டை, வெங்காய மூட்டை, சிலநேரம் சுத்தம் செய்யப்பட்ட நகராட்சி குப்பைகளை சேலத்தில் இருந்து எரிபொருளுக்கென கர்நாடக மாநிலத்திற்கு ஏற்றிச் செல்வோம்.
திரும்பி வரும்போது அங்கிருக்கும் லோடுகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் திரும்புவோம். இரவு லாரியை எடுத்தால் விடியும்வரை தூங்காமல் தொடர்ந்து ஓட்ட என்னால் முடியும்’’ என்றவரிடத்தில், பாடி பெயின், பாடி ஹீட் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க என்றதற்கு… ‘‘பெண்களால் முடியாதுன்னு எதுவுமே இல்லை. எல்லாமே மன தைரியம்தான்…’’ அழுத்தமாகவே அவரிடமிருந்து பதில் வருகிறது.
‘‘இப்ப எனக்கு சொந்தமாக லாரி இருக்கு. புது லாரி வாங்க 39 லட்சம் வரை ஆகும். அதற்கு மேல பாடி கட்டணும். அதையும் சேர்த்தால் 45 முதல் 50 லட்சம் வரை ஒரு புது லாரிக்கு வரும். லாரியில் 12 வீல்… 14 வீல்…16 வீல் என இருக்கு. என்னிடம் இருப்பது 12 வீல் லாரி. இதற்கு மாதம் 58 ஆயிரம் லோன் கட்டுறேன். அது போக மாதம் 30 ஆயிரம் குடும்பச் செலவுக்கு நிக்கிது. பயத்தை எடுத்துறுங்க… ஜெயிக்கலாம்’’ என்றவாறு விரல் உயர்த்தி விடைபெற்ற செல்வமணி அக்காவை தொடர்ந்தார் லாரி டிரைவர் செல்லம்மாள்.
‘‘பெண்கள் நாங்கள் 8 பேர் நாமக்கல்லில் உள்ள அசோக் லேலண்டில் லாரி ஓட்டுநர் பயிற்சி பெற்று லயன் டிரைவர்களாக இருக்கிறோம். எனக்கு ஊர் வாழப்பாடி அருகே திம்மநாயக்கன்பட்டி. எனக்கு 30 வயது இருந்த போதே என் கணவர் விபத்தில் இறந்துட்டார். 10 வருடமா லாரி ஓட்டுறேன். லாரி ஓட்டிதான் என் மகன்களை படிக்க வைக்கிறேன். பெரியவன் இஞ்சினியரிங் முடிச்சுட்டான். சின்னவன் +2 படிக்கிறான்.
சொந்தமா எனக்கு லாரி கிடையாது என்பதால், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் வண்டியில் டிரைவராக மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி, பாம்பே, கல்கத்தான்னு எல்லா ஊர்களுக்கும் லோடு ஏற்றிச் சென்று வருகிறேன். கல்கத்தா, பாம்பே போன்ற ஊர்களுக்குச் சென்றால் 15 நாட்கள்கூட எடுக்கும். மாதம் இருமுறை லாரியில் போக முடியும். என்னோடு இணைந்து வருகிற தோழி சாரதாவும் நானும் மாறி மாறி லாரியை ஓட்டுவோம்.
இரவு 7 மணிக்கு நான் ஸ்டியரிங்கை பிடித்தால் காலை 7 மணி வரை தொடர்ந்து ஓட்டுவேன். பிறகு சாரதா கை மாற்றுவார். ஒரு லட்சத்திற்கு லோடு ஏற்றிச் சென்றால் ஊதியமா ஒருத்தருக்கு 15 ஆயிரம் கிடைக்கும். திரும்பி வரும்போது காத்திருந்து, அங்கிருக்கும் லோடுகளை இங்கு கொண்டுவந்து சேர்ப்போம். அதிலும் 15 ஆயிரம் கிடைக்கும். ஒருமுறை வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தால் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.
பொருட்களை லோடிங் செய்தபிறகு மேலே ஏறி தார்பாய் போட்டு கயிறு கட்டுவதும் நாங்கதான். அதுவும் சுலபமான வேலை கிடையாது’’ என்றவரிடத்தில், பாடி ஹீட், உடல் வலி எனச் சொல்லி ஆண்கள் தண்ணி அடித்துவிட்டு ஓட்டுகிறார்களே என்றதற்கு? ‘‘அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அதெல்லாம் ஏமாற்று வேலை. தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறவர்கள் டிரைவரே இல்லை’’ என்கிறார் அழுத்தமாக.
‘‘சில நேரம் கைமாற்ற என் தோழி சாரதா வரவில்லையெனில் தனி ஆளா நான் மட்டுமே லாரியை எடுப்பேன்’’ என்றவரிடம், ‘‘காட்டுப் பாதைகளில் நடைபெறும் வழிப்பறி, திருட்டு குறித்து கேட்டபோது. ‘‘இதுவரை கொள்ளைச் சம்பவம் எதையும் நாங்கள் சந்திக்கவில்லை. லாரி ஓட்டி வருவது பெண்கள் எனத் தெரிந்தாலே வழிமறித்தவர்கள், திதி ஷாவோ என்பார்கள். எல்லா மாநில மொழிகளையும் ஓரளவுக்கு சமாளிப்போம்.
மாநிலம் விட்டு மாநிலம் புயல், மழை எனப் பயணித்து காடு மலையென கடக்கும்போது சில இடங்களில் லாரியை லோடுடன் செங்குத்தாகவும் ஏற்றணும். கொஞ்சம் மிஸ்ஸானாலும் எலும்பும் மிஞ்சாது. உயிரோடு திரும்பி வந்தால் உண்டு’’ என்றவரிடம், எதற்காக ஆபத்துகள் அதிகம் நிறைந்த இந்த வேலையை கையில் எடுக்கிறீர்கள் என்றதற்கு?
‘‘பெண்கள் ஃப்ளைட் ஓட்டும்போது லாரி ஓட்டக்கூடாதா…’’ என நம்மிடம் எதிர் கேள்வி கேட்டவர், ‘‘10வது வரைதான் நான் படிச்சுறுக்கேன். ஒரு இடத்திற்கு வேலைக்குச் சென்றால் 5 ஆயிரம் சம்பளம் கொடுக்கவே ஆயிரத்து எட்டு கேள்விகளை சந்திக்க வேண்டியுள்ளது. கணவர் இறந்த பிறகு மகன்களை படிக்க வைக்கணுமே. என்ன செய்யலாம் என யோசித்தேன். நானே கையை ஊன்றி கர்ணம் பாய்ந்தால்தான் உண்டு என்ற நிலை. லாரி ஓட்டுவது மட்டுமே சரியென மனதில் பட, பயிற்சி எடுத்து லைசென்ஸ் வாங்கி லாரி ஓட்டக் கிளம்பிட்டேன்.
முதன்முதலில் லாரிய கிளப்பும்போது மட்டும்தான் மனதுக்குள் கொஞ்சமா பயமிருந்தது. ஓட்ட ஓட்ட அதுவும் போச்சு. வழிகளில் நாங்கள் சந்திக்கும் ஆர்.டி.ஓ, காவல்துறையினர் மரியாதையாகவே எங்களை நடத்துவார்கள். எங்களைப் பாராட்டி நட்போடு பழகுவார்கள். வழியில் டீ வாங்கித் தருகிற காவல்துறை நண்பர்களும் இருக்கிறார்கள்.
எனக்கு சொந்தமாக வண்டி கிடையாது. சம்பளத்திற்குதான் ஓட்டுறேன். லாரி ஓட்ட ஆரம்பிச்சு 10 வருடமாச்சு. சின்ன கண்ணாடியக்கூட நான் இதுவரை ஒடச்சது கிடையாது. பெண்கள் வண்டி ஓட்டுனா பொறுப்பா பத்திரம்மா லாரி வந்து சேரும்னு உரிமையாளர்கள் எங்களை முழுமையாக நம்பி லாரியை ஒப்படைக்கிறாங்க. செகண்ட் ஹேண்ட் லாரிய சொந்தமாக்கவே 15 லட்சம் தேவை. எந்த வங்கியும் எங்களுக்கு லோன் தர முன்வருவதில்லை.
எங்கள் கோரிக்கையை அரசுக்கு பல முறை தெரிவிச்சுட்டோம். கடந்த ஆட்சியில் எங்களுக்கு உதவியே கிடைக்கலை. இந்த ஆட்சியிலாவது எங்கள் நிலை மாறும்னு நம்புறோம். வங்கி லோன் பெற அரசு உதவி செய்து மானியமும் கொடுத்தால் சொந்த லாரியில் எங்களின் வருமானம் கூடுதலாகும்’’ என்றவாறு கையசைத்து லாரியை கிளப்பினர் இந்த லாரிப் பெண்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்ற கற்பிதம் காலத்தால் கரைந்து வருகிறது.