தப்பு செய்தா சுட்டிக் காண்பிப்பதுதான் உண்மையான ஃப்ரெண்ட்ஷிப்!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 54 Second

‘‘நட்பு பொறுத்தவரை நான் யாரையும் ஜட்ஜ் செய்யமாட்டேன். எந்த ஒரு நேரத்திலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கணும். அதே சமயம் எனக்கு உண்மையாகவும் இருக்கணும். நான் தப்பு செய்தா, அது தப்புன்னு சுட்டிக் காண்பிக்கணும். அது தான் உண்மையான நட்பு. அதில் நான் ரொம்பவே கொடுத்து வைத்தவள்னு தான் சொல்லணும். எனக்கு இருக்கிற அந்த பத்து பேரும் எனக்காக இருக்கான்னு’’ என்கிறார் சோனியா சுரேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘புது வசந்தம்’ தொடரின் நாயகி. சின்னத்திரைக்கு இவர் புதுசு என்றாலும், இவர் வெள்ளித்திரை மற்றும் விளம்பரத் துறையில் பரிச்சயமானவர்.

‘‘நான் சின்ன வயசில் இருந்தே விளம்பரத்தில் நடிச்சிட்டு இருக்கேன். அதாவது, என்னுடைய மூணு வயசில் இருந்தே விளம்பரத்தில் நடித்து வருகிறேன். அப்ப நான் சின்னப் பொண்ணு. சும்மா பார்த்து விளம்பரத்தில் நடிக்க சொல்லி கேட்டாங்க. அப்படித்தான் நான் விளம்பரத்தில் நடிக்க போனேன். சத்யா மொபைல்ஸ், சக்தி மசாலா, ஆச்சி மசாலா, சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் என நிறைய விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அது அப்படியே இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கு.

பள்ளியில் படிக்கும் போது, விளம்பர ஷூட்டிங் வந்தா, அன்னைக்கு எனக்கு பள்ளியில் விடுமுறை மாதிரி. அப்பவும் சரி இப்பவும் சரி நான் ஷூட்டிங் போகும் போது எல்லாம் அம்மாதான் என் கூடவே இருப்பாங்க. அவங்கதான் என்னையும் என் தங்கையையும் பார்த்துக்கிறாங்க. விளம்பரத்தில் நடித்ததால், நான் கல்லூரியில் படிக்கும் ேபாது, எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. தமிழில் ‘டைரி’ படத்தில் அருள்நிதியுடன் நடிச்சேன். அதில் ஜே.பி. சாருக்கு பொண்ணா நடிச்சிருப்பேன். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சின்ன ரோல்தான் நடிச்சேன். கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் வருவேன். லட்சுமி மேனனுடன் சேர்ந்து ஒரு படம் செய்தேன். அதில் மெயினான கதாபாத்திரத்தில் நடிச்சேன்.

சினிமாவில் நடிக்கும் போதுதான் எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒரு முறை வேற ஒரு ஷூட்டிங்காக போயிருந்தேன். அங்கு ராஜ்குமார் சார் என்னைப் பார்த்து, சீரியலில் நடிக்கிறீங்களான்னு கேட்டார். தெலுங்கில் ஒரு சீரியலுக்காக ஹீரோயின் தேடிக்கொண்டு இருப்பதாகவும். நீ அதற்கு பொருத்தமா இருப்பேன்னு சொல்லி ஆடிஷனுக்கு ஐதராபாத் வரச்சொன்னார். அது சன் டிவியில் டாப் லிஸ்டில் இருக்கும் ‘எதிர்நீச்சல்’ தொடரின் தெலுங்கு ரீமேக். அதில் ஜனனி கதாபாத்திரத்தில்தான் நான் நடிக்கிறேன். முதல் நாள் ஆடிஷன் மறுநாளே செலக்டெட்ன்னு சொல்லி ஷூட்டிங்கிற்கு வரச்சொல்லிட்டாங்க. அப்படித்தான் நான் சின்னத்திரையில் என்ட்ரி ஆனேன்.

அதில் நடிக்கும் போதே எனக்கு மற்ற சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது நான் கல்லூரியில் படிச்சிட்டு இருந்தேன். பரீட்சை எல்லாம் இருப்பதால், நான் மற்ற சீரியலில் கமிட்டாகல. கல்லூரி முடித்த பிறகு தான் ‘புது வசந்தம்’ தொடரின் வாய்ப்பு வந்தது. இப்ப மாசத்தில் பாதி நாள் சென்னை, ஐதராபாத்னு பறந்து கொண்டு இருக்கேன்’’ என்றவர் தன் நட்பு உலகம் குறித்து பகிர்ந்தார்.

‘‘என்னுடையது மிகவும் காம்பேக்டான குடும்பம். அப்பா, அம்மா, நான், என் தங்கை. அப்பா ஏர்போர்ட்டில் வேலை பார்க்கிறார். அம்மா ஹவுஸ் வைஃப்தான். தங்கை கல்லூரியில் படிச்சிட்டு இருக்கா. நான் ரொம்ப ஜாலி டைப். எல்லோருடனும் நல்லா பழகுவேன். ஆனால் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் சர்க்கில் ரொம்ப கம்மி. அப்படிப் பார்த்தா பள்ளியில் தனிஷா அண்ட் சக்தி. இவங்க இரண்டு பேர்தான் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். பள்ளியில் படிக்கும் போது நாங்க எங்கேயும் வெளியே போனதே கிடையாது. வீட்டில் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். வெளியே போகணும்னு கேட்டா… ஒரு நாள் முழுதும் அவங்களோடதானே இருந்திட்டு வர அப்புறம் என்ன ெவளியே போகணும்னு சொல்வார்.

நானும் எதிர்த்து ஏதும் கேட்கமாட்டேன். சரின்னு சொல்லிடுவேன். +2 முடிச்சிட்டு நாங்க மூணு பேரும், அவங்கவங்க மம்மிகளோடதான் வெளியே போனோம். இவங்க இன்னும் டச்சில்தான் இருக்காங்க. பள்ளி காலத்தில் இருந்தே நான் மட்டுமில்லை என்னுடைய எல்லா ஃப்ரெண்ட்ஸும் நல்லா படிப்போம். அதனால் டீச்சரும் திட்டமாட்டாங்க. ஆனா, எங்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு மட்டும் எங்க மூணு பேரையும் பிடிக்காது. எங்களை ஒன்னாவே இருக்க விட மாட்டாங்க. தேர்வின் போது கூட எங்களை தனித்தனியா தான் உட்கார வைப்பார். திரும்பி பார்த்தாலும் அவங்க கண்ணில் தென்படமாட்டாங்க. அதேபோல் பத்தாம் வகுப்பில் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்.

அப்பவும், எங்க மூணு பேரையும் வேற வேற க்ரூப்பில் போட்டிடுவார். பள்ளியில் நான் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்துக்குவேன். விளையாட்டு முதல் பேச்சு போட்டி, பாட்டு, டான்சுன்னு எல்லாத்திலேயும் நான் இருப்பேன். ஸ்போர்ட்சில் நானும் என் ஃப்ரெண்ட்ஸும் ஒவ்வொரு ஹவுசின் கேப்டனா இருந்தோம். அதில் கூட நாங்க சேர்ந்து இருந்தா உடனே மைக்கில் எங்க பெயரை கூப்பிடுவாங்க.

பள்ளியில் இரண்டு சம்பவத்தை இன்னும் என்னால் மறக்கவே முடியாது. +1 படிக்கும் போது நான் யெல்லோ ஹவுசின் கேப்டனா இருந்தேன். அதற்கான பேட்ச் தருவாங்க. அத வாங்க போகும் போது +2வில் படிக்கும் பசங்க எல்லாரும் மஞ்சள் நிற டீஷர்ட் போட்டு எல்லாரும் என் பெயர் சொன்னதும் அப்படி கைத்தட்டி கத்தினாங்க. எனக்கே ஒரு மாதிரி வெட்கமாயிடுச்சு. அவ்வளவு லவ் அவங்களுக்கு என் மேல. அதேபோல் ஒரு பட்டிமன்றத்தில் என் எதிர் டீம் என்னையே டார்கெட் செய்து பேசும் போது, என் பெயர் சொன்னதும் ஆடிட்டோரியத்தில் இருந்த பசங்க எல்லாரும் கத்த ஆரம்பிச்சிடுவாங்க. டீச்சர் கூட என்ன நடக்குதுன்னு குழம்பிடுவாங்க. பள்ளியில் ஸ்ட்ரிக்டா இருந்தாலும், அதுவும் ஒரு விதமான ஜாலியா இருக்கும்.

நான் பொறியியல் துறையைதான் தேர்வு செய்து படிச்சேன். அப்ப படிக்கும் போது என்னுடைய துறை நடிப்பாக மாறும்னு அப்ப நான் நினைக்கல. முதலில் ஆர்ட்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கலாம்னு தான் நினைச்சேன். அப்பாதான் பொறியியல் படிக்கணும்னு சொன்னார். ஃப்ரெண்ட்ஸும் ஆமோதிக்க, அப்படித்தான் நான் பொறியியலில் சேர்ந்தேன். இங்கு சேர்ந்த பிறகு நான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவே இல்லை. பள்ளியில் படிக்கும் போது எல்லா போட்டியிலும் என் பெயர் இருக்கும். அதனால் கொஞ்சம் கெத்தாவே சுத்திட்டு இருப்பேன். இங்க வந்த பிறகு அப்படியே சைலன்டாயிட்டேன்.

கல்லூரியில் பவித்ரா, சூர்யா, ஸ்ருத்தி, கீர்த்தனா, சோயான்னு நாங்க மொத்தம் ஆறு பேர். முதல் இரண்டு வருஷம் ஜாலியா போச்சு. அப்ப நாங்க பிரஷர் என்பதால், ரொம்ப சேட்டை எல்லாம் செய்யல. சைலன்டாதான் இருந்தோம். மூணாவது வருஷம் பார்த்துக்கலாம்னு இருந்த போது கோவிட் வந்துடுச்சு. எல்லாரும் வீட்டில் இருந்து பேசிக் கொள்வோம். இப்ப தில்லி, வெளிநாடுன்னு எல்லாரும் ஒவ்வொரு இடத்தில் செட்டிலாயிட்டாங்க. அவங்கவங்க வேலையில் பிசி ஆனாலும் மாசம் ஒரு முறை நாங்க எல்லாரும் சந்திக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியா இருக்கோம். இவங்கள சந்திச்சதே ஒரு பெரிய சம்பவம். அன்னைக்கு முதல் நாள் அட்மிஷன்.

நான் முன்பே போயிட்டேன். எனக்கு அப்ப பள்ளி சான்றிதழ் எல்லாம் கொண்டு போகணும்னு தெரியல. ஜாலியா கையை வீசிக் கொண்டு போயிட்டேன். அப்பா, அம்மா எல்லாரும் தனியா காரில் வந்தாங்க. உடனே அவங்களுக்கு போன் செய்து கொண்டு வரச்சொன்னேன். இதற்கிடையில் என்னுடைய பெயர் கல்லூரி பட்டியலில் பதிவு ஆகல. நான் சான்றிதழ் கொடுக்கலைன்னுதான் என் பெயர் பதிவாகலைன்னு அழுதுட்டேன். பேராசிரியர்கள் எல்லாரும் என்னை வந்து சமாதானம் செய்தாங்க.

எனக்கோ அழுகை நிக்கவே இல்லை. அப்பா வந்து அந்த பிரச்னையை சரி செய்வதற்குள் அங்கு கல்லூரியில் அட்மிஷன் குறித்த நிகழ்ச்சி ஆரம்பமாயிடுச்சு. நான்தான் கடைசியா உள்ளே போனேன். அப்போது இவங்க ஐந்து பேரும் ஒன்னா உட்கார்ந்து இருந்தாங்க. அவங்க பக்கத்தில் அப்ப உட்கார்ந்தவள்தான் இன்று வரை அவங்களின் நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கு. கல்லூரியில் படிச்ச காலத்திலும் நாங்க கட்டடிச்சிட்டு எங்கும் வெளியே போகல. நான் பசி தாங்க மாட்டேன்.

அதனால் கட் அடிச்சிட்டு கேன்டீனுக்கு சாப்பிடதான் போவோமே தவிர ெவளியே எங்கும் போனதில்லை. உப்பன்னா சீரியல் பொறுத்தவரை, ஆரம்பத்தில் யாருடனும் பேசமாட்டேன். உடன் அம்மா இருப்பதால், அவங்களோட மட்டும் தான் எல்லா விஷயமும் ஷேர் செய்வேன். மேலும் எனக்கு அங்கு சாப்பாடும் செட்டாகல. இதனால் செட்டில் இருக்கிறவங்களும் நான் ஜாலியா பழகமாட்டேன்னுதான் முதலில் நினைச்சாங்க. நான் அப்படி கிடையாது. ரொம்ப ஜோவியல் டைப். பிரச்னை பக்கம் மட்டும் தலை வைத்து படுக்கமாட்டேன்.

நடிக்கும் போது, மத்தவங்களிடம் சில ஆலோசனை கேட்பேன். அதன் பிறகு தான் அவங்க எல்லாரும் நல்லா பழக ஆரம்பிச்சிட்டாங்க. என்னை செட்டில் தனியாவே இருக்க விடமாட்டாங்க. ஏதாவது பேசி சிரித்துக் கொண்டு இருப்போம். ஸ்விகியில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிடுவோம். அவங்க வீட்டில் இருந்து ஸ்நாக்ஸ் கொண்டு வருவாங்க. அங்க ஒரு காபி ஷாப் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அதனால் இன்னொரு நாள் நானும் இன்னொரு ஆர்ட்டிஸ்டும் சேர்ந்து அந்த காபி ஷாப் போனோம்.

பள்ளி, கல்லூரி தாண்டி நேயா, மதுன்னு அக்கா, தங்கைகள். இப்ப இவங்களுடன் சேர்ந்து வெளியே போவேன். நேயா எதற்கும் துணிந்தவன் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர். அந்த படத்தில் நடிக்கும் போது தான் பழக்கமானாங்க. இப்ப ரொம்பவே க்ளோசாயிட்டோம். அவங்க இரண்டு பேர், நானும் என் தங்கையும் அப்புறம் அவங்களின் கசின்னு நாங்க ஐந்து பேர் சேர்ந்து விண்டோ ஷாப்பிங் எல்லாம் செய்வோம்.

ஃப்ரெண்ட்ஸ் ஒரு பக்கம்னா எனக்கு மறுபக்கம் என் அம்மாதான் எல்லாமே. அவங்கிட்டதான் நான் நிறைய பேசுவேன். நான் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த போது அம்மாதான் கூட இருந்தாங்க. ஏழு மாசம் இருந்தாங்க. அப்புறம் என் தங்கை எனக்கும் எக்ஸாம் எல்லாம் இருக்கு. என் கூட இருக்கணும்னு சண்டை போட்டா. பிறகு நான் மட்டும்தான் ஷூட்டிங் போவேன். அப்ப ஷூட்டிங்கில் இருக்கிறவங்க எல்லாரும் என் அம்மாவைதான் கேட்பாங்க. சில சமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது சங்கடம் ஏற்படும். அப்ப அம்மாதான் எனக்கு தைரியம் சொல்வாங்க. இது போன்ற சங்கடங்கள் எல்லா இடத்திலேயும் இருக்கும். அதை எல்லாம் கடந்து தான் போகணும்னு சொல்வாங்க. ரொம்ப சாஃப்ட். எப்போதும் ஜாலியா இருப்பாங்க. எந்த ஒரு விஷயத்தையும் கரெக்டா ஜட்ஜ் செய்து ஆலோசனை தருவாங்க.

தங்கச்சி எனக்கு அப்படியே நேர் எதிர். அப்பாவிடம் ஃப்ரெண்ட்ஸோட வெளியே போகணும்னு கேட்பேன். அவர் நோ சொன்னா சரின்னு இருந்திடுவேன். இவ சண்டை போடுவா. உன்னால என்னையும் அப்பா அனுப்பமாட்டார்னு சொல்வா. எனக்கு ஐந்து பேர் இருந்தாலும் அந்த நட்பு போதும்னு நினைப்பேன். அவ அப்படி இல்லை. அவளுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லாருடனும் வெளியே போகணும்னு விரும்புவா’’ என்றார் சோனியா சுரேஷ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஓவியமும் பரதமும் தந்த பரிசுதான் ஆர்க்கிடெக்சர் படிப்பு! (மகளிர் பக்கம்)