முகத்தை அழகாக்கும் கான்டூரிங் மேக்கப்! (மகளிர் பக்கம்)
மேக்கப் என்பது ஒரு கடல்… இதில் ஒவ்வொரு முறையும் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் எவ்வளவு புதுப்புது ரக மேக்கப் செட்டுகள் அறிமுகமானாலும் அதற்கான தேவை எப்போதும் பெண்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக புதுப்புது வகை மேக்கப்களையே பெண்களும் விரும்புகின்றனர். அவர்களின் ரசனைகளுக்கேற்ப மேக்கப் சாதனங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எந்த வகை மேக்கப் சாதனங்களாக இருந்தாலும், அவை இயற்கையான தங்களுடைய அழகை பிரதிபலிக்க வேண்டும் என்றுதான் இன்றைய காலத்து பெண்கள் விரும்புகிறார்கள்.
இதற்கான தீர்வினையும் மேக்கப் சாதனங்கள் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட மேக்கப் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து விவரிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மற்றும் பியூட்டி பார்லரின் நிறுவனர் ஸ்டெல்லா.‘‘காலத்திற்கேற்ப மேக்கப் வகைகளும் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். தங்களை அழகாக காட்டிக் கொள்வதன் வழியாக அவர்களுக்கு ஒரு விதமான தன்னம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை தங்களால் எதையும் செய்ய முடியும் என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. இதற்காகவே தங்களை அழகாக காட்ட வேண்டும் என மெனக்கெடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக திருமண விழாக்களில் மணப்பெண்ணுக்கு மேக்கப் போடுவது தான் பெரிய சவாலே. பொதுவாகவே திருமணத்தின் போது நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பு என பல நிகழ்ச்சிகள் இருக்கும். இதில் மணப்பெண்ணால் சரியாக தூங்க முடியாது. மணப்பெண்ணின் முகம் சோர்வடைந்து களைப்பாக இருக்கிறார் என்பதை அவருடைய முகமே காட்டி கொடுத்து விடும். இந்த மாதிரி நேரங்களில் முகத்தின் களைப்பு தெரியாமல் இருக்கவும் மணப்பெண்ணை அழகாக காட்டவும் அதற்கான மேக்கப் யுக்திகளை கையாள வேண்டும். அதற்கு ஏற்ப மேக்கப் சாதனங்களும் இப்போது மார்க்ெகட்டில் கிடைக்கிறது.
ஆரம்ப காலத்தில் மேக்கப்களில் முகத்தில் தண்ணீர் பட்டாலோ அல்லது வியர்வை வந்தாலோ நாம் போட்ட அனைத்து மேக்கப்களும் கலைந்து விடும். இதனால் நிகழ்ச்சியின் முடிவில் மேக்கப் எல்லாம் களைந்து அவர்களின் முகம் மிகவும் சோர்வாக இருக்கும். இந்த பிரச்னைகள் எல்லாவற்றையும் போக்குவதற்கு புதிதாக பல விதமான மேக்கப் சாதனங்கள் இப்போது மார்க்கெட்டில் வந்துவிட்டன. இதில் முக்கியமாக சொல்வதென்றால் வாட்டர் ஃப்ரூப் மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப். எச்.டி மேக்கப், கான்டூரிங் மேக்கப் வகைகள். இதில் முதலாவது மேக்கப் வகையான வாட்டர் ஃப்ரூப் மேக்கப் முகத்தில் தண்ணீர் பட்டாலும் மேக்கப் கலையாமல் அப்படியே இருக்கும்.
இந்த மேக்கப்பினை இரண்டு மணி நேரத்தில் போட்டு விடுவோம். முகத்தில் தண்ணீர் பட்டாலும் அழுத்தி துடைக்காமல் இருந்தால் மேக்கப் அப்படியே இருக்கும் கலையாது. தோலின் நிறத்திற்கேற்பதான் நாங்களும் மேக்கப் போடுவதால், பார்க்கும் போது அவர்களின் அழகினை மேலும் மேம்படுத்தியது போல் இருக்கும். இதில் வாட்டர் ஃப்ரூப்பிற்கென்று சில ஸ்பிரே வகைகளும் கிரீம்களும் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்தி இந்த வகை மேக்கப்களை போடுவோம். அதோடு மேக்கப் செய்து கொண்டாலும் அதீதமாக இல்லாமல், இயற்கையான அழகு முகம் மாறாதபடி அழகாக தெரிவார்.
‘ஏர் பிரஷ் மேக்கப்’ மிகவும் நுணுக்கமானது. இந்த மேக்கப்பால் முகத்தில் உள்ள மருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், சருமத் திட்டுகள் எல்லாம் மறைந்து, முகம் முழுக்க ஒரே டோனில் தெரியும் ஏர் கம்ப்ரசர் அல்லது ஏர் கன் உதவியுடன் பவுடர்கள் முகத்தில் தெளிக்கப்படும். இந்த வகை மேக்கப்களை போடுவதற்கு அதிகமான நேரம் தேவைப்படாது. ஆனாலும் ரொம்பவும் நுணுக்கமாக வேலை செய்யக்கூடியது. திருமணத்தின் போது இடையிடையே கூட மேக்கப் கலைந்தால் உடனே ஸ்பிரே அடித்து சரி செய்து கொள்ளலாம்.
முகத்தில் கிரீம்கள் மற்றும் ஐ லைனர் போட்ட பிறகுதான் ஸ்பிரே அடிக்க வேண்டும். அது முடிந்ததும் லேசாக அப்படியே ஸ்பிரே அடித்த இடங்களில் பிரஷ் செய்யணும். இது முடிந்ததும் முகம் பொலிவாக தெரியும். அதோடு முகம் மின்னுவது போலவும் இருக்கும். இந்த வகை மேக்கப் திருமண வரவேற்பின் போது செய்து கொண்டால் அழகாக இருக்கும்.
இன்றைய காலத்து பெண்கள் எச்.டி மேக்கப்களையும் விரும்புகிறார்கள் இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூ ட்டுகளுக்கு ஏற்றவை. முகத்தை வண்ணமயமாக காட்டும். கான்டூரிங் மேக்கப் தற்போது பிரபலமாகி வருகிறது. இதை கரெக்ட்டிங் மேக்கப் என்றும் அழைப்பார்கள். சப்பை மூக்கை எடுப்பாகக் காட்டவும், குண்டான கண்ணத்தினை ஒல்லியாக காட்டவும் என உங்கள் முகத்தில் நீங்கள் மைனஸாக நினைக்கும் விஷயங்களை ப்ளஸ் ஆக்கும் மேஜிக்.
குறிப்பாக குண்டான முகம் அல்லது ஒல்லியான முகம் இருப்பவர்களுக்காகவே இந்த வகை மேக்கப்களை செய்து கொள்ளலாம். குண்டான முகம் உள்ளவர்களுக்கு அவர்களுடைய முக அமைப்பிற்கு ஏற்றாற் போல மெல்லிய ஷேட் மேக்கப் போட வேண்டும். அதே போல ஒல்லியான முக அமைப்பு உள்ளவர்களுக்கு கொஞ்சம் அடர்ந்த ஷேட்கள் பயன்படுத்துவோம். இந்த வகை மேக்கப் சாதனங்கள் ஒருவரின் முகத்தினை அழகாக காட்டக் கூடியது.
எந்தவித மேக்கப்பாக இருந்தாலும், அவை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ஃபேஷியல் செய்து கொள்ள வேண்டும். இதோடு வேலைக்கு செல்லும் பெண்களும் தினமும் தாங்களே எளிய முறையில் மேக்கப் செய்து கொள்ளலாம். அதற்கான தனிப்பட்ட கிரீம் மற்றும் ஸ்பிரேக்களும் உள்ளன. அவர்களை நாள் முழுதும் ஃப்ரெஷ்ஷாக எடுத்துக் காட்டும்’’ என்கிறார் ஸ்டெல்லா.