மரபணு சொல்லும் உணவுப் பாரம்பரியம்! (மருத்துவம்)
நாளுக்குநாள் நவீனமயமாகி வரும் இன்றைய வாழ்க்கைமுறை மாற்றங்களாலும், உணவுப் பழக்கவழக்கங்களாலும் புதுப்புது நோய்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து விடுபடவும், இழந்துவரும் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், உலகளவில் பலரும் இன்று பலவிதமான டயட் வகைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த டயட் முறைகள் என்ன சொல்கிறது. அவை யாருக்கு உகந்தது? அதனால் என்ன பயன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டியது மிக மிக அவசியமானது.
அந்தவகையில், ஒருவர் மேற்கொள்ள வேண்டிய உணவுமுறை பற்றியும், பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறையைப் பற்றியும் மரபணு மூலம் ஆராய்ந்து தெளிவுப்படுத்துகிறது நியூட்ரிஜெனோமிக்ஸ் டயட். இது குறித்து, இதனை உருவாக்கியுள்ள எக்ஸ் கோட் லைப் சயின்ஸ் நிறுவனத்தின் சிஇஓ நாராயணன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
“அன்றைய காலகட்டத்தில், நம் மூதாதையர்கள் எந்தவித வசதி வாய்ப்புகளும் இல்லாதபோதும், ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில், நவீனங்கள் பெருகப் பெருக, ஆரோக்கியம் கெட்டு நோய்களும் பெருகி வருகின்றன. இந்த நோய்கள் எல்லாம் ஒரேநாளில் வந்துவிடுவதில்லை. ஒரு மனிதனுக்கு அவனது உடலில் ஒரு நோய் உருவாவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.
ஆனால், நோய் வந்த பிறகு அதனை குணப்படுத்துவது அத்தனை சுலபமல்ல. எனவேதான், அடுத்த 2 ஆண்டுகளில் முடிந்தளவு நோயில்லாத வாழ்க்கையைத் தரும் டயட் முறையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நியூட்ரிஜெனோமிக்ஸ் டயட்டை உருவாக்கியிருக்கிறோம். இதன் அடிப்படை நோக்கம், உணவு முறையை மாற்றியமைத்தாலே ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம் என மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான்.
உதாரணமாக, ஒரு வீட்டில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்திற்கு, ஒரே மாதிரியான உணவை உட்கொள்கின்றனர். ஆனால், ஒருவர் வெகு சீக்கிரத்திலேயே சோர்ந்துவிடுகிறார். மற்றவர், நீண்ட நேரம் ஆகியும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார். எதனால் இந்த வேறுபாடு நிகழ்கிறது என்றால், அவரவர் உடலில் இருக்கும் ஜீனின் தன்மையை பொருத்து அவரவர் உடல் மாறுபடுகிறது. இதைத்தான் நாங்கள் சொல்ல வருகிறோம். இந்த உலகில் பிறந்த கோடிக்கான மனிதர்களில் ஒருவருக்கு இருக்கும் ஜீன் மற்றவருக்கு இருப்பதில்லை. அதனால், ஒவ்வொருவரும் தங்களது ஜீன் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த டயட்டை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சரியாகும்.
உதாரணமாக, ஒருவரது மூதாதையர், அசைவம் சாப்பிடுபவராகவோ அல்லது சைவர்களாகவோ இருந்தால், அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ அதைத்தான் உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும். அதேசமயம், ஒருவரை பார்த்தவுடனே அவரது ஜீனில் என்ன இருக்கிறது. வைட்டமின் பற்றாக்குறை இருக்கிறதா, என்னமாதிரியான சத்துக்கள் தேவைப்படுகிறது என்று சொல்லவிட முடியாது. அப்படியிருக்கும்போது, உலகிலுள்ள எந்தவித டயட்டை பின்பற்றினாலும், சரியான தீர்வு தருமா என்றால், அது கேள்விக்குறிதான்.
எனவே, ஒவ்வொருவரும் தங்களது ஜீன் என்ன என்பதை தெரிந்து கொள்ள டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும். அதில், அவரவர் வயதுக்கு ஏற்ப அவரது உடலில் என்ன பற்றாக்குறையாக இருக்கிறது, என்ன தேவைப்படுகிறது, அவரது ரத்த அளவு என்ன, கொழுப்பு அளவு என்ன, என்னவிதமான சத்து குறைபாடுள்ளது, என்னமாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் ஒரு வழிகாட்டியைப் போன்று டிஎன்ஏ சொல்லிவிடும். அதன்பின், ஜீனுக்கு தகுந்தவாறு உணவு முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
உடலின் மூலத்தை ஆராய்ந்து,அதற்கு தகுந்தவாறு பழக்கவழக்கங்களையும் உணவு முறையையும் மாற்றியமைத்துக்கொள்ள இந்த நியூட்ரிஜெனோமிக்ஸ் உதவுகிறது. இதன் மூலம், உடல் பருமன் முதல் முடி கொட்டுவது வரை அனைத்தும் சீராகும். நியூட்ரிஜெனோமிக்ஸ் டயட் பின்பற்ற செய்ய வேண்டியவைமுதலில் டிஎன்ஏ டெஸ்ட் செய்யவேண்டும். அதன்மூலம் அவர்களின் சலைவா சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து 12 விதமான டெஸ்ட்கள் செய்யப்படும். இதன்மூலம் ஒருவரது உடலில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிந்து, சரி செய்ய முடியும்.
இந்த டிஎன்ஏ டெஸ்ட் என்பது ஒருமுறை மட்டுமே செய்யப்படும். அதை வைத்து பல ஆண்டுகள் கழித்தும் அவரது உடல் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அவரது டிஎன்ஏ சாம்பிளை பாதுகாத்து வைத்திருப்போம். அதுவும், அவர் பாதுகாக்கும்படி சொன்னால் மட்டுமே பாதுகாப்பாக வைத்திருப்போம். இந்த நியூட்ரிஜெனோமிக்ஸ் சோதனைளை மேற்கொள்ள தேர்ந்த மருத்துவர்களும், உணவுமுறையை பரிந்துரைக்க, அனுபவம் வாய்ந்த நியூட்ரினிஸ்ட்கள் இருப்பார்கள். இதன்மூலம், ஒவ்வொருவரும் தங்களது ஆரோக்கியத்தை மீட்டு ஆனந்தமாக வாழமுடியும்.