வானவில் உணவுகள்-செயற்கை நிறங்கள் உருவாக்கும் ஆபத்துகள்!! (மருத்துவம்)
அனைத்து வகையான செயற்கை உணவு நிறங்களும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல. மேலும் இவையெல்லாம் எந்த அளவிற்கு சேர்க்கப்பட வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறியுள்ளதோ அந்த வரைமுறைக்கு உட்பட்டுதான் சேர்க்கப்படுகிறது என்பதால் தீய விளைவுகள் இல்லை. மேலும், மிகப் பெரிய அளவிலான உடலியங்கியல் தீமைகளோ அல்லது உடல் உபாதைகளோ அல்லது நோய்களோ இவற்றால் ஏற்படுவது இல்லை என்றும் ஒரு தரப்பினர் வாதம் செய்து வருகின்றனர்.
அவர்கள் வேறு யாருமல்ல. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உற்பத்தி செய்யும் வளர்ந்து வரும் உணவுத் தொழிற்சாலை நிறுவனங்கள், அது சார்ந்த அதிகாரிகள் மற்றும் உணவு தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் இவ்வகையான செயற்கை நிறங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள்தான். இதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கைகளும் உள்ளன என்றும் ஆதரவு கோருகிறார்கள்.
சிறு கடைகள் முதல் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் வரையில் செயற்கை உணவு நிறங்கள் மட்டுமல்லாமல் அவற்றுடன் சுவையூட்டிகள், மணமூட்டிகள், கொழுப்புத் தன்மை மற்றும் அமிலத்தன்மை நிலைக்க வைக்கும் சேர்மானங்கள், செயற்கைச் சர்க்கரை போன்ற இத்தனை வகையான சேர்மானங்களும் இருப்பதால், இவற்றின் கூட்டுத்தாக்கம் நிச்சயம் உடலுக்குக் கிடைக்கும். அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளை அதே அறிவியல் ஆய்வுகள்தான் எச்சரிக்கையுடன் தெரிவிக்கின்றன. இப்பொருட்களை தொடர்ச்சியாக உண்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட நலவழித்துறை அமைப்புகளும் பல நூறு ஆய்வுகளும் உறுதிப்படுத்தி இருக்கின்றன என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
அனைவராலும் விருப்பத்துடன் வாங்கப்படும் ரெடிமேட் உணவு வகைகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள், சேர்க்கப்படும் அளவு மற்றும் அவற்றின் தன்மை போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. அவற்றுள் candies என்னும் மிட்டாய் வகைகளே முதலிடத்தைப் பிடிக்கின்றன (96.3%). அதனைத் தொடர்ந்து பழச்சுவை மற்றும் பழங்களின் வாசனையுடன் இருக்கும் உணவுகள் 94 சதவிகிதமும், குளிர்பான பொடி வகைகள் 89.7 சதவிகிதமும் செயற்கை உணவு நிறங்கள் சேர்க்கப்பட்டவைகளாக இருக்கின்றன என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ச்சியாக இவ்வகை உணவுகளே அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படுவதால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான் என்ற பழமொழியை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
செயற்கை உணவு நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை சோதனை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்தபோது, அவற்றின் உடலிலுள்ள அடர்த்தி அதிகமான கொழுப்புப் புரதம், குளுட்டதயான் உற்பத்தி, சூப்பர் ஆக்சைடு டைமியூட்டேஸ் போன்றவற்றின் அளவுகள் குறைந்துவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ரத்தத்திலுள்ள கொழுப்பு, சர்க்கரை, பாஸ்படேஸ் அமிலம், லாக்டேட் டிஹைட்ரஜனேஸ் போன்றவற்றின் அளவுகள் அதிகமாகி விட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இவை எலிகளுக்கான பரிசோதனைகள் என்றாலும், மனித உடலிலும் இந்த உயிர்வேதிப்பொருட்களின் அளவீடுகள் ஏற்ற இறக்கம் இல்லாமல் சம அளவில் இருக்க வேண்டும் என்பது தெரிந்ததுதான். ஆனால், செயற்கை உணவு நிறங்கள் அடங்கிய உணவுகளைத் தொடர்ச்சியாக சாப்பிடும்போது, நமது உடலிலுள்ள இந்த ரத்த அளவுகளும் மாறும் என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
செயல்பாடு சார்ந்த நோய்எதிர்ப்பியலின் தந்தை என்றழைக்கப்படும் அரிஸ்டோ வொடானி என்ற மருத்துவர், செயற்கை உணவு நிறங்களின் மிகச்சிறிய மூலக்கூறுகள், புரத மூலக்கூறுகளுடன் இணைந்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் துன்புறுத்துகின்றன என்றும் குடலின் உறுதித் தன்மையைக் குறைத்து, நரம்பு மண்டல நோய்கள் மற்றும் தன்னுடல் தாக்கு நோய்களை (Autoimmune diseases) வரவழைக்கின்றன என்றும் கூறுகிறார்.
கலிபோர்னியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் இரண்டு வருடத்திற்கும் மேலாக, விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடலில் செயற்கை உணவு நிறங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராய்ச்சி செய்து வந்தது. இதில், செயற்கை உணவு நிறங்களால் விலங்குகளிடம் குழப்பநிலை, கவனமின்மை, மூளை செல்களில் மாறுபாடு போன்றவையும், குழந்தைகளின் நடத்தையில் எரிச்சலடைதல், அதிக செயல்திறன், கவனமிழப்பு, தூக்கமின்மை போன்றவைகளுடன் ஒருங்கிணைந்த கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் குறைபாடு (Attention Deficit ad Hyperactive Disorder) நிலையும் உருவானதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் உணவுகளைக் கண்காணித்து, செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை நிறுத்தியபிறகு, இந்தக் குறைபாடுகளும் குறையத் துவங்கியதாக பதிவு செய்துள்ளனர்.
மேற்கூறியவை அனைத்தும் அனைத்து செயற்கை உணவு நிறங்களின் பொதுவான தீமைகள். இனி, ஒவ்வொரு குறிப்பிட்ட செயற்கை உணவு நிறமும் எவ்வாறான உபாதைகளை அல்லது தீய விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
Red 40
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நிர்ணயித்திருக்கும் Red 40 செயற்கை உணவு நிறத்தின் தினசரி அனுமதிக்கப்பட்டுள்ள அளவு 10 மி.கிராம் மட்டுமே. ஆனால் 2014 ஆம் வருடத்தில் அவர்கள் மேற்கொண்ட மதிப்பீட்டு ஆய்வுகளில் வழியாக, ஒருநாளைக்கு ஏறக்குறைய 52 மி.கிராம் அளவிற்கு இந்த நிறமி மட்டுமே உணவு வழியாக உடலுக்குச் செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Red 40 செயற்கை உணவு நிறமானது ஒவ்வாமை, மூக்கில் நீர் ஒழுகுதல், தோல் எரிச்சல், ஒற்றைத் தலைவலி, மூச்சிறைப்பு, மனஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்புப் பொருட்கள், ஜெல்லி மிட்டாய்கள், கேக் கிரீம் போன்றவற்றில் இந்த நிறம் அதிகம் சேர்க்கப்படுவதால், தொடர்ச்சியாக உடலுக்குள் செல்லும்போது, தீங்கு விளைவிக்கும் என்பதை நன்கறியலாம்.
Blue 1
இந்த செயற்கை உணவு நிறம் ஒரு நாளைக்கு 12 மி.கிராம் மட்டுமே உச்சவரம்பாக அனுமதிக்கப்பட்டுள்ளது. சரியான அளவில் குடலுக்குள் இருக்கும் பாக்டீரியாக்களால் சிதைக்கப்படாமல், மிகச் சிறிதளவே சிறுநீரில் வெளியேற்றப்படும் இந்த நிறம், DNA க்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், குரோமோசோம்களில் பிறழ்வுகளை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு வெவ்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், புற்றுநோய் ஏற்படுத்தும் காரணியாக இந்நிறம் செயல்படவில்லை என்று கூறப்பட்டாலும், நரம்புகளில் பாதிப்பையும், தோல் ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Yellow 5, Yellow 36
டார்டாசின் மற்றும் மெட்டானைல் மஞ்சள் எனப்படும் இந்த இரண்டு செயற்கை உணவு நிறங்களும் பருப்புகள், பழச்சாறுகள், இனிப்புகள், மஞ்சள் கிழங்கு, பொடி, சிப்ஸ் வகைகள் போன்றவற்றில் கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. நிர்ணயித்த உச்ச வரம்பைவிட அதிகப்படியாக உபயோகப்படுத்தப்படுவதாகவும் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
மிகக் குறிப்பாக, உணவுத் தரச் சான்றிதழ் பெறாத சிறு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் அதிகம் சேர்க்கப்படும் இந்த வேதிப்பொருள் உடலுக்குள் சென்று செல் சிதைவை ஏற்படுத்துவதாகவும், ஹிஸ்டமைன் என்னும் ஒவ்வாமை ஏற்படுத்தும் வேதிப்பொருளை அதிகப்படுத்தி உதடு, கண்கள், தொண்டை, கழுத்து சிவந்து தடித்துவிடுதல்,
மூச்சிரைப்பு, தோல் அரிப்பு போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.