பெண்களை குறிவைக்கும் வன்முறை கும்பல் மணிப்பூர் கலவரம்!! (மகளிர் பக்கம்)
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குக்கி மற்றும் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குக்கி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர். இதில் மைதேயி சமூகத்தினரில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குக்கி, நாகா சமூகத்தினரில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர்.
மணிப்பூரில் பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்களாவர். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் மைதேயி சமூகத்தை சேர்ந்தவரே. மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், குக்கி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாக பறிக்கப்படும் என்று குக்கி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். மைதேயி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வன்முறையின் நெருப்பு மணிப்பூரில் பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது.
இதில் குக்கி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர்.
இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து செல்லும் கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மே 18-ம் தேதி அன்று காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு வீடியோ வெளியான பிறகே அச்சம்பவமும், அதன் பின்புலமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தேசிய அளவில் பல்வேறு தரப்பினரையும் இந்தக் கொடூர சம்பவம் கொதிப்படையச் செய்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மாநில முதல்வர்களும், அமைச்சர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.