செங்கோட்டையில் மிளிரும் இந்திய வரலாறு!! (மகளிர் பக்கம்)
டெல்லியில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலம் செங்கோட்டை. இது ஒரு வரலாற்று சின்னம் என்றும் குறிப்பிடலாம். முகலாயப் பேரரசர் ஷாஜகானால் அமைக்கப்பட்டது. அவருக்கு சிவப்பு மற்றும் வெள்ளை மிகவும் பிடித்த நிறம் என்பதால் தன் காதல் மனைவியான மும்தாஜிற்கு வெள்ளைப் பளிங்கு கற்களில் அழகான மாளிகையும், தான் ஆட்சி செய்வதற்கு சிவப்பு நிறத்தில் யமுனை நதிக்கரையோரமாக ஒரு மாளிகையும் அமைத்தார். 17ம் நூற்றாண்டின் பாரம்பரிய சின்னமான செங்கோட்டை பல வரலாற்றினை சந்தித்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்ட இந்த கோட்டையின் வரலாற்றினை மக்கள் முன் டிஜிட்டல் முறையில் கொண்டு வந்துள்ளனர் டால்மியா பாரத் நிறுவனத்தினர்.
“நினைவுச்சின்னம் மித்ரா” என்று பெயரிடப்பட்டு இருக்கும் அந்த திட்டத்தில் இந்திய கலாச்சார மற்றும் தொல்லியல் துறை அமைச்சகத்துடன் (ASI) இணைந்து தேசியச் சின்னமான செங்கோட்டையினை உலகளாவிய சுற்றுலாத் தலமாக உயர்த்தியுள்ளனர். செங்கோட்டையின் அருங்காட்சியகம், மாத்ருபூமி மற்றும் ஜெய் ஹிந்த் என உலகத் தரம் வாய்ந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தினை கொடுத்துள்ளது. இதன் மூலம் செங்கோட்டையின் உண்மையான வரலாற்றினை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
* அதில் முதலாவது, கோட்டையின் 9 முக்கிய இடங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம். இது கோட்டையின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
* 360 டிகிரியில் அமைக்கப்பட்டு இருக்கும் கோட்டையின் அமைப்பு.
* கோட்டையின் புகைப்படங்கள்.
மாத்ருபூமி – புரொஜெக் ஷன் மேப்பிங் நிகழ்ச்சி டிசம்பர் 2022ல் அறிமுகப்படுத்தப்பட்டது. செங்கோட்டையின் அற்புதமான முன் முகப்பில் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் பயணத்தை புரொஜெக் ஷன் மேப்பிங் மற்றும் லேசர் கருவி மூலம் படம் பிடிக்கப்பட்டு அதனை மக்கள் பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பண்டைய ஹரப்பன் நாகரீகம் மற்றும் வேதகாலம், மௌரியர்கள், சோழர்கள், குப்தர்கள் போன்றவர்களின் காலத்தில் ஆன்மீகம், தத்துவம், கணிதம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா எவ்வாறு சிறந்து விளங்கியது என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியினை பார்க்கும் ஒவ்வொரு இந்தியர்களுக்குள்ளும் நம் நாட்டின் மேல் உள்ள பற்றினை மேலும் மேலோங்க செய்கிறது. இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 7:30 முதல் 8:00 மணி வரை இலவசமாக காட்சிப்படுத்தப்படுகிறது.
ஜெய் ஹிந்த் – செங்கோட்டை ஒலி மற்றும் ஒளி காட்சி. ஜனவரி 17, 2023 முதல் பொதுமக்களுக்காக இந்த காட்சி அரங்கேற்றப்பட்டு வருகிறது. சப்யதா அறக்கட்டளையுடன் டால்மியா பாரத் இணைந்து இந்த நிகழ்ச்சியினை அமைத்துள்ளது. 17ம் நூற்றாண்டு முதல் இன்று வரை இந்தியாவின் வரலாற்றினை விளக்கும் இந்த நிகழ்ச்சி பல கலைகளின் கலவை. அதாவது புரொஜெக் ஷன் மேப்பிங், மேம்பட்ட ஒளி மற்றும் ஒலி பிம்பங்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் பொம்மைகள் மூலம் இந்திய வரலாற்றினை நம் கண் முன் கொண்டு வந்துள்ளனர்.
ஷாஜகான் செங்கோட்டையை உருவாக்கிய காலம், தாரா ஷிகோ மற்றும் ஔரங்கசீப் இடையே ஏற்பட்ட அதிகார சண்டை, நாதிர் ஷாவால் கொள்ளை அடிக்கப்பட்ட செங்கோட்டை மற்றும் ஷாஜஹானாபாத், மராட்டியர்களின் எழுச்சி மற்றும் செங்கோட்டையின் மீதான அவர்களின் கட்டுப்பாடு, 1857 இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி, இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி, சுதந்திரத்திற்கான போராட்டம் மற்றும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் என அனைத்தும் நம் கண் முன்னே காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியினை இந்தியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும், ஆங்கிலத்தில் நடிகர் கபீர் பேடி அவர்களும் தங்களின் கனீர் குரல்களால் விவரிக்கின்றனர். செங்கோட்டையில் உள்ள 3 முக்கிய இடங்களான நௌபத் கானா, திவான்-இ-ஆம் மற்றும் திவான்-இ-காஸ் ஆகிய இடங்களில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் செங்கோட்டையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து விவரிக்கிறது. நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான மைத்ரேயி பஹாரியின் நடனக் குழுவினைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் தங்களின் நடனம் மூலம் செங்கோட்டையின் வரலாற்றினை நம் கண் முன் கொண்டு வந்துள்ளனர். இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அரங்கேற்றப்படும் இதற்கான கட்டணம் ரூ.500 மற்றும் ரூ.1500.
இது குறித்து டால்மியா பாரத் நிர்வாக இயக்குனர் புனித் டால்மியா கூறுகையில், ‘‘ஜெய் ஹிந்த் நிகழ்ச்சி நடிகர்கள் மற்றும் ஹைடெக் புரொஜெக் ஷன் மேப்பிங் தொழில்நுட்பத்தை கொண்டு வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகும். சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நம் இந்தியாவில் குறிப்பாக செங்கோட்டையில் நடைபெற்ற வரலாறு குறித்து தெரிந்திருப்பது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் செல்போனுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே சமயம் நம்முடைய வரலாறு குறித்தும் வரும் தலைமுறையினர் தொழில்நுட்பம் சார்ந்து தெரிந்து கொள்வதற்காகவே இதனை அமைத்திருக்கிறோம்’’ என்றார் புனித்.