மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)
முதன் முதலில் எமோஜி 1999ம் ஆண்டு ஜப்பானிய பொறியாளரால் உருவாக்கப்பட்டது. ஐமோட் எனப்படும் மொபைல் ஒருங்கிணைந்த சேவையை வெளியிடுவதற்காக 176 எமோஜிகளை உருவாக்கினார். ஜூலை பதினேழு அன்று எமோஜி தினமாக 2014 இல் இருந்து கொண்டாடப்படுவதாக ஒரு செய்தி வாசித்தேன். இந்தச் செய்தியை படிக்கும் பொழுது மனதுக்கு குதூகலமாக இருந்தாலும், அதனால் ஏற்பட்ட சில உளவியல் மாற்றங்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
பொதுவாக ஃபேஸ்புக், வாட்ஸப் போன்றவற்றில் வரும் ரியாக்ஷன் மற்றும் எமோஜி மனிதர்களின் அத்தனை விதமான நவரச உணர்வுகளையும் மனதுக்குள் கொண்டு வரக்கூடியது என்பதை மறுக்க முடியாதுதான்.இந்த எமோசிசம் எல்லாம் உளவியல் நிபுணர்கள் பார்வையில், நம்முடைய மூளையானது மரபணு ரீதியாக இல்லாத புதுத் தகவலுக்கு மாற்றமடைந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். ஒவ்வொரு எமோஜியும் மனிதர்களின் மூளைக்கு புது விதமான வார்த்தைகளற்ற, ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய விஷயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
நாம் சந்தோசமாக இருப்பதையும், ஆச்சரியப்படுவதையும் பார்ப்பதற்கு ஹார்டின் சிம்பலும், பாதுகாப்பு உணர்வையும் மற்றும் யாரோ ஒருத்தர் நமக்காக கவலைப்படுகிறார்கள் என்பதற்கு கேர் சிம்பலும் இருக்கிறது. இவற்றைப் போல் பலவிதமான எமோஜி ஒவ்வொரு நபரின் மனதை அமைதிப்படுத்தவும், குதூகலப்படுத்தவும் ஒரு வழியாக இருக்கிறது என்று பலரும் சொல்லப் பழகிவிட்டார்கள்.
இத்தகைய எமோஜிஸ் எல்லாம் மனித மனதை இலகுவாக்க கொண்டு வரப்பட்ட மற்றும் உணர்வுகளை வெவ்வேறு வகையில் சொல்ல முடியும் என்பதையும் குறிக்கத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் காதலர்களோ அல்லது நண்பர்களோ சில நேரங்களில் இந்த எமோஜிஸ் எல்லாம் தனக்குப் பிடித்தவர்கள் வேறு யாருக்கும் அனுப்பக் கூடாது என்றும், அந்த எமோஜி சிம்பல் தங்களுக்கே தங்களுக்கான காதல் மொழி அல்லது அன்பின் மொழி என்றே சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
இதனால் யார் யாருக்கு எந்த எமோஜி என்று நண்பர்களில் ஆரம்பித்து காதலர்கள் வரை பிரித்துப் பிரித்து சொந்தம் கொண்டாடுகின்றனர். இவற்றை எல்லாம் தாண்டிப் பார்க்கும் பொழுது யாரும் யாருக்கும் வார்த்தைகள் இல்லாமல் ஒரு எமோஜி சிம்பல் கொடுத்து தப்பி விடலாம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதர்களை அப்படி நிதானமாக இருக்க வைப்பதில்லை என்றே தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
டிஜிட்டல் உலகில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பழகியவர்கள், பழகாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் எனப் பல பேருடன் கமெண்ட் செய்தும், எமோஜி சிம்பல் போட்டும் சோசியல் மீடியாவில் பேசிக்கொண்டு இருக்கிறோம். இப்படி இருக்கும்போது சிலரை நாம் தவிர்க்கிறோம் என்று வெறும் எமோஜி சிம்பல் வெளிப்படுத்தும் பொழுது நமக்குத் தெரியாமலேயே, பலவித குழப்பங்களை ஏற்படுத்திவிடுகிறோம். இதனால், சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், அவரவர்க்கான பதிலுக்காக ஓடிப்பிடிச்சு விளையாடும் விளையாட்டு போல் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு இருக்கிறோம்.
உதாரணமாக எமோஜியால் ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் காதலில் பழகும்போது ஹைப்பர் பெர்சனாலிட்டி நபராக மாறி விடுகிறார்கள். டிஜிட்டலில் இரண்டுபேர் காதலை வெளிப்படுத்தி, அது அங்கீகரிக்கப்பட்டவுடன் அவர்களின் உரையாடல் உடனுக்குடன் இருக்கும் முறைதான் டிஜிட்டல் சாட்டில் உள்ள விசேஷமாகவும், விவகாரமானதாகவும் இருக்கிறது. லவ்யூ, கிஸ்யூ, ஸ்லீப் வித் யூ என்று விதம்விதமான தங்களுடைய அந்தரங்க ஆசைகளை வார்தைகளாகவும், எமோஜிக்களாகவும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் ஆசைக்கான பதிலாக அவர்கள் விரும்பும் நபரிடமிருந்து உடனே லவ்யூ, கிஸ்யூ, ஸ்லீப் வித் யூ என்று வெட் சேட் செய்யும் அளவுக்கு உடனுக்குடன், நொடிக்கு நொடி பதில்கள் விரைவாக வந்து கொண்டே இருக்கும்.
இத்தனை வேகமான கேள்வியும், பதிலும் நொடிக்குநொடி வரும் பொழுது அவர்களின் மூளை என்றுமே ஹைப்பராக இருக்கும் நபராகப் பழகி இருக்கும். ஆனால், நிஜ உலகில் இருவரும் வேறு வேறு இடத்தில் அவரவர் உலகில் இருப்பார்கள். யாரும் யாரையும் தொட முடியாது. இருவரின் உடல் வாசனைகூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இவற்றை எல்லாம் அவரவரின் எண்ணத்துக்கு ஏற்ப அதீத கற்பனையில் யோசித்து வைத்திருப்பார்கள்.
அதனால் டிஜிட்டல் உலகில் ஹைப்பராகவும், நிஜ உலகில் அவரவர் இயல்பு நிலையில் இருக்க வேண்டிய சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இது நம் மூளைக்குப் புதிதாகவும், ஆனால் உண்மையாகவும் உணர வைக்கும் முக்கிய இடமாக இருக்கிறது. நம் மூளையிடம் எதை நிஜம் என்று உறுதியாக நம்ப வேண்டும் என்று கேட்கும் போது, உடனடியாக அது டிஜிட்டலைத்தான் பதிலாகத் தரும். ஏனென்றால் அதுதான் நம் மனதுக்கும் பிடித்த பதிலாக இருக்கும்.
ஒருவரைப் பிடித்து, ரசித்த ஏதோ ஒரு காரணத்தால் டிஜிட்டலில் உறவைக் கொண்டாட ஆரம்பித்த பின், ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காத செயலுக்காக சண்டை போட வேண்டிய நிர்பந்தமும் அமைய நேரிடும். காதலர்களில் ஒருவருக்கு அந்த சண்டையின் காரணம் புரியாமல் இருக்கும்பொழுது மிகை உணர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள். இதை அனுபவிக்கும் சக துணையோ குழம்பிப்போய்விடுவார்கள் அல்லது பயந்துவிடுவார்கள்.
மனிதர்கள் சில விஷயங்களில் செய்யும் செயல்களுக்கு நிதானம் தவறி நடக்கும் பொழுது, பயப்பட பழக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் டிஜிட்டல் உரையாடலோ கண்ணாமூச்சி விளையாட்டை நொடிப்பொழுதில் விளையாடி நம்மை பயமுறுத்துகிறது.இந்தச் சண்டையால் அல்லது பிரிவால் காதலித்த இருவரில் ஒருவர் பலநூறு தடவை கால் செய்வது, பல நூறு மெசேஜ்க்கள் அனுப்புவது என்று ஓவர் ரியாக்ட் ஆகி எல்லை மீறும் போது, முற்றிலும் அந்த உறவு துண்டிக்கப்பட்டு இருக்கும்.
நிஜத்தில் சண்டை போடும் பொழுது அது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிந்துவிடும். ஆனால் டிஜிட்டலில் கோபத்தின் நேர அளவை வரையறுக்க முடியாது. இருவருக்கும் சண்டை நடக்கும்போது, ஒருவர் பதில் சொல்ல முடியாத இடத்தில் இருந்தால், மற்றவர் அந்த சண்டையைத் தொடர்ந்து கொண்டிருப்பார். அப்போது அந்த சண்டையின் வீரியம் தெரியாமல், யார் எந்த இடத்தில் இருக்கிறார் என்று புரியாமல் ஒருத்தர் மட்டும் சண்டை போடும் போது அதன் தன்மை வெறியாக மாறிவிடுகிறது. ஒருத்தர் மட்டும் கத்திட்டே இருக்கேன் என்பது இன்னும் மூர்க்கத்தை ஏற்படுத்தி விடும்.
நிஜ உலகத்தில்தான் நாம் இன்னும் வாழப் பழக்கப்பட்டு இருக்கிறோம். நமக்கான ஒருவருடன் பேசவும், சிரிக்கவும், வெட்கப்படவும், கொஞ்சவும் என்றுமே நிதானமாகச் செயல்படத்தான் பழகி இருக்கிறோம். அதேபோல்தான் கோபத்தையும், ஆத்திரத்தையும், இயலாமையையும் ஓரளவுதான் வெளிப்படுத்த பழகி இருக்கிறோம். டிஜிட்டலில் லவ் யூ என்று வரிசையாக காப்பி, பேஸ்ட் செய்து தொடர்ந்து அனுப்ப முடியும். ஆனால் நேரிலோ ஒரு 10 தடவைக்கு மேல் சொல்ல முடியாது. அதற்கு மேல் ஐ லவ் யூ என்று கூறும்போது ஒரு சலிப்பு வந்துவிடும். இந்த மாதிரி இரண்டு நிஜமான உலகிற்குள் வாழும் தலைமுறையாக நாம் முட்டி மோதிக் கொண்டு இருக்கிறோம்.
அந்தந்த உறவுக்கான மனிதர்கள் உண்மையில் யாருடன் ரொம்ப பாசமாக, அன்பாக இருக்கும் போது அவர்களிடம் வார்த்தைகள் கூறி, இந்த எமோஜிகள் கலந்து வரும்
பொழுதுதான் உணர்வு பூர்வமாக எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்று சொல்கிறார்கள். மற்ற நேரத்தில் எமோஜிகளை பார்த்துவிட்டு வெறும் பார்வையாளராகக் கடந்து போய் விடுவோம் என்றுதான் பலரும் சொல்கிறார்கள்.
ஆனால் இது புரியாமல் சிலர் இந்த எமோஜி சிம்பல் வைத்து ரொம்ப நெருக்கமாக, உணர்வுபூர்வமாக அவர்களுக்கான மனிதர்களை நினைத்துக் கொள்கின்றனர். இது ஒரு கானல் நீரான உறவாகத்தான் இருக்கும் என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.மனிதர்கள் வார்த்தைகளாலும் கதைகளாலும் தொடுதலாலும் என்றும் நிறைந்தவர்கள். அவர்களிடம் இந்த மாதிரி எமோஜி எல்லாம் தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும்.
அதனால்தான் இந்த எமோஜியை எடுத்து உறவுக்குள் சொந்தம் கொண்டாடினாலும், அதன்பின் நிஜ வாழ்க்கையில் எமோஜி ஏதும் அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. ஒவ்வொரு புது டெக்னாலாஜியும் தன்னை மார்க்கெட் உலகில் நிரூபிக்க விதவிதமாக கம்யூனிகேஷன் மெத்தட்ஸைக் கொண்டு வருவார்கள். அதை வைத்து நட்புக்குள், காதல் போன்ற உறவுகளுக்குள் உங்களை சுருக்கிக் கொள்ளாதீர்கள். இந்த மாதிரி புது விஷயங்களை ரசிக்கலாம், கொண்டாடலாம், உபயோகப்படுத்தலாம். அதை மீறி உங்கள் வீட்டுக்குள் இதைக் கொண்டு வரமுடியாது. கொண்டு வந்தாலும் அதைத் தொடர முடியாது.
எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்யலாம்!
நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கான சிறந்த உடற்பயிற்சியாகும், ஏனெனில் இது சில நோய்களைத் தடுப்பதற்கும் ஆயுளை நீட்டிப்பதற்கும் உதவக்கூடும். பொதுவாக, நடைப்பயிற்சி செய்ய, அதிகாலை தான் சிறந்தது..குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். சமதளப் பாதையில் நடப்பது நன்று. ஓட்டமும் நடையுமாகவும் இல்லாமல், அதேசமயம், ஆமைபோன்று ஊர்ந்து செல்லாமலும், உடலில் வியர்வை வரும் வேகத்தில் நடப்பது நல்லது. முடிந்த வரை தனியாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளாமல், இருவராக நடப்பது நல்லது. தினமும் நடக்கத் தூண்டும் ஆர்வத்தையும் இது கொடுக்கும். காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, நடப்பதற்கு முன் 1 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்திவிட்டு, சிறிது நேரம் கழித்து இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி செய்யும்முறை.
நடைப்பயிற்சியின் போது சிறிது தூரம் நடந்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் நடப்பது தவறானது. குறைந்தது 2 கி.மீட்டர் தூரமாவது நடக்க வேண்டும். அதுபோன்று, இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களான கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. காலையில் செய்யும் நடைப்பயிற்சி அன்றைய நாள் முழுவதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. இதானால், அன்றைய வேலைகளை சுறுசுறுப்புடனும் செய்ய முடியும். மேலும் சூரியஒளியின் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது.
நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும். நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் நல்லது.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகம் சேர்வது உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். அப்படி உடலில் சேரும் கொழுப்பை எரிப்பதற்கு நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.எனவே, மிதமான நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
நடைப்பயிற்சிக்கு முன்னோட்டமாக ‘வார்ம் அப்’ எனப்படும் பயிற்சியை மேற்கொள்ளலாம்.நடைப்பயிற்சி எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பது அவரவர் வசதிக்கு ஏற்றது. குறைந்த அளவாக அரை மணி நேரம் முதல் அதிக அளவில் ஒன்றில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை தினம்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதனை காலை மற்றும் மாலை வேளை என பிரித்து கூட நடக்கலாம்.