சிறுகதை-ஓய்வு!! (மகளிர் பக்கம்)
எனக்கு மிகப் பிடித்தமான கோட்டைப் பெருமாள் கோவிலில், சயனக் கோலத்தில் கம்பீரமாய் வீற்றிருந்த கஸ்தூரி ரங்கநாதப் பெருமாளின் முன் நின்ற போது பரவசத்தில் வழக்கம்போல மேனி சிலிர்த்தது. நின்று நிதானமாக தரிசித்து விட்டு வெளியே வந்தேன். கமலவல்லித் தாயாரின் சன்னதிக்கு எதிர்ப்புறம் இருந்த துளசி மாடத்தை சுற்றி வந்து முன்புறம் நின்று வணங்கிக் கொண்டிருந்த போது ‘மெத்’தென்ற இரண்டு பூங்கரங்கள் என் கால்களைத் தழுவியதை உணர்ந்து கண்களைத் திறந்து பார்த்தேன்.
பட்டுப்பாவாடை, சட்டையில் இரட்டைக் குடுமி போட்டுக் கொண்டு அழகாய் சிரித்தபடி ‘பாட்டி’ என்று என்னை அழைத்தபடி ஒரு இரண்டு வயதுக் குழந்தை. என் கால்களை கட்டிக்கொண்டு நின்றது.ஆவலுடன் குனிந்து அந்த புஷ்பக் குவியலை கைகளில் அள்ளி எடுத்தேன். “நான் தேடி வந்த ஆள் நீயல்ல” என்று உணர்ந்ததைப் போல், என் முகம் பார்த்து குழம்பிப் போய், கண்களில் மிரட்சியுடன் அழுகைக்கு தயாராவது போல தன் பட்டு உதடுகளை பிதுக்கியது.
“யாருடா செல்லம் நீ? உன் பேரு என்ன?” என்றபடி அதன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கியபடி கேட்டபோது, “அடப் போக்கிரி, நீ இங்கேயா இருக்க?” என்ற குரலுக்கு நிமிர்ந்தேன். ஓட்ட நடையில் என்னை அணுகி இருந்த அந்தப் பெண்மணி லீலா. நான் உடுத்தியிருந்ததைப் போலவே அதே கரும்பச்சை நிறப் புடவை அவள் உடலைத் தழுவியிருந்தது. அவள் பின்னாலேயே மதியழகன் நடையில் வந்து சேர்ந்தார்.
“டாக்டரம்மா நீங்களா?” என்றனர் இருவரும் வியப்புடன்.“ஓ…! இது உங்க பேத்தியா? புடவைக் கலரைப் பார்த்து நான் அதோட பாட்டின்னு நினைச்சு என்கிட்ட வந்துருச்சு போல…” லீலாைவப் பார்த்ததும் அவளிடம் தாவத் தயாரான குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளிடம் நீட்டினேன்.“ஆமாம் மேடம். சின்னவ வந்தனாவோட பொண்ணு இது. நீங்க தானே டெலிவரியே பார்த்தீங்க” என்றார் மதியழகன் வாய் நிறையப் புன்னகையுடன்.“அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு இப்பத் தானே பார்க்கிறேன். ஆமா வந்தனா பெங்களூர்ல தானே வேலை பாக்குறா..? இப்ப ஊருக்கு வந்திருக்காளா?
“இல்லைங்க மேடம். அவ அங்கதான் இருக்கா.”“பின்ன குழந்தை?” என்று புரியாமல் நான் கேட்க, “ஆறு மாசத்துல இருந்து பேத்தி எங்க கிட்ட தான் வளருது. வந்தனா ஐ.டி கம்பெனியில வேலை பாக்குறா. குழந்தையை பார்த்துட்டு வேலைக்கு போக கஷ்டமா இருக்கும் இல்லையா? அதனால நாங்கதான் வளர்க்கிறோம். நீங்க தரிசனம் முடிச்சிட்டீங்களா டாக்டரம்மா?” என்று கேட்டவரிடம், “ஆச்சு. இதோ ஆஞ்சநேயர் தரிசனம் முடிஞ்சதுன்னா கிளம்ப வேண்டியதுதான். சரி, நான் வரட்டுமா?”
“ஒரு முறை எங்க வீட்டுக்கு வாங்கம்மா. நீங்க வந்து ரொம்ப நாளாச்சே” என்றவர்களிடம் சரி எனத் தலையசைத்தேன். வாய்க்கு வாய் ‘டாக்டரம்மா’ என்ற மதியின் அழைப்பு சங்கடப்படுத்தியது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஆரம்பித்த நட்பு. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் தான் இருவரும் படித்தோம். நான் அவரை மதி என்று சகஜமாக அழைப்பது போல அவரால் என்னை சாவித்திரி என்று வாய் நிறைய அழைக்க முடியவில்லை. காரணம், எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ. என்ற என் படிப்பும் மருத்துவர் என்ற பதவியும் தானே? கோவிலுக்கு வெளியே நின்றிருந்த ஆட்டோ ஒன்றின் முகப்பில் ‘மதி’ என்ற பெயரை பார்த்ததும் என்னுடைய நெஞ்சம் கரைந்தது.
பாவம் மதி! இந்த அறுபத்து மூன்று வயதிலும் ஆட்டோ ஓட்டிப் பிழைக்க வேண்டிய கட்டாயம். இதில் இரண்டு வயதுக் குழந்தையை வேறு பார்த்துக் கொண்டு, அதனுடைய செலவுகளையும் சமாளித்து… ச்சே…! அவருடைய மகள் மேல் எனக்கு அதீத கோபம் எழுந்தது. தன்னுடைய குழந்தையை தான் வளர்க்காமல் பெற்றோரின் தோள்களில் சுமையை ஏற்றுவது என்ன நியாயம்? அதிலும் மதி தன் பதினான்கு வயதிலிருந்து குடும்பச் சுமையை தாங்குகின்ற ஒரு ஜீவன். மேலும், மேலும் அவருக்கு சுமை கூடிக் கொண்டே போனால் ஓய்வெடுப்பது எப்போது? காரில் ஏறி அமர்ந்தவுடன் என் மனமும் பின்னோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தது.
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக நாங்கள் வசித்தது ராஜேந்திரா வீதியில் ஒரு காம்பவுண்ட் வீட்டில்தான். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்னுடைய இரண்டு அண்ணன்கள் மற்றும் நான் என ஏழு ஜீவன்கள் அந்த சின்ன வீட்டில்தான் வசித்தோம். எங்கள் தெருவிலேயே பெரிய வீடு மதியின் வீடு தான். மாடி வைத்த தனி வீடு. அதுவும் சொந்த வீடு. தெருப்பிள்ளைகள் வார இறுதி நாட்களில் விளையாடுவது அந்த வீட்டு வாசலில்தான்.
மதியின் தந்தை ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார். கணிசமாக பணம் புரளும் கடை அது. அந்தக் காலத்தில் அரசாங்கப் பள்ளியில் வேலை பார்த்த என் தந்தையின் (இப்போது போல் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் கிடையாது) ஒற்றை சம்பளத்தில் ஏழு ஜீவன்கள் வயிறு வளர்ப்பது சிரமமான காரியம். எனவே கடனுக்குத்தான் மதியின் கடையில் மாதாமாதம் பொருட்கள் வாங்குவது வழக்கம்.
“உங்களால முடிஞ்ச போது பணம் குடுங்க வாத்தியாரய்யா” என்பார் மதியின் அப்பா பெருந்தன்மையாக. அவர் மேல் அவ்வளவு மரியாதை. ஏனென்றால் மதியைப் போன்று எங்கள் தெருவில் உள்ள சிறுவர், சிறுமியருக்கு மாலை நேரங்களில் இலவசமாக அப்பா டியூஷன் சொல்லித் தருவது வழக்கம். சிலர் பணம் தர முன் வந்த போது அப்பா அதை பிடிவாதமாக மறுத்து விட்டார். “சரஸ்வதியை விக்கிறது போல இருக்கு. மனசுக்கு ஒப்பல” என்பார்.
சிறுவயதில் இருந்து மதிக்கு படிப்பில் அவ்வளவாக நாட்டமில்லை. என் அண்ணன்கள் இருவரும் விரைவாக வீட்டுப்பாடம் எழுதி முடித்து விட்டு விளையாடப் போனால், மதியின் கண்கள் வாசலையே பார்த்திருக்கும். அப்பா ஐந்தரை முதல் ஏழு மணி வரை டியூஷன் எடுப்பார். அதுவரையில் கூட மதி தன்னுடைய பாடங்களை படித்து முடித்திருக்க மாட்டான். நான் தான் அவனை வற்புறுத்திப் படிக்க வைப்பேன்.
“நல்லா கால்ல ரெண்டு போடுங்க வாத்தியாரய்யா… கடையில கணக்கு வழக்கு பார்க்கிற அளவுக்காவது புத்தி வேண்டாமா? எப்பப்பாரு புழுதியில விளையாடுறது தான் இவனுக்கு பிடிச்சிருக்கு” என்பார் மதியின் தந்தை என் அப்பாவிடம். “டேய் மதி, சாவித்திரியைப் பாரு, எவ்வளவு புத்திசாலியா இருக்கா? நீயும் இருக்கியே” என்று எங்கள் இருவரையும் ஒப்புமைப்படுத்தி பேசத் தவறியதே இல்லை அவர். “பார்த்தியா சாவி, உன்னால நான் அப்பாகிட்ட எப்படி அடி வாங்கினேன்னு” என அடிபட்ட காயங்களை என்னிடம் காண்பித்து வெள்ளையாக சிரிப்பான். எனக்கோ மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.
லீவு நாட்களில் நான் அவர்கள் வீட்டில்தான் பழியாக கிடப்பேன். அவனுடைய அக்காக்கள் இருவரும் எனக்கு விதவிதமாக ஜடை அலங்காரம் செய்து தாழம்பூ வைத்து பின்னி அழகு பார்ப்பர். இருவரும் ஐந்தாவது வரை படித்து விட்டு அதற்கு மேல் படிப்பு ஏறாமல் வீட்டில் இருந்தனர். மதியின் அம்மா விதவிதமாய் தின்பண்டங்கள் தருவார். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாது. மதியின் பதினான்காவது வயதில் அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
மதியின் அப்பாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமாகிவிட, அந்தக் குடும்பமே திகைத்து திண்டாடிப் போனது. மூத்த அக்காவிற்கு திருமணமாகி ஆறுமாதங்களே ஆகியிருந்தது. வாரம் இருமுறை கோவிலுக்கு போவது மற்றும் திருவிழா சமயங்களில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் மதியின் அம்மா புயலில் அடிபட்ட மரம்போல ஆனார். மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம் அவரை ஆட்டுவித்தது.
காரியம் முடிந்த பத்தாவது நாளில், வந்திருந்த உறவினர்களில் ஒருவர், மதியின் ஒன்று விட்ட சித்தப்பா, “அண்ணி நான் இருக்கிறேன். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. கடை இனிமே எம்பொறுப்பு” என முன்வர சற்றே ஆறுதல் ஆனது அந்தத் தாய் மனம். தந்தை இருக்கும்போதே படிப்பில் நாட்டம் இல்லாத மதி, அவர் மறைவிற்குப் பின் பள்ளிக்கூடம் பக்கம் வருவதையே நிறுத்தி விட்டான். சித்தப்பாவுக்கு துணையாக அவ்வப்போது கடைக்குப் போய் பொட்டலம் மடிக்க ஆரம்பித்தான்.
இரண்டு மாதங்கள் கழித்து வீட்டில் வட்டிக்கடை செட்டியார் வந்து நின்ற போதுதான், மூத்த பெண்ணின் திருமணத்திற்காக வீடு அடமானத்தில் இருந்தது தெரிய வந்தது. “திடீர்னு ஒரு துயர சம்பவம் நடந்து போச்சு. அதனால உடனே வந்து வட்டி வாங்க வேண்டாம்னுதான் விட்டுப் பிடிச்சேன். ஆனா என் பொழப்பு நடக்கணும் இல்லையா?” என மெல்ல அவர் விஷயத்தை எடுத்துரைத்தார். அடுத்த ஆறுமாதத்தில், கடைக்கு மொத்தமாக பலசரக்கு போடும் பொன்னையன் வீடு தேடி வந்து மதியின் அம்மாவிடம், அதுவரை மளிகை சாமான் வாங்கியதற்கு பணமே வரவில்லை என்று சொல்ல இடிந்து போனார். சித்தப்பாவிடம் கேட்க, அவரோ மழுப்பலாக பதில் சொல்லி, கடை நஷ்டத்தில் நடக்கிறது என குண்டைத்தூக்கிப் போட்டார்.
சித்தப்பாவின் சுயரூபம் முழுமையாக தெரிய ஆரம்பித்த நேரம், கடைப் பணத்தில் பாதிக்கு மேல் சுருட்டி கொண்ட மனிதர் திடீரென ஒரு நாள் காணாமல் போனார். பொன்னையனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிப் பணம் மற்றும் கடையைக் காட்டி உள்ளூர்காரர்கள் பலரிடம் சித்தப்பா வாங்கியிருந்த சில்லரைக்கடன்கள் என விஸ்வரூபம் எடுக்க, கடை முழுதாக விற்பனைக்கு போனது. செட்டியாருக்கு தரவேண்டிய பணம் வட்டியும் முதலுமாய் ஏறிக் கொண்டே போக, அவசர அவசரமாக இரண்டாவது மகளுக்கும் திருமணத்தை முடித்து வீட்டையும் செட்டியார் பேருக்கு எழுதி வைத்துவிட்டு, மகனுடன் தன் சொந்த ஊரான பவானிக்கே சென்றுவிட்டார் மதியின் தாய்.
இதற்கிடையில் பள்ளிப் படிப்பை முடித்த நான், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். நான் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்த கடைசி வருடத்தில் எனக்கு திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். என் தந்தை தேடிக் கண்டுபிடித்து அரிதான மாப்பிள்ளைதான் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் நாகராஜன்.
நானும் என் அம்மாவும் ஜவுளிக்கடையில் என் புகுந்த வீட்டில் உடுத்திக்கொள்ள புடவைகள் வாங்கி விட்டு வெளியே வரும்போது கடை வாசலில் நின்றிருந்த ஒரு ஆட்டோவில் ஏறினோம். பாதிப் பயணத்தில், “சாவி, நல்லா இருக்கியா, சாரி இருக்கீங்களா?” என்ற குரலில் ஆடிப்போனேன். இது மதியின் குரல் அல்லவா? மதியை ஆட்டோ டிரைவராக என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. மதியோ, “படிக்க வேண்டிய வயசுல புத்தி படிப்புல போகலை. படிக்கணும்னு புத்தி வந்தப்ப வசதியில்லை. வேற வழி? அதான் ஆட்டோ ஓட்டுறேன்.” என சிரித்தபடி சொன்ன போது மனம் வலித்தது.
திருமணத்திற்கு பின்பு நான் டிஜி.ஓ முடித்துவிட்டு ஈரோட்டிலேயே செட்டில் ஆகி விட, மதியும் தன் தாயோடு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். முப்பது வயதிற்கு மேல் திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனுமாகி, அவர்களை நகரத்தில் உள்ள ஆங்கில மீடியம் பள்ளியில் அதிக கட்டணத்தில் படிக்க வைத்தார். பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் ட்ரிப் எடுப்பது, நாள் முழுக்க ஆட்டோ ஓட்டுவது என உழைக்க, மனைவி லீலாவும் தன் பங்குக்கு சிறிய அளவில் மெஸ் ஒன்றை நடத்தி சம்பாதித்தார். தம் கடின உழைப்பால், இருவரும் குடும்பத்தை உயர்த்தியதை நினைத்து பெருமிதமாக இருந்தது எனக்கு.
அந்த வாரத்தின் இறுதியிலேயே எனக்கு மதியின் வீட்டு பக்கமாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பழங்களும் குழந்தைக்கு சாக்லேட்டுகளும் வாங்கிக் கொண்டேன்.
கதவைத் திறந்த மதி, என்னை அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. “என்ன நீங்க, இன்னைக்கு ட்ரிப்புக்கு போகலையா?” என்றதும் “இல்லை மேடம். அதெல்லாம் நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு” என்றார் முகம் நிறைய சிரிப்புடன்.
“ஆமாங்க மேடம். என் பொண்ணுங்க ரெண்டு பேரும் எனக்கு வாலன்டரி ரிட்டயர்மென்ட் கொடுத்துட்டாங்க…”நான் புரியாமல் அவரைப் பார்த்தபடி லீலா கொண்டு வந்து வைத்த பகோடாவை சுவைத்துக் கொண்டிருந்தேன்.“நான் சின்ன வயசுல இருந்து வேலை செஞ்சு ரொம்பக் களைச்சு போயிட்டேனாம். அதனால இதுவரைக்கும் ஆட்டோ ஓட்டுனது போதும்னு சொல்லி என்னோட ஐம்பத்தி அஞ்சாவது வயசுலேயே ரெண்டு பெண்களும் என்னை வற்புறுத்தி வீட்ல இருக்க வச்சுட்டாங்க.
கடந்த ஆறேழு வருஷமா நான் ஆட்டோ ஓட்டுறதே இல்லை. எங்க வீட்டு உபயோகத்துக்கு மட்டும்தான் ஆட்டோ எடுக்கறது வழக்கம்…”“அப்போ வருமானத்திற்கு என்ன வழி?” என்ற என்னுடைய கேள்வியை முகக்குறிப்பால் உணர்ந்த லீலா, “இரண்டு பெண்களும் மாசா மாசம் தாராளமா பணம் அனுப்பி வைக்கிறாங்க. அதுவே எங்களுக்கு மிச்சம்தான். என்னோட மனசு திருப்திக்காக மெஸ்ல ஒரு நாலஞ்சு ஆட்டோ டிரைவர்களுக்கு மட்டும் சமைச்சுப் போட்டு நடத்திட்டு வரேன். என்னமோ நாங்க செஞ்ச புண்ணியம் ரெண்டு மருமகன்களும் தங்கமா வாய்ச்சுட்டாங்க” என்றாள்.
“வயசான காலத்துல பேரன், பேத்தியோட இருக்கிறது எவ்வளவு கொடுப்பினை தெரியுங்களா? என்னுடைய மகள்களோட சின்ன வயசுல அவங்களோட எனக்கு நேரம் செலவழிக்க முடியல. இரவு பகல் பார்க்காம ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன். அந்தக் குறைய இப்ப எங்க பேத்திகள் மூலமா தீத்துக்கறோம். வாழ்க்கை நிறைவா இருக்குங்க மேடம்” என்ற மதியின் வார்த்தைகளில் அத்தனை உற்சாகம்.
வீட்டிற்கு செல்லும் போது, மதியை நினைத்து மனம் சந்தோஷித்தது. அதே நேரம், ‘முன்பு மதியைப் பார்த்து பரிதாபப்பட்டாயே, உண்மையிலே யார் பாவம்?’ என்றது என் உள்மனம். இந்த வயதிலும் மாங்கு மாங்கு என்று மருத்துவமனையைக் கட்டிக் கொண்டு அழும் நீ பாவமா? இல்லை பேரன், பேத்திகளை கொஞ்சிக் கொண்டு அமைதியாக ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மதி பாவமா?திருமணமாகி ஏழு எட்டு வருடங்களுக்கு பிறந்த ஒரே செல்லப்பிள்ளை சதீஷை வேலைக்காரர்கள் தான் வளர்த்தனர்.
என் கைராசியோ இல்லை கடின உழைப்போ, எனக்கு பிரசவ கேசுகள் வந்து குவிந்தன. பணமும் வந்து கொட்டியது. பெரிய மருத்துவமனை கட்டினேன். ஆனால் ‘நீ ஒருத்தி சம்பாதிக்கிறதே போதும்’ என நினைத்தாரோ என்னவோ, என் கணவருக்கு மருத்துவத்தொழிலில் நாட்டம் இல்லை. ஆரம்பத்தில் பேருக்கு பகலில் நான்கு மணி நேரங்கள் மட்டுமே நோயாளிகளை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து, ஏழு மணிக்கெல்லாம் மதுப் புட்டியுடன் உட்கார்ந்து விடுவார்.
நானும் எதையும் கவனிக்க நேரமில்லாமல் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு நோயாளிகள், மருத்துவமனை என ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டை கவனிக்க துளிகூட நேரமில்லை. பொறுப்பில்லாத அப்பா, அக்கறை இல்லாத அம்மா, பேருக்கு பாசம் காட்டும் பாட்டி, அதீதப் பணம், வசதிகள் என வளர்ந்த என் மகன் பதினொன்றாவது படிக்கும் போதே சிகரெட், போகப் போக மது என பாதை மாறினான்.
அவனை பெரும் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தேன். நல்ல வேளை அப்போதெல்லாம் நீட் இல்லை. ஆறு வருடப் படிப்பை, பத்து வருடங்கள் இழுத்துப் பிடித்து ஒரு வழியாக முடித்தான். அவனுடைய குணம் தெரிந்து யாருமே பெண் தரவில்லை. கடைசியில் படாத பாடுபட்டு எம்.பி.பி.எஸ். முடித்த வசதியில் குறைந்த ஒரு வீட்டில் பெண்ணெடுத்தேன். வந்த மருமகள் தீபாவும் சதீஷிற்கு சற்றும் இளைத்தவள் இல்லை என்று நிரூபித்தாள். சதா ப்யூட்டி பார்லர், டூர், ஷாப்பிங்தான்.
இந்த வீட்டின் சம்பாதித்துக் கொட்டும் ஒரே ஜீவன் நான் தான். என் சம்பாத்தியத்தில் அனைவரும் உட்கார்ந்து உடல் நோகாமல் அனுபவித்துக் கொண்டிருக்க, எனக்கு யார் ஓய்வு தருவதைப் பற்றி யோசிக்க போகிறார்கள்? வாய்ப்பே இல்லை. யாருக்காக இப்படி ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டும்? மனப்புழுக்கத்துடன் வீடு வந்தேன்.சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மூன்று வயது ரித்தீஷ், என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் டிவியில் பார்வையை பதித்தான்.
“அம்மா, தம்பி, மதியம் சாப்பிடவேயில்லை. இப்ப பால் கொடுத்தேன். குடிக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்குது” என்றாள் பணிப்பெண் வள்ளி.“இப்பப் போய் சூடா எடுத்துட்டு வா…”பேரனை அள்ளி மடியில் வைத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “ரித்தீஷ் கண்ணா, என் செல்லம்” என்று கொஞ்சினேன். என் முகத்தை ஆவலாய் பார்த்தவனிடம், “பால்குடி ராஜா” என்று புகட்ட ஆரம்பித்தேன்.
போதும், இன்னொரு நாகராஜனோ, சதீஷோ உருவாக வேண்டாம். இந்த பிஞ்சையாவது நல்லபடி வளர்த்து ஆளாக்க வேண்டும். இனி மருத்துவமனைக்குச் செல்லும் நேரத்தை குறைத்துக் கொண்டு ரித்தீசுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என தீர்மானித்துக் கொண்டேன்.