அழகு சாதனப் பொருட்கள்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 9 Second

சிறுநீரகத்தை பாதிக்குமா ?

நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைமுறை மாற்றத்துக்கு ஏற்றவாறு இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் ஆண் – பெண் வித்தியாசமில்லாமல், தங்களது லைப் -ஸ்டைலை நவீனமாக மாற்றிக் கொள்ளவே விரும்புகின்றனர். அந்த வகையில், அவர்களின் மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பது அழகு சாதனப் பொருட்களே. இதனால், எத்தனை வேலை ப்பளு இருந்தாலும், அழகு சாதனங்களால் தங்களை மெருகேற்றிக் கொள்ளவும் அவர்கள் தவறுவதில்லை.

அந்த வகையில், ஒவ்வொருவரும், தங்களுக்கு பிடித்தமான மேக்கப் சாதனங்களை தேடிப்பிடித்து வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் அதன் மூலம் வெளிப்படும் அழகுத்தன்மையை மட்டுமே கவனிக்கிறார்களே தவிர, அவை கூந்தலுக்கும், சருமத்திற்கும் தீங்கு விளைவிக்காத, ரசாயனக் கலப்படமற்ற பொருள்தானா என்பதை கவனிப்பதில்லை. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த விழிப்புணர்வும் இல்லை.

அதுபோன்று சிலருக்கு அழகு நிலையங்களுக்கு சென்று தங்களை அழகுபடுத்திக்கொண்டால்தான் மனநிறைவு ஏற்படுகிறது. ஆனால் எல்லா அழகு நிலையங்களிலும் தரமான அழகு பொருட்களைத்தான் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்துகிறார்களா என்றால் கேள்விக்குறிதான். சில அழகுநிலையங்களில் விலை மலிவானவையும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரிப்பு, கண்களில் எரிச்சல் தோன்றி அவதிப்படுபவர்களும் உண்டு.

இது குறித்து சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் நவிநாத் நம்முடன் பகிர்ந்து கொண்டவை

இன்றைய காலகட்டத்தில், அழகு சாதனப் பொருட்களை விரும்பாத ஆண் – பெண் இல்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாகவே, உச்சி முதல் பாதம் வரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான பல அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அவைகளில் தரமானது எது தரமற்றது எது என்று தெரியாமலே, பலரும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், பலவித பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர்.

உதாரணமாக, சமீபத்தில், 30 வயதுள்ள பெண் ஒருவர், மருத்துவமனைக்கு முகம், கால் எல்லாம் வீங்கியிருப்பதாக, சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு வீக்கம் எதனால், ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ள பல டெஸ்ட்டுகள் எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு சிறுநீர் வழியாக அதிகப்படியான புரதச்சத்து வெளியேறுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பற்றி மேலும், ஆராய்வதற்காக அவருக்கு பயாப்ஸி செய்யப்பட்டது.

அதில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இதனால், சிறுநீரகவியல் மருத்துவரான என்னை வந்து சந்தித்தார். அவரது சிறுநீரகம் எதனால், பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நானும் சில டெஸ்ட் செய்தேன். அதில், அவரது உடலில் மெர்க்குரி கலந்திருப்பது தெரியவந்தது. மெர்க்குரி அவரது உடலில் எப்படி வந்தது என்று பல வகைகளில் ஆராய்ந்த வண்ணம் இருந்தோம்.

அந்த சமயத்தில் வட இந்திய நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியை கவனித்தேன். அதில், தரமற்ற சிவப்பழகு கிரீமை பயன்படுத்தியதால், பல பெண்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக படித்தேன். அந்த சிவப்பழகு கிரீம்களில் மெர்க்குரி கலந்திருப்பதே அதற்கு காரணம் என்றும் படித்தேன். எனக்கு ஒரு பொறிதட்டி, என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்மணியிடம் சிவப்பழகு கிரீம் பயன்படுத்துகிறாரா என்று விசாரித்தேன். அவரும், என் தோழி ஒருவர் கேரளாவில் ஒரு கடையில், சிவப்பழகு கிரீம் வாங்கி பயன்படுத்தி வந்தார், அவரது சருமம் பளபளப்பாக இருந்ததால் நானும் அவரிடம் சொல்லி வாங்கி பயன்படுத்தி வருகிறேன் என்று கூறினார்.

பின்னர், அந்த கிரீமை எடுத்து வரச்சொல்லி லேப்புக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அதில் மெர்க்குரியின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த கிரீமை நிறுத்தச் சொல்லிவிட்டோம். தற்போது அவரது உடலில் நல்ல மாற்றம் தெரிகிறது. நன்கு தேறிவருகிறார்.

பொதுவாக, பலரும் அழகு சாதனப் பொருட்கள் ஒத்து வரவில்லை என்றால், அலர்ஜி வரும் சருமம் பாதிக்கும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அழகு சாதனப் பொருளால் சிறுநீரகம் வரை பாதிக்கும் என்று யோசிக்கக்கூட மாட்டார்கள். இதுபோன்று வேறு சில பிரச்னைகளுக்கும் அழகு சாதனப் பொருள் காரணமாகலாம் என்ற கோணத்திலும் இனி யோசிக்க வேண்டும்.
மேலும், லோக்கலாக கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதற்காக விலையுர்ந்த அழகு சாதன பொருட்கள் பாதிப்பு ஏற்படுத்தாதா என்றால், அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. எனவே, அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து மக்களிடையே நிச்சயம் விழிப்புணர்வு வர வேண்டும். தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் என்னென்ன மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும். முடிந்தவரை, ரசாயனம் கலந்த அழகு சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதே இதற்கு நல்ல தீர்வாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாடர்ன் உடைகளின் பெஸ்ட் காம்போ டெரக்கோட்டா நகைகள்! (மகளிர் பக்கம்)
Next post அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி! (அவ்வப்போது கிளாமர்)