ஏப்பம் வருவது ஏன்? !! (மருத்துவம்)

Read Time:9 Minute, 25 Second

ஏப்பம் என்பது உடலியல் ரீதியில் ஒரு இயல்பான காரியம்தான். என்றாலும் நான்கு பேர் இருக்கிற இடத்தில் அடிக்கடி ஏப்பம் விட்டால் எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.அதிலும் பொது இடங்களில் ஒரு சிலர் நிமிடத்துக்கு ஒரு முறை வாயைத் திறந்து ‘ஏவ்வ்வ்வ்…….’ என்று நீண்ட பெரிய ஏப்பம்விட்டால்தான், உடலில் உயிரே தங்கும் என்பதுபோல் நடந்துகொள்வார்கள். இது சுற்றியிருப்பவர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தும். திருப்திகரமாகச் சாப்பிட்டுவிட்டதன் அடையாளமாக ஏப்பத்தைக் கருதுகிறோம். ஆனால், உண்மையில் அது என்ன?

ஏப்பம் என்பது என்ன?

வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, பரபரப்பாக இருக்கும்போது, காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, வெற்றிலை, பாக்கு, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது, காபி, பால், டீ, தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கி விடுகிறோம். சிலருக்கு இந்தக் காற்று விழுங்கல் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதற்கு ‘ஏரோபேஜியா’ (Aerophagia) என்று பெயர்.

பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் போதும், இது போல காற்றை விழுங்கிவிடுவார்கள். அதை வெளியேற்றக் குழந்தையைத் தோளில் சாய்த்துக்கொண்டு முதுகில் தட்டுவது வழக்கம். ஏப்பத்துக்கான காரணம் என்னவாக இருந்தாலும் விழுங்கிய காற்று இரைப்பையிலிருந்து வெளியேற வேண்டும், இல்லையா? இதற்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் தற்காப்பு வழிதான் ஏப்பம் (Belching).

சுருக்கமாகச் சொன்னால், சோடா பாட்டிலைத் திறக்கிற மெக்கானிசம்தான் இது. விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், நம் உணவுக்குழாயின் அமைப்பைக் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.நல்லதோ, கெட்டதோ, திடமோ, திரவமோ நாம் சாப்பிடுவது எதுவானாலும் வாயிலிருந்து வயிற்றுக்குள் செல்வது முக்கால் அடி நீளமுள்ள (25 செ.மீ.) உணவுக் குழாய் வழியாகத்தான். சுருங்கி விரியக்கூடிய தசைநார்களால் ஆன இந்த உறுப்பு, தொண்டையின் நடுப் பகுதியில் தொடங்குகிறது. குரல்வளைக்குப் பின்புறமாக அமைந்துள்ளது.
நெஞ்சின் நடுப் பகுதியில் ஒரு குழாய் போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதன் அடிப்பகுதி உதரவிதானத்தை (Diaphragm) கடந்து, சுமார் 4 செ.மீ. நீண்டு, இரைப்பையின் ஆரம்பப் பகுதியோடு இணைந்து கொள்கிறது.

உணவுக் குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphinctres) உள்ளன, மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது அது மூச்சுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது. கீழ் முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேல்நோக்கி வந்து, உணவுக் குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது.

இந்தக் கதவு உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது. இதைச் சோடா பாட்டில் மூடியாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நாம் உணவுடன் விழுங்கிய காற்று மிகவும் கொஞ்சமாக இருந்தால் இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவுடன் கலந்து சிறுகுடலுக்குச் சென்றுவிடும். இதன் அளவு அதிகமானால் இரைப்பைக்குத் திண்டாட்டம். இதனால் வயிறு உப்பிக்கொள்கிறது. இரைப்பையில் காற்றின் அழுத்தம் அதிகமாக அதிகமாக, அதை வெளியேற்ற வழி பார்க்கும். தனக்குள்ள சிரமத்தைக் குறைக்க உதரவிதானத்தின் உதவியைக் கேட்கும்.

அதுவும் சம்மதித்துக் கீழே இறங்கி இரைப்பையைப் பலமாக அழுத்தும். இந்த அழுத்தத்தை ஈடுகட்ட இரைப்பைத் தசைகள் எல்லாமே ஒன்றுகூடி மேல்நோக்கி அழுத்தம் கொடுக்கும். இந்த அதீத அழுத்தத்தைத் தாங்க முடியாமல் உணவுக் குழாயின் கீழ்க் கதவும் மேல் கதவும் திறந்துகொள்ள, ‘அப்பாடா……வழி கிடைத்துவிட்டது’ என்ற சந்தோஷத்துடன், இரைப்பை தன்னிடமுள்ள காற்றை ஒருவித சத்தத்துடன் வாய்வழியாக வெளியேற்றும். இதுதான் ஏப்பம். சோடா பாட்டிலில் நாம்தான் மூடியைத் திறக்கிறோம். இங்கு இரைப்பையே திறக்கச் செய்து விடுகிறது என்பதுதான் வித்தியாசம்.

சப்தம் எப்படி?

சரி, ஏப்பம் விடும்போது சத்தம் வருகிறதே, எப்படி? இரைப்பையிலிருந்து மேல்நோக்கிக் காற்று அழுத்தமாகச் செல்லும்போது, உணவுக் குழாயின் மேல் கதவையும் அது திறக்க வைக்கிறது என்று சொன்னோம் அல்லவா? அப்போது மேல் கதவை ஒட்டி இருக்கிற குரல்வளையையும் தொண்டைச் சதைகளையும் இந்தக் காற்று அழுத்துவதால், குரல்வளை மேல் எழும்புகிறது; குரல்நாண்கள் சத்தம் இடுகின்றன. இந்தச் சத்தம்தான் ‘ஏவ்வ்வ்வ்…….’ என்கிற ஏப்பச் சத்தம்.

ஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் பிரச்சினை இல்லை. அதுவே அடிக்கடி வருமானால் வயிற்றில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அது சாதாரண அஜீரணக் கோளாறாகவும் இருக்கலாம். இரைப்பை அல்சர், அசிடிட்டி, புற்றுநோய் போன்றவற்றின் ஆரம்பமாகவும் இருக்கலாம். கல்லீரல், பித்தப்பை, கணையக் கோளாறாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் பரிசோதித்துச் சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

தடுக்க என்ன வழி?

அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டே சாப்பிட உட்காராதீர்கள். அப்படி உட்கார்ந்தால் பரபரப்பாக, அவசர அவசரமாகச் சாப்பிடுவீர்கள். அதேவேளையில் சாப்பிட்ட பின்பு அலுவலகத்துக்குக் கிளம்பும் தயாரிப்பு வேலைகளைச் செய்யுங்கள். பரபரப்பு குறைந்துவிடும். சாப்பிடும்போது பேசாதீர்கள்; கோபத்தோடும் கவலையோடும் சாப்பிடாதீர்கள். வாயை மூடி உணவை மென்று விழுங்குங்கள். மென்றதை விழுங்கிய பிறகே, அடுத்த கவளம் உள்ளே போகவேண்டும்.

காரம், மசாலா, உப்பு, கொழுப்பு, புளிப்பு, எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளை முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் அவித்த உணவு வகைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். சோடா மற்றும் காற்றடைத்த பாட்டில் பானங்களைக் கண்டிப்பாக அருந்தக் கூடாது. முக்கியமாக இந்தப் பானங்களை ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடிப்பதைத் தவிருங்கள். மது, புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா இவற்றையெல்லாம் ஓரங்கட்டுங்கள். ஏப்பத்தைக் கூடிய மட்டும் தவிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதய அடைப்பை நீக்கும் வழிகள்! (மருத்துவம்)
Next post பிரபலமாகி வரும் வாக்-இன் திருமணங்கள்!! (மகளிர் பக்கம்)