மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பில் பெண்கள்! (மகளிர் பக்கம்)
உணவுப் பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளை மட்டுமே பெரும்பாலான மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொண்டு வரும் நிலையில் ஆழிவாய்க்கால் கிராமத்தில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சாவூரில் இருந்து அரைமணி நேர பயணத்தில் வருகிறது ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட ஆழிவாய்க்கால் கிராமம்.
இந்த கிராமத்தில் பெண்களாக இணைந்து தாவர எண்ணெயுடன் இயற்கை மூலிகைப் பொருட்களான மஞ்சள், சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா இதழ்களோடு சில வாசனைப் பொருட்களை இணைத்து ஐந்து விதமான மூலிகை குளியல் சோப்புகளை நேர்த்தியாகத் தயாரிக்கின்றனர். செயற்கையான கெமிக்கல் பொருட்களை இவர்கள் இணைப்பதில்லை என்பதே நிதர்சனம். இதனால் சரும வியாதி மற்றும் பக்க விளைவுகள் வருவதில்லை. உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்கின்றனர் இவர்கள்.
‘‘2002ல் மலர் மற்றும் கதிரவன் சுய உதவிக்குழு பெண்கள் 24 பேர் இணைந்து ரூபாய் ஐந்து சந்தாவாக செலுத்தி சுய உதவிக்குழுவை ஆரம்பித்து வங்கியில் கணக்கு தொடங்கினோம்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர்கள் குழுவின் தலைவியாக செயல்படுகிற சாந்தி மற்றும் சீத்தாலட்சுமி. ‘‘அப்போது எங்களை கண்டறிந்த தஞ்சை ஜனசேவா பவன் தன்னார்வத் தொண்டின் செயலர் சியாமளா சீனிவாசன் குளியல் சோப் தயாரிப்பில் இறங்க ஊக்கப்படுத்தியதுடன், தொழில் தொடங்கவும் எங்களுக்கு வழிகாட்டினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவியுடன் தொடங்கப்பட்ட எங்கள் சோப்பு தயாரிப்பு தொழிலுக்கு காதி நிறுவனம் 10 விதமான சோப்பு தயாரிப்பு பயிற்சியினை வழங்கியது.
தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி ஏழரை லட்சம் கடனை எங்கள் குழுவுக்கு வழங்கி, மானியமாக இரண்டரை லட்சத்தை தள்ளுபடியும் செய்தது. தொழில் தொடங்குவதற்கான இடத்தை ஊராட்சி தலைவர் இலவசமாகக் கொடுத்து உதவினார். வங்கிக் கடன் நான்கரை லட்சத்திற்கு இயந்திரங்களையும், மீதியிருந்த ஒன்றரை லட்சத்திற்கு மூலப் பொருட்களையும் வாங்கி குளியல் சோப்பு தயாரிப்பில் முழு மூச்சாக இறங்கினோம். தயாரிப்பு மட்டுமின்றி பேக்கிங், விற்பனை, கணக்கு வழக்கு, வங்கி செயல்பாடு எனவும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஒரே நேரத்தில் இதில் 1 லட்சம் சோப்புகளைத் தயாரிக்கும் திறன் இயந்திரத்திற்கு இருந்தாலும், வருகிற ஆர்டர்களைப் பொறுத்து 20 ஆயிரம் சோப்புகளை மட்டுமே தற்போது தயாரித்து வருகிறோம். கிராமங்களில் மட்டுமே எங்கள் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சந்தை வாய்ப்புகள் இன்னும் கூடுதலாகக் கிடைத்தால் உற்பத்தியும், எங்களின் வருமானமும் அதிகரிக்கும். இருந்தாலும் வங்கி மூலம் பெற்ற கடனை எங்கள் குழு முழுமையாக அடைத்துவிட்டது’’ என்று குழுவின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் பேச்சில் காட்டுகிறார்கள் இருவரும்.
‘‘எங்கள் நிறுவனத்தில் மின்சாரத்திலும் மனித ஆற்றலை பயன்படுத்தியும் செயல்படும் 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூலப் பொருட்களை சென்னை, புதுச்சேரி, பெங்களூர் போன்ற ஊர்களில் இருந்து வாங்கி வருகிறோம். ஒரு பேட்ஜிற்கு 25 கிலோ வரை மூலப் பொருட்களை இணைப்போம். முதல் மெஷின் மூலப் பொருட்களை இணைத்து கலவையாக கலந்து தரும். இரண்டாவது மெஷின் கலரை ஏற்றி ரிப்பனாக்கி கலவைகளை வெளியே தள்ளும். அதற்கு அடுத்த மெஷின் கலவைகளை பார்களாக மாற்றி வெளியேற்றும். இறுதியாக உள்ள மெஷின் ஒரே லெவலில் சோப்புகளை கட் செய்து வெளியில் அனுப்பும். இறுதியாக தேவையான எடை மற்றும் வடிவத்தில் சோப்பினை கட் செய்து அதன் மீது பெயர் பதிவு செய்யப்பட்டு, பேக்கிங் செய்து விற்பனைக்கு சோப்புகள் தயாராகும்.
தயாரான சோப்புகளை சென்னை, மதுரை, சிதம்பரம், தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கும், ஒரு சில அரசு விடுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து அனுப்புகிறோம். தயாரிப்பு மட்டுமின்றி, பேக்கிங், ஆர்டர் எடுப்பது, ஏற்றுமதி, டிரான்ஸ் போர்ட், கணக்கு வழக்கு, வங்கிக்கு சென்று வருவது என அனைத்து வேலைகளையும் பெண்கள் நாங்கள் இணைந்துதான் செய்கிறோம்.குழுவில் உள்ள பெண்களிடம் முயற்சி, ஆர்வம், ஈடுபாடு அதிகமாக இருந்ததால் நேரடி விற்பனைக்கும் கலெக்டர் எங்களுக்கு வழிகாட்டுகிறார்.
கிடைக்கும் லாபத்தை இரண்டு குழுவைச் சேர்ந்த பெண்களும் பிரித்துக் கொள்கிறோம். வங்கி கடன் போக ஒரு நபருக்கு ஏழு முதல் எட்டு ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. விற்பனை இன்னும் கூடுதலாகி, எங்கள் தயாரிப்புக்கு மக்களின் ஆதரவு அதிகமானால் இன்னும் எங்கள் வருமானம் அதிகமாகும். எங்களின் தயாரிப்பு சோப்புகளை சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை கூடுதலாக அரசு உருவாக்கித் தரவேண்டும்’’ என முடித்துக் கொண்டனர்.
தஞ்சை ஜனசேவா பவன் செயலர் சியாமளா சீனிவாசனிடம் பேசியதில்…
‘‘எங்கள் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி 32 வருடங்கள் ஆகிறது. பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் எனதேர்ந்தெடுத்து அவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை(skill training) வழங்கி வருகிறோம். கூடவே சுய உதவிக் குழுப் பெண்களின் வருமானத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்து, தொடர்ந்து ஆதரவும் கொடுத்து வருகிறோம்’’ என்றவர், ‘‘அவசர பணத் தேவைக்கு அது கணவனாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு ரூபாய்க்கும் அடிக்கடி சென்று குடும்ப செலவுகளுக்கோ, மருத்துவ செலவுகளுக்கோ அல்லது தங்களது தேவைகளை பூர்த்தி செய்யவோ பணம் கேட்கும் நிலையை மகளிர் குழு மாற்றி உள்ளது. மகளிருக்கு தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் அளவில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள மகளிர் குழுக்கள் உறுதுணையாகவே உள்ளன.
அதேபோல் கல்வி அறிவைப் பெறாத கிராமப்புற பெண்களும் சிறந்த தொழில் முனைவோராக இன்றைக்கு பல்வேறு தளங்களில் வலம் வருகின்றனர். அவர்களுக்கு ஊன்றுகோலாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் இருக்கின்றன’’ என்றார். இந்த குழுக்கள் உருவாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக லேபர் கான்ட்ராக்டில் இவர்கள் சோப்புகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
கடந்த ஆண்டில் இருந்துதான் சொந்த முதலீடு, நேரடி விற்பனை என களத்தில் இறங்கியுள்ளனர். முதல் விற்பனையை கடந்த ஆண்டே மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இன்றைக்கு நிறைய ஆர்டர்கள் அவர்களுக்கு வர ஆரம்பித்துள்ளது. குழுவாக தயாரிப்பு பணியில் மும்முரமாக இறங்கிஉள்ளனர். ஆனாலும் மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் எந்திரங்கள், மின்சாரத்தில் கட் செய்கிற சோப்பு டையிங் மெஷின், தயாரான சோப்புகளை ஏற்றுமதி செய்து அனுப்புவதற்கான வாகனம் போன்ற தேவைகளும் அவர்களுக்கு இருக்கிறது.