மதிப்புக்கூட்டும் பொருளாக மாறும் உலர் கழிவுகள்! (மகளிர் பக்கம்)
கைகளில் இருக்கும் குப்பைகளை கண் பார்க்கும் இடங்களிலும், கை போன போக்கில் தூக்கி எறிந்து விட்டு செல்லும் நபர்கள் மத்தியில், அவர்கள் தூக்கி எறியும் பொருட்களை அவர்களுக்கே திருப்பி கொடுக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் ‘இந்தியா வேஸ்ட்டெட் மற்றும் ரீபெர்த் கலெக்ட்டிவின்’ நிறுவனர் சென்னையை சேர்ந்த ஆன் அலெக்ஸியா அன்ரா. நமது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் ஒரு பொருளை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல பொருட்களை இவர் தயாரித்து வருகிறார். குறிப்பாக, நம் வீட்டில் இருந்து வீசக்கூடிய உலர் கழிவுகளில் இருந்து பெறப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்து தயாரித்து விற்பனை செய்கின்றார்.
அவர்கள் அந்த உலர் கழிவுகள் மூலம் உருவாக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களிலிருந்து நிதி திரட்டி அரசு சாரா நிறுவனங்களுக்கு உதவியும் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வெறும் உடைகள் மட்டுமில்லாது, நகைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் போன்றவற்றையும் மறுசுழற்சி முறையில் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்கள்.
‘‘திரைப் படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்த எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் இயற்கையின் புறம் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது’’ என்கிறார் ஆன் அன்ரா. இவருக்கு ஏற்பட்ட அந்த ஆர்வத்தின் அடிப்படையாக கொண்டு உருவானதுதான் இவரின் ‘‘வேஸ்ட்டெட் 360 சொலுஷன்’’ ( Wasted 360 Solution). உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனம்.
‘‘நாங்க 2019ல் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சோம். எங்களுக்கு சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு முக்கியமான நகரங்களில் கிளைகள் இருக்கு. இந்த நிறுவனம் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் ஆயிடுச்சு. இங்கு உலர் கழிவுகளை மட்டும் தான் நாங்க கையாளுகிறோம். ஆரம்பத்தில் த்ரிஃப்ட் ஸ்டோர் (Thrift Store) என்ற ஒரு விஷயம் இருக்கு என்பதைப் பற்றி நாங்க யோசிக்கவேயில்லை.
எங்களிடம் வரும் கழிவுகளை தரம் வாரியாக பிரித்து, அவற்றில் நன்றாக இருக்கும் பொருட்களை சில அரசு சாரா அமைப்புகளுக்கு கொடுப்போம். மற்ற பொருட்களை மறுசுழற்சி செய்ய அனுப்பிடுவோம். சில என்.ஜி.ஓ-க்கள் நாங்க அனுப்பி இருந்த துணிகளை மீண்டும் எங்களிடமே திருப்பி அனுப்பிடுவாங்க.
அதில் அதிகமா, மேலை நாட்டு பெண்கள் அணியும் நவீன உடையும், கையில்லா ஆடைகளுமே இடம் பிடித்திருக்கும். சில சமயம் வீட்டு அலங்காரப் பொருட்களும் அதில் இருக்கும். நாங்க மறுசுழற்சியை எங்களின் கடைசி ஆயுதமாகத்தான் உபயோகிப்போம். அதன் பிறகு அந்த பொருட்களை எந்த வகையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்னு யோசிப்போம். அப்போ எங்களுக்கு தோன்றின ஒரு யோசனைதான், இந்த த்ரிஃப்ட் ஸ்டோர் (Thrift Store).
என்.ஜி.ஓ-க்களில் இருந்து எங்களிடம் திரும்பி வரும் பொருட்களை அதன் மதிப்பிலிருந்து சிறிது குறைத்து விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். அதுக்காகத்தான் இந்த த்ரிஃப்ட் ஸ்டோரை 2020ல் ஆரம்பிச்சோம். அது கொரோனா பாதிக்கப்பட்ட காலக்கட்டம் என்பதால், எங்களின் விற்பனை முழுவதும் ஆன்லைனில்தான் இடம் பெற்றது. அதன் பிறகு கொஞ்சம் பொருட்கள் சேர ஆரம்பிச்சதும் கேப் 28 என்ற பெயரில் எங்களிடம் சேர்ந்த பொருட்களைக் கொண்டு ஒரு குட்டி கடையினை உருவாக்கினோம். 2022ல் சென்னை மற்றும் பெங்களூரில் கடைகளை ஆரம்பிச்சோம்.
த்ரிஃப்ட் ஸ்டோர் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகப்போகுது. எங்களிடம் மொத்தம் 20க்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்யுறாங்க. ஏழு முதல் எட்டு பேர் வரை முழு நேரமும், பத்துக்கும் மேற்பட்டவர்கள் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், சுய உதவிக்குழுவில் இருக்கும் மகளிரும் சிலர் எங்களுக்கு உதவி செய்றாங்க. அதைத் தவிர வேஸ்ட் பொருட்களை எடுத்து செல்லும் பழைய பேப்பர் கடையினர் மற்றும் காயிலாங் கடைக்காரர்களும் எங்களுடன் இணைந்து ஒருவராக செயல்பட்டு வருகிறார்கள்.
இங்க எங்களின் மிகவும் முக்கியமான வேலை மக்களிடம் இருக்கும் உலர் கழிவுகளை சேகரிப்பதுதான். சில நேரங்களில் அவர்களே கொண்டு வந்தும் கொடுப்பார்கள். ஸ்கூல், காலேஜ் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களும் அவர்களே வாரத்துக்கு ஒரு முறை உலர் கழிவுகளை சேகரித்து, கொண்டு வந்து தருகிறார்கள்’’ என்றவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாகவும் ஆன்லைன் முறையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
‘‘வேஸ்டெட் 360ல் இருக்கும் பொருட்களுக்கு செயல்முறைன்னு பெருசா எதுவும் இல்ல. ஆரம்பத்தில் சொன்னது போலதான் எங்களிடம் வரும் கழிவுகளை தரம் வாரியாக பிரித்து அதனை எப்படி உபயோகப்படுத்தலாம்னுதான் பார்ப்போம். சிலர் எந்த மாதிரியான கழிவுகளை கொண்டு வரணும்னு தெரியாது. அவங்களிடம் நேரடியாக பேசி அவர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிப்போம். எங்களின் கடைக்கு வருபவர்கள், ஏன் பொருட்களின் விலை ரொம்பவே குறைவா இருக்குனு கேட்பாங்க.
அவங்களுக்கு எங்களின் பொருள் பற்றி கூறும் போது தான் நாங்க என்ன செய்கிறோம் என்பதை புரிந்து கொள்வாங்க. எங்களைப் பொறுத்தவரை மக்களிடம் இதை நாங்க சுலபமான முறையில் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து முயற்சியும் எடுக்க வேண்டும் என்பதுதான். 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை நாங்க 20 முதல் 35 ரூபாய் வரை விற்கிறோம். இதன் முக்கிய நோக்கமே வேஸ்டெட் சொல்யூஷன் பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதுதான்.
ஒரு பொருள் நமக்கு உபயோகப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி மற்றவர்களுக்கு பயன்பட்டால் அதில் நமக்கு ஒரு சந்தோஷம். எங்களிடம் துணி வகைகள் மட்டும் இல்ல, வீட்டிற்கு தேவையான அலங்கார பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், அவர்களுக்கான உடைகள், இது போல நிறைய கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடிய அன்பளிப்புகளும் இங்கு கிடைக்கும். வேஸ்டெட் 360-யும், த்ரிஃப்ட் ஸ்டோரும் ஒரே இடத்தில்தான் இயங்கி வருகிறது.
கடைகளில் மட்டும் இல்லாமல், பள்ளி, கல்லூரி, அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நாங்க கலந்து கொண்டு எங்களின் பொருட்களை அங்கு காட்சிக்காக வைப்போம். விருப்பம் உள்ளவர்கள் வாங்கிச் செல்வார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு குறைந்த விலையில் நல்ல பொருட்கள் வாங்கிய திருப்தி இருக்கும். அதேசமயம் அவர்கள் முகத்தில் தெரியும் அந்த சின்ன சந்தோஷம் எங்களுக்கு ஒரு பெரிய சாதனை படைத்துவிட்ட உணர்வினை ஏற்படுத்தும். சொல்லப்போனால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எங்களிடம் பொருட்கள் இருப்பது எங்களின் சக்சஸ்னு சொல்லலாம்.
நாங்க த்ரிஃப்ட் ஸ்டோர் மற்றும் பொருட்களை மறுசுழற்சி செய்ய முக்கியமான காரணம் மக்கள் எங்களிடம் உலர் கழிவுகளை கொண்டு வரவேண்டும் என்பதுதான். எங்களுக்கு விடியும் ஒவ்வொரு நாளும், இன்று என்ன புதிய பொருட்கள் வரப்போகிறது என்ற ஆர்வத்தோடுதான் துவங்கும். உண்மையா சொல்லணும்னா, இது எங்களின் ‘புதையல்’ என்று புன்னகையுடன் விளக்கமளித்த அன்ரா, இந்தியா வேஸ்ட் டிரஸ்ட் என்னும் பெயரிலும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.