சிஃபிலிஸ் அறிவோம்! (மருத்துவம்)
சி ஃபிலிஸ் என்பது ட்ரிபோனிமா பல்லிடம் எனும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும். சிஃபிலிஸ், புண் உள்ள நபருடன் நேரடி உறவு வைத்துக்கொள்ளும் போது ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. இந்நோயுள்ள கர்ப்பவதியிடமிருந்து இந்நோய் கர்ப்பத்திலுள்ள குழந்தைக்கு செல்கிறது. சிஃபிலிஸ் கழிவறை இருக்கைகள், கதவுப்பிடிகள், நீச்சல் குளங்கள், குளியல் தொட்டிகள், உடைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் உணவுப்பாத்திரங்கள் மூலம் பரவுவதில்லை.
பெரியவர்களில் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் யாவை?
சிஃபிலிஸ் நோய் தொற்று கண்ட அநேகரில் ஆண்டு கணக்கில் எந்தவித அடையாளங்களும் காணப்படுவதில்லை.
முதன்மை நிலை
(அ) ஆரம்ப நிலைஆரம்ப நிலையில், ஒன்று அல்லது பல சிஃபிலிஸ் புண்கள் காணப்படும். சிஃபிலிஸ் நோய் தொற்று ஏற்பட்டு, நோயின் அடையாளங்கள் தோன்றும் காலம் 10 லிருந்து 90 நாட்கள் வரை வேறுபடுகிறது (சராசரியாக 21 நாட்கள்). புண்ணானது உறுதியான, உருண்ட, சிறிய மற்றும் வலியற்ற தன்மையுடையதாய் இருக்கும். சிஃபிலிஸ் உடலின் எந்த பகுதியில் உள்சென்றதோ அதே இடத்தில் தோன்றும். இது 3 முதல் 6 வாரங்கள் வரை இருந்து, எந்தவித சிகிச்சையும் இன்றி குணமாகிவிடும். இருந்தபோதும் போதுமான சிகிச்சை அளிக்காவிட்டால், இந்நோய் இரண்டாம் நிலைக்கு வளர்ச்சி பெறும்.
இரண்டாம் நிலை
தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் மற்றும் முயுகஸ் பகுதிகளில் புண் ஏற்படுவது நோயின் இரண்டாம் நிலையினை குறிக்கிறது. இவ்வகை கொப்புளங்கள் அரிப்பை ஏற்படுத்துவதில்லை. இவ்வகை கொப்புளங்கள் கரடுமுரடான, சிவப்பு அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிற புள்ளிகளாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் இரண்டு பகுதிகளிலும் தோன்றும். இருப்பினும் மாறுபட்ட கொப்புளங்கள் உடலின் மற்ற பகுதிகளிலும் ஏற்படும், சில வேளைகளில் இவ்வகை கொப்புளங்கள் நோயினால் ஏற்பட்டவை போன்று தோன்றும். கொப்புளங்களுடன், இரண்டாம் நிலை நோய் தொற்றின் அடையாளங்களான காய்ச்சல், நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்(நெரிக்கட்டுதல்), தொண்டை வறட்சியாதல், வட்ட வட்டமாக முடி கொட்டுதல், தலைவலி, எடை இழப்பு, தசைவலி மற்றும் உடற்சோர்வு போன்றவை ஏற்படலாம்.
கடைநிலை
சிஃபிலிஸ்-ன் வெளிப்படாத நிலை, இரண்டாம் நிலையின் அடையாளங்கள் மறையும் போது ஆரம்பமாகிறது. சிஃபிலிஸ்-ன் கடைநிலையில், இந்நோய் மூளை, நரம்புகள், கண்கள், இதயம், இரத்தக்குழாய்கள், ஈரல், எலும்புகள் மற்றும் மூட்டுகள் போன்ற உடல் உள் உறுப்புகளில் சிதைவினை ஏற்படுத்தலாம். இவ்வகை உடல் உள் உறுப்புகளின் சிதைவின் அறிகுறிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்படும். தசைகள் அசைவுகளை ஒருங்கிணைப்பதில் கடினம், பக்கவாதம் (அ) வலிப்பு, மரப்பு, படிப்படியாக பார்வை இழப்பு மற்றும் நினைவாற்றல் குறைதல் போன்றவை சிஃபிலிஸ்-ன் கடைநிலை அறிகுறிகள் ஆகும். இவ்வகை சிதைவு அல்லது பாதிப்புகள் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியவை.
சிஃபிலிஸ் எப்படி கர்ப்பிணிப் பெண் மற்றும் அப்பெண்ணின் குழந்தையைப் பாதிக்கிறது?
கர்ப்பிணிப் பெண்ணிற்கு எவ்வளவு காலங்களாக சிஃபிலிஸ் உள்ளதோ அதைப் பொருத்து பாதிப்பு காணப்படும். குழந்தை இறந்து பிறக்கக்கூடியது முதல் பிறந்த குழந்தை பிறந்த குறுகிய காலத்திலேயே இறக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். சிஃபிலிஸ் நோய் தொற்று கண்ட குழந்தை, நோயின் எந்த அடையாளங்கள் இன்றி பிறக்கலாம். இருந்தபோதிலும் உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், அக்குழந்தைக்கு பிறந்த சில வார காலத்திற்குள் பிரச்சினைகள் ஏற்படலாம். சிகிச்சை அளிக்கப்படாத குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாகிறது, வலிப்புத் தாக்குதல் அல்லது இறப்பு நேரிடலாம்.
சிஃபிலிஸ்-ற்கும் எச்.ஐ.வி-க்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
பாலின சேர்க்கை உறுப்புகளில் ஏற்படும் சிஃபிலிஸ் புண்களின் வழியாக எச்.ஐ.வி நோய் கிருமி, உடலுறவின் போது மிக சுலபமாக பரவுகிறது. சிஃபிலிஸ் நோய் தொற்று உள்ள போது எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படும் ஆபத்து (சாத்தியம்) 2 முதல் 5 மடங்கு அதிகரிக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிஃபிலிஸ் மீண்டும் ஏற்படுமா?
சிஃபிலிஸ் நோய்தொற்று ஒரு முறை ஏற்பட்டதினால் மீண்டும் ஏற்படாது என்று கூறமுடியாது. சிஃபிலிஸ் நோய் கண்டபின் அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் இன்னும் அப்படிப்பட்டவர்களில் இந்நோய் திரும்பவும் எளிதில் பாதிக்கக்கூடிய நிலை உள்ளது.
சிஃபிலிஸ் வருவதை தடுத்து வராமல் காப்பது எப்படி?
தகாத பாலுறவுகளுக்கு விலகியிருப்பது இந்நோய் பரவுவதை தவிர்க்கும். மது மற்றும் போதை மருந்துகளை தவிர்ப்பது இந்நோய் பரவாமல் தடுத்துக்காக்க உதவுகிறது ஏனெனில் இப்படிப்பட்ட பழக்கங்கள் ஆபத்தான பாலுறவுகளுக்கு நேராக வழிநடத்தக்கூடும்.