பொது இடங்களில் பாட்டு பாடினால் சிறை தண்டனை!! (மகளிர் பக்கம்)
பிரியா பார்த்தசாரதி, சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இவர் கர்நாடக பாடல்கள் மட்டுமில்லாமல் சினிமா பாடல்களையும் மிகவும் இனிமையாக பாடுகிறார். ‘தமிழ் நாஸ்டால்ஜியா’ என்ற பெயரில் யுடியூப் சேனல் ஒன்றை கடந்த இரண்டு வருடமாக நடத்தி வருகிறார். பொதுவாக யுடியூப் சேனல்கள் என்றால் ஏதாவது ஒரு நிகழ்வு குறித்த வீடியோக்கள் அல்லது சமையல் குறிப்புகள், ரெசிபிகள், உணவகங்கள் பற்றிய தொகுப்புகள்தான் இருக்கும்.
ஆனால் பிரியா வித்தியாசமாக இந்த யுடியூப் சேனலில் ஹிட்டான தமிழ் சினிமா பாடல்கள் குறித்து க்விஸ் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார். சாதாரண வீடியோவாக இல்லாமல் போட்டி பரிசுகள் என்று வழங்குவதால் இவரின் யுடியூப் சேனல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “நான் பிறந்தது சென்னையில்தான். எங்க குடும்பத்தில் நாங்க மொத்தம் ஐந்து பேர். நான்தான் மூத்தப் பெண். எனக்கு இரண்டு தம்பிகள். பள்ளி மட்டுமில்லை கல்லூரியிலும் எப்போதும் நான் தான் முதல் மதிப்பெண் வாங்குவேன். கல்லூரியில் பி.எஸ்.சி ஸ்டாட்டிக்ஸ் படித்தேன். அதை முடித்து விட்டு மணிபாலில் TFA மேலாண்மை கல்வி மையத்தில் எம்.பி.ஏ படித்தேன்.
எம்.பி.ஏவில் நான் கோல்ட் மெடலிஸ்ட். சில காலம் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன், இதற்கிடையில் எங்க வீட்டில் திருமணம் பேசி முடித்தார்கள். என் கணவர் பெட்ரோலிய இன்ஜினியர். அதனால் பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். கிட்டத்தட்ட 17 வருடங்கள் அவரின் வேலை காரணமாக நாங்க வெளிநாட்டில் தான் வசித்து வந்தோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகள் மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகன். வேலூரில் பி.டெக் படித்துக் கொண்டிருக்கிறான். தற்போது நான் சென்னையில் வசித்து வருகிறேன். நான் சென்னைக்கு வரக் காரணம் என் பெற்றோர். அவங்களுக்கு வயதாகிவிட்டது. அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக நான் சென்னைக்கு வந்து விட்டேன். பசங்களும் வளர்ந்துட்டாங்க.
அவங்களின் தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதனால் என் பெற்றோரை கவனித்துக் கொள்ள வந்துட்டேன்’’ என்றவர் தன் யுடியூப் சேனலில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் குறித்து விவரித்தார்.‘‘யுடியூப் சேனலில் வேலைப் பார்க்கும் போது ரொம்பவே ஜாலியா இருக்கும். நான் என்னுடைய சேனலை ஆரம்பித்து முதல் பகுதியினை முடித்த போது, பார்வையாளர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் சொன்ன அந்த வார்த்தை காரணமாகத்தான் எங்களின் போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்க ஆரம்பித்தோம். அவர், ‘சேனல் நல்லா இருக்கு. ஆனால், சும்மா க்விஸ் வைத்தால் போதாது, அவர்களை தொடர்ந்து ஈடுபட வைக்க வெற்றிப் பெற்றவர்களுக்கு சின்னதா ஒரு பரிசு தரணும்.
அப்பதான் பலர் இதில் முழுமையாக பங்கு பெறுவார்கள்’ என்றார். மேலும் அவரே போட்டிக்கான பரிசினையும் வழங்குவதாக கூறி என்னை வாழ்த்தினார். அவர் உதவிக் கரம் நீட்டிய அடுத்த நொடி பலரும் தங்களின் ஆதரவினை தெரிவிக்க முன்வந்தார்கள். உலகம் முழுக்க உள்ள நண்பர்களும் தங்களின் ஆதரவினை முன் வைத்தார்கள். பலர் எங்களை தொலைபேசி மூலமாக அழைத்தும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். எங்களின் இசை சேனல் பல தரப்பு மக்களை அடைந்திருக்கிறது என்று நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப நெகிழ்வா இருக்கு. அது தான் இசைக்கு இருக்கும் அற்புத சக்தி.
எங்க சேனல் பெயர் தமிழ் நாஸ்டால்ஜியா. நாஸ்டால்ஜியா என்றால் பழைய நினைவுகள். அதனால்தான் பழைய தமிழ் சினிமா பாடல்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன். இதற்கு முக்கிய காரணம் குழந்தைப் பருவம். அந்த சமயத்தில் நம்முடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை நினைத்துப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும். அது போல் தான் பழைய பாடல்களை கேட்கும் போது அந்தக் காலக்கட்டம் நினைவிற்கு வரும். இந்த மாதிரி பாடல்கள் மூலம் பழைய நினைவுகளை நினைவு படுத்துவதுதான் இந்த சேனலுடைய நோக்கம். நிறைய சேனல்கள் பாடல் சம்பந்தமா இருக்கு. அதில் நாம எப்படி வித்தியாசப்படலாம் என்று யோசித்தேன்.
ஒரு பாடல் மூலம் பார்வையாளர்களையும் அதில் ஈடுபட செய்ய முடிவு செய்து, 2021 ஜூன் மாதம் ஆரம்பித்தேன். நான் ஆரம்பித்த போது ஜீரோ சந்தாதாரர்கள் தான் இருந்தாங்க. இப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்’’ என்றவர் சேனலில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி குறித்து விவரித்தார். ‘‘வாரத்தில் ஒருமுறை பாட்டு சம்பந்தமாக க்விஸ் போட்டி நடத்தப்படும். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த பாட்டிலேயே இருக்கும். அதை கண்டுபிடிப்பதுதான் இந்த போட்டியின் சிறப்பம்சம். போட்டி மட்டுமில்லாமல் பாடல், இசை மற்றும் வரிகள் குறித்து ஆலோசனையும் செய்வேன். புதிய படம் திரைக்கு வந்தால், அதில் உள்ள பாடல்களின் வரிகளை ஆராய்வேன். இதுபோல் இசை சார்ந்து பல நிகழ்ச்சிகளை என் சேனலில் நடத்திக்கொண்டு வருகிறேன். எனக்கு கர்நாடக சங்கீதம் மீது நிறைய ஆர்வமுண்டு. அதனால் சினிமா பாடல்கள் மட்டுமில்லாமல் கர்நாட சங்கீதத்தில் உள்ள ராகம், பாடல்கள் குறித்தும் ஆலோசனை செய்வேன்.
நான் சுமார் 8 நாடுகளில் வசித்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் தனிப்பட்ட அனுபவங்கள் உண்டு. குறிப்பாக ஈரானில் இருந்த போது அங்கு பொது இடங்களில் யாரும் பாடவே கூடாது. குறிப்பாக பெண்கள் பாடுவதை அவர்களின் சட்டப்படி தடை செய்துள்ளனர். மீறி பொது இடத்தில் பாடினால் அந்த நபரை கைது செய்யலாம் என்ற ஒரு சட்டம் ஈரானில் உள்ளது. அங்கே நான் காரில் பயணிக்கும் போது பாட்டு பாடிக் கொண்டு செல்வது வழக்கம். அந்தக் காரின் ஓட்டுனர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் என்னிடம், ‘நாம் சிக்னலில் நின்றுகொண்டு இருக்கிறோம். பாடாதீர்கள், யாராவது பார்த்தால் கைது செய்திடுவார்கள்’ என்றார். ஒரு பாடல் பாடுவதற்கு கூட உரிமை இல்லாததை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இப்படி கூட ஒரு நாடு இருக்குமா என்று ஆச்சரியப்பட்ட நாடு ஈரான். அதேபோல் நான் கனடாவில் இருந்த போது அது ஒரு வித்தியாசமான அனுபவம். அங்கே கோவிலுக்குச் சென்று பாடுவேன். நிகழ்ச்சிகளில் மேடைக் கச்சேரிகளிலும் பாடுவேன். அங்கு பாட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிதி திரட்டுவதற்காகவும் பாடியுள்ளேன். கனடாவில் நான் தங்கி இருந்த ஊரில் இந்திய குடியிருப்புகள் குறைவு. இருந்தாலும் நாங்க அங்கு பாடுபவர்களுக்காக சிறு குழு அமைத்து மேடைக் கச்சேரிகள் எல்லாம் செய்திருக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் தனிப்பட்ட அனுபவம் உண்டு’’ என்றவர் தற்போது ஆற்றி வரும் பணி பற்றி குறிப்பிட்டார்.
“என்னுடைய தொழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஆலோசகராக பணியாற்றி வருகிறேன். நான் இந்த யுடியூப் சேனல் ஆரம்பிக்கும் முன் ஒரு 5 வருடம் ஆன்லைன் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தேன். அதில் ஆர்டிபிசியல் நகைகளை விற்பனை செய்து வந்தேன். சுமார் எட்டு வருடம் இதில் ஈடுபட்டு வந்தேன். சமூக வலைத்தளங்கள் மூலம் எப்படி பொருட்களை விற்பனை செய்யலாம் என்பதையும் எனக்கு தெரிந்தவற்றை ஆன்லைன் முறையில் தொழில் செய்பவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன், ஆலோசனையும் வழங்க ஆரம்பித்தேன். என்னுடைய வெற்றிக்கு என் குடும்பம் ஒரு முக்கிய பலம். எனக்கு தோன்றும் புதிய முயற்சிகளை முறைப்படுத்துவதில் என் கணவர் மிகவும் உதவியாக இருந்து வருகிறார்.
அவர் எனக்கு எந்தவித தடையும் விதித்தது இல்லை. அதுவே எனக்கான வேலைகளை செய்ய பெரிய சுதந்திரம் கொடுக்கிறது. எதிர்காலதிட்டம் என்று நான் எதையும் பெரியதாக திட்டமிடவில்லை. இதுவரை நான் செய்த ஒவ்வொரு விஷயமும் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாகத்தான் நடந்திருக்கிறது. எனக்கு இசை மேல் குறிப்பா இளையராஜா அவர்களின் இசை என்றால் ரொம்ப பிரியம். அதனால் அவருடன் இணைந்து ஒரு பாடல் பாடவேண்டும் அல்லது அவரின் மேடைக் கச்சேரியில் இடம் பெறவேண்டும் என்பது என்னுடைய ஆசை. எதை செய்தாலும் சிறப்பாகவும் மகிழ்வுடனும் செய்ய வேண்டும்” என்றார் பிரியா பார்த்தசாரதி.