சாதனை சகோதரிகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 56 Second

அம்மா எட்டடி பாய்ந்தா குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழி திருச்சியை சேர்ந்த இந்த சகோதரிகளுக்கு பொருந்தும். 14 வயது நிரம்பிய அக்காவான கியோஷாவும், 12 வயதான தங்ைக சோனாக்‌ஷாவும் படிப்பில் மட்டும் சுட்டிகள் கிடையாது. அவர்கள் இருவருமே ஓவியம், பரதம், ஓட்டப்பந்தயம், ஸ்கேட்டிங், தடகளப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி என கலை மற்றும் விளையாட்டு துறை இரண்டிலுமே பல பரிசுகள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளனர்.

இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் அனைத்து துறையிலும் மிளிர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பங்களை நினைவாக்கிஉள்ளனர் இந்த திருச்சி சகோதரிகள். ‘‘நாங்க இவ்வளவு பரிசுகள் மற்றும் பாராட்டுகள் பெற காரணம் என் பெற்றோர்தான். அவங்க இரண்டு பேருமே எங்களின் ரோல் மாடல்கள். அப்பா காவல்துறையில் பணியாற்றியவர். அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்போது பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தேனி போல் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார். பாசமானவர். அதே சமயம் கண்டிப்புடனும் இருப்பார். அப்பாவைப் பொறுத்தவரை கல்வி முக்கியம்.

அதேபோல் மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம் என்று சொல்வார். அவரும் அப்படித்தான். அதனாலேயே எங்களுக்கும் கலை மற்றும் விளையாட்டு துறை மேல் ஆர்வம் ஏற்பட்டது. அம்மாவிற்கு சமூக சேவையில் ஈடுபாடு அதிகம். பெண்களின் முன்னேற்றம் குறித்து கடுமையாக உழைத்து வருகிறார். அம்மாவை போல் நாங்களும் இந்த சமுதாயத்திற்கு பயன் பெறக்கூடிய அரிய தகவல்களை எங்களின் ‘Eywa Kutties’ என்ற யுடியூப் சேனலில் சொல்கிறோம்.

இந்த சேனலில் உலக செய்திகள், உலக மொழிகள், குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் கதைகள் போன்ற பல சிறப்பான விஷயங்களை கூறுகிறோம். எங்க சின்ன வயசில் பாட்டி நிறைய நன்னெறி கதைகளை சொல்வாங்க. அது மட்டுமில்லாமல் அவங்க 60 வயசிலும் மிகவும் துடிப்போடு இருப்பாங்க. இன்றும் வீட்டு வேலைகளை செய்வாங்க. அழகான குரோஷே வேலைப்பாடுகளை செய்வாங்க.

அவரும் எங்களுக்கு ஒருவித இன்ஸ்பிரேஷன்தான். அவரின் குரோஷே கலையை பார்த்து நாங்க இருவரும் பாட்டிலுக்குள் ஓவியம் வரைய ஆரம்பித்தோம். அப்படியே படிப்படியாக பரதம், ஸ்கேட்டிங் என எங்களுக்கு பிடித்த கலை மற்றும் விளையாட்டு துறையில் ஈடுபட ஆரம்பித்தோம்’’ என்ற இருவரையும் மிகவும் திறமையாக யுடியூப் சேனல் நடந்துவதைப் பார்த்த மதுரை துணை ஆட்சியர் அவர்களை பாராட்டியுள்ளார்.

‘‘என்னதான் பல பாராட்டுகள், பரிசுகள் நாங்க இருவரும் பெற்று இருந்தாலும், அந்த பரிசுகளை பெற பல தடைகளை தாண்டிதான் வரவேண்டி இருக்கு. ஒரு முறை சென்னையில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அப்போது என் கூட ஓடிய சக போட்டியாளர் நான் முன்னால் ஓடுவது பிடிக்காமல் சட்டென்று வேண்டுமென்றே என்னை கீழே தள்ளி விட்டு என்னை நிலைகுலைய செய்து விட்டார். நான் உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்து அவரை முந்தி சென்று பரிசுக் கோப்பையினை எனதாக்கிக் கொண்டேன். அதேபோல் சோனாக்‌ஷாவும் ஒரு முறை ஓட்டப்பந்தய போட்டியில் பங்கு பெறும் நேரத்தில் அவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது.

அம்மாவும் அப்பாவும் ரொம்பவே பயந்திட்டாங்க. டாக்டரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது டாக்டர் அவள் நன்றாக ஓய்வு எடுக்கணும்னு சொல்லிட்டார். ஆனா, அவளோ பிடிவாதமா அடம் பிடித்து ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொண்டாள். காய்ச்சலை மறந்து ஜெயிக்க வேண்டும் என்ற மன உறுதியோடு ஓடி முதல் பரிசினை பெற்றாள். இந்த இரண்டு சம்பவுமே எங்க இருவரின் வாழ்விலும் மறக்க முடியாது.

விளையாட்டு மட்டுமில்லாமல் எங்க இருவருக்குமே ஓவியம் வரைவதில் தனிப்பட்ட ஆர்வமுண்டு. எங்கு ஓவியப் போட்டி நடைபெற்றாலும் நாங்க கலந்து கொண்டு பரிசு பெற்றிடுவோம். படிப்பு மட்டுமில்லாமல் ஓவியப்போட்டி, ஓட்டப்பந்தய போட்டி, தடகளப்போட்டி, பரதம், பாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விருதுகள், கோப்பைகளை பெற வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம்.

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறோம். அடுத்த டார்கெட் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியிலும் முதல் பரிசினை பெற வேண்டும் என்பதுதான். மேலும் எங்களின் யுடியூப் சேனலில் புதிய தகவல்கள், சமுதாய ஒழுக்கம், பண்பாடுடன் வாழ வழிகாட்டும் விஷயங்கள் குறித்து குட்டீஸ்களுக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறோம்’’ என்றனர் கோரசாக சாதனை சகோதரிகளான கியோஷா, சோனாக்‌ஷா இருவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உடல் வேறு… உணர்வுகள் வேறு! (அவ்வப்போது கிளாமர்)