குப்பைக் கிடங்கில்லா கிரகத்தினை உருவாக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 2 Second

தொழில்களிலும், வியாபாரத்திலும் மிகவும் லாபகரமான ஒரு வாணிபம் திடக்கழிவு மேலாண்மை. வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து காய்கறி விற்பனை முதல் அரிய வகை மருந்துகள் கண்டுபிடிக்கும் மருத்துவம், வேதியியல் துறை வரை என அனைத்திலும் மக்கள் தங்களுக்கென ஒரு நிலையை தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்த திடக்கழிவு மேலாண்மை என வரும் போது அதனை கையிலெடுக்க மக்களிடையே ஒரு தயக்கம் இருக்கும்.

அந்த குப்பைகளை வைத்து வெற்றிகரமான ஒரு தொழிலாக மாற்றி அதன் மூலம் பிறருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, திடக்கழிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் குப்பை வங்கியின் நிறுவனர், விருதுநகரை சேர்ந்த ராஜவள்ளி. இவரின் குப்பை வங்கி மற்ற திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது எனவும் இதன் மூலம் நம் நாட்டை குப்பையில்லா நகரமாக மாற்றுவோம் என அவர் எடுத்துக்கொண்ட உறுதியினை பற்றியும் விளக்குகிறார்.

‘‘மற்றவர்களைப் போலவே நானும் ஒரு சாதாரண இல்லத்தரசி. ஒவ்வொரு பெண்ணும் மகளாக, மனைவியாக, சகோதரியாக, தாயாக, மருமகளாக என பல விதங்களில் இந்த சமூகத்தில் வலம் வருகிறார்கள். எங்க வீட்டில் பெண் குழந்தைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என பாரதியாரின் சிந்தனைக்கேற்ப சிறிய வயதிலிருந்து தைரியமாக வளர்த்தார்கள். மேலும் தனக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர் என் அம்மா ஜெயபாரதி.

எனக்கு திருமணமாகி பதிமூன்று வருடங்களாகிறது. சிறுவயது முதல் தற்போது வரை என் தாயின் இந்த எண்ணத்தை நான் தவறவிட்டதில்லை. அதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் எனது மாமியார் மலர்விழி’’ என பேச ஆரம்பித்த ராஜவள்ளி. வேலைக்கு போகும் பெண்கள் வேலை மட்டுமில்லாமல் தங்களின் குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றியும் சிந்திப்பார்கள். ஆனால் ராஜவள்ளிக்கு அதையும் தாண்டி சமூக முன்னேற்றத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அந்த எண்ணம் தான் குப்பை வங்கி உருவாக்க காரணம்.

‘‘முன்னோர் காலத்தில் இருந்தே, திடக்கழிவு மேலாண்மை ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. எகிப்தியன் நாகரீகம், மக்கக்கூடிய உணவுப் பொருட்கள் சார்ந்த குப்பைகளை நைல் நதியில் வீசியது. அது கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாக மாறும் என்ற எண்ணத்தினால் மட்டுமே அவ்வாறு செய்தார்கள். இன்று பிளாஸ்டிக் பொருட்களைக் கூட கடலில் வீசுகிறார்கள். கடல் வாழ் உயிரினங்களுக்கு இது பெரிய ஆபத்தினை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், மக்களுக்கும் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.

என் உறவினர் ஒருவர், பயணம் மேற்கொள்ளும் போது தாங்கள் உண்ணும் பொருட்களின் அனைத்து கவர்கள் மற்றும் உணவுக் கழிவுகளை ஒரு பையில் சேகரித்து குப்பை தொட்டிகளில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். குப்பைகளை சாலைகளில் எறியக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார். அவரின் இந்த செய்கை நாமும் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிகாட்டுகிறது. ஆனால் அதை நாம் யாரும் மதிப்பதில்லை. உதாரணத்திற்கு ‘குப்பைகளை இங்கு வீச வேண்டாம்’ என்ற அறிவிப்பு பலகையின் கீழ் பார்த்தால் குப்பை மேடாக இருக்கும். அதை எல்லாம் பார்த்த பிறகுதான் குப்பைகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த துவங்கினோம்.

2018-ல் 20,000 இளைஞர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நடத்தி இரண்டு கின்னஸ் சாதனைகளை நானும் என் நண்பர்களான சுந்தர் மற்றும் சசிதாரணியும் சேர்ந்து படைத்தோம். அதற்காக இந்தியாவின் பிளாஸ்டிக் மனிதர் வாசுதேவன், என்னையும் எனது நண்பர்களையும் அழைத்து பாராட்டினார். அப்போது அவர் எங்களிடம், ‘எவ்வளவு டன் குப்பைகளை சேகரித்துள்ளீர்கள்’ என்று கேட்டார்.

அதுவரை குப்பைகளை சேகரிப்பது பற்றிய எண்ணம் எங்களுக்கு இருந்ததில்லை. குப்பைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் கல்வி கற்பிப்பது குறித்து தான் நாங்க செய்து வந்திருந்தோம். அவரின் அந்த ஒரு கேள்வி, குப்பைகளை சேகரிப்பது முக்கிய பணி என்ற புரிதலை எங்களுக்குள் ஏற்படுத்தியது. 2019 அக்டோபர் மாதம் RJ என்ற பெயரில் ஒரு குப்பை வங்கியை தொடங்கினோம்’’ என்றவர் குப்பை மேலாண்மை குறித்து விவரித்தார்.

‘‘சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் வாரியாக பிரிக்க வேண்டும். அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தோம். இதன் மூலம் துப்புரவு பணியாளர்களுக்கும் குப்பைகளை சேகரிப்பது எளிமையாக இருக்கும். எங்கள் குப்பை வங்கியின் சிறப்பம்சம் ‘‘யூஸ் அண்ட் ஸ்டோர்‘‘ என்பதுதான். சொந்தமாக தொழில்களை செய்யும் ஒவ்வொருவரும் குப்பை மேலாண்மை தங்களுடைய வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். குப்பை மற்றும் திடக் கழிவுகள் மேலாண்மை போன்ற ஒரு லாபகரமான வணிகம் இதுவரை எதுவும் இல்லை. மேலும் இதன் மூலப்பொருட்கள் அனைத்தும் தெரு முனைகளிலே உள்ளது.

பொதுவாக கழிவு மேலாண்மை நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் கழிவுகளை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி, சுத்தம் செய்கின்றன. மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை புதிதாக தயாரிக்கின்றனர். எங்க வங்கியில் நாங்கள் (Educate, Empowerment, Entertain) என்ற மூன்று E ஃபார்முலாவினை பின்பற்றுகிறோம். எஜுகேட், காகிதக் கோப்பைகள் காகிதத்தால் செய்யப்பட்டவை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. இது மக்காத தன்மைக் கொண்ட சில பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

அதற்கு எவர் சில்வர் அல்லது கண்ணாடிக் கோப்பைகள் சிறந்தது. அடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்று நினைத்து மக்கள் துணிப் பைகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். அது அழுக்காகிவிட்டால் தூக்கி எறிந்து விடுகிறார்கள். துணிப்பைகளை துவைத்து மீண்டும் பயன்படுத்தினால் மட்டுமே பிளாஸ்டிக்கிற்கு சிறந்த மாற்றாக துணி இருக்குமே தவிர பிளாஸ்டிக் போன்று இதனை மறுசுழற்சி செய்ய முடியாது.

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், பாக்கு மர தட்டுகளால் நிலம், நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுகிறது. அதேபோல் சானிட்டரி நேப்கின் மற்றும் டயப்பர்களும் சுற்றுச்சூழலுக்கு ஆரோக்கியமற்றவை. சிறந்த சுகாதார நடைமுறை ரீயுசபில் ேநப்கின்கள் அல்லது மென்சுரேஷனல் கப். இதுபோல பள்ளி, கல்லூரிகள், கிளப்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சென்று கற்பித்து வருகிறோம்.

எம்பவர், சுகாதாரத் தொழிலாளர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டுமே தவிர அவர்கள் கையாளுவதற்கு கீழ்த்தரமான வேலைகளைக் கொடுக்கக் கூடாது. நாங்கள் அவர்களின் வேலையை எளிதாக்கும் கருவிகளுடன் அவர்களைச் சித்தப்படுத்துகிறோம்.

என்டர்டெயின்மென்ட், எந்தவொரு மனிதனுக்கும் விருது கிடைக்கும் போது உற்சாகமாக உணர்கிறார்கள். குப்பைகளை தரம் பிரித்து அதற்கான விலையை கொடுப்பதுடன், சமூக ஆர்வலர்கள் மூலம், தங்களுக்கென ஒரு தனியான தோட்டத்தை அமைக்கவும், அவர்களுக்கு இயற்கையுடன் வாழவும் கற்பிக்கிறோம். இந்த மூன்று E நாளை சுகாதாரமான நாட்டினை உருவாக்க உதவுகிறது. இந்த உலகம் நம்முடைய வீடு. அதை நாமதான் சுத்தமா வைத்துக் கொள்ளணும். எங்க குப்பை வங்கியின் இலக்கு குப்பைக் கிடங்கில்லா கிரகத்தினை உருவாக்குவதுதான்’’ என்றார் ராஜவள்ளி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீரகம் அறிந்ததும் – அறியாததும்!! (மருத்துவம்)
Next post திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)