வருமான வரி கட்டுமளவுக்கு உயர்ந்தேன்!! (மகளிர் பக்கம்)
கொரோனா காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வருமான இழப்பை சமாளிக்க விளையாட்டாக ஆரம்பித்து இன்று கணிசமாக வருமான வரி கட்டுமளவுக்கு பிரபல பெண் தொழில் முனைவோராக உயர்ந்துள்ளார் திருப்பூரை சேர்ந்த சிவமயம் காட்டன்ஸ் உரிமையாளர் வச்சலா.ஃபேஸ்புக் மூலம் சிறிய அளவில் ஆரம்பித்த கதர் சட்டைகள் வியாபாரம் தற்போது கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று இன்று சில லட்சங்களில் அசாதாரணமாக விற்பனையை தொட்டிருக்கிறார் வத்சலா. பெண்கள் நினைத்தால் தொடர்ந்து முயற்சித்தால் எந்த துறையிலும் மிகச் சிறப்பாக சாதிக்கலாம் என்கிறார் வத்சலா.
உங்களுக்கு இந்த தொழிலில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
நான் BA தமிழ் இலக்கியம் முடித்து விட்டு வீட்டில் இல்லத்தரசியாக தான் இருந்தேன். அப்போது கணவர் பவர்லூம் தொழிலில் ஈடுபட்டிருந்தார். கொரோனா காலகட்டத்தில் ஒரு முறை எங்களுக்கு வந்த ஆர்டர்கள் திருப்பியனுப்பப்பட்டது. நாங்க அதில் நிறைய பணம் முதலீடு செய்திருந்தோம். ஆர்டர் கேன்சல் ஆனதால், அதில் முதலீடு செய்த பணம் எங்களுக்கு நஷ்டமானது. அதன் பிறகு என்ன செய்வது என தெரியாமல் தயங்கி நின்றோம். அப்போது தான் திடீரென இந்த ஐடியா எங்களுக்கு தோன்றியது. நாமே நேரிடையாக காட்டன் சட்டைகளை விற்பனை செய்தால் என்ன என்று. அப்போது தான் விழுந்தது சிவமயம் காட்டனின் முதல் வித்து.
ஆன்லைன் விற்பனை உங்களுக்கு எவ்வாறு உதவியது?
முதலில் ஃபேஸ்புக்கில் என் நண்பர்கள் வட்டத்திற்கு மட்டுமே விற்பனை குறித்த தகவல்களை பதிந்திருந்தேன். அதைப் பார்த்து ஒன்று இரண்டு பேர் ஆர்டர் கொடுக்க முன் வந்தார்கள். சிறிய அளவில்தான் ஆர்டர்கள் கிடைத்தது. எங்களின் துணிகள் விலை மலிவாகவும் அதே நேரத்தில் தரமாகவும் இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக தனி ஆர்டர்கள், குரூப் ஆர்டர்கள் என வியாபாரம் அதிகரித்தது. தற்போது முகம் தெரியாத நபர்களிடமிருந்து கூட ஆர்டர்கள் வருகிறது. எல்லாமே இணையதளங்கள் மூலமாகத்தான்.
எந்தெந்த ஊர்களில் உங்கள் வியாபார தளங்கள் விரிவடைந்திருக்கிறது?
தற்போது தமிழகத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் ஆர்டர்கள் வருகிறது. இதைத் தவிர லண்டன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகிறது. அத்தனையும் முகநூல் நண்பர்கள் மூலமாகவும், இணையதள விற்பனைகள் மூலமாகவும் மட்டுமே. தற்போது வீட்டின் கீழ்தளத்தில் ஒரு அறை அமைத்து அதில்தான் எங்களின் பொருட்களை வைத்திருக்கிறோம். ஆர்டரின் பெயரில் உடைகளை அஞ்சல் மூலமாக அவர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்திடுவோம். எங்களிடம் இருக்கும் அனைத்து உடைகளும் மற்றும் லேட்டெஸ்ட் வரவுகள் குறித்து அவ்வப்போது ஆன்லைனில் பதிவு செய்திடுவோம். அதைப் பார்த்து விரும்புபவர்கள் ஆர்டர் கொடுக்க நாங்க அதை அவர்களுக்கு டெலிவரி செய்து வருகிறோம்.
குடும்பத்தின் ஆதரவு?
நிச்சயமாக. என் கணவர் பவுர்லூமில் நெய்யும் துணிகளைதான் வாங்கி அதை வெளியே தைத்து விற்பனை செய்து வருகிறேன். அதன் மூலம் அவருக்கும் தொழில் நன்றாக போய் கொண்டிருக்கிறது. தைத்து வரப்படும் சட்டைகளின் விற்பனை மட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன். சட்டைகள் தைப்பது மற்றும் அயர்னிங் , பார்சல் ஆகியவற்றை வெளியே கொடுத்து வருகிறேன். என் வரவு செலவு கணக்கு வழக்குகளை மகன் பார்த்து வருகிறார். எனது மகள் ஃபேஷன் டிசைனிங் குறித்து மேற்படிப்புகளை வெளிநாட்டில் படித்து வருகிறாள். அவள் படிப்பை முடித்து வந்தவுடன் மேலும் புதிய டிசைன்களை எல்லாம் அறிமுகம் செய்ய இருக்கிறோம்’’ என்கிறார் வத்சலா.
தற்போது சில டி.வி சேனல்களின் சீரியல்களுக்கு கூட சட்டைகளை அனுப்பி வருகிறார். ஒரே மாதிரியான கலர்களில் பல்க் ஆர்டர்களுக்கு சட்டைகளை சப்ளை செய்தும் வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்கள், காலேஜ் கல்சுரல் விழாக்கள் என இவர்களது சட்டைகள் எங்கெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இவர் தனது தொழிலை பெரியதாக விரிவாக்கம் செய்யும் எதிர்கால திட்டத்தினையே தனது கனவாக வைத்திருக்கிறார். மலிவு விலை மற்றும் தரம் இதுவே தனது தாரக மந்திரமாக கருதி அதனை முழு
மூச்சாக பின்பற்றி வருகிறார் வத்சலா.