சாமானியரும் அவசர காலத்தில் மருத்துவம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
ஒருவரின் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய முக்கியமான தருணத்தில் அவரின் உயிரை காப்பாற்ற, அவர்கள் மருத்துவராகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாமானிய மனிதரும் இதனை செய்யலாம். அவர் நம்முடன் பணிபுரிபவர்களாகவும் இருக்கலாம், சாலையில் பயணிக்கும் சக பயணியாகவும் இருக்கலாம், கல்லூரியில் படிக்கும் சக மாணவனாகவும் இருக்கலாம்.
சாலையில் ஏற்படும் ஒரு விபத்தை பார்த்து ஒதுங்கி போகாமல் அவர்களை காப்பாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்பதனையும், அதன் மூலம் வரும் சட்ட ரீதியான பிரச்னைகளையும் எவ்வாறு கையாள வேண்டும் என்று செயல்முறை விளக்கத்தோடான பயிற்சியை அலெர்ட் என்னும் அரசு சாரா அமைப்பை உருவாக்கி கற்றுக் கொடுத்து வருகின்றனர் சென்னையை சார்ந்த கலா பாலசுந்தரம் மற்றும் அவரின் நண்பருமான ராஜேஷ். இவர்கள் தங்களின் அமைப்பு மூலம் அனைத்து அவசர கால சிகிச்சைக்கான பயிற்சியையும் செயல்முறை விளக்கத்துடன் கற்பித்து வருகின்றனர். இத்தகைய அமைப்பினை உருவாக்கி மக்களிடையே இதன் மூலம் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெறுவதற்கு அவர்கள் கடந்துவந்த பாதையினை விளக்குகிறார் ராஜேஷ்.
‘‘கலா பாலசுந்தரமும் நானும் சேர்ந்து 2006ல் உருவாக்கினதுதான் எங்களோட இந்த அலெர்ட் அமைப்பு. நாங்க இரண்டு பேருமே ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்தவங்க. வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல தினமும் நாற்பது கிலோமீட்டர் பயணம் செய்யணும். அந்த பயணத்தில் நாங்க நிறைய விபத்துக்களை கண்கூடா பார்த்திருக்கோம். அதில் விபத்தில் சிக்கிக் கொள்பவர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினரா இருப்பாங்க. ஒரு சிலர் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து நமக்கு எதற்கு வம்புன்னு ஒதுங்கிடுவாங்க. சிலர் ஏதாவது செய்யணும்ன்னு நினைப்பாங்க. ஆனா என்ன பண்ணணும்னு தெரியாது.
சிலர் இது போல விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய போய் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வோம்னு பயப்படுவாங்க. சாலையில் விபத்து குறித்து நிறைய பிரச்னைகள் இருக்கும். அதற்கான தீர்வினை கண்டுபிடிக்கதான் இந்த அமைப்பினை துவங்கினோம். ஆரம்பத்தில் விபத்து நடக்கும் இடங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தோம். தற்போது அனைத்து விதமான மெடிக்கல் எமெர்ஜென்சிக்கும் உடனடி அவசர கால சிகிச்சைக்கு மருத்துவ தீர்வினை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் வழியினை கண்டுபிடிச்சிருக்கோம்.
நகரங்களில் மட்டுமில்லாமல் கிராமங்களில் ஏற்படும் விபத்துக்கள், தேள், பாம்பு போன்ற விஷக்கடிகள் என அனைத்திற்கும் எங்களால் தீர்வினை கொடுக்க முடியும்’’ என்றவர், அவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை கையாளும் விதங்களைப் பற்றி கூறுகிறார்.
‘‘நாங்க எங்க வேலையை ராஜினாமா செய்த போது, பலர் பலவிதமான கேள்வியினை கேட்டாங்க. நிறைய எதிர்ப்புகள் வந்தது. அதையெல்லாம் கடந்து நாங்க ஆரம்பித்த போது, அவசரகால சிகிச்சை குறித்து முறையான பயிற்சி எல்லாம் வெளிநாட்டில் மட்டுமே இருந்தது. மேலும் அந்த பயிற்சி முறைகளை நம் நாட்டில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு ஏற்பதான் பயிற்சி கொடுக்கணும். இதை எல்லாம் தாண்டி இந்த சிகிச்சை முறைகளை சொல்லிக் கொடுத்தாலும் அதை செயல்படுத்தும் போது அதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டால் அதற்கான வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தோம். இதுவரைக்கும் 2.5 லட்சம் பேருக்கு இந்த அவசர கால சிகிச்சை குறித்து பயிற்சி அளித்திருக்கிறோ. மேலும் இந்த சிகிச்சை முறைகளை தொழில் நுட்பம் மூலம் கையாள்வது குறித்து திட்டமிட்டு வருகிறோம். 2011 – 2019ல் குட் சமரிட்டன் சட்டம் (Good Samaritan Law) தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினோம்.
நாம ஒரு நல்ல விஷயம் செய்யும் போது அதற்கான தடைகளும் ஏற்படும். அந்த தடையை நீக்க நாம தொடர்ந்து அதனை செய்ய வேண்டும். நாங்களும் அந்த வழி
முறையைதான் கடைபிடித்தோம். நாளடைவில் எங்களின் அமைப்பு குறித்த வேலைகள் மக்களுக்கும் புரிய வந்தது. எங்களின் சேவையைப் பற்றி தெரிந்து கொண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் பாராட்டினார். அதன் பிறகு எங்கள் முன் இருந்த தடைகள் பனி போல் நீங்கியது. பலர் அவர்களால் முடிந்த உதவியினை செய்ய முன் வந்தார்கள். சென்னையில் தான் எங்களின் மைய அலுவலகம் இயங்கி வந்தது. அதனால் இங்கிருந்துதான் அனைத்து மாவட்டங்களுக்கும் விழிப்புணர்வு, வகுப்புகள், செயல்முறை விளக்கங்கள் கொடுத்து வந்தோம். அதன் பிறகு கோவையில் எங்க அமைப்பினை துவங்கி, அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். பெங்களூரிலும் ஒரு கிளை ஆரம்பித்தோம்.
தற்போது புதுச்சேரியில் துவங்கியுள்ளோம். மேலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அவர்களின் கோரிக்கைகேற்ப சென்று வருகிறோம். எங்களின் சென்னை மற்றும் கோவை இரண்டு அலுவலகத்திலும் சேர்த்து பத்து பேர் முழுநேரமாக வேலை செய்கின்றனர். மேலும் தன்னார்வலர்கள் குறிப்பாக இளைஞர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஒரு விபத்து நடந்து முதல் 15 நிமிடம் கோல்டன் ஹவர்ஸ்னு சொல்லுவாங்க. அதில் பங்கு கொள்ளும் இளைஞர்களுக்காக ‘‘அலெர்ட் கோல்டன் ஆர்மி’’ என்று ஒரு குழுவை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் சென்னையில் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் அதன் பெயரில் ஒரு கோல்டன் ஆர்மி துவங்கியுள்ளோம். இவர்களின் முக்கிய வேலை அவர்கள் இருக்கும் பகுதியில் குறிப்பாக ட்ராபிக் சிக்னலில் விபத்துகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது. அப்படி நேர்ந்தால் உடனடியாக அவசரகால சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்றவர் இந்த சிகிச்சைக்கான பயிற்சி குறித்து விவரித்தார்.
‘‘நாங்க அனைத்து அவசரகால சிகிச்சைக்கான பயிற்சியினை அளிக்கிறோம். இதற்கு செயல் முறை விளக்கம் மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு, விமானிகளுக்கு எப்படி ஒரு விமானத்தை இயக்கணும் என்று அதற்கான வரையறை இருக்கும். அதேபோல்தான் அவசர கால சிகிச்சைக்கும் உள்ளது. இதனை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தான் சொல்லிக் கொடுப்பாங்க. அதைத்தான் நாங்க செயல்முறையில் பயிற்சி அளிக்கிறோம். இதற்கு பின் இருக்கும் முக்கிய நோக்கம், மருத்துவம் படிக்காத ஒரு சாமானிய மனிதன் கூட அவசர காலத்தில் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்பதுதான். பயிற்சியில் சி.பி.ஆர், பேசிக் லைப் சப்போர்ட் பிரின்சிபல்ஸ், ரெக்கவர் பொசிஷன், காமன் மெடிக்கல் எமெர்ஜென்சி, கார்டியாக், ட்ரோமா, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் ரெஸ்க்யூ டெக்னிக்ஸ் அடங்கும்.
இதெல்லாம் தாண்டி ஒருவர் அவசரகால சிகிச்சையில் ஈடுபடும் போது முக்கியமாக தெரிந்திருக்க வேண்டியது தலைமை பண்பு. ஒரு சாதாரண மனிதன் அல்லது ஒரு கடைநிலை ஊழியர் விபத்து ஏற்பட்ட சூழ்நிலையை எவ்வாறு தைரியத்தோடு கையாள வேண்டும் என்பதும் எங்களின் பயிற்சியில் அடங்கும். முழுநேரம் மற்றும் ஆறு மணி நேரம் என்று அவர்களின் வசதிக்கு ஏற்ப பயிற்சியினை எடுத்துக் கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்காக ‘அலெர்ட் அட் ஸ்கூல்’ என்ற பெயரில் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறோம். மேலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு 3 கிரடெட் பாடமாகவும் துவங்க உள்ளோம். தற்போது சென்னை ஐ.ஐ.டியில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. 2030க்குள் ஒரு கோடி மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் டார்கெட். ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த பயிற்சி பெற்ற ஒரு நபராவது இருக்கணும்.
அதற்கு முன்னோடியாக, தற்போது ஒரு புது முயற்சியை எடுத்துள்ளோம். எங்களால் வர முடியாத இடத்தில் அவசர கால உதவி தேவைப்பட்டால், அவர்கள் உடனே (9582044666) இந்த எண்ணை ெதாடர்பு கொண்டால் நாங்க தொலைபேசியில் அதற்கான சிகிச்சை முறையினை விவரிப்போம். இந்த திட்டத்தினை கடந்த மார்ச் மாதம் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் துவங்கி வைத்தார்.
முதற்கட்டமாக இந்த அலைபேசி முறையை ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர் போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் முக்கிய நோக்கம் நாங்கள் இல்லையென்றாலும் மக்களுக்கும் எங்களின் சேவை சென்றடைய வேண்டும் என்பதுதான். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தின் கிராமங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நியாய விலை கடைகள் மற்றும் ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் இந்த தொலைத்தொடர்பு சேவை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக NHM ( National Health Mission Tamil Nadu)க்கு கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார் பெருமையுடன் ராஜேஷ்.