90-களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பொம்மைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 42 Second

குழந்தை பருவம் எல்லோருக்குமே ஸ்பெஷல்தான். திரும்பவும் அந்தக்கால கட்டத்திற்கு போக முடியாத ஏக்கம் எப்போதும் இருக்கும். நம் குழந்தை பருவத்தை பற்றிய நினைவுகள் நம் மனதில் என்றுமே நீங்காமல் இருக்கும். அந்த நினைவுகளை நாம் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கும் கதைகளாக சொல்லி வருகிறோம். அதே போல் தன் குழந்தை பருவத்தில் பார்த்தவற்றையெல்லாம் பொம்மைகளாக செய்து ‘மாயா கிராஃப்ட்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார் வித்யா பிரகாஷ்.

‘‘நான் செய்கிற பொம்மைகள் எல்லாமே என்னோட குழந்தை பருவத்தில் பார்த்தவை. என்னுடைய அந்த வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய பொம்மைகளைதான் நான் செய்கிறேன்’’ என புன்னகையோடு பேசுகிறார் வித்யா பிரகாஷ். ‘‘எனக்கு சொந்த ஊரு கிருஷ்ணகிரி. பல் மருத்துவம் படிச்சிட்டு இரண்டு வருஷம் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு திருமணமாகி கோயம்புத்தூரில் செட்டிலாயிட்டேன். என் கணவருக்கு அமெரிக்காவில் வேலை வந்ததால், சில காலம் அங்கிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கு குழந்தை பிறந்தது. அமெரிக்காவில் வாழ்ந்தாலும், நம்முடைய பூர்வீகம் மற்றும் பாரம்பரியத்தை நம்மால் மறக்க முடியாது.

என்னுடைய குழந்தைக்கும் அது பற்றி தெரிய வேண்டும் என்பதால், என் குழந்தை பருவம் மற்றும் நம் இந்தியாவைப் பற்றி சொல்ல ஆரம்பிச்சேன். என் வாழ்க்கையில் எனக்கு ரொம்ப பிடிச்ச பருவம் என் குழந்தைப் பருவம். நான் 90ஸ் கிட்ஸ் என்பதால், அந்த நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. அதோட நான் பாட்டி, தாத்தா சொன்ன கதைகளை கேட்டு வளர்ந்தவள். அதனாலேயே அந்த கதைகளும் நான் பார்த்த விஷயங்கள் எல்லாமே எனக்குள்ள பெரிய அளவுல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனக்குள் ஏற்பட்ட அந்த தாக்கம் அடுத்த தலைமுறையான என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க விரும்பினேன். என் குழந்தைகளின் ஒரு வயசிற்கு பிறகு நான் கதைகளை சொல்லத் தொடங்கினேன். குழந்தைகளும் நான் கேட்டு வளர்ந்த கதைகளை நல்லாவே புரிஞ்சுகிட்டு கேள்விகள் கேட்பாங்க. நான் சொல்ற கதைகள் எல்லாமே பெரும்பாலும் என்னை மையப்படுத்தி தான் இருக்கும். அதனால நான் சொல்ற கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், கடைகள், இடங்கள், சூழ்நிலைகள் என எல்லாமே அவங்களுக்கு பிரமிப்பா இருந்தது.

அவர்கள் நான் சொல்லும் கதைகளைக் கேட்டு பிரமிப்பாகும் போது, அந்த மாதிரி வாழ்க்கையை அவர்களால் வாழ முடியல, பாக்க முடியலன்னு எனக்குள்ள ஒரு ஏக்கம் இருந்தது. அந்தக் காலத்தில் செல்போன்களே கிடையாது. நான் பார்த்தவை அனைத்தையும் என் நினைவுகளில் தான் பதிவு செய்திருந்தேன். அதை என் குழந்தைகளுக்கு பொம்மைகளாக செய்து காட்டலாம்னு எண்ணம் ஏற்பட்டது. காரணம், ஒரு விஷயத்தை அவர்கள் கற்பனையாக பார்த்ததற்கும் அதையே நாம் வடிவங்களாக காண்பிக்கும் போது அவர்கள் மனதில் எளிதாக பதியும். என் குழந்தைகளுக்காகவே பொம்மைகள் செய்ய கற்றுக் கொண்டேன்’’ என்றவர் 90களில் இருந்த உலகத்தை பொம்மைகளாக கொண்டு வந்த நிகழ்வுகளை பகிர்ந்தார்.

‘‘கடந்த 15 வருடங்களில் இந்த உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் ரொம்ப பெருசு. அந்த மாற்றத்தை இந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவங்க அந்த சூழ்நிலைக்கேற்ப தங்களை பொருத்திக்கிறாங்க. அதனால என்னை மாதிரி 90களில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு ஒரு ஏக்கம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நாங்க பார்த்த மனிதர்கள் அவர்கள் செலுத்திய அன்பு, அரவணைப்பு, அணுகு முறைகள், கள்ளங்கபடமில்லாத மனசு இந்தக் காலத்தில் யாரிடமும் இல்லை. எல்லாமே வியாபார நோக்கங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கு.

நான் பார்த்த தள்ளுவண்டி கடைக்காரர்களிடம் என் தாத்தா, பாட்டி கேலியும் கிண்டலும் செய்து பொருட்களை வாங்குவதும் விற்பதுமா இருப்பாங்க. வீடுகளுக்குள் தகரங்களாலும் கட்டப்பட்ட டீ கடைகள். அந்த கடையிலேயே ஒரு ஓரத்தில இருந்த இட்லி குண்டாக்கள் எல்லாமும் அழிஞ்சு போச்சுனு சொல்லலாம். அந்த ஏக்கம் எல்லாமே எனக்குள்ள இருந்தது. அந்த நேரத்தில்தான் என் மகள் சின்னச் சின்ன பொம்மைகளை செய்வாள். அவளுக்கு அந்த பொம்மைகள் செய்வதற்கு நான் உதவி செய்வேன். அப்படி செய்யும் போது எனக்கும் பொம்மைகள் செய்வது மேல ஆர்வம் வந்தது. குறிப்பாக நாம சொன்ன கதைகளை எல்லாம் ஏன் பொம்மைகளா செய்யக்கூடாதுன்னு கேள்வி எனக்குள் ஏற்பட்டது. அப்படித்தான் நான் பொம்மைகளை செய்ய தொடங்கினேன்.

என் பொம்மைகளுக்கு ‘குயிலிங் பொம்மைகள்’ என பெயர் சூட்டினேன். நான் பொம்மைகள் செய்ய தொடங்கின காலகட்டத்தில் அதிகமா யாரும் பொம்மைகள் செய்யல. அதனால பேப்பர்ல தான் பொம்மைகள் செய்தேன். நான் பார்த்த தள்ளுவண்டி கடைகள், டீ கடைகள் இவற்றை என் கைவண்ணத்தில் பொம்மைகளாக மாற்றினேன். அதைத் தொடர்ந்து நான் பார்த்த மனிதர்களையும் பொம்மைகளாக செய்ய தொடங்கினேன். நான் நினைச்ச மாதிரியே பொம்மைகள் வரத் தொடங்கியது. அந்த பொம்மைகளுக்கு உடைகள் எல்லாமே செய்து வண்ணங்கள் கொடுத்தேன். என் மனசில் நான் பார்த்தவங்க அனைவரையும் பொம்மைகள் வழியா பார்த்தேன்.

நான் செய்த பொம்மைகளை காட்டி என் குழந்தைகளுக்கு கதைகளா சொன்னேன். அவங்க பொம்மைகளை பார்த்து கதைகளைக் கேட்கும் போது நான் சொன்ன கதைகள் எல்லாம் புரிய ஆரம்பிச்சது. அந்த வாழ்க்கையை அவங்க ரசிக்கவும் செய்தாங்க. இது எனக்குள் ஒரு பரவசத்தை கொடுத்தது. நான் செய்த பொம்மைகளை பார்த்த என் நண்பர்கள் எல்லாரும் அவங்களுக்கும் செய்து தரச் சொல்லி கேட்டாங்க. அவங்களுக்காக சின்ன அளவுல பொம்மைகள் செய்ய தொடங்கினேன்’’ என்றவர் பொம்மைகளை எப்படி தயார் செய்கிறார் என்பதை சொன்னார். ‘‘பொம்மைகள் செய்வதற்கு குயிலிங் பேப்பர்களைதான் நான் பயன்படுத்துகிறேன்.

பேப்பர்களிலேயே கெட்டியான பேப்பர், லேசான பேப்பர் என நிறைய வகைகள் உள்ளது. மனித உருவங்கள் செய்ய கெட்டியான பேப்பர்கள் வாங்கணும். அதை நீளமாவும் சின்னச் சின்னதாகவும் வெட்டி ஒரு பேனாவோ அல்லது பென்சில் முனையில வச்சு நெருக்கமா சுருட்டி, பேப்பரோட நடுப் பகுதியை மெதுவா அழுத்தி முக்கோணம் மாதிரியா கொண்டு வரணும். பொம்மையின் உடல், கை, கால்கள் எனத் தனித்தனியாக செய்து எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டினால் உருவம் கிடைக்கும். அதன் பிறகு அதற்கான உடைக்கு லேசான பேப்பர்ல துணி மாதிரி செய்து வெட்டி அந்த பொம்மையில ஒட்டிடணும். அதற்கு மேல் நாம் விரும்பும் வண்ணங்களை உடைகளுக்கு கொடுக்கலாம்.

அடுத்து பொம்மைக்கு கண், இமை, புருவங்கள், உதடு, மூக்கு என எல்லாத்தையுமே வரைய வேண்டும். மனித பொம்மைகளை மட்டுமில்லாம கடவுள் பொம்மைகள், உணவு வகையான பொம்மைகள், புத்தகங்கள், வீடு, விலங்குகள் என எல்லாமே பேப்பர் கொண்டு செய்து வருகிறேன். இவை எல்லாமே தனித்தனியாக செய்யாமல் ஒரு வாழ்வியலா சொல்ற விதமாதான் செய்றேன். உதாரணத்திற்கு குழந்தையை குளிப்பாட்டுவது, பாடங்களை சொல்லித் தருவது, திருவிழா நேரங்களில் சாமி ஊர்வலம், திருமண நிகழ்ச்சி, உணவு வகைகள் என எல்லாமே ஒரு வாழ்வியலை பதிவு செய்வது போலவே பொம்மைகளை செய்து வருகிறேன்.

அதோட நம்மோட திருக்குறள், திருப்பாவை, தேம்பாவணி, திருமுருகாற்றுப்படை நூல்களை இயற்றிய புலவர்களையும் பொம்மைகளாக செய்துள்ளேன். ராமாயணம் கதையினையும் பொம்மைகளாக வடிவமைத்து இருக்கேன். என்னுடைய அனைத்து படைப்புகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். அதை பார்த்து பலர் அவங்களுக்கும் இதேபோல் பொம்மைகள் வேண்டும்னு கேட்க சிறிய அளவில் செய்ய துவங்கினேன். இப்போது இந்த பொம்மைகள் என்னுடைய ெதாழிலாகவே மாறிவிட்டது. நம்முடைய கடந்தகால வாழ்க்கையை பொம்மைகளாக பிரதிபலிக்கும் போது அது எனக்கு மனநிறைவை தருகிறது’’ என்கிறார் வித்யா பிரகாஷ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)