சமூகப் பிரச்னைகளை பேசும் சிறார் இலக்கியம்!! (மகளிர் பக்கம்)
‘‘என்னைப் போன்ற சின்னக் குழந்தைகளுக்கு அக்பர், பீர்பால் போன்ற கதைகள்தான் சொல்லித் தராங்க. அந்தக் கதைகளில் ஆணும் பெண்ணும் சமம்னு எங்கேயும் குறிப்பிட்டு இருக்கிறதா? சமூகப் பிரச்னைகளை பற்றி அந்தக் கதைகளில் பேசுகிறார்களா?’’ என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார் சிறார் எழுத்தாளர் சூடாமணி. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சூடாமணி இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். மேலும் புதிதாக இரண்டு புத்தகங்கள் அச்சில் உள்ளது.
‘‘நான் 9ம் வகுப்பு படிக்கிறேன். பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலிதான். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கிடையாது. வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம். எங்கேயும் போகவும் முடியாத சூழல். அந்த நேரத்தில் நாகநாதன் அவர்கள் டி.வியில் கதை சொல்வார். அவருடைய எல்லா கதைகளும் எனக்கு பிடிக்கும். ரொம்ப சுவாரஸ்யமாக சொல்வார். அதனாலேயே அந்த கதைகள் மேல் எனக்கு ஆர்வம் ஏற்பட ஆரம்பிச்சது. தொடர்ந்து அவரின் கதைகளை கேட்க ஆரம்பிச்சேன். அது மட்டுமில்லாமல் நான் அந்த கதைகளின் உலகத்திற்குள் போக தொடங்கினேன். கதைகளை கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கும் போது, அதைப் படித்தால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும்னு நினைச்சேன்.
அவரின் புத்தகங்களை படிக்க தொடங்கினேன். நாகநாதன் அவர்களின் ‘பசி’ என்ற சிறுகதைதான் எனக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த சிறுகதையில், பசி என்பது ஒரு மனிதனை எந்த மாதிரியெல்லாம் யோசிக்க வைக்க தூண்டுகிறது என்பது குறித்து எழுதி இருப்பார். அதன் பிறகு நான் தொடர்ந்து படிக்க துவங்கினேன். அதில் எனக்கு ரொம்ப பிடித்தது, ‘அறியப்படாத தமிழகம்’, ‘திருநெல்வேலி நீர்’, ‘நிலம்’, ‘மனிதர்கள்’, ‘அன்புக்குரிய யானைகள்’ ஆகிய புத்தகங்கள்.
இதோட பல சிறுகதைகளும் படிச்சேன். நான் படிச்ச கதைகள், அதுல வர்ற கதாப்பாத்திரங்கள் எல்லாமே எனக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கதைகளோட உலகத்துக்குள்ளேயே இருக்க ஆசைப்பட்டேன். அப்படி இருப்பதும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. இந்த கதைகள் எல்லாமே எனக்கு பலவிதமான கற்பனைகளை உருவாக்குச்சு. அந்தக் கற்பனைகளை கொண்டு நானும் ஒரு கதை உலகத்தை உருவாக்க விரும்பினேன்.
எனக்குள் தோன்றிய கதைகளை எழுத்து மூலம் நிகழ்காலத்துக்குள் கொண்டு வந்தேன். கொரோனா காலகட்டம் என்பதால் எனக்கு எழுத நேரம் கிடைச்சது. தினமும் எழுதி என்னோட கற்பனை உலகத்தில் நீந்த தொடங்கினேன். ஒரு கதையை எழுதி முடிப்பேன். உடனே அடுத்த கதைக்கான கரு என்னுள் தோன்றும்’’ என்றவர் தன்னுடைய கதைகள் குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘நம் திறமைகளை தெரிந்து கொள்வதற்கான தீர்வு புத்தகங்கள்தான். நமக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லித்தர பயன்படுத்தப்பட்ட ஒரு மீடியம்தான் புத்தகம். ஒருத்தர் தங்களோட உணர்வுகளை கவிதை, பாடல்கள், இலக்கியம், கதைகள் என பல விதங்களில் வெளிப்படுத்துவாங்க. அந்த மாதிரி எனக்கு தெரிஞ்ச, நான் உணர்கிற ஒரு விஷயத்தை சொல்ல பயன்படுத்தியது புத்தகத்தைதான். சின்ன வயசில் இருந்தே எனக்கு ஆதி வள்ளியப்பன், எஸ்.பாலபாரதி, புதுமைப்பித்தன், தொ.பரமசிவன் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் படிச்சிருக்கேன். இயற்கை மற்றும் சமூகம் சார்ந்தும் எனக்கு நல்ல புரிதல் இவர்களின் கதைகள் வழியா எனக்கு கிடைச்சது.
அதோட சின்ன வயசிலேயே புத்தகம் எழுதத்தொடங்கினதால என்னை சிறார் இலக்கியவாதின்னு அழைக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, சிறார் இலக்கியங்களில் சமூகம் சார்ந்தோ அல்லது ஆண், பெண் சமத்துவம், இயற்கை பற்றிய கதைகள் இருக்காது. அதனால் நான் அந்த மாதிரி கதைகள் எழுத தொடங்கினேன். என்னோட முதல் புத்தகம் ‘அம்மாவை தேடி’ என்ற பெயரில் சிறுகதை தொகுப்பு வெளியானது. அந்த புத்தகம் இயற்கை, விலங்குகள், சமூகம் சார்ந்து எழுதினேன். மொத்தம் 12 கதைகள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. அதில் ‘செருப்பு’ என்கிற கதையை எழுதிய போது, என்னால், அந்தக் கதையின் உலகத்தை விட்டு வெளியே வரவே முடியல. அந்தக் கதை மிகப்பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. ஒருவரின் உருவத்தை வச்சு மதிப்பிடாம
திறமையை வச்சுதான் அளவிடணும்னு அதில் எழுதி இருந்தேன்.
புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய ‘கடவுளும் கந்தசாமியும்’ என்ற கதையும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேேபால், ‘நானும் கடவுளும்’ என்கிற பெயரில் நான் ஒரு கதையினை எழுதினேன். கொரோனா காலத்தில் என் வீட்டிற்கு கடவுள் வந்தா நான் அவரிடம் என்னவெல்லாம் பேசுவேன் என்பதை கற்பனைக் கதையாக எழுதி இருந்தேன். அந்த புத்தகம் வெளியானதும் பலர் எனக்கு வாழ்த்து சொன்னாங்க. அதனைத் தொடர்ந்து ‘ஏன் எப்படி எப்போது’ என்ற தலைப்பில் அறிவியல் மற்றும் இயற்கை சார்ந்த புத்தகம் ஒன்றை எழுதினேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது.
அது எனக்குள் நிறைய எழுதணும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது பள்ளிக்கூடம் பழைய படி இயங்க ஆரம்பித்து விட்டது. அதனால் விடுமுறை நாட்களில் மட்டும் தான் நான் கதைகளை எழுதுகிறேன். தொ.பரமசிவன் அவர்கள் எழுதிய ‘அறியப்படாத தமிழகம்’ புத்தகத்தை வாசிச்சதும், மண் சார்ந்த விஷயங்கள் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என் சொந்த ஊரான திருநெல்வேலியின் வரலாறு, மக்கள் குறித்து எழுதி வருகிறேன்’’ என்று கூறும் சூடாமணி ‘பாரதி பைந்தமிழ் சுடர்’ விருதுடன் மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.