ரீ யூசபிள் நாப்கின் தயாரிப்பில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 2 Second

பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு சரியான மாற்று துணி நாப்கின்கள்தான். இதை புரிந்துகொண்டு களமிறங்கி இருக்கிறார் சர்வதேச மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை நீலாவதி. இதன் மூலமாக சில மாற்றுத்திறனாளிகளுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

மாதவிடாய் சமயத்தில் துணிகளை பயன்படுத்திய பெண்களுக்கு வரப்பிரசாதமாக அறிமுகமானதே சானிட்டரி நாப்கின்கள். ஆனால் இவை சுகாதாரமற்ற முறையில் அப்புறப்படுத்தப்படுவதுடன், பொறுப்பற்ற முறையில் சாக்கடைகளிலும் கால்வாய்களிலும் வீசப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, இந்த சானிட்டரி நாப்கின்கள் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு, சில ரசாயனங்களும் இதில் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து இதை பயன்படுத்துவதால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி மெடல்களை வாங்கிக் குவித்தவர் பாரா ஸ்போர்ட்ஸ் வீராங்கனை நீலாவதி. இவர் மறுசுழற்சி செய்யப்படும் காட்டன் ‘நாப்கின்’ தயாரிப்பில் கடந்த 7 ஆண்டுகளாக இருக்கிறார்.

அவரிடம் பேசியதில்…

‘‘திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் ஆவாரம்பட்டி என்கிற குக்கிராமம் என்னுடையது. நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. சாட்புட், ஜாவ்ளின், டிஸ்கஸ், பேஸ்கெட்பால் போன்ற பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் இருக்கிறேன். பாரா ஏசியன் விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும், சில நாடுகளுக்கும் பயணித்திருக்கிறேன். அப்போது டென்மார்க் நாட்டிற்கு நான் விளையாடச் சென்றபோது இந்த ரீ யூசபிள் காட்டன் பேடை நான் தங்கியிருந்த ஹோட்டலில் பயன்படுத்தக் கொடுத்தார்கள். எனக்கு இது ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது. இதை நம் மாநிலத்திற்கும் கொண்டு வந்து பெண்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே அப்போதைய என் எண்ணமாக இருந்தது.

பெங்களூரில் இயங்கும் RIM (Rejuvenate India Movement) அமைப்பு மூலமாக டென்மார்க் நாட்டில் இருந்து வந்து எனக்கு ரீ யூசபிள் பேட் தயாரிப்புக்கான பயிற்சி வழங்கினார்கள். மேலும் பெங்களூரில் இயங்கி வருகிற Stonesoup மற்றும் RIM என்கிற இரண்டு தன்னார்வ அமைப்புகளுடன் எனது கனிஷ்கா கார்மென்ட்ஸ் இணைந்து ரீ யூசபிள் க்ளாத் நாப்கின் தயாரிப்பில் இருந்து வருகிறேன். கூடவே நெகிழியை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டமாக இருக்கிறது.

15 மெஷின்களோடு கட்டிங், ஸ்டிச்சிங், குவாலிட்டி செக்கிங், பேக்கிங் என எனது யூனிட் செயல்படுகிறது. என்னோடு இணைந்து மாற்றுத் திறனாளிகள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், தனித்து வாழும் பெண்கள் என மொத்தம் 11 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு பீஸ் ரேட்டில் ஊதியம் தருகிறேன். ஒருநாளைக்கு 350 வரை இவர்களுக்கு வருமானமாக கிடைக்கிறது. மாற்றுத்திறனாளிகளில் சிலர் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வேலைக்கு வருவதால், மாவட்டக் கலெக்டர் மூலமாக 3 சக்கர ஸ்கூட்டர்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் இந்த ரீயூசபிள் க்ளாத் பேடை பெங்களூருக்கு மொத்தமாக அனுப்பி வைத்து விடுவோம். அவர்கள் அங்கிருந்து பிற மாநிலங்களுக்கும், வெளி
நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அனுப்புகிறார்கள். இது தவிர்த்து மாஸ்டர் டிரெயினராக பிற மாநிலங்களுக்கும் பயணித்து ரீயூசபிள் பேட் தயாரிப்பு பயிற்சியை பெண்களுக்கு வழங்கி வருகிறேன். இதற்காகவே மும்பை, குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட பத்து மாநிலங்களுக்கும் துபாய், சார்ஜா, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்திருக்கிறேன். மிகச் சமீபத்தில் மும்பையில் உள்ள சில மலைவாழ் மக்களுக்கு தயாரிப்பு பயிற்சியினை வழங்கினேன்.

எங்களின் தயாரிப்பு பேட்கள் வெயிட்லெஸாக இருப்பதுடன், எந்த நிலையிலும் லீக் ஆகாதவாறு பாதுகாப்பாகவே தயாராகிறது. பேடில் உள்ள சென்டர் லேயர்கள் டர்க்கி துணியால் தயாராகிறது. இந்தத் துணிகளை டென்மார்க் நாட்டில் இருந்து வரவழைக்கிறோம். இது பயோவாஷ் செய்த துணி என்பதால் ரீ யூசிற்காக சுத்தம் செய்வது ரொம்பவே சுலபம். மேலும் பேடின் ஈரத்தன்மை விரைவில் உலரும் தன்மையோடு, அவுட்டர் லேயர் காட்டன் பனியன் துணியால் உருவாகிறது.

இந்தத் துணி சூரத்தில் இருந்து வருகிறது. 100 வாஷ் வரை இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். பேடின் அடிப்பாகத்தை வாட்டர்புரூஃப் முறையில் லேமினேட் செய்வதால் லீக்கேஜ் சுத்தமாக இருக்காது. பெண்கள் தங்கள் கை பைகளில் வைத்து எடுத்துச் செல்வதற்கு ஏற்ப சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்டு, ஒரு பாக்ஸில் 4 பேட்கள் இருக்கும். எங்கள் யூனிட் மூலமாக ஒரு மாதத்தில் ஆயிரம் பாக்ஸ்கள்வரை தயார் செய்கிறோம். இதனை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதுடன், எங்கள் தயாரிப்பு ஆன்லைனிலும் கிடைக்கிறது.

மாதவிடாய் சுகாதாரம் குறித்த தெளிவு பெண்களிடம் சுத்தமாகவே இல்லை. துணி உபயோகப்படுத்தினால் நாட்டுப்புறத்தனமானது என்றும், நாப்கின் பயன்பாடு
நவீனத் தன்மை கொண்டதாக இளம் பெண்கள் விளம்பரங்களை பார்த்து நம்புகிறார்கள். கடைகளில் கிடைக்கும் சானிட்டரி நாப்கின்கள் 90 சதவீதமும் பிளாஸ்டிக்கால் தயாரானது. இதில் சோடியம் பாலி அக்ரோலைட் என்னும் அதிவேக உறிஞ்சு பாலிமர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வேதிப் பொருளால் பிறப்புறுப்பில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படும். மேலும் நாப்கினை வெண்மைப்படுத்த குளோரின் கொண்டு பிளீச் செய்கிறார்கள். இதில் டையாக்சின் என்கிற வேதிப்பொருள் வினையாற்றுகிறது. இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்றைய சூழலில் 12 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துகின்றனர். சிறு வயதிலிருந்து நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தவிர்த்து சானிட்டரி நாப்கின்களால் சுற்றுச்சூழலும் சீர்கெடுகிறது. நாளொன்றுக்கு 90 ஆயிரம் கிலோ குப்பைகள் நாப்கின் மூலமாக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. பெருநகரங்களில் குப்பைகளில் வீசப்படும் நாப்கின்களை கையாள்வதிலும் சிக்கல்கள் நிறைய உள்ளது. நிலத்தில் கொட்டப்படும் சானிட்டரி நாப்கின்கள் தானாக மக்குவதற்கு 500 முதல் 800 ஆண்டுகள் வரைகூட ஆகலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இவற்றை எரிப்பதாலும் காற்று மாசு ஏற்படுகிறது.

இந்தியாவில் சுமார் 35.5 கோடி பெண்களின் மாதவிடாய் சுழற்சியில், ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக உபயோகித்து தூக்கி எறியும் மாதவிடாய் நாப்கின்களின் எண்ணிக்கை 10,000க்கும் கூடவோ குறையவோ இருக்கலாம். எனில் எவ்வளவு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு 10 பிரமிடுகளை எழுப்பலாம் என்கிறது ஒரு ஆய்வு.பருத்தி நாப்கினுக்கு மாறுவதில் பெண்களுக்கு ஆரம்பத்தில் சில சங்கடங்கள் இருந்தாலும் பிறகு எளிதாகவும் வசதியாகவும் மிக முக்கியமாக ஆரோக்கியமாக இருக்கிறது’’ என்கிற நீலாவதி, தான் தயாரிக்கும் துணி நாப்கின்கள் ரசாயனங்களற்றது, மறு பயன்பாட்டிற்கு உகந்தது என்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் மட்டும் என்னுடைய ரீ யூசபிள் நாப்கினை ஆயிரம் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர் என கட்டைவிரல் உயர்த்தியவர், ஒரு மாதத்தில் 4000 துணி நாப்கின்களை நாங்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். இவை மக்கும் தன்மை கொண்டவை என்பதால், சுமார் 2,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் சேர்வதை நாங்கள் தடுக்கிறோம்’’ எனப் புன்னகைக்கிறார் பாரா ஸ்போர்ட்ஸ் வீராங்கனை நீலாவதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள்!! (மருத்துவம்)
Next post சமூகப் பிரச்னைகளை பேசும் சிறார் இலக்கியம்!! (மகளிர் பக்கம்)