ஒரு தெய்வம் தந்த பூவே! (மருத்துவம்)
‘பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற…’
‘‘எல்லாப் பேறுகளிலும் முதன்மையான பேறு நன்மக்களைப் பெறுவதே” என்கிறார் வள்ளுவர்.ஒரு தாய் கருவுற்ற செய்தியை முதலில் கணவனிடம் சொல்லும் போது அந்த ஆண் அடையும் சந்தோஷத்தை அளவிட முடியாது. ஒட்டு மொத்த குடும்பமும் அக்குழந்தையை வரவேற்க தயாராகிவிடும்.
மகிழ்ச்சிக் கடலில் திளைக்கும் பெற்றோர் ஒரு குழந்தை பிறக்கும் போது கூடவே தாங்களும் பிறக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள், பானங்கள், தின்பண்டங்கள் அவர்கள் சாப்பிடும் நேரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நம் சமூகம் அவர்களின் மனநலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. முந்தைய கூட்டுக்குடும்பங்களில், கருத்துச் செறிவான தாலாட்டுப் பாடலில் தொடங்கி பண்பாடு, கலாச்சாரம், நீதி, நேர்மை, வீரம், ஈகை போன்றவற்றை வெளிப்படுத்தும் கதைகள், குழந்தைகளின் விளையாட்டு, வீட்டு வேலைகளில் பகிர்வு என அனைத்து செயல்களிலும் குழந்தையின் பெற்றோர் மற்றும் வீட்டுப் பெரியவர்கள் தங்களுடைய பகிர்வையும், பங்களிப்பையும் அளித்தனர்.
அதனால் குழந்தைகள் உளவியல் ரீதியாக உடல்நலத்தோடு, மனபலத்தையும் பெற்றனர். இன்று காலச் சூழலால் கூட்டுக் குடும்பம் மாறி தனிக் குடும்பம் உருவாகியுள்ளது. அன்பும், அரவணைப்பும் கற்றுக் கொடுத்த கூட்டுக் குடும்பம் குறைந்து விட்டதால், இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பெற்றோரின் அதிகமான பங்களிப்பு தேவைப்படுகிறது. அதிலும், இன்றைய சூழலில் பெண்களும் வேலைக்குச் செல்வதால், அவர்களுக்கு குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. கிடைக்கும் நேரத்தையும் கணினி, அலைபேசி, தொலைக்காட்சியும் எடுத்துக் கொண்டுவிடுகின்றன.
காலத்தே செய்யாத காரியத்தால் எந்தப் பயனும் இல்லை. கிடைக்கும் நேரத்தில் குழந்தைகளின் மனநிலை அறிந்து தகுந்த பகிர்வையும், பங்களிப்பையும் கொடுத்தால் பாதுகாப்பான சூழலை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். இதற்கெல்லாம் பெற்றோர் தங்களை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னரே ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வேன்.
குழந்தையின் முதல் பகிர்வு தாயின் கருவறையிலேயே தொடங்கி விடுகிறது என்பதற்கு ஆதாரமாக, தாயின் கருவிலேயே நாராயணனின் பெருமைகளை நாரதமுனி மூலம் கேட்ட பக்த பிரகலாதன் பின்னாளில், நாராயண பக்தன் ஆன கதையை நாம் அறிவோம். இதனையே, கருவிலேயே ஒரு குழந்தைக்கு கேட்கும் திறன், உணரும் திறன் உள்ளது என்பதை அன்று கதையாக சொன்னதை இன்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே குழந்தை வளர்ப்பு பற்றிய இத்தொடரை கர்ப்ப காலத்திலிருந்தே தொடங்கலாம் என நினைக்கிறேன்.
“இன்றைய சூழலில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை” என்று கூறும் மனநல மருத்துவர் வசந்த் அவர்கள், குழந்தை வளர்ப்பில் மனநல முக்கியத்துவத்தைப் பற்றி, ‘குங்குமம் தோழி’ வாசகர்களுக்காக இத்தொடரில் நமக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்.
“ஒட்டு மொத்த குடும்பமுமே குழந்தை பிறப்பை சந்தோஷமாக எதிர்பார்த்திருக்கும் வேளையில், ஒரு தாய்க்கு சந்தோஷம் மட்டும் அல்லாது மன அழுத்தத்தையும் கூட்டி வரும்” என்று சொன்னால், நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். ஆம், கர்ப்பமான செய்தியை உறவுகளுக்கு சொல்லலாமா? வேண்டாமா? நான் இந்த சந்தோஷத்தை முழுவதும் அனுபவிக்காமல் போய்விடு
வேனா என்பதில் தொடங்கி, இந்த கர்ப்ப காலத்தில் அம்மா, அப்பா இருவருக்குமே மனநல ரீதியிலான பிரச்னைகள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது.
உயிரியல் ரீதியாக ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களினால் தாய்க்கும், புதிதாய் வரவிருக்கும் பொறுப்புகள், குடும்ப விரிவாக்கம், பொருளாதார ரீதியிலான மாற்றங்கள் மற்றும் வரவிருக்கும் வாழ்வியல் மாற்றங்களினாலும் கூட தந்தைக்கும் மன அழுத்தங்கள் ஏற்படுகின்றன. சந்தோஷமான இந்த தருணத்தில் எங்கிருந்து மனநலப் பிரச்னைகள் வரும்? முரணாக இருக்கிறதே என்று கேள்வி எழும். இது சந்தோஷம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இது போன்ற மன அழுத்தங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் ஒரு விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும்.
என்ன மாதிரியான மனநலப் பிரச்னைகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள்?
பதட்டம் (Anxiety)
சாதாரணமாக எல்லோருக்குமே இந்த சூழலில் பதட்டம் வரக்கூடும் என்றாலும், அதுவே கவலைக் கோளாறாக (Anxiety Disorder) மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. சாதாரணமான கவலையாக இல்லாமல் கர்ப்பத்தை பற்றிய சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் கூட தன்னால் ஈடுபட முடியாமல் இந்த பதட்டம் வருகிறதென்றால், இது பதட்டக் கோளாறு நோய்க்கான அறிகுறி. பொதுவாக கர்ப்பகால ஆரோக்கியம் சார்ந்த கவலை. தன்னுடைய குடும்ப அமைப்பு மற்றும் குடும்பப் பொருளாதார நிலை எப்படி மாறப்போகிறது போன்ற கவலைகள் இவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும். இதை எப்படி கட்டுப்படுத்தலாம்?
முதலில் ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுடைய துணையுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ மற்றும் உங்கள் மகப்பேறு மருத்துவரிடமோ உங்களுடைய கவலைகளை பகிர்ந்து கொள்ள முன்வரவேண்டும். உங்களுடைய பதட்டத்தின் அளவு, நீங்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு மற்றும் சூழல்களுக்கு அதிக பதட்டமடைகிறீர்கள் என்பதை வெளிப்படையாக பேசி அவர்களின் ஆலோசனையை கேட்பதன் மூலம் பதட்டத்தை குறைத்துக் கொள்ளலாம். இது தவிர கர்ப்ப காலத்தில் செய்யக்கூடிய ஆழ்மூச்சுப்
பயிற்சி, யோகா அல்லது கர்ப்பகால பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பதட்டத்தை குறைத்துக் கொள்ளலாம்.
மன அழுத்தம் (Depression)
மனஅழுத்தத்திற்கு, உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் வேண்டுமானால் புதிய காரணமாக இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கக்கூடிய பொருளாதார பிரச்னைகள், பணியிட அழுத்தம் போன்றவை கூட இவர்களுடைய மனஅழுத்தத்தை அதிகரிப்பதற்கான காரணிகளாகலாம். உடற்பயிற்சி, எட்டு மணிநேர ஆழ்ந்த உறக்கம், நல்ல ஊட்டச்சத்தான உணவு எடுத்துக் கொள்வதோடு, குடும்பத்தோடு அல்லது கணவன், மனைவி சேர்ந்து செய்யக்கூடிய ஏதாவது ஒரு செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், குழந்தை வளர்ப்பு என்பது இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை. கணவனுக்கும் மனஅழுத்தம் வருவதற்கான சாத்தியம் இருப்பதால் இருவரும் இணைந்து செய்யக்கூடிய பயிற்சிகள் அல்லது இருவரும் பகிர்ந்து செய்யக்கூடிய வேலைகளில் ஈடுபடலாம்.
வெறித்தனமான கட்டாயக் கோளாறு (Obsessive Compulsive Disorder (OCD)
அதிக சுத்தம், அதிலும் குறிப்பாக கொரோனா காலத்திற்குப்பிறகு, யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது, எல்லாவற்றையும் அடிக்கடி அலம்புவது, வெளியாட்கள் வந்து சென்றால் அல்லது வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்தால் குளிப்பது, எப்போதும் கை, கால்களை அலம்புவது, பொருட்களை அடிக்கடி துடைப்பது என்று மிகவும் சுத்தம் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பிறக்கப்போகும் குழந்தையை பற்றிய அதீத எண்ணங்கள் இவை எல்லாமே வெறித்தனமான கட்டாயக் கோளாறு (Obsessive Compulsive Disorder (OCD) நோய்க்கான அறிகுறிகள். இதற்கும் மூச்சுப்பயிற்சி, மனவளக்கலைப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து வெளிவரலாம்.
உடல் உருமாற்றக் கோளாறு (Body Dismorpic Disorder)
குறிப்பாக இன்றைய இளம் தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகு தன் எடை கூடிவிடுமா? முன்பு போல் தன் உருவம் இல்லாமல் மாற்றம் அடைந்துவிடுமோ? அழகாக இருக்கமாட்டோமா? பிரசவத் தழும்புகள் வந்துவிடுமே என தங்களுடைய உடலின் வெளித் தோற்றத்தைப் பற்றி அதிக கவலைப்படுபவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணங்கள் தோன்றுவதால் நான் தவறான தாயாக இருக்கிறேனோ? உங்களுடைய உடலைப் பற்றிய இந்த கவலைகள் இயல்பானதே.
இந்த மாற்றங்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உடல் எடை குறைவதற்கான பயிற்சிகள், தழும்புகளுக்கு கிரீம்கள் என தீர்வுகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. உருவம் பற்றிய மனஅழுத்தம் உடையவர்கள் தங்களுடைய சந்தேகங்களை ரெகுலராக காண்பிக்கும் தங்களுடைய மகளிர் மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.
கணவன்-மனைவி உறவுப் பிரச்னை (Relationship Issues)
இந்த கர்ப்பத்தினால், முன்பைவிட தங்களுக்குள் நெருக்கம் இல்லாமல் போய்விட்டதோ திருமண வாழ்வில் நமக்கான முக்கியத்துவம் முன்பு போல் குறைந்து விட்டதோ போன்ற எண்ணங்கள் இருவருக்கும் தோன்றும். இந்த மாதிரியான பாதுகாப்பற்ற எண்ணங்கள் தோன்றும்போது இருவரும் இந்த ஒன்பது மாதங்களான கர்ப்ப காலத்தை தங்களுடைய நெருக்கத்தை மேலும் வளர்த்துக் கொள்ளும் நேரமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இப்போதெல்லாம், கணவன், மனைவி இருவரும் பங்கேற்கக்கூடிய கர்ப்பகால வகுப்புகள், யோகா வகுப்புகள் போன்றவற்றை நடத்துகிறார்கள். அதில் இணைந்து பயிற்சி எடுக்கலாம். இருவரும் தங்களுடைய பாதுகாப்பற்ற உணர்வுகளை வெளிப்படையாகப் பேசி தீர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி பூங்கா, கேளிக்கைகளுக்கு செல்லலாம். அல்லது மூன்று, நான்கு நாட்கள் சுற்றுலாத்தளங்களுக்கு சென்று தங்கி வரலாம். மேலே சொன்ன மனப் பிரச்னைகள் வழக்கத்தைக் காட்டிலும் எல்லை மீறுவதாகவோ, தங்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாகவோ உணர்பவர்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகுவது அவசியம்.
குழந்தையை எதிர்நோக்கும் பெற்றோர்களுக்கு இரு தரப்பு குடும்பத்தின் ஆதரவு அமைப்பு மிகவும் முக்கியம். கூட்டுக் குடும்பத்தில் சாதகம், பாதகம் இரண்டுமே உண்டு. அனுபவத்தில் முதிர்ந்த பெரியவர்களின் ஆலோசனைகளையும், உதவிகளையும் இந்த நேரத்தில் தயங்காமல் கேட்டுப் பெறும் தம்பதிகளுக்கு இது ஒரு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். அதே நேரத்தில் தம்பதிகளுக்கான தனிமை தேவைப்படும் என்பதை உணர்ந்து அவர்களுக்கான நேரத்தையும் அவர்கள் ஒதுக்கித் தரவேண்டும்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலக அழுத்தத்தையும் எதிர்கொள்ள நேரிடும். இவர்கள் முன்பு இல்லாவிட்டாலும் கர்ப்பத்திற்குப் பிறகாவது, வேலை மற்றும் வீடு இரண்டிற்குமான சமநிலையை கையாளக் கற்றுக் கொள்வது மிக முக்கியம். இரண்டிற்கும் சமமான நேரத்தை கொடுக்கும் போது எளிதில் கடந்து விடலாம்.
இறுதியாக, தற்போது கணவன்-மனைவி ஒற்றுமை என்பது மிகக் குறைவு. சமூக அழுத்தத்திற்காகவோ, உறவினர்கள், பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவோ குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்காமல், கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த பின்னும் இருவரும் எந்தெந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்? எவற்றையெல்லாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்? தங்களால் இதை பொருளாதார ரீதியாகவும் மற்ற அம்சங்களையும் அமர்ந்து அலசி ஆராய்ந்த பின்னர், தங்களுக்குள் உறவை பலப்படுத்திக் கொண்ட பின்னரே ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆக முடிவெடுக்க வேண்டும்.
ஏனெனில், பண்படுத்திய நிலத்தில் நல்ல விதை விதைத்து, தேர்ந்த பயிர் விளைவிப்பது போல கருவிலிருந்து குழந்தைகளின் மனதில் நல்ல பகிர்வுகளை பெற்றோர் உருவாக்கினால் எதிர்காலத்தில் அவர்களிடம் நல்ல விளைவுகளை உருவாக்க முடியும். குழந்தை என்னும் கட்டுமானம் சிதையாது, சிதறாது வலுவாக இருப்பதற்கு தாய் ஆணிவேராகவும், தந்தை அச்சாணியாகவும்
செயலாற்ற வேண்டும். இந்தப் புரிதல் இருந்தால் கர்ப்பகாலத்தையும் சரி, குழந்தை வளர்ப்பிலும் சரி இரண்டையும் பெற்றோர்கள் எளிதில் கடக்கலாம்.