டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)
வேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி ஒன்று எதற்கோ கத்தியதற்கு நீதான் கூறினாய் அம்மணி அதற்குத்தான் கத்துகிறது என…- வா.மு.கோமு
மிலனுக்கு வெளிநாட்டு கால்சென்டரில் வேலை. அவனுடைய நண்பர்கள் பலரும் தோழிகளுடன் அடிக்கடி ஹோட்டல், பீச், தியேட்டர் என சுற்றினார்கள். ‘ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள டேட்டிங் போகிறோம்’ என்றார்கள். மிலனுக்கு மட்டும் சரியான தோழி அலுவலகத்தில் கிடைக்காததால் வருந்தினான். அந்த நேரத்தில்தான் மும்பை அலுவலகத்தில் இருந்து மாறுதல் கேட்டு சென்னைக்கு வந்தாள் தியா.
அவளது அழகைப் பார்த்த மிலன் முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டான். அவளது நட்பை பெற பலவழிகளில் முயன்று கடைசியில் வென்றான். தியாவுக்கும் மிலனை பிடித்து இருந்தது. விடுமுறை நாள் ஒன்றில் காபி ஷாப்பில் சந்தித்துப் பேசலாம் என போன் செய்தாள் தியா. மிலன் அவள் வரும் முன்பே சென்று காத்திருந்தான். அவளுக்கு எப்படியோ தன் மீது காதல் வந்துவிட்டது என நினைத்து மகிழ்ந்தான். காரில் வந்து இறங்கி ஒய்யாரமாக நடந்து வந்த தியா, மிலனைப் பார்த்ததும் சந்தோஷமாக கட்டி அணைத்தாள்.
தியா தன் மீது காதல் கொண்டிருப்பதாக நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அவளது கன்னங்களில் மாறி மாறி முத்தம் கொடுத்தான். இதை எதிர்பார்க்காத தியா, அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு, அங்கிருந்து கோபத்துடன் கிளம்பினாள். டேட்டிங் சென்ற இடத்தில் எதனால் இவ்வாறு பிரச்னை வருகிறது? டேட்டிங் அவசியமா?ஆணும் பெண்ணும் நமது சமூகத்தில் பழகிக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. நண்பர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசிப் பழகி, அடுத்த கட்டமான காதல் செய்வதற்கு டேட்டிங் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது எப்படி?
சினிமாவில் வருவது போலவே ‘டேட்டிங் சென்றவுடன் காதலியை கட்டிப்பிடிக்கலாம்… முத்தம் கொடுக்கலாம்’ என நினைக்கக்கூடாது. சரியான புரிதல் இல்லாத பட்சத்தில் இப்படி செய்தால், அது இருக்கும் உறவையும் முறித்துவிடும். யதார்த்தமாக மட்டுமே பழக வேண்டும். ‘நான் இப்படி அப்படி’ என வீண் ஜம்பம் பேசக்கூடாது. குறிப்பாக பொய் சொல்லக்கூடாது. அடுத்த முறை நீங்கள் வெளியே கூப்பிட்டால் இவரோடு போகலாம் என்னும் நம்பிக்கையை உங்கள் காதலிக்கு ஏற்படுத்த வேண்டும். காதலி பேசுவதையும் முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்த விஷயத்தை மட்டுமே பேசி காதலியை சலிப்படைய செய்யக்கூடாது. துணைக்குப் பிடித்த விஷயங்களை தெரிந்து கொண்டு அதை பேசி உற்சாகம் அடையச் செய்ய வேண்டும். டேட்டிங் போகும் நேரத்தில் ஃபேஸ்புக் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் பிசியாக இருப்பது போன்ற விஷயங்களைச் செய்யக்கூடாது.காதலிக்கிறவர் மேல் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். பழக ஆரம்பித்த உடனே ‘ஐ லவ் யூ’ சொல்லக்கூடாது. அப்படி எடுத்தவுடன் அணுகுவது ‘இவர் செக்ஸுக்குதான் நம்மிடம் பழகுகிறாரோ’ என்ற பயத்தை ஏற்படுத்தும்.
சினிமாவில் மட்டும்தான் எடுத்த எடுப்பிலேயே காதலை சொல்ல முடியும். நிஜ வாழ்வில் நன்கு பழகிய பின் மட்டும்தான் காதலை சொல்வதே சரியாக இருக்கும்.பல முறை டேட்டிங் சென்றபின்தான் ஒருவருக்கொருவர் புரிந்து, ஒத்திசைவான மனநிலை ஏற்படும். அதுவரை பொறுமையாக இருப்பது அவசியம். ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது விலையுயர்ந்த பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒவ்வொரு சந்திப்பின் போதும் அப்படியான பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைக்காதீர்கள். ரோஜாப்பூ மாதிரி எளிய பரிசுகளை அன்புடன் கொடுத்து மகிழலாம்.
அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்றால் சரியாக பேச முடியாது. அதே நேரத்தில் கூட்டம் இல்லாத அநாதரவான இடத்துக்கு காதலியை கூட்டிச் செல்வதும் பாதுகாப்பானது கிடையாது. மிதமான கூட்டம் உள்ள காபி ஷாப், டிரைவ் இன் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். டேட்டிங்கில் காதலி கட்டிப்பிடிப்பதையோ, முத்தம் கொடுப்பதையோ அன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் சலுகையாக எடுத்துக் கொண்டு எந்தத் தவறான காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதுதான் இருவரிடையே உறவை வளர்க்கும்.