நரகத்திலிருந்து ஓர் அழைப்பு! (அவ்வப்போது கிளாமர்)
சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது! கூடவே விளம்பரங்கள்… ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை சக்திக்கு கேரண்டி!’… ‘எங்கள் மாத்திரைகள் நீடித்த உடலுறவுக்கு உத்தரவாதம்’ சுரேஷை சுண்டியிழுக்கும் விளம்பரங்கள். அவருக்கு உடலுறவில் எந்தப் பிரச்னையும் இல்லை. சீக்கிரம் ‘வேலை’(!) முடிந்துவிடுகிறதே என்கிற வருத்தம் மட்டுமே.
ஒருநாள் க்ரீம் விளம்பரம் ஒன்றைப் பார்த்தார். ‘இதை ஆண்குறியில் தடவிக்கொண்டால் இரவு முழுவதும் சோர்விருக்காது. இனிக்க இனிக்க இன்பத்தை அனுபவிக்கலாம்’ என்றார்கள். கிறங்கிப் போனார் சுரேஷ். நிகழ்ச்சியில் குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்து ஆர்டர் கொடுத்தார். அந்த க்ரீம் கூரியரில் வந்தது. அன்று இரவு, மனது முழுக்கக் கற்பனைகளுடன் க்ரீமைத் தடவிக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றார். சில நிமிடங்களிலேயே ஆண்குறியில் அரிப்பும் நமைச்சலும் தொடங்கிவிட்டது.
பிறகு, ஆண்குறி வீங்கி, தாங்கமுடியாத வலி! சுரேஷ் நள்ளிரவில் மருத்துவரைத் தேடி ஓட வேண்டியதாகிவிட்டது. இவரைப் போலத்தான் பலரும் போலி விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறார்கள்.‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’வின் விதிகளின் படி மருத்துவர்கள் விளம்பரம் கொடுக்கக்கூடாது. எந்த நோயாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டு, ‘முழுமையாகத் தீர்க்கிறோம்’ என உத்தரவாதம் கொடுக்கக்கூடாது.
தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கிறார் என்றாலே அவர் முறையாகப் படிக்காத, அங்கீகரிக்கப்படாத மருத்துவர் என்று அர்த்தம். இன்னொரு தவறான பிரசாரத்தையும் சில போலி மருத்துவர்கள் செய்கிறார்கள். ‘ஆங்கில மருத்துவத்தில் பக்க விளைவுகள் உண்டாகும்… எங்கள் மூலிகை மருத்துவத்தில் ஏற்படாது’ என்கிறார்கள். ‘எந்த வினைக்கும் அதற்கு சமமான எதிர்விளைவு உண்டு’ என்கிறது நியூட்டனின் மூன்றாவது விதி. அது போல எந்த மருந்துக்கும் பக்க விளைவு உண்டு. பக்க விளைவு ஏற்படுத்தாத மருந்து எவ்விதமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.
ஒரு முறையான மருத்துவர் நோயாளியை நேரடியாகப் பரிசோதித்த பிறகே மருந்து கொடுக்க வேண்டும். டி.வி. மூலமோ, போன் மூலமோ உரையாடிவிட்டு வைத்தியம் சொல்லக்கூடாது. ‘ஒரு மனிதனின் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறியாமல் சிகிச்சை அளிப்பவனை திருடன்’ என்று ‘சரக சம்ஹிதா’ ஆயுர்வேத நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ‘நோய்க்கான காரணத்தைக் கண்டு பிடிக்க மருத்துவர் பிரக்ருதி (Physiology), விக்ருதி (Pathology) இரண்டையும் அறிய வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படிச் செய்தால் மட்டுமே முறையான சிகிச்சையை அளிக்கமுடியும்.
காரணம் தெரிந்துகொள்ளாமல் சிகிச்சை அளிப்பது விஷத்தின் தன்மையை சரிபார்க்க அதைக் குடித்துப் பார்ப்பதற்கு சமமானது. மருத்துவர் நோயாளிகளின் குறைகளைக் கேட்க வேண்டும். பிறகு உடல் பரிசோதனை, தேவைப்பட்டால் ஆய்வுக்கூட பரிசோதனையும் செய்ய வேண்டும். மனரீதியாக பிரச்னை இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து அதற்கும் சிகிச்சை தர வேண்டும். நோயாளிக்கு எந்த மருந்து கொடுத்தால் பக்க விளைவு ஏற்படாது என்பது மருத்துவருக்குத் தெரிய வேண்டும். பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
முறையாகப் படிக்காத மருத்துவர்கள் தரும் பொடிகளில், லேகியங்களில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அந்தப் பொடிகளில், லேகியங்களில் வலுவான உலோகங்கள் (Heavy metals) கலந்திருக்க வாய்ப்புள்ளது. அவை சிறுநீரகம், கல்லீரலை பாதித்துவிடும். சிலருக்கு மூளையைக்கூட பாதிக்கலாம். உடலில் எந்தப் பிரச்னை என்றாலும் முறையான, படித்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது. போலி மருத்துவர்களின் பின்னால் ஒருபோதும் ஓடாதீர்கள். அது வட்டிக்கு ஆசைப்பட்டு முழுப்பணத்தையும் இழப்பதற்குச் சமம்.