இது மகரந்தச் சேர்க்கை அல்ல! (அவ்வப்போது கிளாமர்)
தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த மருத்துவர்… விஷயம் அறிந்தவர்… தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்னை? கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டிருக்கிறார் மனைவி. மழுப்பலான பதிலைச் சொல்லி சமாளித்திருக்கிறார் கணவர்.
உண்மை ஒருவழியாக மனைவிக்குத் தெரிந்தபோது நிலை குலைந்து போனார். கணவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர். அந்த அதிர்ச்சியும் மண வாழ்க்கை வீணாகிப் போன மன உளைச்சலுமே தன் தற்கொலைக்குக் காரணம் என கடிதத்தில் எழுதியிருந்தார். அவர் தற்கொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்கட்டும். பொதுவெளியிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும்கூட இது தொடர்பான விவாதங்களே நடந்து வருகின்றன…
ஓரினச் சேர்க்கை சரியா, தவறா?
இது இந்திய சமூகத்தில் தவறாகப் பார்க்கப்படுகிறது. இபிகோ 377 சட்டப்படி சிறைத் தண்டனைக்குரிய குற்றம். இதனால்தான் வெளியில் சொல்ல முடியாமலும் குடும்பத்துக்குப் பயந்தும் திருமணம் செய்துகொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் அவதிப்படுகிறார்கள். சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளாததுதான் பிரச்னைகள் ஏற்படக் காரணம். 1978ம் ஆண்டு வரை மருத்துவ உலகம் இதை மனநோய் என்றே கருதியது. பிறகுதான் இதுவும் இயற்கையானதே என ஏற்றுக்கொண்டது.
நிறைய நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அனுமதித்து விட்டார்கள். ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூட அனுமதிக்கிறார்கள். நம் நாட்டிலோ இது குறித்து அறியாமையும், பயமும், நிறைய சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன. சிலர் வித்தியாசமான குணங்களுடன் பிறப்பார்கள். சிலர் இடது கைப் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அது போல ஓரினச் சேர்க்கையும் சிலரின் இயல்பாக இருக்கும்.
ஜீன்களில் ஏதாவது பிரச்னை என்றாலும் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது தாயின் செக்ஸ் ஹார்மோனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் இப்படிப்பட்டவர்களாக மாற வாய்ப்புள்ளது. அம்மா மீது பையனுக்கு ஏற்படும் வெறுப்போ, அப்பா மீது மகளுக்கு ஏற்படும் வெறுப்போ எதிர் பாலினத்தின் மீதான வெறுப்பாக மாறிவிடுகிறது. அவர்கள் காலப்போக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகக் கூடும். 10 பேர் ஒன்றாக இருக்கிறார்கள்… அவர்களில் 8 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றால் மற்ற இருவரும் அப்படியே மாறிவிடுகிறார்களாம். இதை ‘Peer Influence Theory’ என்கிறார்கள்.
இந்தக் கருத்துகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எந்தக் காரணத்தால் இப்படியான ஈர்ப்பு வருகிறது என்பது இன்னும் தெள்ளத் தெளிவாக அறியப்படாததாகவே இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களில் பலரும் படித்த அறிவாளிகள், புத்திசாலிகள், திறமைசாலிகள். அவர்களால் சமூகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மற்றவர்கள் உணர வேண்டும். அவர்களும் சாதாரண மனிதர்களே. அவர்களைப் பார்த்து அச்சப்பட தேவையில்லை. அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை குற்றமாகக் கருதவும் தேவையில்லை. ஒருவேளை இந்த உறவு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டால் வெளியில் சொல்லாமல் மறைப்பதால் வரும் பல உளவியல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.