வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)
காலத்தில் அதிக விளைப்பொருட்கள் பெறுவதும் அதை உரிய நேரத்தில் சந்தைப்படுத்தி லாபமீட்டுவதும் விவசாயின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதாகும். புதிய ரகப் பயிர்கள் ஆய்வுப்பூர்வமாக விவசாயிகளுக்கு உதவுகின்றன. அத்தகைய பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. உதாரணத்திற்கு ஐந்து ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி ஆண்டுக்கு 125 முதல் 150 தேங்காய்கள் காய்க்கும். தென்னை மரங்களை பராமரிக்கும் விவசாயிகளின் கடன் தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வங்கிகள் காலத்திற்கு ஏற்றவாறு கடன் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துகின்றன.
கடன் அளவு நிர்ணயம்
வங்கிகள் கடன் திட்டங்களை அறிவித்தாலும் எவ்வளவு தொகை கடன் வழங்கலாம் என்று நிர்ணயித்துள்ளன. ஒரு விவசாயி தனக்கு தேவையான பணத்தை உடனே கடனாகப் பெற பல நிபந்தனைகள் உள்ளன. ஒரு ஏக்கர் பயிரிடத் தேவையான இடுபொருட்கள், பயிரிடும் முறை, பயிர் வளர் நேரம், பராமரிப்புச் செலவு, சந்தைப்படுத்த ஆகும் காலம் மற்றும் அதற்குரிய செலவு ஆகியவற்றின் அடிப்படையில் நிதி அளவை மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தீர்மானிக்கின்றன. மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழுவில் மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், முன்னணி விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் முன்னணி வங்கிகள் உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர். இந்தக் குழு ஆண்டுக்கு ஒரு முறை கூடி, ஒவ்வொரு பயிருக்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கு எவ்வளவு நிதி ஆதாரம் தேவை என்பதை முடிவு செய்யும்.
மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு, மாவட்டக் குழுவால் வழங்கப்பட்ட நிதியளவை மதிப்பாய்வு செய்து, அதிகரித்தோ அல்லது குறைத்தோ அங்கீகரிக்கிறது. இவற்றைச் சார்ந்து தான் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன் நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளின் நில உரிமை, பயிரிடும் நில அளவிற்கு ஏற்ப அளவீடுகள் அமைகின்றன. ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலம் கொண்டவர்கள் குறு விவசாயிகளாகக் கருதப்படுகிறார்கள். ஒரு ஹெக்டேருக்கு மேல் (2.5 ஏக்கர்) மற்றும் இரண்டு ஹெக்டேர் (5 ஏக்கர்) வரை நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள். இவர்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை அளிக்கின்றன.
கடன் அளவும் மானியமும்
வங்கிகள் வழங்கும் விவசாயக் கடனுக்கு, மாநில அரசின் மானியம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டால்தான் கிடைக்கக்கூடிய கடன் மற்றும் திருப்பச் செலுத்த வேண்டிய தொகையினை கணக்கிடமுடியும். நாட்டின் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதோடு, விவசாயிகளையும் ஊக்கப்படுத்ததான் மானியங்கள் வழங்கப்படுகின்றன. விவசாயம் இயற்கைச் சூழலைச் சார்ந்திருப்பதால் அவர்களுக்கு எட்டு வகையான மானியங்கள் வழங்கப்படுகின்றன.
விதை மானியம்
அதிக மகசூல் தரும் விதைகள் அரசு சார்பில் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சிலவற்றை இலவசமாகவே வேளாண்துறை வழங்குகிறது. தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மூலம் எண்ணெய் வித்துக்கள் மானியமாக வழங்கப்படுகின்றன. வளமான விதைகளை உருவாக்க அதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
உரம் மானியம்
குறைந்த விலையில் ரசாயன அல்லது ரசாயனமற்ற உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. உர உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு அதனைப் பெற்று சலுகை விலையில் வழங்குகிறது. விவசாயி வழங்கும் விலைக்கும் உர உற்பத்தியாளர் நிர்ணயிக்கும் விலைக்கும் இடையே உள்ள தொகையை அரசே செலுத்துகிறது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தேவையான அளவு உரங்கள் கிடைப்பதற்கும் அரசு உதவி செய்கிறது.
நீர்ப்பாசன மானியம்
நீர்ப்பாசன மானியத்தின் கீழ், சந்தை விலையைவிட குறைந்த விலையில் அரசு நீர்ப்பாசன சேவைகளை வழங்குகிறது. இது பாசன உள்கட்டமைப்பிற்கான அரசின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கும் விவசாயிகள் செலுத்தும் பாசனக் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசமே நீர்ப்பாசன மானியம்.
மின்சார மானியம்
விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை குறைத்து அரசு பெற்றுக் கொள்வதோ அல்லது இலவசமாக வழங்குவது இந்த சலுகையின் அளவீடு. பம்ப் செட், ஆழ்துளை கிணறுகள், குழாய் கிணறுகள், சொட்டுநீர்ப் பாசன வழித்தடங்கள் மற்றும் பிற நீர்ப்பாசன முறைகளில் முதலீடு செய்ய விவசாயிகளை வங்கியும் அரசும் ஊக்குவிக்கின்றன.
ஏற்றுமதி மானியம்
விவசாயிகளுக்கு உலகச் சந்தையில் போட்டியிட உதவுகிறது. இது ஏற்றுமதியைத் தூண்டுவதற்காக வழங்கப்படும் நிதிச் சலுகைகள். ஏற்றுமதி செய்யக்கூடிய விளைப் பொருட்களை அதிக அளவில் தரமுடன் விளைவித்து சந்தைப்படுத்தும் விவசாயிகள் வங்கிக் கடன்கள் மற்றும் அரசின் மானிய உதவியின் மூலம் பயன் பெறுகின்றனர்.
கடன் மானியம்
விவசாயிகள் வங்கிக்குச் செலுத்தும் வட்டியின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது. உதாரணத்திற்கு தங்க நகைகளை அடமானம் வைத்து விவசாயப் பயன்பாட்டிற்காக பெறும் கடனுக்கு 7% வட்டி வங்கியால் வசூலிக்கப்படும்போது அரசு 3% சதவிகிதத் தொகையை குறிப்பிட்ட வங்கிக்குச் செலுத்துகிறது. இதன் அடிப்படையில் 4% வட்டி விவசாயிகள் செலுத்தினால் மட்டும் போதும்.
வேளாண் உபகரணங்கள் மானியம்
வேளாண்மை இயந்திரமயமாக்குதல் துணைத் திட்டம், ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய பணிகளுக்காக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் மானியமாக வழங்கப்படுகின்றன.
விவசாய உள்கட்டமைப்பு மானியம்
விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு நல்ல சாலைகள் அமைத்தல், சேமிப்பு வசதிகள் பராமரித்தல், தடையில்லா மின்சார வசதி, சந்தை நுண்ணறிவுப் பெருக்கமும் பயன்பாடும், துறைமுகங்களுக்கு போக்குவரத்து வசதி போன்றவை அவசியம். இந்த வசதிகளை அரசு ஏற்படுத்தித் தருவதற்கு பெருமளவு தொகை மத்திய, மாநில அரசுகளின் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகிறது.
மானிய அளவீடுகள்
அரசு வழங்கும் மானியத் தொகை குறித்து தெரிந்து கொள்ள கிராமத்தில் உள்ள அரசு வேளாண்துறை / தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்குச் சென்று கேட்டு தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் வங்கிக்கடன் மற்றும் அரசு வழங்கும் மானியம் மறுபுறம் என்று குறைந்த வட்டியில் விவசாயி கடன் பெற்று விவசாயம் செய்து, பொருட்களை சந்தைப்படுத்தி அதிக வருமானம் பெறமுடியும். உதாரணமாக கத்தரி, மிளகாய் போன்ற காய்கறி பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.50000 செலவாகும் என்றால் இதில் ரூ.20000 மதிப்புள்ள குழித்தட்டு நாற்றுகள் மற்றும் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களும் அரசின் வேளாண்துறையால் மானியமாக வழங்கப்படுகின்றன.
மாங்காய் சாகுபடி, அடர் நடவு முறையில் ஹெக்டேருக்கு ரூ.9800 மானியமும், கொய்யா சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.17600/- மானியமும், திசு வளர்ப்பு முறையில் வாழை சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.37,500/- மானியமும், எலுமிச்சை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.13,200/- மானியமும் கிடைக்கிறது. பழப் பயிர்களுக்கு நான்கு ஹெக்டேர் வரை நடவு செய்ய மானியம் பெறலாம். மலர்களை பயிரிட இரண்டு ஹெக்டேர் வரை மானியம் கிடைக்கும். குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகை பதிவு செய்த விவசாயிகளும் அரசு மானியம் பெற தகுதியுண்டு. பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்களை வட்டார தோட்டக்கலை / வேளாண்துறை அலுவலகத்தில் மானியம் பெற விண்ணப்பத்துடன் வழங்கி பதிவு செய்ய வேண்டும். மானிய அளவீடுகள் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.
நெபார்டு (NABARD) வங்கி வழங்கும் மானியம்
ஊரகப்பகுதிகளில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியை பெருமளவு மேம்படுத்த நிதிச்செயல்பாடுகளால் உதவத் துவக்கப்பட்டது வேளாண்மை மற்றும் தேசிய வளர்ச்சிக்கான ஊரக வங்கி – நெபார்டு (National Bank for Agriculture and Rural Development – NABARD). கிராமப்புற வங்கிகளின் நிதித் தேவைகளுக்கு குறைந்த வட்டியில் நெபார்டு கடன் வழங்குகிறது. விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசியச் சட்டம் 1981ம் ஆண்டு முன்மொழியப்பட்டு 1982 ஜூலை 12ம் தேதி இந்த வங்கி உருவாக்கப்பட்டது.
நெபார்டு வங்கி வழங்கும் மானியங்கள் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த பெருமளவு உதவுகின்றன. மாட்டுப் பண்ணை அமைக்க ரூ.6 லட்சம் வரை வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நெபார்டு வங்கி கடன் வழங்குகிறது. விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகிய பயனாளிகள் நெபார்டு வங்கித் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இரண்டு முதல் பத்து மாடுகள் வரை வாங்கி வளர்க்கலாம். இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 25% மானியம் பெறலாம்.
தாழ்த்தப்பட்டோருக்கு 33.33% மானியம் கிடைக்கும். கன்றுக்குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்றுக்குட்டிகள் வரை வாங்கி வளர்க்கலாம். இதற்கு ரூ.5.30 லட்சம் வரை கடன் பெறலாம். பால் கறக்க மற்றும் குளிரூட்டும் இயந்திரம் வாங்க ரூ.20 லட்சம் வரை கடன் கிடைக்கும். பால் குளிரூட்டி அதை எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ.26.50 லட்சம் வரை கடன் பெறலாம். பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு அமைக்க ரூ.33 லட்சம். தனியார் கால்நடை மருத்துவமனை அமைக்க கடன் பெறலாம். இதில் நடமாடும் மருந்தகத்திற்கு
ரூ.2.60 லட்சம் கடனாக வழங்கப்படுகிறது.
பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்ய ரூ.1 லட்சம் கடன் பெறலாம். ரூ.1 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் பங்குத்தொகை செலுத்தத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10% செலுத்த வேண்டும். இந்தக் கடன்களை வணிக வங்கிகள், கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள், நெபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் பெறலாம்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் திட்ட அறிக்கையை தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும். கடனின் முதல் தவணை வழங்கியதும் நெபார்டு வங்கியை அணுகி உரிய மானியம் பெறலாம். இரண்டு மாதங்களுக்குள் மானியம் கோரி நெபார்டு வங்கியில் நெபார்டு கடன் மானியத் திட்டத்தின் மூலம் கடன் அனுமதித்த வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். கடன்களை மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்குள் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட தவணைகளில் திருப்பச் செலுத்த வேண்டும்.
நெபார்டு வங்கியின் திட்டப்படி விவசாயி அல்லது புதிதாக விவசாய வர்த்தக வணிகத்தை தொடங்குபவர்கள் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த தொகை அக்ரி கிளினிக், அக்ரி வணிக மைய திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடனுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியுள்ளவர்களுக்கு நெபார்டு வங்கி இணை வங்கிகளின் மூலம் கடன் வழங்கும். ஐந்து நபர்கள் கொண்ட குழுவாக கடன் பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 36% மானியமும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு 44% மானியமும் வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
* விண்ணப்ப படிவம்
* இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
* ஓட்டுநர் உரிமம்/ ஆதார் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை/ பாஸ்போர்ட். ஏதாவது ஒரு அடையாளச் சான்று.
* தகுதிவாய்ந்த அதிகாரிகளால் முறையாக சான்றளிக்கப்பட்ட பயிரிடும் இடம் (பட்டா /சிட்டா – சொந்தமான நிலமா அல்லது குத்தகைக்குப் பயிரிடுபவரின் சான்றுகள்
* கால்நடைகள் வாங்க என்றால் கொட்டகை அமைக்கும் இடம் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுத்ததற்கான சான்று.
* விவசாய / கால்நடை வளர்ப்புக்கான அனுபவ சான்று மற்றும் திட்ட அறிக்கை.
* இது தவிர வங்கியின் அட்டவணைப்படி நிர்ணயித்துள்ள வேறு ஆவணங்கள்.
வட்டி / கட்டணங்கள்
நிர்ணயிக்கும் வட்டி மற்றும் கட்டணம் அரசு மற்றும் இந்திய ரிசெர்வ் வங்கி ஆகியவற்றின் கட்டளைக்கு ஏற்ப அவ்வப்போது மாறுபடும். எவ்வளவு பணம் திருப்பச் செலுத்தப்படுகிறதோ அதற்கான வட்டி குறையும். இந்த வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது. மிகக்குறைந்த வட்டியை வங்கிகள் நிர்ணயித்து கடன் வழங்குகின்றன. கடன் தொகை ரூ.50000/- வரை செயலாக்க கட்டணம் கிடையாது. அதற்கு மேல் என்றால் வங்கி நிர்ணயிக்கும் செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும்.
சொத்து அடமானம் மற்றும் பிணையம்
வங்கிக் கடனிலிருந்து உருவாக்கப்பட்ட சொத்தினை கடன் தொகைக்கான முதன்மை அடமானமாக வங்கி ஏற்கும். கடன் தொகை ரூ.10 லட்சத்திற்கும் மேல் என்றால் பிணையம் தேவை. அடமானமாக வைக்கப்படும் சொத்து, அரசு பதிவாளர் அலுவலகத்தில் வங்கியின் பெயரில் கடனுக்கான காரணம் மற்றும் தொகை குறிப்பிடப்பட்டு அடமானப் பத்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். அரசின் சிறப்புத் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்பட்டிருந்தால் கடனாளி நிர்ணயிக்கப்பட்ட சலுகைகளை பெற முடியும். வங்கியிடமிருந்து கடன் அனுமதிக் கடிதம் கிடைத்தவுடன் விண்ணப்பதாரர் வங்கியின் கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.