மனவெளிப் பயணம்!!! (மருத்துவம்)
இன்றைய தலைமுறையில் இருக்கும் பலரிடமும் உளவியல் பற்றிய கேள்விகள் கேட்கும் போது, தெளிவான கருத்துகளை அப்படியே அச்சுபிசகாமல் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான சிகிச்சையைப் பற்றி பேசும்பொழுது மட்டும், “அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை” என்று மேம்போக்காக கடந்து போகிறார்கள். இன்று பலருக்கும் தகவல்கள் அனைத்தையும் திரட்டும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அந்த தகவல்களை வைத்து தங்களுக்குள் நிகழும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களை புரிந்துகொள்ளும் திறன் தான் குறைவாக இருக்கிறது. உணர்வுக்கும், அறிவுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியைப்பற்றி அவர்களுக்கு தெரியாமலேயே சுவர் எழுப்பிக்கொண்டே உளவியல் பற்றி பேசுகிறார்கள்.
அதனால் தான் யாராவது தங்களை மென்டல், பைத்தியம், லூசு என்று கூறும் போது எல்லாம் அளவுக்கு அதிகமான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வார்த்தைகளை பார்த்து பயப்படும் சூழலைத்தான் உருவாக்கி வைத்திருக்கிறது என்று நம்முள் இருக்கும் நம்பிக்கைகள் இன்னும் அழுத்தமாக தனக்குத்தானே உச்சரித்துக் கொண்டே இருக்கிறது. “மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பா” என்று அநேகம் பேர் கூறுவார்கள். ஆனால் அதற்கு சிகிச்சை எடுக்கப் போறேன் என்று கூறும் நபர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைவு. எங்கே தன்னை சரியாக சிந்திக்கத் தெரியாத நபராக அடையாளப்படுத்தி விடுவார்களோ என்ற அதீதகற்பனை தான் இங்குள்ள குழப்பத்திற்கு காரணமாக இருக்கிறது.
உண்மையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை ஆபத்தானவர்களா என்று கேட்டால், ஆபத்தானது என்பதை விட மனநோயாளி உடன் இருக்கும் ஒவ்வொரு நபரும் வாழ்க்கையின் வெறுமையினை உணரும் அளவுக்கு, கூட இருக்கும் நபர்களின் மனமும் நிலைகுலைந்து இருக்கும்.ஒருத்தர் இரவு ரெண்டு மணி போல் போன் செய்து அழுதுகொண்டே பேசினார். என்ன விஷயம் என்று கேட்டால், ஒரு வருஷமாகவே தன்னோட பையன் நடத்தையிலும், சிந்திக்கும் முறையிலும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் வெளியே சொன்னால் மனநல ஹாஸ்பிடலுக்கு அழைத்து போக கூறி விடுவார்களோ என்று பயந்து, நானே பேசி சரி செய்து விடலாம் என்று நம்பினேன். ஆனால் இன்று அனைத்தும் தன்னுடைய கை மீறி போய்விட்டது என்று அழுகையுடன் பேசி முடித்தார்.
மனநலம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டுமென்றால் சமூகமும், குடும்பமும் இணைந்து மனநோய் பற்றிய விழிப்புணர்வும், நோயாளிகளை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் மனநோயால் பாதிக்கப்படும் அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது என்பதும் நம் சமூக மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இவை மூன்றும் முக்கியத் தூணாக இருந்து, தொடர்ந்து களநடவடிக்கையில் இருக்க வேண்டும் என்று மருத்துவக் குழுவைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் நம் ஊரிலோ யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனநிலை தான் இருக்கிறது. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே வன்முறை செய்கிறவர்கள் என்றும், சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்றும் மூட நம்பிக்கைகளுடன்தான் இருக்கிறார்கள்.மேலே சொன்ன நபர், அவரின் மகனின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டிய சூழ்நிலைதான், இன்றைய சமூகத்தின் உச்சக்கட்ட கோழைத்தனமான
விஷயமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
மேலே சொன்ன நபருக்கு இத்தனை விஷயங்கள் தெரிந்தும், ஏன் இவரால் டாக்டரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை? எது தடுத்தது? என்று தெரிந்து கொள்வோம். மனஅழுத்தம், மனஉளைச்சல் இவை எல்லாம் தினம் தினம் கடந்துதான் செல்கிறோம். எவற்றை எல்லாம் மனநோய் என்று பிரிப்பது தற்போதைய கேள்வியாக இருக்கிறது. கூகுளில் போய் மனநோய் அறிகுறிகள் என்று தேடினால், அனைத்துமே மனநோய்க்கான அறிகுறிகளாகத் தான் இருக்கிறது. அதுவே பெரிய பயத்தை தருகிறது என்றும் சிலர் கூறுவதை கேட்டிருக்கிறேன்.
அதற்கு உதாரணமாகத்தான், போன மே மாதம் இருபத்து நான்காம் தேதி மனச்சிதைவு விழிப்புணர்வு நாள் என்று உலகசுகாதார அமைப்புடன் சேர்ந்து, மனநல மருத்துவ நிபுணர்கள் பங்குபெற்று மனநோய் பற்றிய அறிகுறிகள் அனைத்தையும் உரையாற்றினார்கள். மே இருபது முதல் இருபத்தேழு வரை மனச்சிதைவு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது. ஸ்கிசோஃபினியா என்ற சொல் கிரேக்க வார்த்தைகளான ஸ்கீஸின் (பிளவு) மற்றும் ஃபிரேனோஸ் (மனம்) ஆகியவற்றிலிருந்து வந்தது.
ஒரு நபர் உலகத்தை நினைக்கும் விதத்திலும், பேசும் விதத்திலும், உணரும் விதத்திலும் இருந்துதான் ஒவ்வொரு நாளின் செயல்படும் விதத்தை பிரித்து தான் மனநல ஆலோசகர்கள் கூறுவோம். ஆனால் மனச்சிதைவு நோயானது இம்மூன்றையும் ஒழுங்காக சிந்திக்க வைக்காது. அனைத்தையும் சந்தேகிக்க வைக்கும். அவர்களுக்குள் ஒரு மாயக்குரல் கேட்கும், அவர்களின் பார்வைக்குள் மாயத் தோற்றம் ஒன்று தெரியும்.
பெரும்பாலும் இந்த நோயால் சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது என்றே மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலரும் இந்நோயால் பாதிக்கப்படும் நிலையானது இளம் பருவவயதில்தான். அதனால் தான் இம்மாதிரி நபர்களின் மொத்ததிறமையும் வெளியே வராமலேயே, அவர்கள் சம்பாதிக்கும் திறனும் நிலைகுலைந்து விடுகிறது. இதனாலும் மனநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே கூறுவதை விரும்பவில்லை.
மனநலமருத்துவமனையில் கம்யூனிட்டி ஒர்க்ஷாப் நடத்தும் போது, நோயாளியின் உறவினர்கள் பெரும்பாலும் அவர்களின் ஒட்டுமொத்த வலியாக கூறுவது, தங்குவதற்கு வீடுகள் எதுவும் எளிதாக கிடைப்பதில்லை என்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே நோயாளிகள் மாத்திரை மற்றும் தெரபி சார்ந்த சிகிச்சைகள் எடுக்கும் போது அவர்களும் நார்மலாக வாழ்வதற்கு தயாராக இருப்பார்கள்.
அக்கம்பக்கத்தினர் நடத்தும் விதத்தை பற்றி மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் கூறுவதை வைத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள GITAM இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்சின் மனநலப் பிரிவில் 2020 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதில் ஸ்கிசோஃபினியா மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மிக அதிகமான களங்கத்தையும் மற்றும் வன்முறையையும் சமூகம் செய்து இருக்கிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது. அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தவிர்ப்பது, நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு வேலை கொடுக்காமல் இருப்பது, மனிதாபிமானம் இல்லாமல் நடப்பது என்று நம் சமூகம் அவர்களை மிகத் தரக்குறைவாக நடத்தி இருக்கிறது என்று ஆய்வாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.
இங்கு நமக்குள் இருக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்றானது, மனநோயாளிகள் எப்படி இருப்பர்கள் என்ற கற்பனையான ஒரு பிம்பம் மிக முக்கியமானதாக இருக்கிறது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சரியாக உடை உடுத்தாதவர்கள் போலவும், அழுக்காக இருப்பவர்கள் போலவும், மிகக்கொடூரமான முகத்தோற்றத்துடன் இருப்பவர்கள் போலவும் என நினைத்துக்கொண்டு, இம்மாதிரியான ஒரு கற்பனை பிம்பத்தை மனதில் வைத்துக் கொண்டே நோயாளியை
அணுகுகிறார்கள்.அதேபோல் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்ற கட்டுக்கதைகளை முதலில் தகர்க்க வேண்டும். திரைப்படங்களில் காட்டப்படும் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் அனைத்தும் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் யதார்த்தமோ ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை இருப்பது போல், சில நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் போதுமானதாக இருக்கும். அவர்களுக்கான சிகிச்சை எல்லாம் பயப்படும் அளவுக்கு இருக்காது என்பதே உண்மை.
நம் வரலாற்றில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான மக்கள் கூட்டமும் மனநோய் பற்றியும், மனநோயாளியை பற்றியும் கற்பனைக் கதைகளுடன் சேர்த்து, அறிவியலையும் கலந்து கொண்டே பேசினார்கள். தற்போது உள்ள தலைமுறையில் உளவியல் சார்ந்த விசயங்கள் பற்றி பல அறிவியல் தகவல்களை நேர்மையாக சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பற்றிய பயம்தான் இன்னும் நீங்காமல் இருக்கிறது.
அதற்காகத் தான் சமூகப் பணியாளர்கள், உளவியல் ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், மீடியா, எழுத்தாளர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் என்று அனைவரும் அவரவர் பங்குக்கு தொடர்ந்து பேசிக் கொண்டும், விவாதித்தும் வருகிறார்கள். இதுவே ஒரு நல்ல முன்னேற்றமாக சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
நாம் நார்மல் என்று நம்பும் மனிதர்கள் கூட நிறைய அபத்தமான நம்பிக்கைகளுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனிதனின் மேதைமைத்தனத்துக்கும் பித்துக்குளித்தனத்துக்கும் மெல்லிய கோடு தான் இடைவெளியாக இருக்கிறது. அந்த இடைவெளியைப் புரிந்து கொண்டாலே இங்கு மனம் சார்ந்த பிரச்சனைகள் பற்றியும், சிகிச்சை பற்றியும் எளிதாக உரையாடத் தொடங்குவோம். கற்பனையான பயங்கள் அனைத்துமே பேசி பேசிக் கடந்து வந்த வரலாற்று எச்சங்கள் தான் நாம். அதனால் மனநோய் சார்ந்த சிகிச்சை பற்றிய பயங்களையும் பேசிப் பேசியே கடந்து விடலாம்.