நாங்க 2k பள்ளி மாணவர்கள்! (மகளிர் பக்கம்)
சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்ற காலம் எல்லாம் மாறி தற்போது யுடியூப் சேனல் மற்றும் யுடியூப் மூலமும் நாம் விரும்பும் படங்களை பார்க்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், வெள்ளித்திரையில் மட்டுமே சினிமாக்களை திரையிட முடியும் என்ற கான்செப்ட்டும் மாறிவிட்டது. அதற்கு காரணம் பட்ஜெட். சின்ன பட்ஜெட்டில் மக்கள் விரும்பும் நல்ல சினிமாக்களை யுடியூப் மற்றும் ஓ.டி.டிக்களில் கொடுக்க முடியும் என்று பல இயக்குநர்கள் நிரூபித்து வருகிறார்கள். அதன் வரிசையில் பிளாக்ஷீப் சேனல் தங்களின் யுடியூப் சேனலில் ‘பாபா பிளாக்ஷீப்’ என்ற சினிமாவினை வெளியிட்டுள்ளது.
முழுக்க முழுக்க பள்ளிகளில் நடக்கக்கூடிய சம்பவங்களை குறித்து இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் ராஜ்மோகன் ஆறுமுகம். ராகுல் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி, நடிகை அம்மு அபிராமி, நடிகை வினோதினி, காமெடி நடிகர் மதுரை முத்து, வி.ஜே விக்னேஷ்காந்த், சுரேஷ் சக்கரவர்த்தி, சின்னத்திரை பிரபலம் நடிகர் போஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் ஷீப் யுடியூப் சேனலின் வி.ஜேக்களான நரேந்திர பிரசாத் மற்றும் அயாஸ் அவர்களும் நடித்துள்ளனர். வி.ஜே முதல் சினிமா என தங்களின் பயணத்தினைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள் நரேந்திர பிரசாத் மற்றும் அயாஸ்.
‘‘நான் கல்லூரி படிப்பை முடிச்ச உடனே இந்த யுடியூப் சேனலில்தான் வேலைக்கு சேர்ந்தேன்’’ என்று பேசத் துவங்கினார் நரேந்திர பிரசாத். இப்போது பலரும் யுடியூப்பினை விரும்பி பார்ப்பதால் சின்னச்சின்ன வீடியோக்களை செய்து வந்தேன். அதன் பிறகு ஆஹா கல்யாணம், கல்லூரி சாலை, நெஞ்சம் மறப்பதில்லை, கதைப்போமா போன்ற வெப் சீரிஸ்களை செய்ய ஆரம்பித்தேன். சின்னச் சின்ன வீடியோக்களைவிட இது போன்ற வெப்சீரிசினைதான் பார்வையாளர்கள் விரும்புறாங்கன்னு தெரிந்தது. அதன் அடுத்தபடியாக ஒரு திரைப்படம் இயக்கலாம்னு நினைச்சோம். அப்படித்தான் ‘பாபா பிளாக்ஷீப்’ படம் உருவானது.
இதில் பள்ளி மாணவனா நான் நடிச்சிருக்கேன். எனக்கு இப்ப கல்யாண வயசாயிடுச்சு. ஆனாலும் பள்ளி மாணவன் போல் தோன்றணும் என்பதால் எடையை குறைத்து தாடி, மீசை எல்லாம் டிரிம் செய்து பள்ளி மாணவன் போல் மாறினேன். 2k குழந்தைகளின் பள்ளிப் பருவம் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக இயக்கியுள்ளார் ராஜ்மோகன் அவர்கள். குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கக்கூடிய படம்.
இதில் பல பிரபல நடிகை, நடிகர்கள் நடிச்சிருக்காங்க. அவங்களோடு நடிச்ச அந்த அனுபவம் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். யுடியூப்பில் வெப் சீரிஸ் செய்தாலும் சினிமாவில் நடிக்கும் போது அதன் அனுபவம் புதுமையா இருந்தது. இதனைத் தொடர்ந்து ‘எமகாதகி’ என்ற படத்தில் நடிச்சிருக்கேன். பெண்கள் சார்ந்த படம் என்பதால், ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் நான் கடைசி 20 நிமிடம்தான் வருகிறேன். ஓ.டி.டியிலும் ஒரு படம் செய்திருக்கேன். அது முழுக்க முழுக்க காதல் சப்ஜெக்ட்’’ என்றவர் தொடர்ந்து வெப் சீரிஸ் செய்யும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தப் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அயாஸ். இவருக்கு அடுத்த மாதம் கல்யாணம் என்றாலும், இந்தப் படத்திற்காக தன்னை பள்ளி மாணவன் போல் மாற்றிக் கொண்டுள்ளார்.‘‘எனக்கு பள்ளியில் படிக்கும் போதே ஊடகம் மற்றும் சினிமாத் துறை மேல்தான் தனிப்பட்ட விருப்பம் இருந்தது. அதனால் பள்ளியில் நான் அதிகம் கவனம் செலுத்த மாட்டேன். சொல்லப்போனால், பள்ளிக்கு செல்ல வீட்டில் அடம் பிடிப்பேன். அதற்காக அடியும் வாங்கி இருக்கேன்.
ஒரு வழியாக ஒரே வகுப்பில் இரண்டு முறை படிச்சு பள்ளிப் படிப்பினை முடிச்சிட்டு கல்லூரியில் பட்டப்படிப்பும் முடிச்சேன். அப்ப வீட்டில் வேலைக்கு போக சொன்னாங்க. ஆனால் எனக்கோ தொலைக்காட்சி சார்ந்த வேலை செய்யணும்னுதான் விருப்பமாக இருந்தது. அதனால் வீட்டில் எம்.சி.ஏ படிக்க போறேன்னு சொல்லிட்டு பிளாக்ஷீப் சேனலில் வேலைக்கான ஆடிஷனுக்கு வந்தேன்.
செலக்ட்டும் ஆனேன். அதில் ஷோக்கள் செய்து வந்தேன். இதற்கிடையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தில் ராதாரவி அவர்களின் மகனாக நடிச்சேன். அந்த சமயத்தில்தான் இந்த படம் பற்றி பேச்சு வந்தது. அதற்குள் கோவிட் வந்ததால், அப்படியே நிறுத்திட்டாங்க. நிலைமை மாறியதும், மீண்டும் இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை மாற்றி இயக்கி இருக்காங்க. நான் பள்ளிக்கு சரியாக போனதில்லை. அதனால் எனக்கு பள்ளியின் வாழ்க்கை எப்படி இருக்கும்னே தெரியாது. இந்தப் படத்தில்தான் அதை நான் உணர்ந்தேன். என்ன அந்த பள்ளிக்கு செல்லும் போது அழுது கொண்டே போவேன். இந்தப் பள்ளிக்கு ஜாலியா போயிட்டு வந்தேன்’’ என்ற அயாஸ், வீட்டாரின் சம்மதத்துடன் தன் தோழியை அடுத்த மாதம் கரம் பிடிக்க இருக்கிறார்.