நீங்கள் கனவு காணுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்! (மகளிர் பக்கம்)
திருமணம் என்றாலே கனவுகள்… கனவுகள்… கனவுகள்தான்! கனவுகள் மணமக்களுக்கு மட்டுமில்லை அவர்களின் பெற்றோருக்கும் இருக்கும். என் பெண்ணோட கல்யாணத்தை இப்படி செய்யணும், என் பையனோட கல்யாணத்தை அப்படி நடத்தணும் என விதவிதமாகக் கனவு காண்பவரா நீங்கள்.!!எந்த வேலையும் இல்லாமல் ரிலாக்ஸ்டா இருங்க. ‘ஐ டேக் ஓவர் எவிரிதிங் அட் யுவர் பட்ஜெட் எண்ட் டூ எண்ட்’ என நம்மை இருகரம் கூப்பி வரவேற்றார் சென்னை அசோக் நகரில் இயங்கிவரும் “விருத்தி” திருமண நிகழ்வு மேலாண்மையின் இயக்குநர் லெஷ்மி.
‘‘பெண்கள் கிரியேட்டிவ் விஷயங்களில் எப்பவும் ஸ்ட்ராங். எதையும் நேர்த்தியா அழகியல் உணர்வுடனே பார்ப்பார்கள். கலர்சென்ஸ் பெண்களுக்கு கூடுதலாகவே இருக்கும். இந்த விஷயங்கள்தான் எனக்கும் இந்தத் தொழிலில் கை தருகிறது’’ என்றவர், ‘‘நான் படித்தது சட்டம். ஆனாலும் எனக்குப் பிடித்த இந்த துறையை மிகவும் ரசித்து செய்கிறேன். நம் வீட்டுக் கல்யாணம், நமது கொண்டாட்டம், நமது குடும்பத்தின் குதூகலம். வாழ்க்கை முழுவதும் நமது நினைவில் நிற்கப்போகும் விஷயம். அதை அனுபவித்து, என்ஜாய் பண்ணி செய்ய வேண்டாமா’’ என்ற
கேள்வியுடன் நம்மிடத்தில் பேசத் துவங்கினார் “விருத்தி” லெஷ்மி.
‘‘இரண்டு லட்சத்தில் கல்யாணம் செய்தாலும் அந்த பட்ஜெட்டிற்கான விஷயங்களை என்னால் கொடுக்க முடியும். இரண்டு கோடி ரூபாய்க்கு கல்யாணம் என்றாலும் அதற்கு ஏற்ற விஷயங்களையும் என்னால் பிரமாண்டப்படுத்தி வழங்க முடியும்’’ என்றவர், ஆனால் பாரம்பரியத்தின் ரூட்டை திருமணத்தில் விட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாய் இருப்பேன் என்கிறார் புன்னகை மாறாமல்.
‘‘திருமணத்தை நடத்தித் தரச் சொல்லி என்னை அணுகியதுமே முதலில் கல்யாணம் நடக்கப்போகும் இடத்தை நேரில் சென்று பார்த்துவிடுவோம். பார்ப்பதற்கு மிகப்பெரிய கல்யாண மண்டபமாக காட்சி தரும். ஆனால் பக்கச் சுவர்கள் அழுக்கேறி மங்கலாக இருக்கும். லட்சங்களில் செலவு செய்து செய்யப்போகும் திருமணத்தில், திருமண ஹாலின் குறைகள் புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவாகாத வண்ணம், முழுக்க முழுக்க என் கற்பனைக்கு சுவற்றை மறைத்து டிசைன் பண்ணி கண்ணைக் கவரும் விதமாக கலர்ஃபுல்லாக மாற்றி விடுவோம்.
அலங்காரம் செய்யத் தேவையான வண்ண வண்ண மலரிலிருந்து, மணமக்களுக்குத் தேவைப்படும் மாலை வரை பிளாரிஸ்டுடன் அமர்ந்து டிஸ்கஸ் செய்து, இரவு முழுவதும் திருமணம் நிகழும் அரங்கத்தில் கூடவே இருந்து கவனிப்பதுடன், ஒருவேளை நான் செய்ய நினைத்த டிசைன் சரியா எடுத்துக் கொடுக்கவில்லை என்றால் உடனே தயங்காமல் செட்டை மாற்றி அமைப்பதில் நான் என்றுமே தயங்கியதில்லை.
எல்லாமே என் கண் முன்னாடி எனது மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், இதுவே என் தொழிலின் வெற்றி என்கிறார் லெஷ்மி . மைனூட்டான சின்னச் சின்ன விஷயத்தைக்கூட டீடெய்லாக எழுதி பிளான் செய்து அதை கச்சிதமாக முடிப்பதுடன், ஏதாவது குறை இருந்தாலும், காம்ரமைஸ் ஆகாமல் மாற்றி அமைத்து வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்தியாக்கி விடுவோம்.திருமண ஹால் அலங்காரத்தைப் பொறுத்தவரை, திருமணம் செய்யப்போகும் வீட்டாரின் பட்ஜெட்டை முதலில் கேட்போம்.
நான்கு அல்லது ஐந்து சிட்டிங் உட்கார்ந்து பேசி அவர்கள் தேவைகளையும் தெரிந்து கொள்வோம். திருமணத்தை சிறப்பா வித்தியாசமா நடத்த நினைக்கும் வாடிக்கையாளராக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. செலவு கொஞ்சம் அதிகமானாலும் அவர்களுக்கு விளக்கி புரியவைப்பதுடன், தேவையான ஆலோசனைகளையும் வழங்குவோம்.
முதலில் மணமக்களின் அம்மா, அப்பாவிடம் பேசி, அவர்களின் திருமண உடைகள், மணப்பெண்ணிற்கு வாங்கி இருக்கும் முகூர்த்த சேலை, ரிசப்ஷன் உடை, அவற்றின் கலர் போட்டோ இவற்றை எல்லாம் கேட்டு வாங்கி அதற்கு ஏற்ற மாதிரி மணமேடை மற்றும் வரவேற்பு அரங்குகளை தயார் செய்வோம். மிகவும் வித்தியாசமான கலர் பின்னணிதான் எப்போதும் எனது விருப்பம். திருமண நிகழ்ச்சிகள் எத்தனை நாட்கள் எனக் கேட்டு அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்ப வித்தியாசமான ஃபீல் வருகிற செட்டை வடிவமைத்துக் கொடுப்பதுடன், வெவ்வேறு வித்தியாசமான ஃபீலை நிகழ்ச்சிக்கு ஏற்ப கொடுத்து அசத்திவிடுவோம்.
உதாரணத்திற்கு, மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சிக்கு நார்த் இண்டியன் தீம்களில் ராஜஸ்தானி தீம், பஞ்சாபி தீம் ஃபீல் என டெக்ரேஷனில் விதவிதமான ஃபீல்களைக் கொண்டுவந்து நார்த் இண்டியன் ஃபேமலிக்குள் நுழைந்த மாதிரியான உணர்வு கிடைப்பது மாதிரி செய்து விடுவோம். மேலும் திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியை மிகவும் ஆடம்பரமாக வடிவமைப்போம். குறிப்பாக வரவேற்பில் இந்தோ வெஸ்டர்ன் ஃபீல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
ஆனால் திருமணத்தில் மொத்த செட்டையுமே அவர்களின் டிரெடிஸ்னல் செட்டப்பில் கொண்டு வந்து வந்திருக்கும் உறவினர்களை வியப்பில் ஆழ்த்தி விடுவோம். பிராமணர்களின் ஐதீகப்படி நடக்கும் ஊஞ்சல் நிகழ்ச்சிகளுக்கு பாடகர்களை வரவழைப்பதுடன், குட்டீஸ்களையும் டிரெடிஸ்னல் உடையில் நிகழ்ச்சியில் பாட வைத்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கிவிடுவோம்.
நான் செய்து கொடுத்த டெஸ்டினேஷன் வெட்டிங்கில் ஒன்று, ஐந்து ஈவென்ட்ஸ்களுடன் புனேயில் நடந்தது. மாப்பிள்ளை பெண்ணை டோலி மற்றும் மாட்டுவண்டியில் அமர்த்தி அழைத்து வந்தோம். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், துடும்பு ஆட்டம் என கூடவே அழைத்துச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தீம் செட் பண்ணிக் கொடுத்தோம். மெகந்தி சங்கீத்திற்கு பஞ்சாபி தீம், நிச்சயதார்த்தம் சவுத் இந்தியன் தீம் ஸ்டைலில் நிகழ்ந்தது. இதில் ஹைலைட்டே அவர்களது திருமணம்தான். மறுநாள் திருமணத்திற்கு திருப்பதி கோயில் மாதிரியே செட் போட்டுக் கொடுத்தோம். பாலாஜி கோயில் செட் போடுறாங்கன்னு செய்தி பரவி பக்கத்து ஊர்களிலிருந்து செட்டைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடிவிட்டது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின்(NRI) எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் நாங்கள் சிறப்பாகவே செல்படுகிறோம். திருமண வீட்டார் ஆன்லைன் வழியாக மட்டும்தான் எல்லாவற்றையும் பார்ப்பார்கள். திருமணத்திற்கு அவர்கள் கிளம்பி வந்து திரும்பிப் போகும்வரை எண்ட் டூ எண்ட் எல்லாவற்றையும் நாங்கள் செய்து கொடுத்துவிடுவதுடன், எந்தத் திருமணமாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே பிளான் பண்ணத் துவங்கிவிடுவோம். திருமண வீட்டு ஆட்களோடு ஆளாக திருமணம் நடைபெறும் ஹாலுக்குள் முதல் ஆளாக நுழைந்து கடைசி ஆளாக வெளியில் வருவது நானாகத்தான் இருக்கும்…’’ இதமாக சிரிக்கிறார் இந்த கலர்ஃபுல் கிரியேட்டர்.
மெஹந்தி சங்கீத், தாண்டியா டான்ஸ், மணப் பெண்ணை டோலியில் அமர வைத்து அழைத்து வருவது, பையனைக் குதிரை மீது அமர்த்தி கூட்டி வருவது, பொண்ணு-மாப்பிள்ளை கிராண்ட் எண்ட்ரி கொடுப்பது, நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு சின்னச் சின்ன வித்தியாசமான கிஃப்ட்டை கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவது போன்ற நிகழ்ச்சிகளோடு திருமண நிகழ்வுகள் ரொம்பவே மெமரபிளாக இருக்கும்.‘‘உங்கள் வீட்டுத் திருமணம் நிம்மதியா, சந்தோஷமா, மகிழ்ச்சியா நடக்கணுமா? நீங்கள் கனவு காணுங்கள்… அதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்…’’ சிரித்தபடியே விடை தருகிறார் ‘விருத்தி’யின் கிரியேட்டர் லெஷ்மி.