மணமேடையை அலங்கரிக்கும் தென்னை ஓலைகள்!! (மகளிர் பக்கம்)
நம் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் பூக்களால்தான் வீட்டை அலங்கரிப்பது வழக்கம். பூக்கள் கொண்டு என்ன தோரணங்கள் அமைக்கலாம், அதில் என்ன மாதிரியா புதுவிதமான அலங்கரிப்புகள் கிடைக்கும் என்று நாம் வலைத்தளம் முதல் அனைத்து இடங்களில் தேடுவோம். இதுவே கல்யாணம் போன்ற விழா என்றால் அது பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் வீட்டில் நடக்கும் விழாக்களுக்கு எளிதாக செய்யக்கூடிய பொருட்கள் தான் மக்களின் கவனத்தை ஈர்க்கும். இதில் புது வரவுதான் தென்னை ஓலை அலங்காரங்கள். தென்னை மட்டைகளை பின்னி அழகாக அலங்காரங்கள் செய்து மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறார் சவடமுத்து.
‘‘எனக்கு சொந்த ஊரு திண்டுக்கல்லில் இருக்கும் வேடசந்தூர் என்னும் கிராமம். என்னுடைய குடும்பத்தில் வறுமையான சூழ்நிலைதான். அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். அதன் பிறகு வீட்டுச்சூழல் காரணமாக என்னால் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை. ஆனாலும் எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. அதனால் நான் படிப்பதற்கு பணம் வேண்டும் என்பதால், சம்பாதிக்க தொடங்கினேன். சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக பணமும் சேர்த்தேன்.
இப்படியே ஒரு வருஷம் கழிஞ்சது. நான் சேர்த்து வச்ச பணத்தையெல்லாம் கட்டி கல்லூரியில் சேர்ந்தேன். என்னுடைய குடும்ப சூழல் காரணமாக படிச்சதும் வேலைக்கு போக வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனால் படிச்சதும் வேலைக்கு போகக்கூடிய படிப்பினை தேர்வு செய்து படிச்சேன். அப்படி நான் தேர்வு செய்த படிப்பு கேட்டரிங் துறை. அந்த துறையில் மிகவும் முக்கியமானது பழங்கள் மற்றும் காய்கறிகளில் செய்யக்கூடிய சிலை வடிவங்கள்.
அதாவது பழங்கள் அல்லது காய்கறிகளை அழகாக செதுக்கி அதில் அழகான தாமரைப்பூ, வாத்து, ரயில், பறவைகள் என பல உருவங்களை செதுக்கலாம். இதனை நாங்க எங்க பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு செய்வது வழக்கம். எனக்கு இது ேபான்ற கலை சார்ந்த பொருள்கள் செய்ய பிடிக்கும். அதனாலேயே அந்த மாதிரியான வேலைகளை அதிக ஈடுபாட்டோடு செய்வேன். எனக்குள் இருந்த கலைத்திறமையை வெளிக் கொண்டு வந்தது என்னோட கல்லூரி நாட்கள்தான்.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும் அதில் கிடைத்த வருமானம் குடும்பத்தை நடத்த மட்டுமே போதுமானதாக இருந்தது. ஒரு சிறிய தொகை சேமிக்கவோ அல்லது வேறு ஏதாவது சேமிப்பு திட்டத்தில் ஈடுபடவோ முடியவில்லை. மேலும் எனக்கும் ஓட்டல் வேலையில் அதிக ஈடுபாடும் இல்லாமல் இருந்தது. என்னுடைய கிரியேட்டிவிட்டி மூளை புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
அதற்கு தீனி அளிக்கும் வகையில் ஏதாவது உள்ளதா என்று சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பிச்சேன். அதில்தான் நான் தென்னை ஓலைகளை மடிச்சி பல விதமான பொருட்களை செய்வதை பார்த்தேன். அதை செய்தவங்க எல்லோரும் வெளிநாடுகளில் இருந்தாங்க. இந்த மாதிரி பொருள்களை செய்வதற்கான பயிற்சியும் கொடுத்து வந்தாங்க. அதில் கலந்து கொண்டு ஒவ்வொன்றாக கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன். கற்றுக் கொண்டதை நான் செய்து பார்த்தேன். தொடர் பயிற்சி காரணமாக பல விதமான டிசைன்களை செய்து பழகினேன். நான் பார்க்கிறது எல்லாவற்றையும் செய்து பார்த்தேன்’’ என்றவர் இந்த கலையை தொழிலாக மாற்றியது குறித்து விவரித்தார்.
‘‘நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, கரும்பலகையில் ஓவியங்கள் வரைவது, குளத்து களிமண்ணில் பொம்மைகள் செய்வது என கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவேன். அதனுடைய தொடர்ச்சிதான் இந்த வேலை என சொல்லலாம். இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடும் போது எனக்கு மனநிறைவை ஏற்படுத்தியது. அதற்காகவே இந்த மாதிரி வேலைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. நான் தென்னை ஓலைகளில் தோரணங்கள், உருவங்கள் செய்து பழகினாலும் மற்ற கலைப் பொருட்களையும் செய்ய துவங்கினேன். இதை பார்க்கிறவங்க அழகா இருக்குன்னு சொல்லுவாங்க.
அதே சமயம் இதையே சும்மா செய்து வைத்து ஏன் நேரத்தை வீணாக்கணும்னு கேட்பாங்க. இந்த மாதிரி வேலைகள் வருமானம் தரக் கூடியதுன்னு அவங்களுக்கு தெரியாது. அதோட இது பொழுது போக்கிற்காக செய்யும் வேலை என்பதுதான் அவர்களின் எண்ணம். நான் சோர்ந்து போகல தொடர்ந்து புதுப்புது டிசைன்களை செய்து பழகினேன். நான் செய்த ஒவ்வொன்றும் ஒரு விதமான அலங்காரப் பொருட்கள். இதனை தோரணங்களாக மாட்டலாம், வீட்டில் அலங்காரப் பொருளாக அலங்கரிக்கலாம். நான் இது போன்ற அலங்காரப் பொருட்கள் செய்வது பலருக்கு தெரிந்தாலும் எனக்கு வாய்ப்புக் கொடுக்க யாரும் முன் வரவில்லை.
இப்போதுதான் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருகிறதே. அதனால் என்னுடைய படைப்புகளை உலகம் முழுதும் தெரியும்படி செய்ய விரும்பினேன். சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். பலர் பாராட்டினாங்க. ஆனால் ஆர்டர் எதுவும் வரலை. காரணம், மணமேடை அலங்காரம் என்றால் பூக்கள் தான் பிரதானமாக இருக்கும். இதனைக் கொண்டு செய்தால் நன்றாக இருக்குமான்னு அவங்களுக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. இப்படியான சூழ்நிலையில தான் என் சொந்தக்காரங்க ஒருத்தரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு முதன் முதலில் அலங்காரம் செய்தேன். என்னோட முதல் முயற்சியா நினைச்சு செய்தேன். தென்னை ஓலையில் அழகாக மேடையை அலங்கரிச்சேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்தவங்க பலரும் என் அலங்காரத்தைப் பார்த்து வியந்தாங்க. என்னுடைய அந்த முதல் வேலையை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சி முடிந்து மூணு நாள் கழிச்சு எனக்கு ஆர்டர்கள் வர தொடங்கியது’’ என்றவர் இந்த வேலையை பற்றி சொல்லத் தொடங்கினார்.‘‘தென்னை ஓலைகளில் பொருட்கள் செய்வதில் மிகவும் முக்கியமாக நாம கவனிக்க வேண்டியது, எந்தெந்த தென்னை ஓலைகளில் என்ன அலங்காரப் பொருட்கள் செய்யலாம் என்பதை தெரிந்து இருக்க வேண்டும். தென்னை ஓலைகளில் பச்சை, இளம் பச்சை என அடுக்குகளா இருக்கும்.
அதுல ஒரு அடுக்கில் நான்கு குருத்துகள் இருக்கும். இதில் நான்காவது குருத்தில் உள்ள ஓலைகள் மஞ்சளும், பச்சையும் கலந்து இருக்கும். அந்த ஓலைகள் அலங்காரங்கள் செய்ய ஏற்றது. அதே மாதிரி காய்ந்த ஓலைகள் முழுதும் பச்சை நிறத்தில் இருக்கும். இதில் மூணாவது ஓலைகளில் வண்டுக்கடியோ அல்லது அரக்கு எதுவுமே இருக்காது. அந்த மட்டைகளை எடுத்து வந்ததும் டிசைன்கள் செய்ய தொடங்குவோம். முதலில் மேடையோட அளவு எடுத்து டிசைன் எப்படி இருக்கும்ன்னு வரைந்த பிறகு, அதனை டிசைன் செய்ய ஆரம்பிப்போம். மண மேடை மற்றும் வரவேற்பு பந்தல் செய்ய ஒரு நாள் ஆகும். தென்னை ஓலையிலேயே விநாயகர் மற்றும் வாழைமரம் எல்லாம் சேர்த்து செய்ய 6 மணி நேரம் ஆகும்.
நாங்க. போற இடம் கிராமமா இருந்தா அவங்களே தென்னை மட்டைகள் கொடுத்துருவாங்க. அதுவே நகரங்கள் என்றால் அவங்க சொன்னா நாங்க தென்னை ஓலைகள் கொண்டு போவோம். விநாயகர், கலசம், தட்டு, பூக்கள் இவையெல்லாமே தென்னை ஓலைகளில் பண்ணலாம். இதனை பல வருடங்கள் வைத்திருக்கலாம். நாங்கள் பின்னும் தென்னை தட்டுகளையும் பல வருடங்கள் வைத்து பயன்படுத்தலாம். நான் ஆரம்பத்தில் இந்த தொழிலுக்கு வரும் போது அதிகமாக யாரும் இந்த வேலையை செய்யவில்லை. தற்போது என்னை போலவே பலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். பலருக்கு இந்த தொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. புதுப்புது டிசைன்கள் செய்யும் ஆர்வம் இருந்தால் போதும் இந்த வேலையை காசாக பார்க்காமல் கலையாக பார்த்தால் ஜொலிக்கலாம்’’ என்கிறார் சவட முத்து.