வீட்டை அலங்கரிக்கும் பிச்வாய் ஹேக்கிங்ஸ்!! (மகளிர் பக்கம்)
வீட்டை அலங்கரிப்பதற்காக முன் வாசலில் தோரணங்களை கட்டி தொங்கவிடுவோம். அந்த மாதிரி ஒரு தோரண வகைதான் ‘பிச்வாய் ஹேக்கிங்ஸ்’. கிருஷ்ணர், பசு மாடு போன்ற உருவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த ஹேக்கிங்ஸ் வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். இதனாலேயே பல பெண்கள் இந்த தொழிலை வீட்டிலிருந்தபடியே செய்து லாபமும் ஈட்டி வருகின்றனர். பிச்வாய் ஹேக்கிங்ஸை வீட்டிலிருந்தபடியே தயார் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார் மும்பையை சேர்ந்த ஹர்ஷதா.
‘‘என்னுடைய பூர்வீகம் மும்பை. நான் பொறியாளர் சார்ந்த படிப்பு படிச்சி முடிச்சிட்டு எல்லோரையும் ேபால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். வீட்டில் திருமணம் பார்த்தாங்க. கல்யாணத்திற்கு பிறகும் சில காலம் வேலைக்கு சென்றேன். எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். ஆனால் அவளுக்கு கடுமையான கண் பிரச்னையால் பார்வையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால என் மகளை பார்த்துக் கொள்வதற்காகவே வேலையை ராஜினாமா செய்தேன். முழு நேரம் அவளை பார்த்துக் கொண்டு இருந்தாலும், வேலைக்கு போய் பழகின எனக்கு திடீரென்று வேலையை விட்டுட்டு வீட்டில் சும்மா இருக்க முடியல. அதனால வீட்டில் இருந்து கொண்டே என்ன வேலைகள் செய்யலாம்னு தேட ஆரம்பிச்சேன்.
அப்போது குழந்தையையும் பார்த்துக் கொண்டு என் நேரத்தையும் நல்ல முறையில் செலவிட வேண்டும் என்றால் அதற்கு சரியான தீர்வு கலை சார்ந்த விஷயங்கள் என்று புரிந்தது. அதனால் அது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டேன். அது சம்பந்தமான வகுப்புகள், பயிற்சி பட்டறைகள், கண்காட்சிகளுக்கு போகத் தொடங்கினேன். ஆர்ட் சம்பந்தமான வேலைகளை கற்றுக்கொண்ட பின்னாடி நான் அதை என் வீட்டில் இருந்தபடியே செய்ய துவங்கினேன்.
இது என்னுடைய பொழுது போக்கிற்காகத்தான் நான் கற்றுக் கொண்டேன். இதன் மூலம் சம்பாதிக்கவோ என்னுடைய கலைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஓவியங்கள் மட்டுமில்லாமல் கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். அந்த பயிற்சிகள் எனக்கு தனித்துவமான மற்றும் அழகான ஒன்றை உருவாக்குவதற்கான பார்வையை அளித்தது. இந்த மாதிரி நேரத்தில தான் லாக் டவுன் வந்தது. அந்த சமயத்தில் ஓவியங்கள் மட்டுமில்லாமல் கைவினைப் பொருட்
களையும் செய்ய ஆரம்பிச்சேன். வீட்டில் உள்ள கண்ணாடி பாட்டில்களின் மேல் ஓவியங்கள் வரைவது என வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கலை சாதனப் பொருட்களாக மாற்றினேன்’’ என்றவர் பிச்வாய் ஓவியங்கள் வரையவும் பயிற்சி எடுக்க தொடங்கியுள்ளார்.
‘‘பிச்வாய் என்பது சமஸ்கிருத வார்த்தை. ‘பிச்’ என்றால் பின் என்றும் ‘வாய்’ என்றால் தொங்குதல் என்று பொருள்படும். இந்த வகை ஓவியங்களை வீட்டின் முன்னாடி தோரணங்களை போல தொங்க விடுவார்கள். கிருஷ்ணரின் வாழ்க்கை கதைகளை சித்தரிக்கும் பக்திமிக்க ஓவியங்கள் இவை. இந்த வகை ஓவிய மரபில் பசுக்கள் முக்கியமாக வரையப்பட்டு இருக்கும். கிருஷ்ணர் தனது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் மாடு மேய்ப்பவராக இருந்தார். அதனாலேயே பசுக்கள் இல்லாத பிச்வாய் ஓவியங்களை பார்க்க முடியாது. ஆரம்பத்தில் விலங்குகளின் முடி அல்லது பருத்தி நூல்களில் செய்யப்பட்ட இயற்கை தூரிகை மூலம் ஓவியங்கள் வரையப்பட்டது.
காலப்போக்கில் வீட்டின் முன் தொங்கவிடும் தோரணங்களாக மாற்றம் பெற்றது. நான் பல கலை சார்ந்த விஷயங்களை கற்றுக் கொண்டாலும், இந்த பிச்வாய் தோரணங்கள் எனக்குள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. என் ஓவியத்தில் உள்ள வடிவமைப்பு மற்றும் நுணுக்கத்தை பார்த்து என் நண்பர்கள் மற்றும் ஊரை சேர்ந்தவர்கள் அவர்களுக்கும் செய்து தரச் சொல்லி கேட்டனர். அதனால் சிறிய அளவில் இந்த வேலைகளை செய்ய தொடங்கினேன். அதோடு நான் தயாரித்தவற்றையெல்லாம் என்னுடைய சமூக வலைத்தளங்களிலும் பதிவிட செய்தேன். கொஞ்ச கால கட்டத்தில் பலரும் ஆன்லைனில் என்னிடம் பிச்வாய் தோரணங்களை வாங்க தொடங்கினர்.
மேலும் நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காக ஓவியங்கள் ஏதேனும் வரைந்து தர முடியுமா எனவும் கேட்டனர். அவர்களுக்காக நான் வார்லி மற்றும் மதுபானி வகை ஓவியங்களையும் வரைய ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து காபி பவுடரில் ஓவியங்களை வரையத் தொடங்கினேன். காபி ஓவியங்கள் என்பது காபி தூளில் தண்ணீரை கலந்து வரைவது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை பலர் விரும்பி வாங்க தொடங்கினார்கள்.
அடுத்து 3டி பேப்பர் குயிலிங் வகையில் கைவினை பொருட்களை செய்தேன். அதோடு இந்த கலைகளை பலர் தங்களுக்கும் கற்றுத் தரும்படி கேட்டனர். மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் கலைப் பொருட்கள் சார்ந்த கண்காட்சிகளையும் நடத்தினேன்’’ என்றவர், மண்டலா கலையில் தான் கவனம் செலுத்திய காரணம் பற்றி விவரித்தார்.
‘‘என் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் எனக்கு உடல் நிலை சரியில்லாம போனது. சில மாதங்கள் என்னால எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வாடிக்கையாளர்களின் ஆர்டர்களையும் செய்ய முடியவில்லை. நான் உடல் நிலை தேறி வருவதற்குள் பலர் பிச்வாய் தோரணங்களை செய்ய தொடங்கி இருந்தார்கள். மேலும் எனக்கான வாடிக்கையாளர்களையும் நான் மறுபடியும் இந்த தோரணங்களை செய்து மீட்க முடியாது. வேறு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் மண்டலா ஓவியங்கள் செய்ய தொடங்கினேன். மண்டலா ஓவியங்கள் பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும்.
வீட்டில் உள்ள சுவர்களில் மாட்டி வைப்பது போல மண்டலா ஓவியங்களை வரைந்தேன். பல மக்களுக்கு இந்த ஓவியங்கள் புது விதமாக தெரிந்தது. என்னிடம் வாங்க ஆரம்பித்தனர். சமூக வலைத்தளங்களிலும் ஆர்டர் செய்தனர். மண்டலா ஓவியங்களுடன் சேர்த்து மறுபடியும் பிச்வாய் தோரணங்களை தொடங்கினேன். முகநூல் மூலம் மெல்ல மெல்ல நான் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் மீட்டெடுத்தேன். உலகம் முழுவதும் ஆர்டர்கள் வரத் துவங்கியது.
அதனால் நான் மட்டுமே ஈடுபட முடியாது என்பதால், என்னுடைய மாணவர்களையே வேலைக்கு அமர்த்தினேன். இப்போது நான் பிச்வாய் தோரணங்கள் மற்றும் ஹேண்ட் பெயின்டிங்கில் மாடுகள் சார்ந்த ஓவியங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறேன். கலைத் துறையில் நிறைய போட்டி உள்ளது. பலர் நாம் செய்யும் வடிவமைப்புகளை அப்படியே செய்து தருகிறார்கள். அதனை குறைவான விலையிலும் விற்கிறார்கள். இவற்றை எதிர் கொள்ள கடினமான உழைப்பு மட்டுமில்லாமல் உங்களுக்கான தனித்தன்மையை அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக உங்களை நீங்கி செல்லமாட்டார்கள்’’ என நம்பிக்கையோடு சொல்கிறார் ஹர்ஷதா.