பெஸ்ட் மொமன்ட்ஸுக்கு பெஸ்ட் போட்டோகிராஃபி!! (மகளிர் பக்கம்)
இந்த மொமன்ட்ஸ்தான் உன் லைஃப் ஃபுல்லா உன் கூடவே வரும். ஆனால் அதை கேப்சர் பண்ண நல்ல போட்டோகிராஃபர் வேணுமே? என்கிற தொலைக்காட்சி விளம்பரத்தை கட்டாயம் பார்த்திருப்போம். கல்யாண புகைப்படம் என்றால் மணமக்கள் மாலையினை அணிவித்தபின், மாலை மீது கரங்களை வைத்தபடி கேமராவை பாருங்க சிரிங்க என்பார்கள். அல்லது தாலி கட்டுகிற மாதிரி தாலிக் கயிறை பிடித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுக்க வைப்பார்கள். இதெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்றைய திருமணங்களின் டிரென்ட் கேண்டிட் போட்டோ மற்றும் வீடியோ கிராஃபிதான்.
புகைப்படங்களின் தொகுப்பு என்பது உணர்வுகளின் சங்கமம். சுருக்கமாய் சொன்னால், நிகழ்ச்சியின் முக்கியத்தை, நிகழ்வின் நொடியை, புகைப்படத்தை பார்ப்போர் மனதுக்கு சட்டெனக் கடத்துவது. இதில் கேண்டிட் போட்டோ மற்றும் வீடியோ என்பது ஆங்காங்கே நடக்கும் நிகழ்வின் சுவாரஸ்யங்களை கேமரா கண்களில் அப்படியே பிடித்து ஆவணப்படுத்துதல். உங்களின் வாரிசுகள், உங்களது திருமணப் புகைப்படங்களை பார்த்தால், இத்தனை விஷயங்கள் உங்கள் திருமணத்தில் நடந்ததா என திருமண ஆல்பம் அவர்களுக்கு கதைகளை சொல்ல வேண்டும்.
‘‘பேசிக்கலி ஐ சூட் கேண்டிட் போட்டோ கிராஃபி பார் வெட்டிங்ஸ்” என நம்மை இன்முகத்தோடு வரவேற்றவர் அக்ஷயா. ‘‘கேண்டிட் மொமன்ட்ஸ் புகைப்படங்களை நாங்கள் எங்கிருந்து எடுத்தோம், எப்படி எடுத்தோம், எங்கள் கேமரா எங்கிருக்கிறது என்பதே திருமண வீட்டாருக்கே தெரியாது.
திருமண நிகழ்ச்சிகள் ஒரு நாளோ மூன்று நாளோ. திருமணத்தில் என்ன நடந்தது என்பதை பத்து போட்டோவிலும் எங்களால் காட்ட முடியும் அதையே முந்நூறு போட்டோவிலும் காட்ட முடியும். எதுவாய் இருப்பினும் அவை எல்லாமே நடந்தவைகளை அப்படியே சொல்கிற உணர்வுகள். சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து கேமராவைப் பாருங்க, சிரிங்க என்றெல்லாம் சொல்வதில்லை. கேமராவுக்கு ‘போஸ் கொடுங்கள்’ எனச் சொல்லும் வேலையும் இதில் கிடையாது.
சிலருக்கு கேமராவைப் பார்த்தால் ஒரு பயம், வெட்கம், கூச்சம் எல்லாம் வரும். முதல் 20 நிமிடம் மணமக்களை அவர்கள் போக்கில் இயல்பாக விட்டுவிட்டு, அவர்கள் போக்கிலேயே படங்களையும் எடுக்கத் துவங்கி விடுவேன். எவ்வளவு இயல்பாக உணர்வுகளை காட்ட முடியுமோ அவ்வளவு இயல்பா எல்லா தருணங்களையும் கேமரா வழியாகப் பதிவு செய்துகொண்டே இருப்போம். இதற்காகவே தொடர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டே இருப்போம்.
திருமணத்தில் நிகழ்ந்த அனைத்தையும் பார்க்க யாருக்கும் இப்போது பொறுமை இல்லை என்பதால், ஒரு திருமணம் முழுவதையும் கேண்டிட் வீடியோவில் 3 நிமிடத்திலிருந்து 7 நிமிடத்திற்குள் கொண்டு வந்துவிடுவோம். அதற்குள் எல்லா முக்கிய தருணங்களும் கட்டாயமாக இருக்கும்.ஒரு சில திருமணங்களில் வெளியூர்களில் இருந்து திருமணத்திற்கு வந்து கலந்துகொள்ள முடியாதவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள், திருமணத்தைப் பார்ப்பதற்காக ஆன்லைன் லைவ் டெலிகாஸ்ட் கேட்பார்கள். அதையும் சேர்த்தே செய்து கொடுத்துவிடுகிறோம்.
சில திருமணங்களில் முகூர்த்தத்திற்கு உறவினர்களை மட்டுமே அழைத்திருப்பார்கள். ஆனால் மாலையில் நடக்கும் திருமண வரவேற்பிற்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருமணத்தில் காலையில் நடந்த முக்கிய நிகழ்வை அப்போதே சுடச்சுட எடிட் செய்து மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் காண வசதியாக கேண்டிட் வீடியோவாக ஒளிபரப்பு செய்துவிடுவோம்’’ என்றவர், ‘‘அதிகாலை 3 மணிக்கு நிகழும் திருமணங்கள் தான் எங்கள் தொழிலில் மிகப்பெரிய சவால். முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணி வரை போகும். அதில் சரியான தூக்கமின்றி மணமக்கள் ரொம்பவே சோர்ந்திருப்பார்கள். அதிகாலை திருமணத்தில் மணமக்களை ஃபோட்டோ ஷூட் செய்வது கொஞ்சம் எங்களுக்கு சவாலானது. திருமண வீட்டாருக்கு அவர்கள் திருமணம் மிகப்பெரிய மெமரி.
திருமணத்தில் மெமரிதான் நிற்கணும். போட்டோ கிராஃபர் வேலை நிற்கக்கூடாது என்பதற்காக, திருமணத்திற்கு முன்பே மணமக்களை சந்தித்து அவர்களிடத்தில், ஏதாவது ஸ்பெஷல் லவ் ஸ்டோரி இருந்தால் கேட்டு அதை வாங்கிவிடுவோம். பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் திருமணத்திலும் சுவாரஸ்ய கதைகள் இருந்தால் அதையும் கேட்டு வாங்கி அந்த உணர்வுகளையும் வீடியோவில் கொண்டு வருவோம். சில மணமக்களுடைய காதல் கதை சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அந்தக் கதையினை அப்படியே வீடியோவுக்குள் கொண்டு வந்து விடுவோம்.
வெளிநாடுகளில் வசிக்கும் மணமக்களாக இருந்தால் ஸ்கைப் கால், வாட்ஸ்அப் கால்களில் பேசி, திருமணத்திற்கு முன்பே அவர்களுடனான இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வேன். அதேபோல் மணமக்கள் குடும்பத்தாரையும் திருமணத்திற்கு முன்பு சந்தித்து நட்பை ஏற்படுத்துவேன். அப்போதுதான் திருமண புகைப்படங்களை ஆல்பமாக பார்க்கும்போது இயல்பாக இருக்கும். திருமண வீட்டாரை காத்திருக்க வைக்க எனக்கு எப்போதும் பிடிக்காது. திருமணம் முடிந்த 4 முதல் 6 நாட்களுக்குள், திருமண உணர்வில் அந்த குடும்பத்தினர் இருக்கும் தருணத்திலேயே, அவர்கள் இல்ல புகைப்படத் தொகுப்புகளை கொடுத்து பிரமிக்க வைத்துவிடுவேன்.
புகைப்பட ஆல்பங்களை பொறுத்தவரை எல்லாமே டிஜிட்டலைஸ்ட் பிரின்ட் புகைப்படங்கள்தான். ஆல்பத்தில் லெதர் பினிஸிங், எக்கோ பிரண்ட்லி ஹேண்ட் மேட் ஆல்பம், ஷூட் ஆல்பம் மற்றும் டிரெடிஸ்னல் ஆல்பம் என வகைகள் உள்ளது. அழகான வுட்டில் கூட புகைப்படங்களை பிரின்ட் செய்கிற மாதிரியான ஆல்பங்கள் இருக்கிறது.
வாட்டர் புரூஃப், டேர் புரூஃப், ஸ்கிராட்ச் புரூஃப் ஆல்பங்களும் விற்பனையில் உள்ளன. கசக்கினால் கோடு விழுகாத ஆல்பங்களும் இப்போது கிடைக்கிறது. ஒரு சிலர் மணமகளின் சேலையில் உள்ள டிசைன் மெட்டீரியலை புகைப்பட ஆல்பத்தின் கவராகச் செய்கிறார்கள்.மாற்றங்கள் இன்னும் நிறைய வரலாம். மாற்றங்களை வரவேற்போம்’’ என்றவாறு கேமரா லென்சில் இருந்து தனது கண்களை நீக்கி கை அசைத்து விடைகொடுத்தார்.
அக்ஷயா – புகைப்படக் கலைஞர்
கேமரா மீது காதல் வந்த பிறகு, சும்மா கேமராவை கையில் வைத்துக்கொண்டு சுற்றினால் போட்டோகிராஃபர் ஆக முடியாது என்பதால் முறையாய் கற்றுக்கொள்ள முடிவு செய்து கல்லூரியை தேடினேன். போட்டோ கிராஃபிக்கென ஆசியாவில் இருக்கிற ஒரே கல்லூரியான, ஊட்டியில் உள்ள ‘லைட் அண்ட் லைஃப் அகடமி ஆஃப் போட்டோகிராஃபி’ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. 14 மாத கோர்ஸில் 20 மாணவர்களுக்கு மேல் ஒரு பேட்ஜில் எடுக்க மாட்டார்கள்.
இதில் இணைந்து வெற்றிகரமாக எனது கனவை நிறைவேற்றிக் கொண்டேன். இப்போது கேண்டிட் போட்டோ, கேண்டிட் வெட்டிங் பிலிம் இரண்டிலும் நான் கில்லி. திருமண வீடுகளில் களத்தில் இறங்கி நானே முழுக்க முழுக்க ஷூட் செய்வேன். ஒரு மாதத்தில் 5 திருமணத்திற்கு மேல் ஒப்புக்கொள்வதில்லை. காரணம், இது எனக்கு வெறும் தொழில் கிடையாது. என்னுடைய கனவு. எனக்கான ஃபேஷன்.