கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! (மருத்துவம்)
நேற்றைய தினம் 78 வயது நிரம்பிய முதியவர் ஒருவரைச் சந்தித்தேன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவர். அவரது மனைவி கைத்தாங்கலாக அவரை அழைத்து வந்தார். சர்க்கரை நோய் இல்லை, நரம்புத் தளர்ச்சி இல்லை, நன்றாகக் காது கேட்கிறது. பின்பு ஏன் வேறொருவர் கைப்பிடித்து வருகிறார் என்று பார்க்க, அவரது இரண்டு கண்களிலும் அதீத கண்புரை இருந்தது (mature cataract). கண்களுக்கு எதிராகக் கைகளை ஆட்டினாலும் (hand movements) கூட அவரால் உணர முடியவில்லை. டார்ச்சினால் கண்ணில் வெளிச்சம் செலுத்தினால் மட்டுமே பார்வையை உணர்த்த முடிந்தது(perception of light).
“இடது கண்ணில் வலி இருக்கிறது. எனக்கு சொட்டு மருந்து மட்டும் கொடுங்கள். ஆபரேஷன் எல்லாம் வேண்டாம்” என்றார் முன்கூட்டியே. பரிசோதனை செய்து பார்க்கையில் இரண்டு கண்களிலும் புரை அதிக அளவில் இருந்தாலும் இடது கண்ணில் மிக நன்றாக வளர்ந்து, புரை பாதித்த லென்ஸ் அருகில் உள்ள உறுப்புக்களை அழுத்தத் துவங்கி விட்டது. இதனால் கண்ணில் லேசாக அழுத்தம் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது (intra ocular tension). ஆசிரியராக இருந்தவர் என்பதால் படித்தவராயிற்றே, எளிதில் புரிந்து கொள்வார் என்று நினைத்து வழக்கமாக இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு சொல்வதைப் போல கண்புரையைப் பற்றி விளக்கிக் கூறினேன். ‘‘அதெல்லாம் நான் ஏகப்பட்ட விளக்கம் கேட்டாச்சு.
ஆபரேஷன் எல்லாம் பண்ண முடியாது” என்றார் கடுமையான முகபாவத்துடன். கூடவே ஏழு வருடங்களுக்கு முன்பாகவே மருத்துவராக தன்னுடைய பழைய மாணவர் ஒருவரிடம் காண்பித்ததாகவும் அவர், ‘உங்களுக்கு நரம்பு வீக்கா இருக்கு’ என்று கூறியதாகவும் கூறினார். மேலும் ஒருமுறை சில பரிசோதனைகளைச் செய்து விட்டு, ‘‘அப்போதிருந்த நிலையில் இந்த அளவுக்கு அதிகமாக புரை வளர்ந்திருக்காது. ஏதாவது லேசான குறைபாடு இருக்கலாம். அதை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார். இப்பொழுது அப்படி எந்தத் தடையும் இல்லை. நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் பார்வை உறுதியாகக் கிடைக்கும்” என்று கூறினேன்.
அப்படி நான் உறுதியாக கிடைக்கும் என்று கூறுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று டார்ச் விளக்கின் ஒளியில் பரிசோதனை செய்து பார்க்கும் போது கண்ணின் மேலே, கீழே, இடதுபுறம், வலது புறம் என்று ஒவ்வொரு திசையிலிருந்து (quadrants) வெளிச்சத்தைப் பாய்ச்சும் பொழுதும் அவரால் எங்கிருந்து வெளிச்சம் வருகிறது என்ற திசையைச் சொல்லமுடிந்தது. இதை perception of light என்போம். குறைந்த பட்சம் இரண்டு திசைகளில் வெளிச்சத்தை உணர்ந்து கொண்டால் கூட அறுவைசிகிச்சை வெற்றிகரமாக அமையும் என்பது கண் மருத்துவத்தில் ஒரு பாலபாடம். அடுத்ததாக, அவருக்குச் செய்யப்பட்ட B scan பரிசோதனையில் விழித்திரையின் அமைப்பும் நன்றாகவே இருந்ததை உணர்ந்து கொள்ள முடிந்தது.
மிதமான புரையுடன் வரும் நோயாளிகளுக்கு கண்ணின் கிருஷ்ணபடலத்தை விரியச் செய்யும் dilating drops மருந்துகளை ஊற்றி 15 முதல் 30 நிமிடங்கள் வரை கண்களை மூடி அமரச் செய்திருப்போம். அதன்பின் விழித்திரையைப் பரிசோதனை செய்து அதில் வேறு ஏதேனும் குறைபாடுகள் உண்டா என்பதை ophthalmoscope, 90 D lens, போன்ற கருவிகள் மூலமாக நேரடியாகப் பரிசோதிக்க முடியும். ஆனால் இவருக்கு அதிகபட்சமாகப் புரைவளர்ந்து விட்டதால் அந்தக் கருவிகள் மூலம் விழித்திரையைப் பரிசோதனை செய்ய முடியாது. எனவே B scan செய்தோம். அதில் விழித்திரை நல்ல நிலையில் இருப்பதை அவரது மனைவியிடம் சுட்டிக் காட்டி, அறுவைசிகிச்சை செய்தால் பார்வை வராது என்று சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, தாராளமாகச் செய்யலாம் என்றேன்.
கூடவே புரையை அகற்றவில்லை என்றால் எந்த நேரம் வேண்டுமானாலும் கண்ணின் அழுத்தம் அபாயகரமான அளவை எட்டி விடும். பின்னர், வலி, நீர் வடிதல், வாந்தி, கண்ணில் சிவப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். அந்த நிலையில் உறுதியாகக் கண்புரையை அகற்றினால் மட்டுமே அடுத்த வேளை உணவைக் கூட நிம்மதியாக உண்ண முடியும். பார்வை கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையிலும் கூட கண் என்ற உறுப்பைக் காப்பாற்றுவதற்காக இப்பொழுது இவருக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறினேன்.
அவரது மனைவி ஏற்றுக் கொண்டார்.‘‘நானும் பல வருஷமா சொல்றேன் ஆப்ரேஷன் பண்ணா குளிக்காம இருக்கணும், அப்படிங்கறதுக்காகவே ஆப்ரேஷன் வேண்டாம்குறார்’’ என்றார் மனைவி. கண் அறுவைசிகிச்சைக்குப் பின் குளிப்பது தொடர்பாக மக்களிடம் நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. சிலர் மாதக்கணக்காக தண்ணீரே மேலே படாமல் வாழ்கின்றனர். இது முற்றிலும் தவறு. அடுத்த நாளே தலைக்கு நீர் ஊற்றாமல் மேலுக்கு ஊற்றிக் கொள்ளலாம்.
ஒரு வாரம் கடந்துவிட்டால் தலைக்கும் குளித்துக் கொள்ளலாம் அது ஒரு பிரச்சனையே இல்லை என்றேன். ஆனால் பெரியவர் பிடிவாதமாக மறுத்தார். ஒரு படி மேலே போய், ‘இப்படி பலபேரு பல சமாதானம் சொன்னாங்க. நான் ஒத்துக்க மாட்டேன். இதுக்கு மேல நான் என்ன செய்யப் போறேன் எழுதப்போறேனா படிக்கப் போறேன.. அப்ப எதுக்கு வீணா ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டு? என் உடம்பு தாங்காது’ என்பது போல மிகக் கடினமாக பேசினார்.
பல பெரியவர்களுக்கு அறுவை சிகிச்சை என்றாலே இருக்கும் அடிப்படை பயம் தான் இவருக்கும். முதுமை, குழந்தைகள் இல்லை ஆகிய மனக்குறைகளும் சேர்ந்து ஒரு விதமான மன அழுத்தத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. கூடவே மயக்க மருந்து கொடுப்பார்கள் என்ற பயமும் கூட. கண் அறுவை சிகிச்சைகளில் முழு உடலுக்கும் மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை.
சில வருடங்களுக்கு முன்பு கண்ணின் வெளிப்புறப் பகுதியில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்வார்கள். அதுவும் தற்பொழுது மிகக் குறைவான அளவிலேயே செய்யப்படுகிறது. கண்களில் ஊற்றப்படும் சொட்டு மருந்து மூலமாகவே அறுவை சிகிச்சையை முடித்து விடலாம் என்பதையும் விளக்கி, இறுதியாக பரிசோதனை முடிவுகளை எழுதிக் கொடுத்து, இனி முடிவு உங்கள் கையில் என்று கூறினேன்.
பெரியவரை வெளியே அமர வைத்துவிட்டு அவரது மனைவி மட்டும் மீண்டும் என்னிடம் வந்து, ஒருவேளை அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும், அவற்றை எப்படி அணுகுவது என்று கேட்டார். தாத்தாவின் கோபம் சற்று அயர்ச்சியைக் கொடுத்தாலும், பாட்டியின் தொலைநோக்கு சிந்தனை பாராட்ட வைத்தது. அதீத கண்புரையால் கண்களில் உடனடியாக இரண்டு விளைவுகள் ஏற்படக்கூடும். கண்புரை பெரிதாகி, இடது கண்ணில் தற்போது ஏற்பட்டிருப்பது போல் மேலும் அதிக அழுத்தத்தைக் கொடுத்தால் phacomorphic glaucoma என்ற நோய் ஏற்படும். கண் அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் பலவற்றை ஒரே சமயத்தில் செலுத்தி உடனடியாக லென்ஸை அகற்றுவது மட்டுமே தீர்வு.
சிலருக்கு கண்புரை mature என்பதிலிருந்து hypermature என்ற நிலைக்குப் போகலாம். இதில் சில வேதியியல் மாற்றங்கள் நிறைத்து லென்ஸின் மேற்புறத் தோலில் வெடிப்பு ஏற்படலாம். அந்தச் சூழலில் லென்ஸின் உள்ளிருக்கும் புரத பொருட்கள் வெளியில் பரவி அவை ஒரு விதமான அழற்சியை உருவாக்கலாம். இதிலும் கண்ணழுத்தம் (phacolytic glaucoma) அதிகரிப்பது உள்ளிட்ட பல எதிர் விளைவுகள் ஏற்படும். அதற்கும் மருந்துகள் மாத்திரைகளுடன் துவங்கி அறுவைசிகிச்சை வரை தேவைப்படும். இந்த இரண்டு விளைவுகளும் சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடியவை. இது இல்லாத வகைகளில் அதீத கண்புரை என்பது மறைமுகமாகவும் சில விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். பயத்தால் அறுவைசிகிச்சையை தவிர்ப்பவர்களுக்கு கண் பார்வை தெரியாததால் காயங்கள் ஏற்படக்கூடும்.
சென்ற மாதத்தில் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக இருக்கும் நபர் வந்திருந்தார். கண்புரையை அவர் கவனிக்காமல் விட்டுவிட, இரவு நேரத்தில் பெரிய விபத்து நிகழ்ந்திருக்கிறது. இவருடைய லாரிக்கும் முன்னால் சென்ற காருக்கும் ஏகப்பட்ட அடி. நல்ல வேளையாக மனித உயிர்களுக்குச் சேதம் இல்லை. நிறுவனமே கட்டாய விடுப்பு அளித்து அறுவைசிகிச்சை செய்து விட்டு உடற்தகுதிச் சான்றிதழுடன் வருமாறு கூறி விட்டது.
இன்றைய நவீன வசதிகளால் கண்புரை அறுவை சிகிச்சையை மிக எளிதாக செய்து, விரைவில் பணிக்குத் திரும்ப முடியும். அவரவர் வயது மற்றும் வேலைக்கு ஏற்ப ஒரு வாரத்திலேயே கூட பணிக்குத் திரும்ப முடியும். ‘பருவத்தே பயிர் செய்’ என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் ஏற்புடைய பழமொழிதான்!