கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 8 Second

* மிக்ஸியில் மாதத்துக்கு ஒரு முறை சிறிதளவு கல் உப்பைப் போட்டு சிறிது நேரம் ஓட வைத்து பின்பு கழுவி வந்தால் மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாகும்.

* கல் உப்பு வைக்கும் ஜாடியில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் மழைக் காலத்தில் உப்பு கசியாது.

– எஸ்.ஜெயந்திபாய், மதுரை.

* சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊறவைத்து, பின் சமைத்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

* கடலை எண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்கலாம்.

* மழை நீரில் பருப்பு வகைகளை வேகவைத்தால் ஒரு கொதியில் வெந்துவிடும். ருசியும் நன்றாக இருக்கும்.

– எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

* சீஸ் கண்டெய்னரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை தூவி வைத்தால் சீஸ் உலர்ந்து போகாமல் இருக்கும்.

* நெய்யில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து சூடாக்கி வைத்தால் நெய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

* அரிசி, ஜவ்வரிசி வற்றல் போடும் போது, பச்சை மிளகாயுடன், பூண்டுப் பற்களையும் சேர்த்து அரைத்துக் கலந்தால் மணமாக இருக்கும். பச்சை மிளகாய்க்கு பதில் மிளகுத் தூள் போட்டாலும் சுவையாக இருக்கும்.

– அ.யாழனி பர்வதம், சென்னை.

* சிறு தானியங்களில் பலகாரங்கள் செய்யும் போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துக் கொண்டால் மிகவும் மிருதுவாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.

* மூன்று பங்கு ரவை இட்லி மிக்சுடன் ஒரு பங்கு கடலைமாவு, ஒரு பங்கு தயிர், சிறிதளவு சமையல் ேசாடா சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு டோக்ளா செய்தால் சூப்பராக இருக்கும்.

* பருப்பு வடை மீதமாகிவிட்டால், அதை மறுநாள் வெந்நீரில் நனைத்து, பிழிந்து உதிர்த்து விட்டுக் கொள்ளவும். பிறகு பாகற்காய், பீன்ஸ் போன்றவைகளுடன் சேர்த்து பருப்பு உசிலி செய்யலாம்.

– எம். அசோக்ராஜா, திருச்சி.

* பொடியாக அரிந்த பீன்ஸ், கேரட்டுடன் சோள முத்துக்களையும் சேர்த்து நெய்யில் வதக்கி, தக்காளி ரசத்தில் சேர்த்துப் பாருங்கள் சுவையும், வாசனையும் அசத்தும்.

* காளானை நியூஸ் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும்.

* முட்டை வேகவைக்கும் போது சிறிது வினிகர் சேர்த்தால் முட்டை உடையாமல் வேகும்.

* பனீரை வினிகர் தெளித்த பாலிதீன் பையில் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

– இந்திராணி தங்கவேல், சென்னை.

* மாவு வகைகள் வைக்கும் பாட்டில் அல்லது டப்பாக்களில் பட்டை இலை ஒன்று போட்டு வைத்தால் மாவில் ஈரம் பூக்காது.

* பஜ்ஜிமாவு, அடை மாவு போன்றவற்றில் கற்பூரவல்லி இலைகளை அரைத்துச் சேர்த்தால் வாசனையாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.

* ஊறுகாய் ஜாடியில் கொதிக்கும் எண்ணெயில் நனைத்த துணியினால் உட்புறத்தை துடைத்து விட்டு, பிறகு ஊறுகாய்களை போட்டால் பூசணம் பூக்காது.

* பாகற்காய் கூட்டு வைக்கும்போது அதில் இரண்டு மூன்று துண்டு மாங்காய் சேர்க்க பாகற்காயின் கசப்பு குறையும்.

– கே.எல். புனிதவதி, கோவை.

* பக்கோடா செய்யும்போது மொறுமொறுப்பாக இருக்க வேண்டும் என்றால் மாவை கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரையும் கலந்தால் போதும்.

* பருப்பு நன்றாக வேக வேண்டும் என்றால் பருப்புடன் சிறிதளவு நெய்யைச் சேர்த்தால் வேகாத பருப்பும் நன்கு வெந்து விடும்.

* இறைச்சி, காய்கறி இவற்றை சமைக்கும்போது சிறிதளவு பார்லி மாவை அவற்றுடன் சேர்க்க இறைச்சி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.

– கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

* பழுத்தத் தக்காளியை ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து விட்டு, பிறகு நறுக்கினால் பழம் பிய்ந்து போகாது.

* கீரையுடன் பயத்தம் பருப்புக் கூட்டு செய்யும் போது ஒரு கப் பால் சேர்த்தால் மிகவும் மணமாக இருக்கும்.

* சப்பாத்தி மாவுடன், கேரட் துருவல், சீரகப் பொடி சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்தால் அருமையான நிறத்துடன் சுவையாக இருக்கும்.

– எஸ். வளர்மதி, கொட்டாரம்.

சேனைக்கிழங்கு பாயசம்

தேவையானவை:
சேனைக்கிழங்கு – கால் கிலோ,
வெல்லம் – 100 கிராம்,
தேங்காய் மூடி – ஒன்று,
பால் – கால் லிட்டர்,
முந்திரிபருப்பு – 10 கிராம்,
ஏலக்காய் – 5,
உப்பு – ஒரு சிட்டிகை,
நெய் – 2 தேக்கரண்டி.

செய்முறை: ஏலக்காயை தூள் செய்யவும். தேங்காயை துருவி பால் எடுத்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் சேனைக்கிழங்கை தோல் நீக்கி துருவி சேர்த்து, உப்பு போட்டு அடிபிடிக்காமல் கிளறவும். கிழங்கு நன்றாக வெந்தவுடன் கரண்டியால் மசித்து, பாலை ஊற்றி பாயச பக்குவம் வந்தவுடன் முந்திரிபருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பாயசம் தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருமண உறவு அவசியமா?(அவ்வப்போது கிளாமர்)
Next post மேக்கப் கஷ்டப்படுபவர்களுக்கான வருமான பாதை! (மகளிர் பக்கம்)