குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க!! (மருத்துவம்)
பொதுவாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரண குறைபாடுதான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம். தூக்கத்தின்போது தன்னையறியாமலே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மருத்துவ உலகம் Nocturnal Enuresis என்று குறிப்பிடுகிறது. ஐந்து வயது நிறைந்த 20 சதவிகித குழந்தைகள் இரவு நேரங்களில் தங்களையும் மீறி படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள். அதேபோல், ஏழு வயது வரை குழந்தைகள் 10 சதவிகிதமும், 12 முதல் 14 வயது வரையான குழந்தைகள் மூன்று சதவிகிதமும் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர்.
இது பொதுவானது தான் என்றாலும், ஏழு வயதுக்கு மேல் இது தொடர்ந்தால் இதனை சரி செய்ய கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது. எனவே, அதைத் தடுப்பதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம்.
நாள் முழுவதும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா? போதுமான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறார்களா? அவர்கள் படிக்கும் பள்ளியின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றுக்கும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். சில காரணங்களால் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது, உறக்கத்தில் இயல்பாகக் கழிக்க நேரிடலாம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது. இது அவர்களை மனரீதியாக பாதிக்கும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க உதவும் வழிமுறைகளும் வீட்டு வைத்தியமும்படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு திரவ உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபின் கலந்த பானங்கள், சோடா போன்றவற்றை கொடுக்கக் கூடாது.
நார்ச்சத்து உணவுகள்
மலச்சிக்கல் பிரச்னை கூட படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு காரணமான காரணிகளில் ஒன்றாகும். எனவே, குழந்தைகளுக்கு முழு தானியங்கள், ஓட்ஸ், பருப்புகள் மற்றும் நட்ஸ் வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை எளிதில் வெளியேற்ற உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க வல்லது, இதனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த உதவுகிறது.
மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
மெக்னீசியம் குறைபாடுள்ள குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறது. எனவே, குழந்தையின் உணவில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளான எள், அவகேடோ, பருப்பு வகைகள், டோஃபு வாழைப்பழம் போன்ற மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிகிச்சைக்கு உதவுவதோடு இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது.
வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3
வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 நிறைந்த உணவுகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிகிச்சைக்கு பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இது இரவுநேர என்யூரிசிஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே ஈரமான இரவுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. தானியங்கள், பாதாம், வாழைப்பழங்கள், ஆரஞ்சு மற்றும் காளான்களில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் வகைகளில் ஒமேகா 3 வளமாக உள்ளன.
எனவே, இந்த வகையான உணவுகளை உட்கொள்ளும்போது, குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் பிரச்னையை குறைக்க உதவும்.அதுமட்டுமின்றி, குழந்தைகள் தூங்கச் செல்லும்முன் இனிப்பு வகைகளை கொடுப்பதைத் தவிர்க்கவும். மேலும், குழந்தைகளுக்கு உறங்கச் செல்லும்முன் வால்நட், உலர் திராட்சை போன்றவற்றை உண்ணக் கொடுக்கலாம்.
தொகுப்பு: எஸ்.கே.தர்ஷினி
வீட்டு வைத்தியம்
சோம்பு பானம்
தேவையான பொருட்கள்
பால் – 1 டம்ளர்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 தேக்
கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி.
செய்முறை: ஒரு டம்ளர் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவும். பால் பொங்கிய உடன், அதனை வடிகட்டி, அதில் சர்க்கரை கலந்து அதனை குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுக்கவும். இதன் மூலம் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவது குறையும்.