என் பெஸ்ட் எவர் ஃபிரெண்ட் ‘அம்மா’தான்! (மகளிர் பக்கம்)
லக்னோவில் பிறந்திருந்தாலும் முழுக்க முழுக்க நம் அடுத்த வீட்டுப் பெண்ணாக அனைவரின் மனதிலும் நறுமணமாக நிறைந்துள்ளார் மலர் நாயகி பிரீத்தி ஷர்மா. சீரியலில் நான்கு ஆண்டு காலம் இருந்தாலும், தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘மலர்’ தொடர் மூலம் ஒவ்வொரு அம்மாக்களின் சுட்டிப் பெண்ணாக மாறியுள்ளார்.
அவரின் சின்னத்திரை பயணம் மற்றும் நண்பர்கள் குறித்து பகிர்ந்தார். ‘‘நான் லக்னோவில் தான் பிறந்தேன் வளர்ந்தேன். அதன் பிறகு நாங்க எல்லாரும் கோவையில் செட்டிலாகி பத்து வருஷம் மேலாகிறது. நான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்ச நாள் முதல் சென்னைக்கு வந்துட்ேடன். கடந்த நான்கு வருடமாக ஒரு சென்னைப் பெண்ணாக இந்த நகர் முழுக்க வலம் வருகிறேன். இங்கு தமிழில் மலர் தொடரில் நடிக்கிறேன். மேலும் ஐதராபாத்தில் ஒரு தெலுங்கு சீரியலில் கமிட்டாகி இருக்கேன்.
சென்னை…. ஐதராபாத் என்று என் வாழ்க்கை படு ஸ்பீடாக சுழன்று கொண்டு இருக்கிறது. நான் சின்னத்திரைக்கு வரக்காரணம் சமூகவலைத்தளம்தான். என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வேன். அதைப் பார்த்து சென்னையில் உள்ள சின்னத்திரை ஏஜென்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்ப நான் கோவையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிச்சிட்டு இருந்தேன். அவங்க போன் செய்து ஆடிஷனுக்கு வரமுடியுமான்னு கேட்டாங்க. ஆரம்பத்தில் எனக்கு இந்த துறை மேல் ஒரு வித பயம் இருந்தது. மற்றவர்களிடம் கேட்ட போது இந்த துறைப் பற்றிய தப்பான அபிப்ராயம் தான் சொன்னாங்க. ஆனாலும் போய் தான் பார்க்கலாம்னுதான் நானும் அம்மாவும் ஆடிஷனுக்கு வந்தோம்.
எங்களுடையது சாதாரணமான குடும்பம். அப்பா இண்டீரியர் டிசைனரா வேலை பார்த்து வந்தார். ஒரு விபத்தில் அப்பாக்கு ஒரு பக்கம் முழுதும் செயலிழந்துவிட்டது. அப்ப எனக்கு இரண்டு வயசுதான் இருக்கும். எனக்கு பிறகு இரண்டு தம்பிங்க இருக்காங்க. அம்மா, அப்பாவை மட்டுமில்லை எங்க மூவரையும் அவங்கதான் பார்த்துக்கிட்டாங்க. அதனால் எனக்கு ஆடிஷன்னு சொன்ன போது அம்மாவிடம் கேட்க கொஞ்சம் பயமாதான் இருந்தது. வரும் வாய்ப்பை ஏன் தவறவிடணும்னு எண்ணம் வேற இருந்தது.
அவங்களிடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். அவங்களும் என்னுடன் ஆடிஷனுக்கு வர சம்மதிச்சாங்க. நான் ஆடிஷன் போன போது எனக்கு 19 வயசு தான் இருக்கும். ஒரு மாசம் நானும் அம்மாவும் சென்னையில் ஆடிஷனுக்காக தங்கி இருந்தோம். எனக்கு தமிழ் அப்ப இந்தளவுக்கு கூட பேச வராது. ஆனால் ஆடிஷனுக்கு வந்ததோ தமிழ் பிராஜக்டிற்கு. என் மொழி பிரச்னையால் கிடைக்குமான்னு சந்தேகமா தான் இருந்தது.
ஒரு மாசம் கழிச்சு ஆல்பம் சீரிசுக்கு தேர்வாகி இருப்பதாகவும் கடலூரில் ஷூட்டிங்ன்னு சொன்னாங்க. ஷூட் நல்லாவே போச்சு. எனக்குள் இந்த துறை மேல் விதைக்கப்பட்டிருந்த தவறான எண்ணமும் நீங்கியது. காரணம், என்னை அவ்வளவு பத்திரமா பார்த்துக்கிட்டாங்க. அதில் கிடைச்ச முதல் சம்பளத்தை நான் சந்தோஷமா அம்மாவிடம் கொடுத்தேன். இவ்வளவு நாள் அவங்க பட்ட கஷ்டத்துக்கு என்னுடைய அந்த சம்பளம் தான் அவங்களுக்கு நான் கொடுத்த பரிசு. என்னுடைய இந்த வருமானம் என் குடும்பத்திற்கு பெரிய சப்போர்ட்டா இருந்தது. அந்த சீரிஸ் முடிந்ததும் போட்டோஷூட், மாடலிங் என பல வாய்ப்புகள் வரத்துவங்கியது. நானும் அதை எல்லாம் தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்.
அந்த சமயத்தில்தான் பிரபல சேனலில் ‘திருமணம்’ என்ற தொடரில் கதாநாயகியின் சகோதரியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் தமிழ் பேசவே கற்றுக் கொண்டேன். நான் அங்க செட்டில் இருப்பவர்களை விட சின்ன பொண்ணு என்பதால், குழந்தைதனமாதான் இருப்பேன். மற்றவர்களிடம் எப்படி பழகணும்னு தெரியாது. சுட்டித்தனமா செட்டில் சுற்றிக் கொண்டு இருப்பேன். ஆனால் அதன் பிறகு அங்குள்ள சீனியர் ஆர்டிஸ்ட் அவர்களைப் பார்த்து எப்படி பேசணும் பழகணும்னு புரிந்து கொண்டேன்.
நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் அந்த சீரியலில் ஸ்கோப் இல்லைன்னு புரிந்தது. அதனால் அந்த தொடரில் இருந்து விலகிட்டேன். அதன் பிறகு நிறைய அழைப்பு வந்தது. அதற்கான ஆடிஷனும் கொடுத்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு ராடன் மற்றும் மைண்ட்செட் இரண்டு நிறுவனங்களில் இருந்தும் ஆடிஷனுக்காக அழைப்பு வந்தது. இரண்டுமே சன் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பானது.
என்னால் இரண்டு பிராஜக்ட்டிலும் நடிக்க முடியாது என்பதால், நான் ராடன் மீடியாவின் தயாரிப்பில் வெளியான சித்தி 2 தொடரில் நடிக்க சம்மதித்தேன். ராதிகா மேடமுடன் சேர்ந்து சித்தி 2 தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவங்க சீனியர் மோஸ்ட் ஆர்டிஸ்ட். அவங்களோட நடிச்ச போது பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பிராம்டிங் இல்லாம எப்படி பேசணும், கேமரா முன் பிரேம் எப்படி பார்க்கணும், நம்முடைய பாடி லாங்வேஜ் எப்படி இருக்கணும்ன்னு நடிப்பு மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ராதிகா மேடமும் நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. எனக்காக நிறைய சப்போர்ட் செய்திருக்காங்க.
சில காரணங்களால் அவங்க கதையில் இருந்து நீங்கிட்டாங்க. அதன் பிறகு கதை ஹீரோ, ஹீரோயின் கான்செப்ட்டில் நகர்ந்தது. இதற்கிடையில் எனக்கு தெலுங்கில் ‘காவ்யாஞ்சலி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. புது மொழி, மாடர்ன் கேரக்டர் என்பதால் சம்மதிச்சேன். ஆரம்பத்தில் தெலுங்கு கஷ்டமா இருந்தாலும், அந்த மொழியும் கற்றுக் கொண்டேன். இப்ப தெலுங்கு, தமிழ் இரண்டுமே நல்லா பேசுவேன்’’ என்றவர் மலர் தொடரில் இணைந்தது பற்றி விவரித்தார்.
‘‘சித்தி 2 மற்றும் காவ்யாஞ்சலி இரண்டுமே ஒரே நேரத்தில் முடிந்தது. அதனால் அடுத்த பிராஜக்ட் வரும் வரை காத்திருந்தேன். காரணம், நிறைய தொடர்களில் ஆரம்பத்திலேயே கல்யாணம் நடந்திடும். அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதைக்களமா இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் கல்யாணம் என்ற பந்தத்திற்குள் சீக்கிரம் இணைய விரும்புவதில்லை. அதேபோல் எனக்கும் சிறு வயதில் மிகவும் துடிப்போடவும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண் மற்றும் குடும்பத்தினை காக்கும் கதாபாத்திரமாக நடிக்க விரும்பினேன். அதனால் இரண்டு மாசம் காத்திருந்தேன். அந்த சமயத்தில் இரண்டு பிராஜக்ட் எனக்கு வந்தது. இரண்டுமே சன் தொலைக்காட்சி தொடர் தான்.
ஒன்று மிஸ்டர் மனைவி, இதில் நெகட்டிவ் கதாபாத்திரம். அடுத்து மலர், தொடரின் நாயகி. நான் மக்கள் மனதில் ஒரு பாசிடிவ் பெண்ணாகத்தான் பதிவு செய்யப்பட்டிருந்தேன். அதை உடைக்க நான் விரும்பவில்லை. அதனால் மலர் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன். தன் அன்பு அக்காவிற்கு நல்ல வாழ்க்கையினை அமைத்து தர போராடும் தங்கையின் கதாபாத்திரம் தான் மலர். இது கிட்டத்தட்ட என் வாழ்க்கையுடன் இணைந்திருந்தது. அதனால் நான் மலராக உங்க வீட்டின் தொலைக்காட்சியில் பூக்க சம்மதித்தேன்’’ என்றவர் தன் நட்பு வட்டாரங்கள் குறித்து பகிர்ந்தார்.
‘‘என்னுடைய பெஸ்ட் எவர் ஃபிரெண்ட் என் அம்மாதான். அவங்க சின்ன வயசிலேயே பெரிய இழப்பை சந்திச்சவங்க. ஆனால் அதற்காக துவண்டுவிடாமல், அவங்க எங்களுக்காக ரொம்ப போல்டா பல பிரச்னைகளை எதிர் கொண்டாங்க. அம்மா கிராமத்தில் வளர்ந்திருந்தாலும், எதையும் சமாளிக்க முடியும்ன்னு அப்பாவையும் எங்களையும் ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்துக்கிட்டாங்க. நான் எந்த ஒரு விஷயத்தையும் அம்மாவிடம் இருந்து மறைத்தது கிடையாது. அவங்களும் என்னுடைய மனநிலையை புரிந்து கொள்வாங்க. இப்ப இருக்கிற தலைமுறை எப்படி நடந்துெகாள்வாங்கன்னு யோசிப்பாங்க. கிராமத்தில் வளர்ந்தாலும் என் அம்மா மாடர்ன் சிந்தனை கொண்டவங்க.
பள்ளியில் நான் ரொம்ப ஆவரேஜ் மாணவிதான். ஒன்பதாம் வகுப்பு முதல் +2 வரை மோனிக்காதான் என் பெஸ்ட் ஃபிரெண்ட். பரீட்சைக்கு குரூப் ஸ்டடி செய்யப் போறோம்ன்னு நானும் மோனிக்காவும் வீட்டில் சொல்லிட்டு, படிக்காம நல்லா ஆட்டம் போடுவோம். கல்லூரியில் சேர்ந்த போது, ஹிந்திக்காரின்னு என்னிடம் யாரும் சரியா பழகமாட்டாங்க. ஆரம்பத்தில் யாருமே என்னுடன் பேசமாட்டாங்க. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா பழகின பிறகு, என்னைப் பற்றி புரிந்து கொண்டாங்க.
அதில் ரூபா, ஐஸ்வர்யா, வினுஷா, புஸ்புஸ்… நாங்க ஐந்து பேரும் ரொம்பவே க்ளோஸ். கல்லூரிக்கு பஸ்சில் ஒன்னா தான் போவோம் வருவோம். அப்படி வரும் போது பஸ்சில் பாட்டு பாடிக் கொண்டே வருவோம். ஒருத்தி வகுப்புக்கு வரலைன்னாலும் நாங்க யாரும் போக மாட்டோம். கட்டடிச்சிட்டு வெளியே சுத்துவோம். ஒரே பைக்கில் நாலு பேரும் போவோம். எங்க கல்லூரி அருகில் ஒரு மால் இருக்கும். பாதி நேரம் அங்க சினிமா பார்த்துக் கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிடுவதுதான் எங்க வேலை. அதேபோல் பள்ளியில் படிக்கும் போது நான் த்ரோபால் விளையாடுவேன். அதில் சித்தி, தர்ஷான்னு இரண்டு பேர் ஃபிரெண்ட்ஸானாங்க. அவங்களோடு சேர்ந்து விளையாடும் போது அவ்வளவு ஜாலியா இருக்கும்.
மீடியா பொறுத்தவரை எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடையாது. அதில் நான் ரொம்ப க்ளோஸ்ன்னு சொன்னா நிமிக்ஷா, டெல்னா டேவிஸ், கோபிகா… இவங்க மூணு பேரைத்தான் நான் சொல்வேன். இவங்களோட நான் எந்த பிராஜக்ட்டும் செய்யல. சன் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியின் போதுதான் நாங்க சந்தித்துக் கொண்டோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் நட்பா மாறிடுச்சு. எல்லாரும் ஷூட்ன்னு பிசியாவே இருக்கும் போது, ஜும் வீடியோ கால் செய்து பேசிக்குவோம்.
ஷூட் இல்லைன்னா யாராவது ஒருத்தர் வீட்டில் தங்கிடுவோம். அந்த ஒரு நாள் இரவு அவ்வளவு ஜாலியா இருக்கும். இப்ப சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். அடுத்து வெப் சீரிசில் நடிப்பதில் ஆர்வம் உள்ளது. வாய்ப்பு வந்தால் கண்டிப்பா அதில் நடிப்பேன்’’ என்றார் பிரீத்தி ஷர்மா.