ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்!! (மருத்துவம்)
உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால், ரத்த அழுத்தப் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரவோ, அதிலிருந்து விடுபடவோ முடியும் என்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.
பின்பற்ற வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், ரத்த அழுத்தம் ஏற்படாது. அப்படி என்னவிதமான உடற்பயிற்சி செய்வது என்பது தெரியவில்லை என்றால் யோகா செய்யலாம் அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதன்மூலம் அதிக உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடை கட்டுக்குள் இருந்தாலே ரத்த அழுத்தம் சீராக இருக்கும். ஏனென்றால், அதிக உடல் எடையினால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படவோ அதிக வாய்ப்பு உள்ளது.
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, அரை உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. அந்தவகையில், உப்பு அதிகமுள்ள உணவுகளான ஊறுகாய், சிப்ஸ், கருவாடு போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும்.சர்க்கரையும் அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. சிலர், எனக்குத்தான் சர்க்கரை நோய் இல்லையே நான் ஏன் சர்க்கரை அதிகம் சேர்த்து சாப்பிடக் கூடாது என்று நினைப்பார்கள். இவர்கள், தொடர்ந்து சர்க்கரை அதிகம் சாப்பிட்டு வரும்போது, நாளடைவில், ரத்தத்தில் கொழுப்பு அதிகம் படிய வாய்ப்பு உண்டு. மேலும், சர்க்கரை நோய் வருவதற்கும், உடல் எடை கூடுவதற்கும் கூட இது வழிவகுக்கும். எனவே, அதிக உப்பு, அதிக சர்க்கரை இரண்டுமே ஆபத்துதான்.
அதுபோன்று மாவுசத்தும், கொழுப்பு சத்தும் அதிகம் உள்ள உணவுகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. எதுவுமே அளவோடு இருந்தால் பிரச்னை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து அதிகம் எடுத்துக் கொள்ளும்போது, இது உடலில் உள்ள அதிகப்படியான உப்பினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரும்.
மது அருந்துதல், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும். அவை, உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்று அந்த பொருள்களின் மீதே போட்டிருக்கும்போது அதை பயன்படுத்தலாமா.. எனவே, முடிந்தளவு அவற்றை குறைத்துக் கொண்டு, நாளடைவில் அதிலிருந்து விடுதலையாக வேண்டும். அது உங்கள் உடல் நலனுக்கும், உங்கள் குடும்பத்தினர் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. காபி அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபியில் உள்ள கோகைன் அதிக அளவில் உடலில் சேரக்கூடாது.
தினசரி யோகா செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் சிறந்தது. இதன்மூலம் பிராணயாமம் என்று சொல்லக்கூடிய மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். அதுபோன்று, தியானப் பயிற்சிகளும் நல்ல பலன் தரும். யோகா மற்றும் தியான பயிற்சிகள் செய்யத் தெரியாது என்றால், அருகில் உள்ள அரசு தலைமை மருத்துமனைகளில் இதற்கென்று இலவசப் பயிற்சி வகுப்புகள் இருக்கிறது, அங்கே சென்று கற்றுக் கொள்ளலாம்.
ரத்தஅழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை:ரத்தஅழுத்தப் பிரச்னைக்காக மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றை நிறுத்தக்கூடாது. திடீரென்று முதுகில் வலியுடன் கூடிய நெஞ்சுவலி ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
திடீரென்று உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மரத்துப்போதல் அல்லது பலவீனமாக உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பார்வை மங்கலாக தெரியத் தொடங்கினாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பேச்சுத் திணறல் அதாவது, பேசும்போது வாய் குளறி வார்த்தைகள் தடுமாறினாலும் மருத்துவரை அணுக வேண்டும்.அடிக்கடி தலைவலி, பின் மண்டையில் ஒருவித வலி இருந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வு இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு அதனால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். திடீர் மயக்கம் ஏற்படுவது, இது ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் வரும் அல்லது ரத்த அழுத்தம் குறைந்தாலும் வரும் எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.