படிச்சாதான் மதிப்பாங்க! (மகளிர் பக்கம்)
மனித உரிமை ஆலோசகர் விருது பெற்ற சேலத்துப் பெண்…
எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் பணம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்று மனதில் அழுந்தப் பதிந்திருந்தது அந்த சிறுமிக்கு. அவள் படித்தது பணம் அதிகம் உள்ள வீட்டுக் குழந்தைகள் பயிலும் பள்ளி. மனதில் சிறு வலி இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய அந்த மாணவியின் எண்ணத்தை மாற்றியது அந்த கரகோஷம். பத்தாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்ததற்காக மேடையேற்றப்பட்டு கைத்தட்டல் பெற்றார். அன்று அந்த சிறுமி உணர்ந்தாள், கல்வி கற்றால் மட்டுமே மதிப்பையும் மரியாதையையும் இந்த உலகத்தில் பெற முடியும் என்பதை. தான் கல்வி கற்பது மட்டுமில்லாமல், கல்வியில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அவரின் தன்னலமற்ற கல்வி சேவை அமெரிக்க நாட்டின் விருதை வாங்குமளவுக்கு உயர்த்தியுள்ளது. அந்த சிறுமி சேலத்தை சேர்ந்த பிரஷிதா அவினாஷ்.
‘‘என் சொந்த ஊர் சேலம். அப்பாவிற்கு ஏ.டி.சியில் பணி. அம்மா வீட்டில் டியூஷன் எடுப்பார். எனக்கு ஒரு தங்கை. வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் அந்த பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் கான்வென்ட்டில் எங்களை சேர்த்தார்கள். அங்கிருந்த வேறுபாடான சூழல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. திறமையை விட பணமே அங்கு முக்கியமாக பார்க்கப்பட்டது. நான் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எனக்கு கிடைத்த அந்த மரியாதைதான் படித்தால் மட்டுமே உலகம் நம்மை மதிக்கும் என்பதை மனதில் பதிய வைத்தேன். +2விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று பொறியியல் பட்டதாரியானேன்.
என்னை விரும்பி என் பெற்றோரிடம் பெண் கேட்டு வந்தார் என் காதல் கணவர் அவினாஷ். நாங்கள் வெவ்வேறு மதங்கள் என்றாலும் அவர் சொன்ன வார்த்தைகள் ‘அவள் யாருக்காகவும் மாறவேண்டாம்’ என்பதுதான். என் வெற்றிக்குப் பின் இருந்து என்னை ஊக்குவிப்பவரும் அவரே. திருமணமாகி அமெரிக்கா வந்ததும் வீட்டில் இருப்பது எனக்கு எதையோ இழந்தது போல் இருந்தது. என் கணவர் ‘ஏன் சும்மா இருக்க வேண்டும். எது படிக்க விருப்பமோ அதை படி. மேலும் உன் கல்வித்திறனை மற்ற குழந்தைகளுக்காகவும் பயன்படுத்து. நான் சம்பாதிப்பது நமக்குப் போதும். நமக்கு சிறப்பான வாழ்க்கையை தந்த இந்த சமூகத்துக்கு உன்னால் முடிந்ததை செய்’ என்று சொல்லி என்னை சிந்திக்க வைத்தார்.
2012ல் சைக்காலஜி டிப்ளமோவில் துவங்கி வரிசையாக 12 டிப்ளமோக்களை ஐந்து வருடத்தில் முடித்தேன். கர்ப்பமாக இருந்த காலத்திலும் படித்தேன். எனக்கே சில சமயம் எதுக்காக இப்படி படிக்கிறோம் என்று புரியல. ஆனால் படிப்புக்கு எந்த காலத்திலும் மதிப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தொடர்ந்து படித்தேன். குழந்தைகளுக்கான உளவியல் சார்ந்த படிப்புகளை படித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி மையங்களில் இருந்து சான்றிதழ்களைப் பெற்றேன்.
எந்த ஒரு குழந்தைக்கும் பணம், மொழி, இனம் போன்ற எந்த தடையுமின்றி கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் இருந்தது. கிராமங்களில் இருக்கும் பள்ளி யில் பயிலும் குழந்தைகள் அறிவில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டி அமைவதில்லை. கட்டணம் கொடுத்து அவர்களுக்கு ஒன்றை கற்றுத்தர பெற்றோர்களுக்கு வசதி இருக்காது.
அவர்களுக்காக நான் பயின்ற கல்வியை பயன்படுத்த விரும்பினேன். “குளோபல் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ்” என்ற பயிற்சி மையத்தை துவங்கினேன். அந்த சமயம் கொரோனா காரணமாக சேலம் வந்திருந்தேன். என்னை அழைத்து பள்ளிகளில் தன்னம்பிக்கை வகுப்புகளில் பேச சொன்னார்கள். ஆனால் எனக்கு ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது அந்த குழந்தைகளுக்கு தனி பயிற்சிகள் தேவை என்பதை பள்ளிகளுக்கு புரியவைத்தேன். அந்த நேரம் அரசும் பள்ளி மாணவர்களுக்கு திறன் வழிக் கல்வி அவசியம் என்பதை உறுதி செய்தது. அது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. என்னுடைய பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியினை அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்த கொடுத்த வாய்ப்பாக கருதினேன்.
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் ஒரு பகுதியான தமிழ்நாடு கல்வி மற்றும் பயிற்சிக்கான மாவட்ட நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் எங்களது சேவையை ஏற்று பயன்படுத்தி தமிழ்நாட்டின் கிராமப்புற அரசு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வழிவகுத்தது. அரசுப் பள்ளிகளில் தனித்திறன் பயிற்சி தரவேண்டும் என்று முடிவு செய்ததும் நான் தேர்வு செய்தது அபாகஸ் பயிற்சியைதான்.
சேலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் நடத்திய பயிற்சியில் 20 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதுடன் அதை தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு கற்றுத் தர ஆரம்பித்தார்கள். இது வரை நூறு பள்ளிகளில் சுமார் 50,000 மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். இதில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புக் குழந்தைகள் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் நாங்க பயிற்சி அளித்திருக்கிறோம். மேலும் இந்தியா மட்டுமில்லாமல் வெளி நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கும் பயிற்சி அளித்திருக்கிறோம்’’ என்றவர் கொரோனா காலத்திற்கு பிறகு ஆன்லைன் முறையில் தன் பயிற்சியினை தொடர்ந்து வருகிறார்.
‘‘பலர் தனித்திறமை பயிற்சி என்றாலே அபாகஸ் என்று நினைக்கிறார்கள். அதனுடன் வேறு பயிற்சிகளையும் “எஜுகேஷன் ரிசர்ச் ப்ரொஜெக்ட்” எனும் திட்டத்தின் கீழ் அளிக்க ஆரம்பித்தோம். இதன் மூலம் கல்விக்கு என்றும் மதிப்புண்டு என்பதை புரியவைத்து அவர்கள் மனதில் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்தோம். பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும், வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதை அவ்வாறு படித்து நல்ல வேலையில் இருப்பவர்களை மாணவர்களுடன் பேச வைத்தோம். படிச்சா எங்கும் நல்ல வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
தற்போது ரோபாட்டிக்ஸ் பயிற்சிகளும் தருகிறோம். இவ்வாறு காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பயிற்சியினையும் நாங்க எங்கள் மையம் மூலம் மாணவர்களுக்கு அளித்து வருகிறோம். இவை அனைத்தும் சான்றிதழ் சார்ந்த பயிற்சி என்பதால் கிராம குழந்தைகளுக்கு தரமான கல்வியினை கொடுக்க முடிகிறது. அதுதான் எங்களின் குறிக்கோளும்’’ என்று உறுதியுடன் கூறும் பிரஷிதா உலகளாவிய மனித உரிமைகள் ஆலோசகர் விருது, அண்டர் 50 இன்ஸ்பைரிங் பெண், இந்தியா க்ளோரியஸ் விருது, ஆசியக் கல்வி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.