ங போல் வளை!! (மருத்துவம்)
அஞ்சுதல் அஞ்சாமை…பயத்தைக் கையாளுதல்!
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சமாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவர்.இங்கே அஞ்சுவதென்பது அறம் பிறழும் பொழுது, தவறு செய்ய துணியும் பொழுது, துன்பம் விளைவிக்கும் பொழுது என, தர்மத்துக்கும் , மனசாட்சிக்கும் எதிர்நிலையில் நின்று செயல்படும் பொழுது மட்டுமே ஒருவர் அஞ்ச வேண்டும் என்பதைச் சுட்டுகிறது.
இன்று அச்சம், பயம் போன்ற கூறுகள் நமது அன்றாட வாழ்வின் அங்கம் என்றே மாறிவிட்டது. நாம் அடையும் பதற்றங்கள் அனைத்தும் பயத்தால் விளைபவை, பயம் நாம் பற்றிக்கொண்டிருக்கும் உறவும், பொருளும் நற்பெயரும், கைநழுவிச் சென்றுவிடும் எனும் கற்பனையே காரணம். இந்தக் கற்பனை நம்மை கோபத்தை நோக்கி அழைத்துச் செல்பவை. கோபம் மீண்டும் பயமென மாறி நம்முள் வளர்வது. ஆக, பயம், கோபம், பதற்றம் என்கிற மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த செயல்பாடுகள்.
இது நமக்கு ஓரளவு தெரிந்தது மற்றும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே பயத்தை விரட்ட நாம் வெளிப்புறச் சூழலை, காரணிகளை, உறவுகளை, காலத்தை நம்பி பற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவைமுழுமையான தீர்வாக ஒருபோதும் அமைந்ததில்லை. ஆகவே மரபு ‘பயம் ‘என்கிற கருதுகோளை முழுமையாக நோக்கி அதன் அனைத்து சாதக பாதகங்களையும் ஆராய்ந்து, பயத்தை கையாளும் முறைமையை முன்வைக்கிறது.
உணவு, பயம், மைதுனம், உறக்கம் என்கிற நான்கு தேவைகளும் நமக்கும் மிருகங்களுக்கும் அடிப்படை தேவையாக உள்ளன. இதில் மனிதன் மட்டுமே நான்கு நிலைகளிலும் அதீதமாகவோ தேவைக்கும் அதிகமாகவோ நுகர்ந்து விடுகிறான். உதாரணமாக மைதுனம். இயற்கை நியதியின்படி ஒவ்வொரு உயிரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே இணையைத் தேடிப் புணர்ந்து தன் சந்ததியைப் பெருக்கிக்கொள்கிறது. மனிதர்களோ அதில் எந்த கட்டுப்பாடும் நியதியும் இன்றி ஆண்டு முழுவதும் அதில் திளைப்பவர்கள்.
அப்படித்தான் பயத்தையும் கையாளுகிறார்கள். சுவாமி சிவானந்தர், அச்சத்தை இரண்டாகப் பகுக்கிறார். ஒன்று அடிப்படையான, அர்த்தமுள்ள, தேவையான பயம், இதற்கு உதாரணம், ஒரு மருத்துவர் தனக்குத் தொழில்ரீதியாக அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்கிற அச்சத்துடன் இருக்கிறார். ஆகவே, ஒவ்வொரு நோயாளியையும் கவனமாகப் பரிசோதித்து குணமாக்குவதில் பயத்துடன் தனது பணியைச் செய்கிறார்.
ஓர் ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகரிக்கும் பயத்துடன் இருப்பதால், மாணவர்கள் நலனில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துகிறார். இவ்வகை பயங்கள் அனைத்தும் ஆரோக்கியமானவை.
இரண்டாம் வகை பயம்தான் நம் காலகட்டத்தின் முக்கியமான பிரச்சனை, ‘கற்பனை பயம் ‘அது என்கிறார். தொடர் எண்ணத் தூண்டுதல்களால் இல்லாத அல்லது நடக்காத ஒன்று நடந்துவிடும் எனும் அச்சம். உதாரணமாக செய்தித்தாளில் சாலை விபத்து பற்றி வாசிக்கும் ஒருவர், தன் குடும்பமே அதில் சிக்கிக்கொண்டதாக எண்ணிக்கொள்வது, தன் அணுக்க உறவினர்கள் இறந்து போவது போல கற்பனை செய்துகொண்டு அச்சம் கொள்வது.
தேர்வுக்குச் செல்லும் மாணவன் தான் படித்த பாடப்பகுதிகள் வினாத்தாளில் கேட்கப்படவில்லையென்றால் என்ன செய்வது என்கிற கற்பனை பயம். அடுத்த வருடம் வேலையிழந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம், உடல் நலன் குறித்தும், நோய் தாக்கிவிடுமோ என்பது குறித்தும் கற்பனையாகப் பயத்தைப் பெருக்கிக்கொள்வது இன்று நம் அனைவருக்கும் ஏதேனும் ஒருவகையில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
சிவானந்தரின் கணக்குப்படி ஐந்து சதவிகிதம்தான் முதல் வகை தேவையான பயம். மீதமிருக்கும் தொன்னூற்று ஐந்து சதவிகிதம் இரண்டாம் வகையான கற்பனையான, தேவையற்ற அச்சங்கள்தான். ஆகவே யோக மரபு, இவ்வகையான கற்பனை அச்சங்களை கையாள்வதற்கு மிகவும் வித்தியாசமான அணுகுமுறையை முன்வைக்கிறது.
உதாரணமாக, இன்றைய நவீன உளவியலாளர்கள் அல்லது சுய முன்னேற்ற பயிற்சியாளர்கள் போன்றோர் பயத்தை எதிர்கொள்வதற்கு ‘அச்சம் தவிர்’, ‘அச்சமில்லை’ அச்சமில்லை’ போன்ற மேற்கோள்களை முன்வைப்பதும், மனதை தைரியமாக வைத்துக்கொள்ளவும், மகிழ்ச்சியாக இருக்கவும் என சில பரிந்துரைகளை வழங்குவார்கள். நல்ல உறக்கத்தை தரக்கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்ளச் செய்வர்.
இவை தற்காலிகமாகப் பலன் தரக்கூடியவை. எனினும் வேரிலிருந்து அச்சத்தை அகற்றாமல் மேலோட்டமாக கிளைகளை மட்டும் வெட்டிக்கொண்டே வருவது ஒரு நீண்ட கால விரயம்.
சிவானந்தரின் சீடரான சத்யானந்தர் இதற்கு தீர்வாக ஆழ் மனம் நோக்கி செல்லக்கூடிய தியான முறைகளை முன்வைக்கிறார், தியானத்தில் மட்டுமே ஒருவர் ஆழத்தில் வேரூன்றி இருக்கும் பயம், பதட்டம், கோபம் மூன்றையும் சந்திக்கவே முடியும். அவற்றை நேருக்கு நேர் சந்திக்கும் பட்சத்தில் இலகுவாக நீக்கிவிட முடியும்.
சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இது தீவிரமான சாதனையின் மூலமாக அடைய வேண்டியது. ஏனெனில், ஒருவர் தியானத்தில் ஆழ் மனம் சென்று இவற்றை கண்டவுடனேயே மேலும் பயமும், பதட்டமும் மிக்கவராக மாறிவிடுகிறார். ஆகவே, நேரடி தியானம் அவரை மேலும் இருளுக்குள் அழைத்துச் செல்கிறது. முறைப்படுத்தப்பட்ட படிப்படியாக தியான நிலைக்கு தன்னை தகுதிப்படுத்திக்கொள்வதும், தியானத்தில் சந்திக்க நேரும் தன்னுடைய அச்சத்தை, களைவதும் நிகழ வேண்டுமெனில், கர்மயோகம் போன்ற முற்றிலும் புறவயமான ஒரு செயலிலிருந்து தொடங்கி அது தரும் அகவயமான மாற்றத்தால், தியானத்துக்குத் தயாராகலாம்.
உதாரணமாக, நாம் பயன் கருதி செய்யும் செயல்கள் அனைத்துமே ‘கர்மா’ எனில், பலன்களைக் கருதாமல், கணக்குகளை, முடிச்சுகளைப் போடாமல் நேர்மறையான உணர்வுடன் ஒருவருக்கு சிறுஅளவில் உதவி செய்ய முடிந்தால்கூட அது கர்ம யோகமாக மாறிவிடுகிறது. அதை முடித்துவிட்டு சென்று தியானத்தில் அமருங்கள், அப்போது எவ்வித அச்சமும், கற்பனை பயமும் இல்லாத ஒரு அனுபவம் நிகழும். இது எப்படியெல்லாம் நிகழ்கிறது என்பதை இன்னும் ஐந்தாயிரம் பக்கங்களில் படம் போட்டு விளக்கலாம். அது வெறும் சொற்களாக மட்டுமே எஞ்சும். எனவே அச்சத்திலிருந்து அச்சமின்மைக்குச் செல்ல தியானம் தீர்வெனில், தியானத்தில் திகழ வேறு வகை புற அக பயணமும், தேவையை இருக்கிறது. கர்ம யோகத்தை ஒரு முக்கியமான கருவியாக முன்வைக்கிறார் சுவாமி சத்யானந்தர்.
அனைத்து பிரச்சனைகளும் யோக ஆசன, மூச்சுப் பயிற்சி, தியானத்தில் மட்டுமே தீர்ந்துவிடும் என்பதை யோகமரபு முன்வைப்பதில்லை, மாறாக வேறுசில பயிற்சிகளையும் இணைத்தே பாடத்
திட்டம் உருவாகியுள்ளது. பாரதம் போன்ற தேசத்தில் கர்ம யோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அநேகம். உங்கள் வீட்டுக்கு மிக அருகிலேயே ஏதேனும் வகையில் இதைத் தொடங்கலாம்.
ஆசிரமங்கள், குருகுலங்கள் சமூக அமைப்புகள் போன்ற அர்ப்பணிப்பு மிக்க ஒரு குழுவுடன் உங்களை இணைத்துக்கொண்டு மிகச்சிறிய அளவில் தொடங்கலாம், குருகுலங்களின் சமையலறையில், தோட்டத்தில், அவர்கள் நடத்தும் அலுவலகத்தில், அச்சகப்பணியில் என ஏதேனும் ஒன்றில் சிறிது நாட்கள் கடுமையாக உழைத்து, உங்களைச் சற்று தூய்மை செய்து விட்டு வந்து உங்கள் தியானப் பயிற்சியைச் செய்துபாருங்கள். தியானத்தில் எழும் எதிர்மறை அம்சங்கள் முற்றிலும் நீங்கியிருப்பதை உணர்வீர்கள். அவற்றை நேருக்கு நேராகச் சந்தித்து வெல்லக்கூடிய வல்லமையை மனதில் பெற்றிருப்பீர்கள். இதைச் செய்ய முடியவில்லை எனில், வேறு எந்த மருந்தாலும் உங்களை மீட்க முடியாது ‘ என்கிறார்.
வஜ்ராசனம்
இந்தப் பகுதியில் நாம் வஜ்ராசனம் எனும் முக்கியமான பயிற்சியை பற்றி தெரிந்து கொள்வோம். உலகின் அனைத்து மரபுகளிலும் ஏதேனும் வடிவில் இந்த அமரும் முறை புழக்கத்தில் இன்றும் இருக்கிறது. எனினும் யோக மரபு ‘வஜ்ர நாடி’ எனும் குறிப்பிட்ட நாடியை தூண்டுவதற்கும் ஜீரண மண்டலம் முழுவதையும் சிறப்பாக செயல்பட வைப்பதற்கும், நீண்ட தியானங்களில் அமைவதற்கும் வஜ்ராசனம் எனும் இந்தப் பயிற்சியை பரிந்துரைக்கிறது. கால்களை நீட்டி ஒவ்வொன்றாக மடித்து பின்புறமாக கொண்டுசென்று ஆடுதசையின் மேல் அமர்ந்து கைகளை தொடைமீது வைத்து கண்களை மூடி அமர்ந்து சுவாசத்தை எண்ணலாம். அல்லது கவனிக்கலாம்.