புகையிலையால் விளையும் தீமைகள்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 21 Second

புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்து போவதாக சமீபத்திய புகையிலை ஆராய்ச்சி குறித்த முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த இறப்புகளில் 7 மில்லியனுக்கும் அதிகமானவை நேரடியாக புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன, அதே சமயம் 1.2 மில்லியன் பேர் புகைபிடிக்காதவர்கள் இரண்டாவது கை புகைக்கும், மூன்றாவது கை புகையினாலும் பாதிக்கப்படுபவர்கள். இதன் காரணமாகவே, புகையிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், ஆண்டுதோறும் மே 31 -ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து, நுரையீரல் புற்றுநோய் சிறப்பு மருத்துவரான கிரண்குமார் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

“புகையிலையை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று புற்றுநோய் அல்லாத பிற நோய்கள் மற்றொன்று புகையிலையினால் ஏற்படும் புற்றுநோய்கள். புற்றுநோய் அல்லாத பிற நோய்கள் எனும்போது, இருதய பிரச்னைகள், ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், ரத்தக்குழாய் அடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

புற்றுநோய் என்று எடுத்துக்கொள்ளும்போது, நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், வயிறு புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது. இவை நேரடியாக புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் புற்றுநோயாகும். புகையிலை பழக்கமுள்ள பெண்களைப் பொருத்தவரை, மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.

புற்றுநோய்க்கான காரணம்..

ஒருவர் தனது வாழ்நாளில் 100 சிகரெட்டுக்கு மேல் பிடித்திருந்தாலே அவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புண்டு. அதிலும், செயின் ஸ்மோக்கர்ஸ் சிலர், ஒருநாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் கூட பிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் மிக மிக அதிகமாக இருக்கும். இவர்களுக்குத்தான் பெரும்பாலும், நுரையீரல் புற்றுநோய் அதிகளவில் ஏற்படுகிறது.

இதைத்தவிர, இரண்டாவது கை, மூன்றாவது கை புகையினாலும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, இரண்டாவது கை புகை என்பது, புகையிலையை நேரடியாக பயன்படுத்தவில்லை என்றாலும், புகைப்பவர்களின் அருகில் இருப்பதும், அந்தப் புகையை சுவாசிப்பதனாலும் ஏற்படுகிறது. மூன்றாவது கை புகை என்பது, ஒருவர் புகைபிடித்துவிட்டு சென்ற அறையில், மற்றவர் தங்கியிருப்பதனால், ஏற்படும் பாதிப்பாகும்.

சிகிச்சை முறை

புகையிலையினால் ஏற்படும் புற்றுநோய்களை பொருத்தவரை, 1-4 ஸ்டேஜ் வரை பிரிக்கப்படுகிறது. அதில் மூன்று ஸ்டேஜ் வரை ஓரளவு சிகிச்சையின் மூலம் சரி செய்துவிட முடியும். இதற்கு அறுவை சிகிச்சை, ரேடியோ தெரபி, கீமோ தெரபி, டார்கெட்டட் தெரபி, இமினோ தெரபி என 5 வகையான சிகிச்சை முறைகள் இருக்கிறது.அதில் முதல் ஸ்டேஜில், அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். இரண்டு மற்றும் மூன்றாம் ஸ்டேஜில், கீமோ மற்றும் ரேடியோ தெரபி பயன்படுத்தப்படும். நான்காவது ஸ்டேஜில், டார்கெட்டட் தெரபி, இமினோ தெரபி ஆகியவை செய்யப்படும்.

ஆனால், நான்காம் நிலைக்கு செல்லும்போது, குணப்படுத்துவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவுதான். மேலும், அதனை கட்டுப்படுத்ததான் முடியுமே தவிர, முழுமையாக குணப்படுத்துவது மிகவும் கடினமானது. டார்கெட்டட் தெரபி, இமினோ தெரபி எல்லாம் தற்போதைய நவீன சிகிச்சை முறைகளாகும். மேலும், புரோட்டான் தெரபி என்ற சிகிச்சையும் செய்வோம். இதன் மூலம், மற்ற உறுப்புகள் எதுவும் பாதிக்காத வண்ணம், ரேடியேஷன் சிகிச்சை அளிக்கப்படும்.

அறிகுறிகள்

நாள்ப்பட்ட இருமல், தலைவலி, இருமலின்போது ரத்தம் வருதல், திடீரென உடல் எடை குறைதல், முதுகில் அல்லது காலில் எலும்பில் வலி ஏற்படுவது, நடந்து போகும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சோதித்துக்கொள்வது மிகமிக அவசியமானது.

உதாரணமாக, ஒருவர் 20 ஆண்டுகளுக்கு மேல் சிகரெட் பிடித்திருந்தால், அவர் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், மருத்துவரை அணுகி, சிடி ஸ்கேன் மூலம் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதன்மூலம், ஏதேனும் பிரச்னை இருந்தால், ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து விடலாம். அதற்கான உரிய சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு தற்காத்துக் கொள்ளலாம்.

தீர்வு

ஒருவர் தனது சுகத்துக்காக புகைப்பது என்பது, அவர் தன்னை அழித்துக் கொள்வதோடு, தன்னை சார்ந்தவர்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

புகைப்பது மற்றும் புகையிலை சார்ந்த பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட தற்போது, மாத்திரைகள், கவுன்சிலிங் மையங்கள் என நிறைய இருக்கின்றன. அங்கு சென்று அவர்களின் உதவியுடன் இந்தப் பழக்கத்திலிருந்து வெளிவரலாம்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!(அவ்வப்போது கிளாமர்)
Next post நுரையீரலை காக்கும் மூலிகைகள்! (மருத்துவம்)