முதியோர்களுக்கான கோடைகால பராமரிப்பு! (மருத்துவம்)
பொதுவாகவே, முதியோர்களுக்கு வயது முதிர்ந்த காலத்தில் உடல் ரீதியாக நிறையவே பிரச்னைகள் இருக்கும். அதிலும், கோடையில் அதிகளவு வெப்பத்தின் காரணமாக, இன்னும் கூடுதலான பிரச்னைகளை சந்திக்கக்கூடும். அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அதுல்யா சீனியர் கேரின் தலைமை மருத்துவரான உமாபதி.
முதியவர்களை பொருத்தவரை, பொதுவாக பார்க்கப்படுவது ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய், காது மந்தமாக கேட்பது, பார்வை கோளாறு, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்ற பல பிரச்னைகள் இருக்கும்.
அதுவே, கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால், இன்னும் கூடுதலான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதிலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மேலும் பல சிக்கல்கள் வரலாம். அவை, உடலில் நீரிழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவது ஹைபர்நாட்ரிமியா (உடலில் உப்பின் அளவு குறைந்து போதல்), சிறுநீர் தொற்று போன்றவை இருக்கும். எனவே, இவர்கள் தினசரி தங்களை பராமரித்துக் கொண்டாலே அதிலிருந்து தப்பிக்கலாம்.
கோடைகாலம் தொடங்கியதுமே முதியோர்கள் எலக்ட்ரோலைஸ் என்ற பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. இந்த பரிசோதனையை செய்து கொள்ளும்போது, அவர்களது உடலிலுள்ள சோடியம், பொட்டாஷியம், பை கார்பனேட் போன்றவற்றின் அளவு பரிசோதிக்கப்படும். அதன்மூலம், அவர்களது உடல்நிலைக்கு தக்கவாறு தேவையான சிகிச்சை முறைகளை பரிந்துரைப்போம். இது ஒரு நல்ல பலன்தரக்கூடிய வழியாகும்.
அதுபோன்று, உடலில் ஏற்கெனவே பிரச்னை உள்ளவர்கள் என்றால், அவர்களை கூடுதலாக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். இவர்கள் வெளியே செல்லும்போது, உப்பு கலந்த லெமன் ஜூஸ் அல்லது உப்பு கலந்த மோர் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனை அடிக்கடி அருந்தும்போது, அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.உப்பு வியாதி, ஹைபர் டென்ஷன், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் எல்லாம் கோடையில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொண்டாலும் ஆபத்துதான். ஆனால், காலை 11 மணி, மாலை 3 மணி என்று இரு வேளை மோரோ, லெமன்ஜூஸோ அருந்தலாம். அதுவே, உடலில் உப்பின் அளவு குறைவாக இருப்பவர்கள் ஒருநாளைக்கு நான்குமுறை கூட அருந்தலாம்.
ஹைபர்நாட்ரிமியா இருப்பவர்கள், சாப்பாட்டில் சிறிதளவு கூடுதலாக உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சாப்பாட்டுடன் ஊறுகாய், அப்பளம் சேர்த்து சாப்பிடலாம். இது அவர்களின் எனர்ஜி அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். ஹைபர் டென்ஷன் நோயாளிகளுக்கு உப்பு அதிகம் சேர்க்கக் கூடாதுதான். இருந்தாலும், கோடையில் ஓரளவு சேர்த்துக் கொள்வது நல்லதுதான். அது போன்று சிறுநீர்தொற்று இருப்பவர்கள், பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதாவது, இளநீர் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். குளுக்கோஸ் எடுத்துக் கொள்ளலாம். இதுவே, ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.
உடற்பயிற்சிகள்
வெயில் காலத்தில் முதியவர்கள் வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதை தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உப்பின் அளவு குறைந்துவிடும். இதனால், ஹீட் ஸ்ட்ரோக், டி ஹைட்ரேசன், சிறுநீர் தொற்று போன்றவை ஏற்படும். அதேசமயம், காலை வேளையில் சிறுசிறு உடற்பயிற்சி செய்யலாம்., ஸ்ட்ரெச் பயிற்சிகள், நடைப்பயிற்சி எல்லாம் காலையிலேயே முடித்துவிட வேண்டும். மாலையில் செய்யக்கூடாது. அதற்கு மாற்றாக, யோகாசனம், தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
சர்க்கரை நோய், இதய நோய், நரம்பியல் பிரச்னை, பார்க்கின்சன் நோய், மன அழுத்தம் போன்றவை இருப்பவர்கள், பி.பி, டெம்ப்ரேசர், ஹார்ட் ரேட், மூச்சு சுழற்சி, சர்க்கரை அளவு இவற்றையெல்லாம் தினசரி கண்காணித்துக் கொள்வது நல்லது.
உணவு முறைகள்
காலையில், இட்லி, தோசை, சப்பாத்தி – தால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.பின்னர், காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடைவெளியான 11 மணியளவில், மோர், லெமன் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இதனால், டி ஹைட்ரேஷன் தடுக்கப்படுகிறது. இதன்மூலம் உடலில் ஏற்படும் வறட்சியும் தடுக்கப்படுகிறது.
பொதுவாக, வயது ஏற ஏற ஜீரண உறுப்புகள் எல்லாம் சரியாக வேலை செய்யாது. இதனால் குழந்தைகளுக்கு கொடுப்பதுபோன்று சாதத்தை குழைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று விரைவில் செரிமானம் ஆகக்கூடிய நீர் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு புரோட்டின் அதிகம் தேவைப்படும். இதற்காக, தினமும்.
கொண்டைக்கடலை, மொச்சைக்கொட்டை, டபுள்பீன்ஸ், காராமணி, வேர்க்கடலை போன்ற ஏதாவது ஒன்றை நன்றாக ஊற வைத்து, நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்வது அவசியமாகும். இரவில், அவரவர் உடல் பிரச்னைக்கு தகுந்தபடி விரைவாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் 7 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.
சர்க்கரை உள்ளவர்கள் லோ கலோரி, லோ ஃபேட் டயட்டை கடைபிடிக்க வேண்டும். அதாவது, அரிசி சாதத்தை குறைத்துவிட்டு, கீரை, காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம். அதுபோன்று வேர் காய்கறிகளை தவிர்த்துவிட்டு, புடலங்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்ற கொடி காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பழ வகைகளில், மா, பலா, வாழை என்ற முக்கனிகளை கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும். ஆப்பிள், பப்பாளி, கொய்யா போன்றவற்றை சாப்பிடலாம். அதேசமயம், ஒரே நாளில் அதிகளவு எடுத்துக் கொள்ளாமல், ஒரு கப் பப்பாளி , அரை ஆப்பிள், பாதி பழுத்த துவர்ப்பு உள்ள கொய்யா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இரவில் கண்டிப்பாக அரிசி சாதத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கோதுமை, கேழ்வரகு சாப்பிடுவதுதான் நல்லது.
கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்
சிறுநீர் தொற்று உள்ளவர்கள், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சிறுநீர் கழிக்க தோன்றும்போதெல்லாம் அடக்கி வைக்காமல் கழித்துவிட வேண்டும். தற்போது முதியவர்கள் சிலர், டயாபர் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அவ்வப்போது அந்த டயாபரை மாற்றிவிட வேண்டும். அதிலேயே ஊறிக்கொண்டு இருந்தால், அது வேறு சில பிரச்னைகளை உருவாக்கிவிடும்.
அதுபோன்று, முதியவர்களுக்கு தூக்கமின்மை பிரச்னையும் இருக்கும். இதற்கு காரணம், அவர்களுக்கு இயற்கையாகவே, ஒரு மன அழுத்தம் இருக்கும். இதற்கு, தினசரி சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மற்றவர்களுடன் பேசி பழகுவது, நல்ல இசையை கேட்பது போன்றவற்றை செய்தால் மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் வரும்.