உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்! (மருத்துவம்)
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மருத்துவத்துறை இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போதும்கூட பல நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர் இழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், ரத்ததானம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே.
எனவே, ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14- ஆம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் (World Blood Donor Day) அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து 38 ஆண்டுகளாக இயங்கி வரும் லயன்ஸ் ரத்தவங்கியின் சேர்மன் A.மதனகோபால்ராவ் நம்முடன் பகிரந்து கொண்டவை:
ரத்ததானம் என்றால் என்ன..
இன்றைய காலகட்டத்தில், அறிவியலின் வளர்ச்சியால் மருத்துவ உலகில் அதிநவீன தொழில்நுட்பங்களும், புதிய சிகிச்சை முறைகள் பலவும் வந்துவிட்டன. உதாரணமாக, ஒருவரின் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் கூட மாற்றி அமைத்துவிடலாம் அல்லது செயற்கை உறுப்புகளை தயார் செய்து பொருத்திவிடலாம். ஆனால், இதுவரை எந்த அறிவியலினாலும் கண்டுபிடிக்க முடியாத, உற்பத்தி செய்ய முடியாத ஒரே பொருள் ரத்தம்தான். மனித சக்தியால் மாற்று கண்டுபிடிக்க முடியாத பொருளும் ரத்தம்தான். ரத்தம்தான் மனிதனை வாழவைக்கும் ஜீவநாடியாகும். இந்நிலையில், விபத்து காரணமாகவோ, நோய் காரணமாகவோ பாதிக்கப்பட்ட ஒருவர், மீண்டும் உயிர்பிழைத்து ஜீவித்து இருக்க பிறரின் ரத்தம் தேவைப்படுகிறது. இந்தகட்டத்தில் ஒருவர் தனது உடலில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தத்தை மற்றவருக்கு தானமாக தருவதே ரத்ததானமாகும்.
ரத்தவங்கி குறித்து..
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் சாமான்ய மக்களுக்கு பணத்தேவை ஏதேனும் ஏற்பட்டால், அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்தத்தை தானமாக தந்துவிட்டு, அதற்கு மாற்றாக பணத்தை பெற்றுக்கொண்டு சென்றனர். மேலும், ரத்தப் பற்றாகுறையால், பல இதய அறுவைசிகிச்சைகள் தள்ளிப் போயின. இந்நிலையில்தான், மருத்துவரான ரபிந்தரநாதன் ரத்தத்தின் அவசியத்தையும், தேவையையும் கருதி மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இந்த ரத்தவங்கியை தொடங்கினார். அன்னைதெரசாதான் இதனை தொடங்கிவைத்தார்.
ரத்தவங்கியை பொருத்தவரை, மாதம் ஒருமுறை ரத்ததான மூகாம்கள் நடத்துகிறோம். குறிப்பாக, கல்லூரிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டுமே இந்த மூகாம்கள் நடத்திவருகிறோம். கொரோனா காலத்துக்கு முன்பு வரை, மாதத்திற்கு, மூன்றாயிரம் யூனிட் வரை ரத்தத்தை தானமாக பெற்று, சுமார் 500 – 600 மருத்துவமனைகளுக்கு பகிர்ந்து அளித்து வந்தோம். கொரோனாவுக்கு பிறகு, மக்கள் ரத்தத்தை தானம் செய்ய மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால், இப்போதெல்லாம் மாதத்திற்கு 1000 – 1500 யூனிட் வரை மட்டுமே ரத்தம் சேகரிக்க முடிகிறது.
ரத்தவங்கியின் பணிகள்:
ஒருவரிடம் இருந்து தானமாக ரத்தத்தைப் பெற்றபிறகு அதில் 26 வகையான சோதனைகள் நடத்தப்படும். உதாரணமாக, எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை போன்ற சோதனைகள் செய்யப்படும். சோதனைகளில் எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த ரத்தத்தை எடுத்துக் கொள்ள முடியும் பின்னர் ரத்தத்தை மூன்று பாகங்களாக பிரித்துவிடுவோம். அதாவது, ரத்த சிவப்பு அணுக்கள், பிளேட்லெட்ஸ், பிளாஸ்மா என தனித்தனியாக பிரித்து யாருக்கு எது தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு அதனை அளிப்போம் அந்தவகையில், ஒருவர் அளிக்கும் ரத்தம் மூன்று பேருக்கு போய்ச் சேரும். மேலே சொன்ன சோதனைகளில், அதே சமயம், ஒருவரின் ரத்தத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அவரது ரத்தம் நிராகரிக்கப்பட்டுவிடும். மேலும், ரத்தம் அளித்தவரை அழைத்து, மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளச் சொல்வோம்.
அதுபோன்று ஒருவரிடம் பெறப்படும் ரத்தத்தை மூன்று பாகங்களாக பிரித்தபிறகு, ரத்த சிவப்பு அணுக்கள் 30 நாள்கள் வரைதான் பதப்படுத்தி வைக்க முடியும். பிளேட்லெட்ஸ் பொருத்தவரை குறைந்தபட்சம் 6 நாட்கள் மட்டுமே பாதுகாத்து வைக்க முடியும். பிளாஸ்மாவை மட்டும் ஒர் ஆண்டுவரை பாதுகாத்து வைக்கலாம். அதனால், ரத்தத்தை அதிகளவிலும் சேகரித்து வைக்க முடியாது. எனவே, தேவைக்கான அளவு மட்டுமே சேகரிப்போம்.
அப்படி அவசர தேவையென்றால், டோனரை அழைத்து அவரிடம் இருந்து பெறுகிறோம். ஒருவர், இலவசமாக ரத்தத்தைக் கொடுத்தாலும், அதனை பெறுவதற்கு ஊசி, டியூப், சேகரிக்கும் பை என குறைந்தபட்சம், ரூபாய் 400 வரை செலவாகும், ரத்தத்தை பெற்றபின் நடத்தப்படும் 26 வகையான சோதனைளுக்கு சுமார் 2400 வரை செலவாகும்.
யார் எல்லாம் ரத்தம் தானமாக தரலாம்:
எல்லோரிடமிருந்தும் ரத்தம் தானமாக பெறப்படுவதில்லை. ரத்தத்தை தானமாக தர பல விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதாவது, ரத்தம் கொடுப்பவரின் வயது 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும்.எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.ரத்த அழுத்தமும், உடலின் வெப்பநிலையும் சரியான அளவில் இருக்க வேண்டும். பொதுவாக, ஒவ்வொருவரின் உடலிலும் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது. இதில் 350 மி.லி., மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படும். இந்த ரத்தமானது மீண்டும் 48 மணி நேரத்தில் அவரது உடலில் உற்பத்தியாகிவிடும். இதனால், 2 மாதங்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்துவிடுகிறது. அந்தவகையில், ஒருவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.
ரத்ததானம் செய்வோர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..
மேலே ஏற்கனவே குறிப்பிட்டபடி ரத்த தானம் செய்ய விரும்புபவர், 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 45 – 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ரத்ததானம் செய்தால் பலவீனமாகவும் மயக்கமாகவும் உணரலாம்.ரத்ததானம் செய்வதற்கான மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், ஒருவர் ரத்தம் கொடுப்பதற்கு 2 மணிநேரம் முன் வரை சிகரெட் பிடித்திருக்க கூடாது மற்றும் சுமார் 24 மணி நேரத்திற்கு முன்பு வரை மது அருந்தி இருக்க கூடாது. புகை அல்லது மதுப்பழக்கம் அறவே இல்லாதவர்கள் ரத்த தானம் செய்வதற்கு சிறந்த நபர்கள் ஆவர்.
ரத்த தானம் செய்வதற்கு முன் ஒருவர் பசியோடு இருக்கக் கூடாது. ரத்த தானம் செய்யும் முன் வெறும் வயிற்றில் இல்லாமல் ஏதாவது சாப்பிடுவது அவசியம். மேலும் இரவு 8 மணி நேரம் வரை தூங்கி இருந்தால் நல்லது.ரத்ததானம் செய்வதற்கு முன் ஒரு நபரின் ரத்த அழுத்தம் அளவிடப்படும் அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினும் சோதிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்பவர்களின் ஹீமோகுளோபின் எண்ணிக்கை 12.5g/dL வரை இருக்க வேண்டும்.
ரத்ததானம் செய்த பிறகு சுமார் 10 நிமிடங்கள் வரை ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிசோதித்த பின்னரே படுக்கையில் இருந்து எழ வேண்டும். ரத்ததானத்திற்கு பிறகு ஃப்ரெஷ் ஜூஸ் போன்ற ஆரோக்கிய பானங்களை குடிக்க வேண்டும் ரத்த தானம் செய்த அன்று உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவும்.
அதிகரிக்கும் தேவை: உலகில் ஆண்டுதோறும் சுமார், 9 கோடியே 20 லட்சம் பேர் ரத்த தானம் செய்கின்றனர். 25 நாடுகளில் 40 சதவீதத்துக்கும் மேலானோர் ரத்ததானம் செய்கின்றனர். ஆனால், வளரும் நாடுகளில் ரத்ததானம் செய்வோரின் சதவீதம் (1000 பேருக்கு 10 பேர் மட்டுமே) குறைவாக உள்ளது. எனவே, அனைவரும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்வோம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 3ஆம் தேதி அன்று, ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்குரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்த ரயில் விபத்தில் 280 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். சுமார் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனிடையே, ரயில் விபத்துக்குள்ளானது தெரிந்ததும், அங்கு குவிந்த, அம்மாவட்ட உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு தாமாகவே ரத்ததானம் அளிப்பதற்கும் முன்வந்தனர்.
இதற்காக, நள்ளிரவிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்து ரத்ததானம் செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய கட்டாக் SCB மருத்துவக் கல்லூரி டாக்டர் ஜெயந்த் பாண்டா, நூற்றுக்கணக்கானோர் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்தநிலையில், சுமார் 3,000 யூனிட் ரத்தம் தானமாக கிடைத்துள்ளது. இது மனிதநேயத்தின் உச்சம் என்றே கூறலாம் என்றார். ஜாதி, மதம், இனம் என அனைத்தையும் கடந்து, பாதிக்கப்பட்டவர்களை கண்டதும் ஓடிவந்து உதவிய ஓடிசா இளைஞர்களின் மனிதநேயத்துக்கு ஒரு சல்யூட் வைப்போம்!